உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவிதைகள்

கவிதை 15 · 15 / 77

பாலுக்கும் ஒரு மாலை; மிச்சம் ஒரு மாலை இருப்பதாலே

அதனைப் போட எந்தப் பெரும் ஆளைத் தேடுவது!

ஆண்டுத் திருநாளில் அனைவருமே அணிந்து கொள்வோம்

ஒரு நாளில் உலகத்தைத் திருத்துவது இயலாது

பல நாளும் முயன்றிடுவோம் - முதலில்

நாம் திருந்தி நாடு திருத்த முனைந்திடுவோம்

காட்சிக்கெளியன் கடுஞ்சொல்லன் அல்லன் எனில்

ஆட்சிக்கிவன்தான் சரியோ என்று

சாட்சிக் கூண்டு ஏறவும் தயங்கார்

காட்சிக் கெளியன் காந்தியின் சீடன்

கடுஞ்சொல் கூறான் புத்தரின் தொண்டன்

ஆட்சிக்கிவனே அமைதலும் நன்று;

குறள் மாட்சிக் கிவனே தகுந்த சான்று.

இனியவை கூறுவான்.

இன்னா செய்யான்

அடக்கம் காப்பான்

அருளை வணங்குவான்.

பொறையில் குறியான்

சினம் பொங்கி அறியான். இந்த

“அன்பு நெறியினில் அமைதி நிலவிடும்

ஆகா நெறியினில் அமளி பிறந்திடும்

கத்தி தூக்கல் கலகம் விளைத்தல்

கடுகைப் போய் மலையாக்கல்; அன்புக்

கடல் அமைதி கெடுக்கின்ற புயற் காற்று; அதைத்

தென்றலாய் மாற்றுதற்குத் தெளிவு வேண்டும்; மிகுந்த

அறிவு வேண்டும்; அதனைத் தான்

குறள் மூலம் பரப்புகின்றோம்

நம் கொள்கையிலே வெற்றி காண்போம்.

வணக்கம்.

✤

காதலா - வீரமா?

4-8-68 அன்று சேலத்தில் 'தமிழர் வாழ்வில்

சிறந்தது காதலா? வீரமா?' என்ற தலைப்பில்

நடைபெற்ற கவிதைப் பட்டிமன்றம்.

கலைஞர் மு.கருணாநிதி அவர்களின்

தலைமைக் கவிதை முன்னுரை

ஏர் வரா வயல் தனிலே எது வரும்?

புல் பூண்டு வரும்.

ஏர் வரின் நெல் வளம் வரும்

வானில்

கார் வரா காலத்தில் எது வரும்?

கடும் பஞ்சம் வரும்

கார் வரின் இன்பக் கனி வரும்

சேர்வரா 'அயன்' மலையில் எது வரும்?

சேர்வராயன் மலையில் எது வரும்? இரும்பு வரும்.

அனைவரும் சேர்வரின் நிலை வரும்

அனைவரும் சேர்வர் இன்நிலை வரும்

நிலை வரும்

தேர் வரும் பலர் இழுத்தால்: அதுபோலத்

தேன் இரும்பு வரும் சேலத்தில். இந்த

ஊர் வரும்போதெல்லாம் எண்ணுகின்றேன்.

உருகாதோ இங்கிருக்கும் இரும்பென்று!

கோரிக்கை

சருகுநிலை அடைவதற்குள் நிறைவேற்றச் சொல்லிப்

பெருகிவரும் ஆதரவைக் காட்டிடுவோம் பேரரசின்பால்!

நாட்டு வளம் நகர்வளம் நல்ல

காட்டுவளம் கனிவளம் சொல்ல வந்தேன்

திரும்பிவிட்டேன் தேனிரும்பின் பக்கம்.

தெரியாமல் போகவில்லை!

தேன் என்றால் காதல்

இரும்பென்றால் வீரம்

ஏன் என்று புரிகிறதா என் போக்கு இப்போது?

நெய்தல் தொழில் புரிவோர் நிறைந்திருக்கும் சேலத்தில்

நெய்தல் குறிஞ்சி முல்லை மருதம் பாலை யென்று

நிலம் வகுத்து வாழ்ந்திருந்த தமிழர்நிலை பாடிடவே

கவிதை நெய்தல் தொழிலாய்க் கொண்டோர் வந்துள்ளார்.

பெய்தல் எப்போது மர்க்காராவில் மழை என்றும்-

பாசனம்-

செய்தல் தப்பாது நடத்தல் வேண்டுமென்றும்-

மேட்டூர் நிறைவு

எய்தல் ஒன்றே குறியாய்க்கொண்டு திரியும் என்னைக் - கவி

கொய்தல் வேண்டுமெனக் கூறிவிட்டார்.

காலத்தைக் கருத்தாலே வெல்லுகின்ற கவிஞர்களைக்

கூட்டி வைத்துக் - கவிதைக்

கோலத்தை வரைந்து காட்டக் கணபதியாம்

சேலத்துத் தமிழ்மன்றத் தலைவரவர் கை

வேலொத்திப் போர்புரியும் வீரம் மேலா?

விழி வேலொத்திப் போர்புரியும் காதல் மேலா?

எனும் வம்பை ஆரத்தி எடுத்து வரவேற்கின்றார்

ஏலத்தின் மணம் வீசும் தமிழ்ச் சொல்லால்!

சேலொத்த பெண்ணாள் தரும்காதல் பெரிதென்பார் ஒரு பிரிவார்

ஞாலத்துப் புகழ்மகுடம் வீரமென முழக்கிடுவார் மறுபிரிவார்

இதற்கு நான் தலைவன் - இருவரிடை

பாலத்தைப் போடுவதா, பகைத்தீயை மூட்டுவதா?

பாலத்தைப் போடென்பீர் - பாதைகளைத் தா என்பீர்-

சாலைக்கும் மந்திரியாய் ஆனதனால் நான்; நெடுஞ்

இங்கு நான் சொல்லும் பாலம் - தமிழ்த்

தேன் சிந்தும் கவிஞரிடைத்

தொடக்கத்தில் போட்டுவிட்டால் - கருத்து

மான் துள்ள வழியில்லை; இந்த

ஊன் தூங்கும்போதும்

பேன் தூங்கா நம் தலையில்

உள்ளிருக்கும் உறுப்புக்கு மூளையென்று பேர்!

இல்லாதார் பலருண்டு - அவர்கள்

இல்லாதார் உலகில்!

இருந்தும் இல்லாதார் சிலருக்கு

எள்ளிருக்கும் அளவுக்கு அஃதிருக்கும்; அதிலும் நிறையக்

கள்ளிருக்கும்; அதனாலே கண்டபடி கிறுக்கும்.

இவரோ

தலை நிறைய மூளை பெற்று

நிலை குலையாத் தன்மையுடன்

அவை நடுவே வந்துள்ளார்.

அவரிடையே பாலம் கட்டித் தமிழ்த்

சமரினையே தடுக்க மாட்டேன்!

புலவரிடை பகைமூண்டால் புதுமையுண்டு தமிழுக்கு; அதனால்

கலக விதை விதைக்கின்றேன் கவிஞரிடை!

பொறுத்திருப்போம் யார் வெல்வார் எனப் பார்ப்போம்.

"மல்லிகையே வெண்சங்காய் வண்டூத" எனப் பாட;

"அல்ல அல்ல புகழேந்தி!" என எழுந்து ஒட்டக்கூத்தர்

துள்ளி வந்து கேட்டாராம்:-

"கிள்ளிய பின்னன்றோ மலர்க்காம்பில் சங்கூத இயலுமய்யா!

வெள்ளிய இதழ் மீது வண்டூதல் விந்தையன்றோ?"

இது கேட்டுப் புகழேந்தி உடன் மறுத்துக்

"கூத்தரே! என் பதில் கேளுமய்யா!

மது குடித்த மயக்கத்தில் முன் பின் தெரியாமல்

வண்டு ஊதிற்று!" என்றாராம்.

அந்தப் பெரும்புலவர் சண்டையினால்

மேலும் இருபாட்டுத் தமிழுக்குக் கிடைத்ததன்றோ?

அதனாலே

பாவலர்காள், பகைவளர்ப்பேன் உங்களிடை பாடுங்கள்

பந்தயத்துக் குதிரைகளை முடுக்குதல் போல்

பந்தலிலே இருப்போரே முழக்கிடுங்கள்.

நன்றாக

வெந்தயத்தைச் சுவைத்ததுபோல் இருக்கும் சில பாட்டு

இவர் பாட்டில்

செந்தழலைக் கக்குகின்ற வீரம் காண்போம்

செந்தமிழில் காதல் சொல்லும் பாங்கு காண்போம்.

ஒரு கூறாய் உறவாடும் உயிரனையார்

இரு கூறாய்ப் பிரிந்திங்கே மோதுகின்றார் பின்னர்.

ஒட்டுமா பழம் உறவு? எனக் கேட்பீர்

ஒட்டுமாம் பழ உறவு!

ஒட்டு மாம்பழ உறவு சேலத்தில் இயற்கை.

அதனாலே, பின்

ஒட்டும் உறவுடையார் - இவண்

வெட்டும் குத்தும் நடத்திடுவார்

வெட்டு குத்து என்றதும்; ஆகா, தலைவரே

வீரம் பற்றிப் புகழந்து விட்டார் என வீரத்தால் துள்ளாதீர்!

கண்வெட்டு காதலிலும் உண்டு - நெஞ்சில்

குத்துகின்ற உடற்கட்டே காதலுக்குத் தைப்பொங்கல்

அந்தக் காதல் எனும் தலைப்பினிலே போராட

அன்பன் வருகின்றார்! தலைமையன்பன் தமிழன்பன்;

என்பு தோல் போர்த்த உடம்புக்கு அன்பன்றோ உண்மை உயிர்?