கலைஞரின் கவிதைகள்
கவிதை 11 · 11 / 77
மருவற நிற்கும் என் மாசிலா மனைவியே!
என்னரும் உயிரினும் என்னுயிர் உளத்தினும்
மன்னுறப் பாதியை மகிழ்ந்துனக் களித்தேன்
பின்னுறப் பாதியை பெரிய நம் தேயத்தின்
தன்னடிக் களித்தேன் சத்தியம் இஃதே!”
இந்த அகவற் பாவால் அகத்தினைத் திறந்த
தகவுடை மேலோன் தமிழர் தலைவன்
வளஞ்செறியும் வ.உ.சி. பற்றிப் பாட
இளஞ்செழியக் கவி நண்பர்
இனிய தமிழ்ச் சொல்லால் இங்கு வருகின்றார்;
இதயம் உறை நல்லார்:
(கவிஞர் இளஞ்செழியன் வ.உ.சி. பற்றிப்
பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞரின் முடிவுரைக் கவிதை:
சிறை வாழ்ந்தார் செக்கிழுத்தார் - இந்தத்
தரையாண்ட வெள்ளையரை விரட்டுதற்குக்
குறை ஆயுள் பெற்று பலர் கொலையும் உண்டார்.
உறை மீறி வெளிவந்த கத்தி போல
உயிர்மீது ஆசையின்றிப் போர் புரிந்தார்;
அவர் பெருமை கூறுதற்கு அணிவகுத்த இந்த நாளில்
விடுதலைக்கு உயிரீந்த எவர் பெருமை கூறுதற்கும்
இவர் போலக் கவி வளத்தைப் பெற்றேனில்லை;
கவிதை பாடக் கற்றேனில்லை
தளையறுத்த வீரர் கதை பாடுவதால்
தளையகற்றிப் பாடுகின்றேன் நானும் - அவர்
தொடை தட்டித் துரோகிகளை வீழ்த்தியதால்
தொடை தட்டும் என் பாட்டும்!
என் கவிதை,
யாப்பின்றிப் போனாலும் போகட்டும் - நம்நாடு,
மொழி, மானம், உணர்வெல்லாம்.
காப்பின்றிப் போதல் கூடாதெனும் கொள்கை யொன்றால்
வாய்ப்பின்றிப் போனாலும் செய்யுள் கற்கக்
காய்ப்பின்றி நிற்கின்ற மரமாக ஆகாமல்
நெஞ்சில் ஊறுகின்ற உணர்ச்சிகளை வரிகளாக்கிக்
கொள்கை மாறுகின்ற கோடரிகள் உணர்வதற்கு ஒன்று சொல்வேன்:
எத்தனை உயிர்கள் எத்தனை ரத்தம்
நித்தமும் தந்து பெற்றது விடுதலை!
இத்தரை குடைந்து மெத்தவும் உழன்று
பத்தரை மாற்றைப் பெற்றபின் அதனைக்
கைத்திறம் காட்டி அணிநகை பூட்டிச்
சித்திரப் பெண்டிர்க் களித்திடலன்றிக்
குப்பைக் குழியில் போடுதல் நன்றோ?
புட்கள் கூவிடும் சோலையின் நடுவே
முட்கள் கீறிடப் பறித்த நல் ரோஜா
கட்கம் ஏந்திய வீரர் முடியில்
வெட்கம் ஏந்திய மாதர் குழலில்
இருந்திடல் மணமா? அதனைத்
துட்டக் குரங்கின் குறுகிய கையில்
கொடுத்திடல் நலமா?
பெற்ற சுதந்திரம் பேணிக் காப்போம்;
பெற்ற மறவர்க்குப் பெருமைகள் சேர்ப்போம்.
உற்றார் சுற்றம் ஒருவர் இருவர்
உயர்வுடன் வாழ்தல் சுதந்திரம் ஆமோ?
கற்றார் கல்லார் கழனியில் உழல்வோர்
சிற்றாள் கொல்லர் சிறுதொழில் செய்வோர்
மாதர் நல்லார் மாணவ மணிகள்
தீதறு வாழ்வில் திளைத்தலே சுதந்திரம்.
இந்தக் கொள்கை இனிது விளங்க
மந்தக் கொள்கை மாய்ந்து விலக
சந்தத் தமிழில் ஒலிப்போம் இன்று.
தங்கக்குன்றே தமிழே தாயே; உன்
சிங்கப் புதல்வரின் சிறப்பினைச் சொன்னோம்
எங்கும் தமிழகம் வெற்றி விளைத்திட
இங்கு நீ எமக்கே அருள்வாய் அம்மா!
வணக்கம்!
வாழ்க!
✤
ஐம்புலன்
24.3.68 அன்று
வாணியம்பாடி இசுலாமியா கல்லூரியில் “ஐம்புலன்”
என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கத்தில்
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின்
தலைமைக் கவிதை முன்னுரை
★
பகைவர்க்குத் தாழாமல் படைகண்டு வீழாமல்
பல்லூழி வாழ்கின்ற தமிழ் எடுத்துப் பாடவந்த
கல்லூரிப் பெருமன்றில் இருக்கின்ற பெரியோரே
பேரன்பு கொண்டோரே நல்இளஞ் சிங்கங்காள்
தாயன்பு தழைக்கின்ற நெஞ்சோடு ஏற்றிடுவீர் என் வணக்கம்!
மெய் வாய் கண் மூக்குச் செவியென்று ஐம்புலன் பற்றிக்
கவியரங் கொன்று அமைக்கின்றோம்
ஐய நீ வருக என்று அன்பர் ரகுமான் அழைத்திட்டார்....
வாயால் சொன்னார் கவியரங் கென்று
எனைக் கவியெனக் கொண்டாரே யென்று
மெய்யெலாம் சிலிர்க்க, மெய்யா என்றேன்.
கண்சிமிட்டி ஆமென்றார். கேலியோ என்னவோ?
பின்னர் அவர் போட்ட கடிதமொன்று
பீடித்துப் பார்த்தேன். கண்ணால்தான்!
பாடுதற்கு வா என்றே மீண்டும் அழைப்பு
கார் விபத்தில் அடிபட்ட மூக்கினிலே சிறுசிகிச்சை;
போவதற்கு ஆமோ என்று பேசாதிருந்தேன்....
விடவில்லை என் தோழர்.
விடுவிடெனத் தொலைபேசி மணி அடிக்கச்
செவியினிலே ரகுமானின் குரல் கேட்டேன்.
வாயால் அழைத்து மெய்சிலிர்க்க வைத்துக்
கண் பார்க்கக் கடிதம் அனுப்பி
கலைஞரின் மூக்கினிலே நோய் எனினும்
முக்காலும் விடமாட்டேன் எனச்செலவு நோக்காமல்
செவிகுளிரத் தொலைபேசிக் கூப்பாடு போட்ட பின்னர்
நான் வராவிட்டால்
தாக்காமல் இருப்பீரோ நீவிர் எனப்பயந்து
பூக்காமல் இருக்கின்ற கவியரும்பு கட்டிக்கொண்டு
காலை யரும்பு என் கவியரும்பு ஓடிவந்தேன்
மாலைவந்தால் மலருமென்றே நம்பி வந்தேன் மாலையிலே!
அழகுநிலா ஒன்றிருந்தால் அல்லிமொட்டு மலருமென்பர்;
இங்கு ஐந்தாறு நிலா அழகுக் கவிகள் நிலா இருப்பதாலே
நான் அள்ளிவந்த அரும்புகூட மலருமன்றோ?
மலராவிட்டால் நிலவின் குற்றம்
எனைக் கவியென்று நினைத்தோர் குற்றம்
வண்ணமிகு குன்றங்கள் இருக்கின்ற வடார்க்காட்டில - என்
எண்ணமெலாம் இனிக்கின்ற நட்புக்காட்டும் முல்லைக் கொம்மை
இன்னலொன்று எனக்கென்றால் துடித்திட்ட தோழருண்டு:
அந்தக் கன்னல்நிகர் ‘முல்லை’க்கு!
வருவதென்றால் அடங்காத அதனாலே அருகில் வந்தேன்.
ஆடி அடங்கிடும் மெய்யென்பார்
பாடி அடங்கிடும் வாய் என்பார்
தேடி அடங்கிடும் கண் என்பார்
வாடி அடங்கிடும் மூக்கென்பார்
நாடி அடங்கிடும் செவியென்பார்
இந்த ஐம்புலன் அடக்குதல் நன்றென்பார்!
அஃதெங்ஙனம் முடியும்?
பைம்புள் பாட்டை மறுக்குமோ செவியும்?
பைங்கிளித் தழுவலை மறுக்குமோ மெய்யும்?
பழந்தமிழ் பேச மறுக்குமோ வாயும்?
பலாச்சுளை நிலவை மறுக்குமோ கண்ணும்?
பனிமலர் நறுமணம் மறுக்குமோ மூக்கும்?
ஐம்புலனை அடக்குதற்குத் தவம் புரிந்த
அண்டமா முனிவரெல்லாம் அப்பாடா; எப்பாடு பட்டு விட்டார்....
அரசுகட்டில், மணிமகுடம் அனைத்தும் துறந்து
அடவியிலே துறவியாக இருந்திட்டார், விசுவாமித்திரர்;
அவர் மேனகையின் விசுவாச மித்திரராய் ஆனகதை அறியீரோ?
அதுபோலக்
கண், செவி, மூக்கு, வாய், மெய் புலன் ஐந்தும்
கடிவாளமில்லாத குதிரைகளாய்க்
காட்டாற்று வெள்ளமாய்ப் பெருகியோடக்
கண்ணிருந்தும் குருடாய்க் - காதிருந்தும் செவிடாய்ப்-
புண்பெற்ற மெய் - புலம்புகின்ற வாயோடு
போக்கற்று நின்றிருந்த அருணகிரி வரலாறும் அறிந்திடுவீர்.
எதுவும் ஒரு அளவாக இருத்தல் வேண்டும்
அதுவும் மிக நிலையாக இருக்க வேண்டும்.
என்பதற்கு இரண்டு கதை சொன்னேன்.
கத்தியுளது கரத்தில் என்று;
