கலைஞரின் கவிதைகள்
கவிதை 13 · 13 / 77
ஒன்றையொன்று தாக்கி உறுமுகின்ற பாட்டெல்லாம் கேட்டிருந்தோம்;
சண்டையிட்டால் கொன்றையணி செஞ்சடையில்
சந்திரனும் கங்கையுமே சிவனார்க்குத் தலைவலிதான்
ஆனால் என் தலை (மை)யில்
கவிச்சண்டை களச்சண்டை:
தமிழ்க் கற்கண்டை இணைத்த சண்டை!
மெய் பெரிது என்றவரோ வாயின்றி வாழ எண்ணார்
வாய் பெரிது என்றவரோ செவிடாக இருக்க ஒண்ணார்
கண்ணழகு என்றவரோ மூக்கழகு குறைக்கத் துணியார்
மூக்கழகு என்றவரும் கண்ணின்றி முட்டிக்கொள்வேன் என்பாரா?
இவை அத்தனையும் அமைந்தவரே அவையேறிப் பாடி நின்றார்
ஆகையினால் இது வீண்வம்பா என்றால்.
இல்லை வீணைத் தமிழ் வம்பு;
அறிவைச் சாணை பிடிக்கின்ற வம்பு
இந்த வம்பு நாடெங்கும் நடைபெற்றால்
புலமை மிகும்; புதுமை தோன்றும்;
தமிழுக்குப் புதிய வாழ்வு வரும்;
தொடர்ந்து செய்வீர் இந்தத் தூய பணி!
மூக்கினிலே மூச்சு போகும் வரையினிலே
முத்தமிழ்க்குத் தொண்டு செய்வீர்!
போனபின்னும் புகழாலே தமிழ் காப்பீர்
கண்கொண்டு காண்பதனைத்தும் கவிதையாக்குவீர்
எழுச்சிக் கவிதையாக்குவீர் அதனைச் செயல்படக்
கடமை தொடக்குவீர் கடமை தொடக்குவீர்!
செவியில் நல்லது கேட்டு - அல்லது விடுத்துச்
செந்தமிழர் நலம் பாட வாய் திறப்பீர்!
ஒன்று சொல்வீராயினும் நன்று சொல்வீர்! நான்
உரைத்திட்ட இவையின்றி இருப்பதற்கே
உடல் என்றால் அது மெய்யல்ல பொய்யே ஆகும்.
வணக்கம்.
✤
பிலவங்க ஆண்டு
13.4.68 அன்று சென்னை வானொலியில்
நடைபெற்ற கவியரங்கில்
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின்
தலைமைக் கவிதையுரை
★
வணக்கம்.
‘பிலவங்க’ ஆண்டைப் பின்னுக்குத் தள்ளி
இலவங்காய் போல் வெடித்தது ‘கீலக’
கலகங்கள் இன்றிக் காழ்ப்புகள் இன்றி
உலகெங்குமுள்ளோர் வாழ்க என்று வாழ்த்துவம் நன்று.
வருடப் பிறப்பென்றால் ‘தை’ என்றாலும்;
இது வழக்கத்தில் வந்ததனால் வாழ்த்திடுவோம்.
வருடத்தில் ஒருநாள்தான் வாழ்த்துகின்ற
சிக்கனப் பண்பெதற்கு?
வாயார மனமாரப் பல நாளும் வாழ்த்துச் சொல்வேன்
வானொலியில் கவி பாட வந்திருக்கும் கவிஞர்க்கு
வணக்கம் சொல்வேன்.
நித்திரை கலைந்தது நீள் விழி திறந்தாள்
சித்திரைப் பெண்ணாம் முத்திரைப் பொன்னாள்
பத்தரை மாற்றுப் பாட்டுப் புலவர்கள்
இத்தரை போற்றும் கற்றறி வள்ளுவர்
இயற்றிய குறளில் இனிதே நுழைந்து
ஈந்திடும் கருத்தை இங்கே சுவைப்போம்.
பிறப்பாலே புகழ் இல்லை: பெற்ற
சிறப்பாலே புகழ் என்று
அறப்பாலைப் பாடி வைத்தான்.
அதனைத் திறப்பாடல் புனையும் நல்லோர் -
நாம் மறக்காமல் இருப்பதற்கு வழங்க வந்தார்.
பறக்காமல் இருக்கின்ற பறவை நான்
இலக்கணச் சிறகு முளைக்காமல் தவிக்கின்ற கவிக்குஞ்சு நான்
பறக்காமல் இருக்கின்ற பறவை நான்
கூடு விட்டுக் கூடு பறக்காமல் இருக்கின்ற பறவை நான்
சிறகு முளைக்காமல் இருக்கின்ற கவிதைக் குஞ்சு நான்
சிலரைப் போல் வால் மட்டும் முளைக்காமல் இருக்கட்டும்
என் கவிக்கென்னும் சிறு கவிஞன் நான்
அடக்கத்தால் சொல்லுவதாய் எண்ணாதீர்
தளை சீர் தொடை அணி யாப்பெல்லாம்
தடுக்கத்தான் செய்யுமய்யா என் பாட்டில்!
அதற்கு விதி விலக்கு கொடுக்கத்தான் வேண்டும் நீங்கள்
இல்லையானால் உமை விடுத்து நடக்கத்தான் வேண்டுமென்று எழுந்திடுவேன்.
உறங்கும்போது ஒரு நாள் கனவொன்று கண்டேன்.
பிறகென்ன
விழித்திருக்கும் போதா கனவு வரும் எனக் கேளாதீர்
விழித்திருந்து கனவு கண்டே விடுதலை பெற்றார் காந்தி
பழித்திருந்த பலபேரைப் புன்சிரிப்பால் வெற்றி கண்டு
அறிஞர் அண்ணா விழித்திருந்தே நல்லாட்சிக் கனவு கண்டார்
அது நிற்க விரைவில் பெற்றார்.
அடியேன் கண்ட தூக்கக் கனா வென்ன?
அறிந்திடவே துடிக்கின்றீர்!
ஆணிப்பொன் மேனி அழகு மயிலனையார்
ஆறுபேர் ஆரணங்கு.
அல்லிப்பூ மென்மேனி
அள்ளிப் பருகிடத்தான் யாருமே துடிக்கின்ற.
தேன் பொய்கை ஊருக்குத் தெற்கே
ஊருணியின் நிழலோரம்
காருக்குள் அமர்ந்து கண்மூடித் தூங்குகின்றேன்
“வேருக்குள் தாங்கும் பலாக்கனி நாங்களய்யா
பாருக்குள் எம்போல் பாவையுண்டா?” என்றார்
“கோரிக்கை யாது கூறுவீர்?” என்று நானும்
கோவை இதழ்க்காரிகளைக் கேட்கு முன்னம்
“அறுவரில் ஓரழகி தேர்ந்தெடுப்பீர்
அவளுடன் வாழ்வெலாம் களித்திருப்பீர்
அட்டியின்றி இப்போதே சொல்லிடுவீர் - நேரம்
வட்டியின்றிக் கழியு” தென்றார்!
“செட்டிமார் வீட்டுப் பெண்ணோ?” கேட்டுவிட்டேன்!
“முட்டி மோதும் சாதியில்லை மதமில்லை - யாம்
மனித குலம் : அவ்வளவே!” என்று சொன்னார்.
ஆசைதான் எனக்கும் கூட
ஆனால் தேர்வில்தான் திகைத்துப் போனேன்
அறுவரும் ஒரு நிறம் ஒரு குணம்
பருவமும் வேறிலை
பனிமலர் இரு கனி மரம் இடையிலோ
எழில் நடையிலோ
விழியாம் வேற் படையிலோ
இதழ்க் கடையிலோ
முரணிலை முறுவலும் ஒரு நிலை.
பட்டென்றால் ஒருத்தி மேனி
பட்டேதான் அறுவர் மேனி...
பளிங்கென்றால் ஒருத்தி மேனி
பளிங்கேதான் அறுவர் மேனி...
கிளிமொழி ஒருத்தி பேச்சு
கிளியேதான் ஆறு பேரும்.
அருள் நெறி ஒருத்தி வார்த்தை
அங்ஙனமே ஆறு பேரும்
குறள் மொழி பேசுகின்றாள் ஒருத்தி என்றால்
நான் கூறுகின்ற ஆறு பெண்ணும் அதனைத்தான் பேசுகின்றார்.
என் செய்வேன் எப்படித்தான் தேர்ந்தெடுப்பேன்
புண் செய்தார் விழிவேலால் இதயத்தில்
பண் செய்தார் நெஞ்சத்தில் காதலுக்கே
மண் செய்த விந்தையாலே
மங்கையர்கள் அறுவர் ஒன்றாய் என்
கண் கொய்து திகைப்பாலே தவிக்க வைத்தார்.
சரி; பேர் கேட்டுத் தெரிந்து கொண்டு அதில்
யார்வேண்டும் நமக்கென்று தேர்வதற்கு முன்வந்தேன்:
ஆளுக்கொரு பேர் சொன்னார்:
“அருளுடைமை” ஒருத்தியின் பேர்.
‘அடக்கம்’ என்பவள் இன்னொருத்தி.
‘இனியவை கூறல்’ பிறிதொருத்தி,
‘பொறை’ யென்றாளொரு பூங்கோதை,
‘வெகுளாமை’ எனச் சிரித்தாள் வெறொருத்தி.
‘இன்னா செய்யாமை’ என் பேர் என்று
முன்னால் வந்து நின்றாள் ஆறாமவள்.
அடக்கமிருப்பின் அருளுடைமை ஆடிவரும்
இனியவை கூறுமிடம் பொறையிருந் தரசாளும்
வெகுளாமை கொண்ட மனம்,
இன்னா செய்யாமை பூக்கின்ற தும்பை வனம்.
இதில் பேர்தானே மாற்றம்; வேறென்ன மாற்றம்?
‘ஒத்தவயது ஒத்த குணம் ஒத்த முகம் உள்ள நல்லீர் -
உமைப் பெற்றெடுத்த தாய் யார்?” என்றேன்;
“தமிழ்” என்றார்.
