உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

கலைஞரின் கவிதைகள்

கவிதை 21 · 21 / 77

உணவளிக்கும் வேலையிலும் உயர்ந்ததோ வேறோர் வேலை?

ஒதுவார் எல்லாம் உழுவார் தலைக்கடையில் என்றால்

பழைய பொருள் படித்தவர் தொழுதிடுவார் ஏர் பிடித்தவரை என்பதுதான்!

அதுமாற்றி நாம் அமைக்க வேண்டுமன்றோ?

"ஓதுவார் எல்லாம் உழுவார் தலைக்கடையில்"

படித்தவர் எல்லாம் உழுவார் தலைக்கடையில்! - அதாவது

தலைமடையில், கடைமடையில் உழுவார்!

பின்னிலையில் இருந்திட்டோம் பலநாளாய்

உணவில் தன்னிறைவு காண்பதற்கு ஊக்கம் கொள்வோம்

அந்நிலை எய்திட முன்னிலை நிற்பது நம் அரசு

நாட்டிலே உற்பத்தி பெருக்கென்றால் அதை விடுத்து

வீட்டிலே உற்பத்தி பெருக்குகின்றார்

முத்தென்றும் மணியென்றும்

சிட்டென்றும் சிமிழென்றும்

கண்ணென்றும் மூக்கென்றும்

கணக்கின்றிப் பெறுதல் விட்டு

நெல் என்றும்.

வரகென்றும்

கம்பென்றும்

கரும்பென்றும்

உழுந்தென்றும்

பருப்பென்றும்

எள் என்றும்

கொள் என்றும்

உணவு பெருக்கிடுவீர்; உற்பத்தி செய்திடுவீர்!

அதை உணர்த்த உருவான கவியரங்கில்

உழவர்களாம் நண்பர் சிலர் கவியேர் உழுதுகாட்ட வந்துள்ளார்

வரவேற்கின்றேன்.

கரும்பாயிரம் என்றொருவர் கரும்பு பற்றிப் பாடுவார் என எண்ணாதீர்

கரும்பாகப் பாடுவார் நாம் எறும்பாகச் சுவைத்திடலாம்

துரைத்தனம்தான் நடந்தது முன்னால்

நாற்பத்தேழாம் ஆண்டுக்கு முன்னால்....

வெள்ளைத் துரைத்தனம்தான் நடந்தது முன்னால்

விடுதலைக்குப் பின் இருபதாண்டில் அண்ணா துரைத் தனம்தான் நடக்கிறது இந்நாள்;

ஆடு துரைத்தனம் அந்நாள்... (1947-க்கு முன்)

ஆடுதுறைத்தன ரகம் இந்நாள்

பாடுகின்றார் அது பற்றி இக்கவிஞர்!

காடு கமழ்

நீடு புகழ்

பீடு மிக

நாடு நிதம்

பாடு பட

கைப் வீடு

நிறை ஆடுதுறை இருபத்தேழு :

(கவிஞர் கரும்பாயிரம் "ஆடுதுறை 27 நெல்" பற்றிப்

பாடி முடிக்கிறார்)

தலைவர் கலைஞர்:

ஆடுதுறையில் பிறந்தும் இந்த இருபத்தேழு

ஆங்கில மோகங்கொண்டே எ.டி.ற்றி-27- ஆயிற்றய்யா?

அதுபோல அய். ஆர். எட்டென்று ஒரு நெல்லும்

அமோக விளைச்சலிலே பிறிதொன்றை வெல்லும்

மூச்சுவிடு முன்னே முன்னுாறும் நானூறும்

கவியெழுதும் புலவர் பற்றிக் கேள்வியுண்டு;

இதோ கண்ணிமைக்கும் நேரத்தில் கவி கூற ஒருவருண்டு

கண்ணிமைதான் அவர் பேராம்

எண் எட்டாம் அய்.ஆர்.எனும் நெல் பற்றிப்

பண் கொட்டி முழக்கிடுவார்:

(கவிஞர் கண்ணிமை 'அய்.ஆர். 8 நெல்" பற்றிப்

பாடி முடிக்கிறார்)

தலைவர் கலைஞர்:

அடுத்து:

மக்காச் சோளம் பற்றி

மற்றொரு கவிஞர் பாடுகிறார்... பெயர்

நஞ்சப்பா !

கொஞ்சப்பா தமிழினிலே எனக் கூறிப்

பஞ்சப்பா போக்குதற்கு

நஞ்சப்பா பாட்டு கேட்போம்!

(கவிஞர் நஞ்சப்பா 'மக்காச் சோளம்'' பற்றிப் பாடி முடிக்கிறார்)

தலைவர் கலைஞர்:

அடுத்து;

கம்பெடுத்து வருகின்றார் ஒரு கவிஞர்

வம்படுத்து வருமென்று அஞ்சாதீர்

கம்பு செய்முறை பற்றிக்

கவியொன்று பொழிகின்றார்...

இவர் பெயர் இராதாகிருட்டிணன்:

(கவிஞர் இராதாகிருட்டிணன் "கம்பு பயிரிடல்"

பற்றிப் பாடி முடிக்கிறார்)

தலைவர் கலைஞர்:

அடுத்து;

தாமரைக் குளத்தினிலே ராகி விளைக்கின்ற விந்தை கண்டீரோ!

தாமரைக் குளம் சேர்ந்தார் செல்லபாண்டியன் எனும் கவிஞர்

ராகி விளைப்பதற்குச் செயல் முறைகள் தருகின்றார்

செவிமடுத்தின்புறவீர் செயல்படுவீர்:

(கவிஞர் செல்லபாண்டியன் "ராகி" பற்றிப் பாடி முடிக்கிறார்)

தலைவர் கலைஞர்:

அடுத்து;

மூவேந்தர் எனும் பெயரில்

பாவேந்தர் பரம்பரையில்

பாடுகின்றார் தமிழரசு

ஒட்டுச்சோளம் பற்றிப் பட்டுக்கவியொன்று நெய்கின்றார்:

தலைவர் கலைஞரின் முடிவுரை:

வேளாண்மைத் துறை அமைச்ச!

நல் விவசாயப் பெருமக்காள்!

அன்பு நிறை தமிழகத்து அருமை மிகு உழவர்களே!

அமோக விளைச்சல் பற்றி ஆறுபேர் சொல்லக் கேட்டீர்

அரசின் சார்பிலே அடியேனும் பாடக்கேட்டீர்

ஆகஸ்டு 15-ல் அத்தனையும் கேட்டுவிட்டு

ஆகட்டும் பார்ப்போம் என அலட்சியமாய் இருந்திடாதீர்

அமைந்திருக்கும் தமிழரசு வேளாண்மைத் துறையரசு

வேகமாய்ப் பணியாற்றி விளைவினைப் பெருக்கிடவே

விரைந்திடும் புத்தரசு

கடன் வழங்கல் கடிதாக நிறைவேறும்

உரம் வழங்கல் ஒரு கணமும் நிற்காது

பயிர் அழிக்கும் பூச்சிகளின் உயிர் அழிக்க

கடன் மருந்து.

இந்தப் பாட்டுறவு மட்டுமல்ல

கூட்டுறவின் துணையுமுண்டு

இருபோக நஞ்சைக்குத் தஞ்சையிலே நீர்த் தீர்வைச் சலுகை தந்து-

புஞ்சைக்கு வரிவிலக்கி

உழவர் புன்னகைக்கு மருந்தானோம்-

இன்னும் எத்தனையோ செய்ய எண்ணம் - உங்கள்

முத்தனையை ஒத்துழைப்பு இருந்தால் போதும்...

நிலமுடையார் நெஞ்சத்தில் உழைப்போர்க்கு உதவுகின்ற

வளம் நிறைய இருத்தல் வேண்டும்

உழைப்போடும் ஒன்றுபட்டு உணவு நிலை

தழைப்பதற்குத் துணைபுரிதல் மிகவும் வேண்டும்.

கண்ணியனாம் காந்தியார் தலைமையிலே

அந்நியனை விரட்டிவிட்டோம்!

நமக்குள்ளே அந்நியர்கள் இன்றில்லை;

நம்மவரே அந்நியராய்த் திரிதல் தீது!

பதுக்கலிலே கெட்டிக்காரன்

பல உயிரைக் கொல்லுகின்றான்

கடத்தலிலே கைகாரன்

காலனையும் மிஞ்சுகின்றான்

கொடுக்காதே நெல் என்பான்

கொடியதோர் விலங்காவான்

இன்று இவரிடத்தில் 'விடுதலை'யை

விவசாய மக்கள் பெற்றிடுவோம்

இதற்கெனவே கண்டிடுவோம் புதிய பாதை...

ஆகஸ்டு 15-ல் அறிவிப்போம் சூளுரையை!

அமோக விளைச்சல் அண்ணா அரசின் இலட்சியமாம்-

அதற்கென உறுதி அளிப்போம் நிச்சயமாய்!

வணக்கம்

வாழ்க

உடைமைகள் பத்து

16.9.68 அன்று சென்னை சிறுவர் அரங்கில்

(கலைவாணர் அரங்கம்)

திருவள்ளுவர் திருநாளை ஒட்டி 'உடைமைகள் பத்து'

என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கில்

கலைஞர் மு.கருணாநிதி அவர்களின்

தலைமைக் கவிதையுரை

★