கலைஞரின் கவிதைகள்
கவிதை 10 · 10 / 77
ஏனடா திரிகின்றாய் வீரனாய் வீணில்?
விழுப்புண் படுதலே வீரம் - அந்தச்
செழிப்பில் உயர்வதே மானம்- மானம் பெரிதென்பவன் தமிழன்
அதை மறுப்பவனெல்லாம் பகைவன்!
பகைவனுடன் உறவாடும் தம்பி - அவனைப்
பகுத்தறிவு உலகம் பாராது திரும்பி!....
உளுத்த வில்லை முறித்ததனால் புகழ் பெற்ற வீரன்!
உத்தமியை மீட்பதற்குத் துணை தேடும் தீரன்!
வெளுத்ததெல்லாம் பாலெனவே நம்புகின்ற தமிழர் - சிலர்
இருத்தலினால் நடமாடும் சூரன்!
எதிர் நின்று போர் புரியும் ஆற்றலில்லாக் கோழை
பதர் நின்று நெல் அழிந்தால் பயன்தருமோ வாழ?
நான் மாண்டு நீயிருந்தால் பரவிடுமோ வீரம்?"
எனக் கேட்டான் வாளி மன்னன்-
முரசறைந்தான் கேள்வியாலே!
முடிப்பதற்குள் வீழ்ந்து விட்டான் பிணமாக!
செய்தி பரவியது - செந்தீ பற்றியது
செந்தாமரையாள் தாராதேவி வீழ்ந்தாள் வந்து!
"மன்னவரே! தழுவுதற்கு நானிருக்க
மண்மாதைத் தழுவினீரோ?" என அழுதாள்; ஓலமிட்டாள்:
ஓடுகின்ற குருதி ஆற்றைக் கண்ணீரால் வென்றாள்-
கணவனுடன் சென்றாள்!
தமிழ்நாட்டுப் பண்பு கண்டான்-
தலைகுனிந்தான் ராமன்!
✤
விடுதலை
வீரர்கள்
15.8.67 அன்று திருச்சி வானொலியில்
"விடுதலை வீரர்கள்"
என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கத்தில்
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின்
தலைமைக் கவிதை முன்னுரை.
★
இமிழ்கடல் வேலித் தமிழகம் ஈன்ற
என்னுயிர் அண்ணன் அன்னையர் தந்தையர்
பொன்னொளிச் சோதரர் புகழ்மிகு பாவலர்
கண்மணித் தமிழின் காவலர் யாவரும்
இற்றைத் திருநாள் ஏற்பீர் வணக்கம்.
ஆகா...
சேரர் வாழ்ந்த சிறப்பிடம் எங்கே?
வீரர் பாண்டியர் அரசேன் கவிழ்ந்தது?
சோழர் உலவிய சோர்விலா நாட்டில்
கோழைக் கொள்கை குவிந்த தெவ்விதம்?
வெடித்தன வினாக்கள் வெதும்பிய மனத்தில்.
குடித்திடுவோம் உயிர் கொடுத்திடுக நாட்டை!
விடுதலை வேண்டாம் எனும் வெறும் உபதேசம்
நரிகளின் ஊளை.
நாட்டு வெறிபிடித்த காளைகளே
கிலிபிடித்த மனிதர்களைக் கீறி எறியுங்கள்
புலிவாழ்வின் உச்சியிலே புதுமைதனைப் பொறித்திடுவோம்
என்று சிலிர்த்துப் பொங்கி எழுந்த
தமிழகம் தந்த விடுதலை மறவர்
கமழ் மணப் பாவில் மீண்டும் பிறந்திட
வானொலி நிலையம் வழங்கிய அழைப்பால்
வந்துளர் தாய்கள்: தலைவன் நானாம்!
விழிகளில் வீரம் சிரித்திடும் தமிழர்
விடுதலை கீதம் பாடிய கதையைக்
கவிகளின் மொழியில் கேட்டிட எழுவோம்
கண்களில் ஒத்திக் கால்மலர் தொழுவோம்.
முதலில் ....
முடக்கடா விடுதலை ஆர்வம் என்றார்
அடக்கடா சுதந்திர அனலை என்றார்
அவரை எதிர்த்து,
முழக்கடா முரசமென்று அதிர்ந்திட்ட சிங்க ஏறு
சழக்கரால் சாவில் வீழ்ந்த சரித்திரம் கேட்டிடுவோம்;
வானம் பொழியுது பூமி விளையுது
மன்னவன் காணிக்கை ஏதுக்கடா?
ஆண்ட இனத்தால் மீண்டும் முற்றுகை
மாண்டிடும் புழுவே மகுடம் கழற்று!
இப்படிக் கனல் கொட்டும் பெருமூச்சு
கட்டபொம்மன் உயிர்மூச்சு - முழக்
கயிற்றினிலே ஆறியதால்
கயத்தாறுத் தலம் என்போம்.
அத்தலத்து வரலாற்றைத் தருகின்றார்
அள்ளி உண்போம்.
(திருச்சிற்றம்பலக் கவிராயர் கட்டபொம்மன்
வரலாற்றுக் கவிதை பாடி முடிக்கிறார்.)
தலைவர் கலைஞர்:
செத்துவிட்டான் கட்டபொம்மன் என்றிருந்தோம்; மீண்டும்
பெற்றுவிட்டார் இந்தச் சிற்றம்பலம்; வாழ்க நன்று.
அவ்வழியில்
அடுத்தடுத்துப் பிள்ளைகளைப் பெறுவதற்கு அன்னையர்கள்
இருக்கின்றார்
எடுத்தணைத்து மகிழ்ந்திடவே ஆவலுடன் நிற்கின்றோம்.
கெடுதலையைத் தருகின்ற அடிமை நீங்கி
விடுதலையைப் பெறுவதற்கு, என்மகனே
கொடு தலையை எனச்சொன்னாள் அன்னையென்று
கொடுத்து விட்ட புலிமக்கள் மருதிருவர்
தொடுத்துவிட்ட சுதந்திரப் பூமாலையிலே மணமானார்;
விடுத்துவிட்ட அம்புபோல் வேகம் காட்டித்
தணலில்
பழுத்துவிட்ட சொல் எடுத்துப் பாப்புனைந்து
நடமாட விடுகின்றார் மருதிரு சோதரரை
நடராசக் கவிராயர் மிக நன்றாய்:
(கவிஞர் தி.கு.நடராசன் மருதுபாண்டியர்
வரலாற்றுக் கவிதை பாடி முடிக்கிறார்).
தலைவர் கலைஞர்:
இருமருதை இங்கழைத்து வீரத்
திருமலியும் வரலாற்றைத் தந்திட்டார் நம் நண்பர்
இருமருதும் ஒரு மருதாய்ப் பிறந்திட்ட
பெரும்புலவன் பாரதியைக் காட்டுதற்குத் திரு
முருகுசுந்தரக் கவிவாணர் முனைகின்றார் கேட்போம்.
"பழைய நடை, பழங்கவிதை, பழந்தமிழ் நூல்
பார்த்தெழுதிப் பாரதியார் உயர்ந்தாரில்லை.
அழகொளிசேர் பாரதியார் கவிதை தன்னை
அறிந்திலதே புவியென்றால் புவிமேற் குற்றம்
களைத்தவர்க்கும் கல்லாத தமிழர்க்கும்
கனிந்தபடித் தோலுரித்துச் சுளைத் தமிழால்
கவியளித்த சுப்ரமண்ய பாரதியார்-
நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா
காடு மணக்க வந்த கற்பூரச் சொற்கோ"
என்றெல்லாம்
ஆடும் மயில் தமிழ் என்முன் என
ஆடவைத்த பாரதிதாசன் பாடுகின்றார்;
இவரென்ன பாடுகின்றார். பார்ப்போம்.
(கவிஞர் முருகுசுந்தரம் பாரதி பற்றிப்
பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
நீர் வீழ்ச்சி போலன்றோ நிமிர்ந்த கவி பாரதிக்குப்
பாவோச்சிப் பொழிந்துவிட்டார் - நன்று நன்று.
ஒரு
நீர்விழ்ச்சி சேட்டையினால்
பேரதிர்ச்சிப் பெரும்புயலைத் தமிழ்நாடு தாங்கிற்றந்தோ!
வ.வே.சு. அய்யரெனும் வாய்மைகொள் செயல்மறவர்
ஆவேச நீர்வீழ்ச்சிச் சுழலில் சிக்கி
அன்றொரு நாள் மாய்ந்துவிட்டார்
இன்றொரு கவிஞர்
அவர் எழுப்ப வந்துவிட்டார்.
சுவர் எழுப்பிச் சுதந்திரத்தை அடைத்துப் போட்டுச்
சுற்றி நின்று பாதுகாத்த அன்னியரின் படைகெடுக்க
இவர் எழுந்தார், இடையில் மறைந்தார்
இதோ மீண்டும் வருகின்றார்.
அழகொழுகும் அப்துர் ரகுமானின்
அருமை மிகு செந்தமிழால் உயிர்பெற்று:
(கவிஞர் அப்துர் ரகுமான் வ.வே.சு. அய்யர் பற்றிப்
பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
மூத்த குடிப்பிறந்த மூதறிஞர் வாழுகின்ற தமிழகத்தில் புகழ்
யாத்த குடிப்பிறந்த வ.வே.சு. அய்யர் கண்டோம்
விடுதலை உறுதி
ஏற்ற குடித்தோன்றல் - எழில்
தூத்துக்குடிக் கடல் மீது கப்பல்விட்ட ஏந்தல்
“திருவும் புகழும் சிறந்தன பிறவும்
