உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

காலப் பேழையும் கவிதைச் சாவியும்

கவிதை 9 · 9 / 58

வரவேற்கும் மெக்சிகோவின்

அன்புநிறை ‘அசடெக்’ மக்களும்,

அவர் போலவே ‘மாயா’வின் பிரஜைகளும்

மற்றும் ஆங்குவாழ் பெரு நாட்டவரும்

மனத்தால் நம் மீது பிரியங்கொண்டு ;

வெள்ளையர் காலத்துக்கும்

வெகு காலத்திற்கு முன்பே -

நாகரிகம் பெற்று

நல்வாழ்வு நடத்துவோரன்றோ! அந்த

மாயா மெக்சிகோ நாகரிகத்தின்

தாயாய் விளங்குவது திராவிடர் நாகரிகமன்றோ ?

திறம் பெற்ற வரலாற்று ஆய்வாளர்

திடமாக உரைக்கின்றார் - அவற்றைத்

தெளிவாகத் தொகுத்துள்ளார் ; தமிழ்த்

திருவாளர் மதிவாணர் - என்பதைத்

தெரிவித்து மகிழ்கின்றேன்.

மற்றொரு செய்தியும் உண்டு ; நாம்

மலைத்து, மகிழ்ந்திடுமளவுக்கு!

என்ன அது ?

எகிப்தில் கிடைத்ததாம் பழங்காலப் ‘பாபிரஸ்’ சுருள் ஓலையொன்று ;

எதற்காக இதுவென்று வீசி எறிந்து விடாமல்,

எழுத்தறிந்து ருஷ்ய அறிஞர்களால் படிக்கப்பட்டு

எல்லோர்க்கும் பின்னர் தெரிவிக்கப்பட்டது.

மாக்கலத்தில் மனத்துணிவுடைய இளைஞன் ஒருவன்,

தாங்கொணாப் புயற் காற்றில் கடலில் தனியாக சிக்கிக்

கொண்டான்.

கடல் நடுவே கலம் கவிழ்ந்து

அலைக் காத்தால் அள்ளி எறியப்பட்டவே ;

அப்போதும் அவன் அச்சமின்றி -

அருகில் மிதந்த அனாதைக் கட்டையொன்றை

அழுத்தமாகப் பிடித்தணைத்துக் கொண்டு,

அலைகடலின் கரையை அடைந்தான்.

அங்குற்ற காய்கனிகள் பறித்துண்டு

அரும்பசியாற்றிக் கொண்டு

அந்த அயல் நாட்டை ஆளுகின்ற

அரசனைக் காணச் சென்றான்.

பண்டுடனே அவ்வேந்தன் அன்பு காட்டி,

பரிவுடனே இளைஞனையும் பாராட்டி ; விலை உயர்ந்த

பல பொருள்கள் பரிசாய் வழங்கி,

விடை கொடுத்து வேறு கலத்தில் அனுப்பிவைத்தான்.

அந்தப் ‘பாபிரஸ்’ ஓலைச் சுருளில் குறிப்பிட்-

பரந்த இந்து மாக்கடலின் தென் பகுதியில்

இருக்கின்ற நாடுதான் “நாக நாடு” என்றும் ; அது

தமிழ்நாட்டுக்குத் தொடர்புடைய நாடென்று

கடைச் சங்கத் தமிழ் இலக்கியங்கள்

கண்டறிந்து நவில்கின்றன என்றும் ; அந்த

நாக நாட்டு இளவரசி ‘பீவளை’ என்பாளை

நமது சோழ நாட்டு இளவரசன் மணந்தான் என்றும்

பழைய கதையல்ல ;

வரலாறே உண்டு என அறியும்போது,

களிப்புக்கோர் எல்லை தான் உண்டோ ?

பாபிரசுச் சுருள் ஓலை என்பது ; எகிப்தியரின்

பழம் பெரும் நாகரிகச் சான்று என்பதால் ;

கி.மு. 4000க்கு முன்பிருந்தே சுமேரியாவுடனும் ;

கி.மு. 3000க்கு முன்பிருந்தே எகிப்துடனும் ;

கி.மு. 1200க்கு முன்பிருந்தே சீனத்துடனும் ;

வாணிபத் தொடர்பு, தமிழர்க்கு வாய்த்திருந்ததை ;

வரலாறு விளக்கிக் காட்டுகின்றதாம்!

“நாவாய்கள்” என்பதே ‘நாய்கள்’ எனத் திரிந்த சொல் என்றும்

நவில்வர் நமது நாவலந்தீவின் வரலாறுணர்ந்த நற்றமிழறிஞர்!

அரேபிய, எகிப்து, கிரேக்க, உரோம நாடுகள் மற்றும்

அதற்கப்பாலும் உள்ள ஆழ்கடலில் கப்பல் ஓட்டியவர் நம்மவர்

என்பதும்

அதுவும் அய்யாயிரம் ஆண்டுக்கு முன்பே என்பதும்

அன்றைக்கே நாடுகள் பல அறிந்துள்ள நமது நாகரிகப்

பெருமையன்றோ ?

பாபிரசு = பாபிரசு என்ற நீர்த்தாவரத்திலிருந்து தயாரிக்கப்படும்

காகிதத்திலான சுவடி.

நடுக்கடலில் தத்தளித்துத் துடித்தும்

நடுக்கம் ஏதும் கொள்ளாமல்

கடும்புயல் சூறாவளியில் கவலை சிறிதுமின்றி

கட்டை யொன்றின் துணைக் கொண்டு

காளையொருவன் கரை சேர்ந்த பின்னர்

நாக நாட்டு மன்னன் தந்த பரிசுப் பொருளும்

நல் உள்ளப் பாராட்டும் பெற்றுச் சென்றான் எனப்

பழங்கால வரலாற்றுச் செய்தியொன்றை ;

காலப் பேழையிலே சுட்டிக்காட்டியிருந்தேன்.

நாக நாடு என நினைத்ததுமே

பீவளை எனும் பெண்மணியின் பெயர்

சோழ மன்னன் நெடுமுடிக்கிள்ளிப் பெயரோடு

வரலாற்றுப் பெரு வீதியிலே

வலம் வந்த காரணத்தால்

சாத்தனார் தீட்டிய மணிமேகலைக் காப்பியத்தில்

சான்று ஏதேனும் உண்டா என்று

சல்லடையிட்டுத் தேடிப் பார்த்தேன்

சங்கமின்றிச் சுருதியில் கிடைத்தது சாட்சியம்.

“நாக நாடு நடுக்கின்ற றாள்பவன்

வாகை வேலோன் வளவணன் தேவி

வாச மயிலை வயிற்றுள் தோன்றிய

பீவளை யென்போள் பிறந்த அந்நாள்

இரவிகுலத் தொருவ நிணைமுலை தோயக்

கருவொடு வருமெனக் கணியெடுத் துரைத்தனள்”

‘ஆபுத்திரன் நாட டைந்த காதை’ அமைந்த

அக்காப்பியத்துச் சான்றாக ; நாக நிலத்து

அரசன் வளைவணன் தேவிக்குப் பிறக்கும்

அழகுமயில் பீவளை என்பாள் ;

சோழர் குல இளவலுடன் காதல் சொர்க்கம் புகுந்து

சுமந்து வருவாள் கருவினையெனச் சோதிட முறைத்தனார்.

கணவன் மனைவி ஆன பின்னர்

கருவுறுவதற்குச் சோதிடமா கணித்தல் வேண்டும் ?

இந்நாளில் நம் நாட்டுக்குக்

குழந்தைக் கட்டுப்பாடுதானே குடும்பத்தில் வேண்டும்!

இல்லையேல்,

கடலைத் தூர்த்தன்றோ ; நிலமாக மாற்ற வேண்டும்!

பாணர் மகள் சீத்தி என்பாளை மணந்த

பாசமிகு கணவன் கீர்த்தி பெற்ற சோழன்

நெடுமுடிக் கிள்ளி என்பான் ;

வெகு நாள் ஆசை பூம்புகார் விழாக் காண வேண்டுமென!

திரு நாள் அது காணத் தந்தை நாகனுடன் ;

ஒரு நாள் வருகை தந்துவிட்டாள் பீவளையும்!

மறு நாளே விழாவில் ஒருவரையொருவர் கண்டுவிட்டார் -

இருவரும் அவரவர் இதயம் கொள்ளை கொண்டுவிட்டார்.

பூம்புகார் விழாக் காண வந்த பீவளை ;

வீண்புகார் எழுவது பற்றிக் கவலையின்றி,

வீழ்ந்து விட்டாள் சோழன்

மடிதனிலே மயக்கம் கொண்டு!

ஆழ்ந்து விட்டாள் அவன் காதல்

பிடியினிலே சிக்கிக் கொண்டு!

கடுகளவு ஆதாரம்தான் கிடைத்தது எனக்கு ; ஆனால்

கதைத் தொடர் எழுத இந்த ஆதாரம் போதுமென்று,

கவிஞர் கோவி. மணிசேகரன், என் நண்பர்

கவர்ச்சிமிகு ஓவியமொன்றை உரைநடையில் தீட்டியுள்ளார்.

நானதில் பழைய வரலாறும் படித்து

நமக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக் கொண்டு

நாலாயிரம் ஆண்டின் முன்னே பூம்புகார்த் தமிழகமும்,

நாக நாட்டுடனே பூண்டிருந்த உறவுதனை -

வியப்பு மேலிட எண்ணிப் பார்க்கின்றேன்.

விழா காண வந்த விழியழகிப் பீவளையின்

முதல் பதிப்பு: ஜூன் 2006 — தமிழ்க்கனி பதிப்பகம் / பூம்புகார் பதிப்பகம், சென்னை