கலைஞரின் கவிதைகள்
கவிதை 12 · 12 / 77
குத்திடவும் செய்யாதே
புத்தியுடன் அதனாலே பழமறுத்துத் தின்றிடவும் தயங்காதே
முத்தியடைவேன் என்று
ஐம்புலனை இயக்காமல் இருப்பதுபோல் நடிப்பதும் சூது
ஐம்புலனை அவிழ்த்துவிட்டுக் கோயில்மாடாய்த் திரிவதுவும்
ஐம்புலனில் ஆளுக் கொரு ‘புலன்’ எடுத்து
அரங்கேற வந்தவரே ஒரு வார்த்தை!
தீது! அது கிடக்க
இந்தக் கல்லூரி அரங்கினில் கவியை ஏறவிடுவோர்
அவர்தம் பொருளே பெரிதென்பீர்;
கவிஞர்களே! நீங்கள் எடுத்த பொருளே பெரிதென்று
வாதிடும்போது ஓர் எச்சரிக்கை!
மெய் பெரிதானால் ஊரார் யானை என்பர்
கண் பெரிதானால் கோட்டான் என்பர்
மூக்கு பெரிதானால் குடமிளகாய் அன்றோ
வாய் பெரிதானால் வாயாடிப் டமுண்டு
செவி பெரிதானால் முறம் என முனகிடுவர்
அதனாலே
அளவறிந்து அவரவர் பொருளைப் பேசிடுவீர்
வம்பென்றால் விலக்கிடுவேன் - கவிஞரிடை
வம்பென்றால் களித்திருப்பேன் - தமிழ்க்
கம்பெடுத்துச் சொற்சிலம்பம் ஆடிடுவீர்;
கவி அம்பெடுத்துத் தாக்கிக் கொள்வீர்:
அதே நேரம் கனிந்த அன்பெடுத்துத் தாங்கிக் கொள்வீர்!
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றமென்று
ஐந்தின் வகை தெரிய விரித்துரைப்பீர்
பகை பழி வெற்றி வீம்பு பாட்டினிலே வைத்து
நகை நட்பு நாம் என்ற உணர்வு நெஞ்ச ஏட்டினிலே வைத்து
எழுந்திடுவீர் போருக்கு!
சின்னச்சேவல் சண்டை: காசுக்கு
மன்னர் போடும் சண்டை; நாட்டுக்கு
நீங்கள் போடும் சண்டை; பாட்டுக்கு
நாங்கள் காணும் சண்டை: தமிழுக்கு
முதலில் மெய் எனும் பொருள் பற்றி
நெய்யொழுகும் கவியொன்று பெய்திடுவார் சாகுல் அமீது
அவர் என்ன சொல்வார்?
மெய்யின்றிக் கண்ணில்லை மூக்கில்லை
வாயில்லை செவியில்லை.
மெய்தானே அனைத்துக்கும் ஆதாரமென்பர்.
அது மெய்தானே?
அதாவது அவர் அப்படிச் சொல்லப்போவது மெய்தானே?
அவர்க்குத் துணையாக வள்ளுவரும்
“மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம்” என்றார்.
மெய்யா பொய்யா எனும் வாதத்திடையே
கொய்யாக் கனி சுவைப்போம்.
சற்றுக் காத்திருப்போம்.
சாகுல் அமீதின் தமிழ் கேட்போம்:
(கவிஞர் சாகுல் அமீது ‘மெய்’ பற்றிப்
பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
அடுத்து;
முருகுசுந்தரம் சேலத்துக்காரர்-
உருகாதோ அங்கிருக்கும் இரும்பென்று
ஒருமாதம் இருமாதம் ஓராண்டு பத்தாண்டல்ல -
கருவாகிக் காங்கிரசார் ஆட்சிசெய வந்தநாள் தொட்டு
உருகுகின்றோம் நாமெல்லாம்; அவர் மனமோ உருகவில்லை!
தேனிரும்பு; உருகாவிடினும் தான்கற்ற தேன் தமிழால்
நமதுள்ளம் உருகும் வண்ணம் பாடுதற்கு
முருகுசுந்தரம் வருகின்றார்....
வாயின்றிப் பாடுதல் முடியாதென்று வழக்குரைப்பார்-
முடியுமா என்று என்னைத் தீர்ப்புக் கேட்பார்....
நான் திகைப்பேன்;
தீர்ப்பையும் வாயால்தானே சொல்லவேண்டும் என்பார்!
ஏன்; தீர்ப்பைக் கையாலும் எழுதிக் காட்டலாம் என்பேன்.
நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்
விரைந்து தொழில் கேட்கும் ஞாலம்
எனும் வள்ளுவர் கருத்தை நண்பரின் வாய்க்கு
அவலாய்த் தருவேன்.
அவர் வாய் பற்றிப் பாடிடுவார்; நாம்
வாய் பொத்திக் கேட்டிடுவோம்
வாய்தானே உணவருந்தும் வாசல் என்று:
(கவிஞர் முருகுசுந்தரம் ‘வாய்’ பற்றிப்
பாடி முடிக்கிறார்.)
தலைவர் கலைஞர்:
அடுத்து;
கண்பற்றிப் பாட அரங்கின் கண் வருகின்றார் ராசேந்திரன் -
என்கண் இவர் கவிதை கண்டதுண்டு
அவை, தேன் சீனி கற்கண்டு
வாய்ச் சொற்கள் என்ன பயனுமில
கண்ணோடு கண்ணிணை நோக்கொக்கின்
என வாதாடப் போகின்றார்...
வள்ளுவரும் அவர் குறளில் ‘கண்’ என்ற சொல்லுக்கே
மிகுந்த இடம் தந்துள்ளார்;
கூற்றமோ? கண்ணோ? ஒரு குறளில்-
கொடும்புருவம் எனத் தொடங்கி இவள்கண் எனமுடியும் ஒரு குறள்-
இருநோக்கு இவளுண்கண் உள்ளது எனப் பறைசாற்றும் பிறிதோர் குறள் -
மலரன்ன கண்ணாள் மற்றோர் குறள் -
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு
இப்படிப் பல்வேறு குறட்பாக்கள் இவர்பக்கம் இருப்பதால்
எப்படித் தீர்ப்பு நான் கூறுவேன் என்று நினைக்காதீர்!
இந்த ஐம்புலனிலும் சிக்காத மூளையாலே
சிந்தித்துக் கண்திறந்து தீர்ப்பளிப்போம்
அதுவரையில் கண்மூடி இவர் கவிதை இன்பத்தில் மயங்கி நிற்போம்.
(கவிஞர் ராசேந்திரன் ‘கண்’ பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
அடுத்து;
தமிழன்பன் மூக்குடைக்கப் போகின்றார்
இரு கண்ணுக்குத் தேவையுள்ள கண்ணாடியை
இடையிலுள்ள மூக்குதான் சுமந்தபோதும்
மூக்காடி என்று பெயர் வேண்டாம்.
கண்ணாடி என்றே இருக்கட்டும் என்று விட்டுத்தந்த
பரந்த உள்ளம் ஆத்தாடி எப்படித்தான் வந்ததுவோ
மூக்கிற்கென்று முரசறைவார் போருக்கு!
மோப்பத்தால் அனிச்சமலர் குழைய வைக்கும்
மூக்கென்றார் வள்ளுவரும்
மூக்கின்றி மூச்சில்லை; அதனாலே
தன்பக்கம் தீர்ப்பளிக்க வேண்டுமென்று நண்பர் கேட்டால்
நான் வாயாலே மூச்சுவிட்டுக் காட்டிடுவேன்...
மூக்கு பற்றிப் பாடுகின்ற தோழருக்கு முன்னாலே நிற்காமல்
அவர் கவிதைப் போக்குபற்றி எண்ணிடுவோம்-
பாக்கு வைத்துத் திருமண அழைப்புத்தான் தந்திடுவர்;
இங்குப் பாக்கு வைத்துத் தமிழ்மணம் பருகவன்றோ அழைத்துள்ளார்-
பருகிடுவோம்:
(கவிஞர் ஈரோடு தமிழன்பன் ‘மூக்கு’ பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
அடுத்து;
அலைபாடுங் கடல் போலக்
கலைபாடும் மாமல்லபுரம் போலக்
கவிபாடும் பொன்னிவளவன் இருக்கின்றார்....
காவிரியின் வளவன் கரிகால் வளவன்
கரிமேனி வளவன் இவர்; ஆனால்
கம்பீரத் திருமேனி வளவன்.....
‘செவி’ பற்றிச் செப்பிடவே வருகின்றார்.
செல்வத்துட் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாம் தலை
என்ற குறள் காட்டி வெற்றிப் பரிசு கேட்டிடுவார்
உண்மையது; வாதத்துக்காக! ஆனால்....
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப,
வாய் மொழிந்தால்தானே செவியேறி அது செல்வமாகும்
என நான் கூறிப் பிழைத்துக் கொள்வேன்
நடக்கட்டும் அவர் வாதம்
நம் செவியேறி இனிக்கட்டும் செந்தமிழ் கீதம்!
செவிமடுப்போம் உம் கவிதை வருவீர் ஐயா!
வந்துவிட்டார் வளவன்
நான் சொன்ன நிறம் காண்பீர் கவித்திறம் காண்பீர்
எம் இருவரையும் இணைத்துப் பார்ப்பின்
இருவண்ணக் கொடி காண்பீர்...
(கவிஞர் பொன்னிவளவன் ‘செவி’ பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர் முடிவுரைக் கவிதை:
பாவலர்க்குப் பட்டாடை போர்த்தும் நாட்டில்
மெய் வாய் கண் மூக்குச் செவியென்று - தமிழ்
நெய்து நமக்கெல்லாம் பட்டாடை போர்த்திவிட்டார்
