உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

காலப் பேழையும் கவிதைச் சாவியும்

கவிதை 10 · 10 / 58

விழியோடு விழி கலந்து விழி மூடும் காதல் வெறியால்

வேந்தர் குல விளக்கிரண்டும் இணைந்ததாலே

நட்ட விதைக்குப் பலனாக நாகன் மகளுக்கு உடனடியாக,

சோழர் குலக் கொடியாக இளந்திரையன் கருவில் வந்தான்.

கருவுற்ற பிறகோர் கட்டழகு கூடிய பீவளை ; நாகன்

கட்டளையேற்று நாடு திரும்புகிறாள் ; கவலையுடன் -

கண்ணீருடன்!

மகன் பிறந்து மழலையாய்த் தாயின்மடி தவழ்ந்த போது ; அவனைத்

தனது கணவனிடம் சேர்க்குமாறு கப்பலொன்றில் ; பீவளை

காவிரிப்பூம்பட்டினம் அனுப்பி வைத்தாள் ; பெருங்காவலுடன்!

நல்லவேளையாக ; கடற்கோளில் சிக்குண்ட அக்குழந்தை ;

கப்பலோடு அனைவரும் கவிழ்ந்ததும்கூட

தப்பி விட்டதாம் தான் மட்டும் உயிர் பிழைத்து, ஆம் ;

தொண்டைக் கொடி சுற்றியபடி கரையொன்றில்

கண்டெடுத்த காரணத்தால் தொண்டைமான் ஆனான் என்பர்!

தொண்டை மண்டலத் தலைநகராம் காஞ்சிக்கும் அதிபனாகி ;

தொல் பழங்கால வரலாற்றுத் தொடர் புகழையேந்தி -

தொண்டைமான் இளந்திரையனும் அவனே ஆனான் ; இந்தப்

பண்டை நாள் வரலாறு விளக்குவதுதான் என்ன ?

கடற்கோளுக்கிரையான குமரிக் கண்ட முதல்

காவிரியாற்றுத் தீரமாம் சோழப் பெருமண்டலமும் ;

இயற்கையின் சீற்றத்துக்குப் பலியாகி மறைந்து போன

இனவழி நாகர்க்கு உரிமையான பெரும் பரப்பும்,

நாகரிகப் பண்பாட்டின் உறைவிடமாய்

இருந்தன என்பதற்கு எடுத்துக் காட்டாகத் தான்

இன்றைக்கும் “நாகர்கோயில்” வட்டாரம் காண்கிறோம்.

“நாகப்பட்டினம்”, “திருநாகேசுவரம்” எனவும்,

“நாகவூர்” எனவும், அடையாள முத்திரைகள்

ஆங்காங்கு காணுகின்றோம்.

வருடக் கணக்கு கி.மு. நாலாயிரத்துக்கு முன்பே யென்று

வரையறுத்துக் கூறப்படும்பொழுது - இன்னமும் கி.பி.

இரண்டாயிரத்தையும் கூட்டிப் பார்த்தால்

ஆறாயிரம் ஆண்டின் முன்னிருந்த ஆதிகாலத்து நாகரிகம் -

அயல் நாடுகளுடன் தொடர்பு - கடல் வாணிப உறவு -

காதங்கள் பல கடந்து கடல் கடந்தும் வாழ்ந்த காதல் -

அத்தனையும் தொடங்கிய தொல் பழங்காலத்திற்கு

‘அகர’ மெனும் முதல் எழுத்தாய் இருப்பது

அருமை மிகு தென்னகம்தான் என்பதையும் ;

அதனாலே வரலாறு எழுதத் தொடங்கிடுவோர்

அங்கு இங்கு என அலைந்து திரியாமல் - பன

நுங்கு போல் பல ஆதாரங்கள் அகழ்ந்து தருவதற்கு -

சங்க இலக்கியங்களும் உண்டு ; எனவே அதற்குப்

பங்களிக்கும் பெரும் பொறுப்பும் நமக்கு உண்டு!

ஆவுடையார் வடிவம்தான் அம்மையென்றும்

இலிங்க வடிவமே அப்பன் என்றும் ;

அந்தக் கடவுள் வடிவம் அசுரர் கலாச்சாரமென

ஆரியர் இருவர் கதைத்திடும் நிகழ்ச்சியை

அறிஞர் சாங்கிருத்தியாயன் எடுத்துக் காட்டுவதை

அன்னார் நூலிலேயே நான் குறித்துக்காட்டி,

அன்றைக்கு நான் எழுதியிருந்ததை

அறிவீர் நன்கு!

அப்படிப் பிரிவினை செய்து ; ஆரியக் கலாச்சாரம் வேறு ;

அசுரராம் திராவிடர்கள் கலாச்சாரம் வேறு எனப்

பிரித்துக் காட்டிப் பேதம் விளைக்க முயன்று ; அந்நாளில்

சிரித்துக் காட்டியே நம் பண்பாடு சீரழிக்கத் திட்டமிட்டோர் ;

செல்லாக் காசாகிவிடும் அந்தச் சித்தாந்தம் எனக் கண்டவுடன்,

சிவனும் அரியும் ஒன்றுதான் எனச் சிந்து பாடி ;

அசுரர்க்கும் ஆரியர்க்கும் அக்கடவுள் வடிவே பொதுவென -

அணுகுமுறை மாற்றிக் கொண்ட அப்பேதவாதிகளன்றோ

அவ்வினத்தோர் ?

அன்று முதல் அந்த லிங்க வடிவங்களுக்கு,

ஆலய பூஜைகளும் அரிய திருவிழாக்களும் கூட

ஆரிய முறைப்படிதான் அக்காரியவாதிகள் ஆற்றுகின்றார்!

அவ்வடிவ லிங்கம் அநாகரிகமெனக் கேலி புரிந்தோர் -

அடி முட்டாள்தனமென ஆத்திரமுற்றோர்

அதையே பின்னர் ஆமோதித்து ஏற்றுக் கொண்டார்.

‘அது தான் ஆரியம்’

என்பார் அறிஞர் அண்ணா.

அய்யன் வள்ளுவரை அறிவுலக மேதையென்றும்,

பொய்யாமொழி யுரைத்தப் பெருளான் வள்ளல் என்றும் –

அனைத்துலகும் புகழத் தொடங்கிய பின்னர்,

அவரும் ஆரிய “பகவன்” புதல்வர்தான் என்று

அந்த முத்திரையைக் குத்திய கூட்டமாயிற்றே!

அறிவாளி என்றெவரை அடையாளம் காட்டினாலும்,

அதிதீர வீரர் என்று அவனி பாராட்ட முற்பட்டாலும் –

அவர்க்கெல்லாம் ‘ஆரிய வருணம்’ பூசி, அவர் ஆராய்

ஆக்கிடுவர் –

இப்படி எத்தனையோ ஆடாத ஆட்டமெல்லாம்

தப்படி போட்டு ஆடியுள்ளார் தாசர்களாக நமை ஆக்கி!

இன்னுமோர் உதாரணம் இதோ உரைக்கின்றேன் ;

இறைவனாகக் காட்டப்படும்

இடைவிடாது போற்றிப் பாடுகின்றார் –

இங்கிருந்து வேல் தூக்கி ஓடுகின்றார் –

இடையிலோர் குரல் அடிக்கடி முழங்கியதே ;

இந்த முருகன்தான் தமிழ்க் கடவுள் என்று

தவத்திரு அடிகளார் முதல், தமிழ்த் திரு வாரியார் வரையில்

தடம் பிறழா கொள்கை யெழுப்பத் தவறவில்லை!

அந்த முருகனையும் மெல்ல இடம் பெயர்த்து,

‘அம்மை பார்வதிக்கு அருகில் உட்கார்’ என்று ;

அழகிய தமிழ்ப் பெயர் முருகன் என்பதை

ஆரிய சுப்பிரமணியன் ஸ்கந்தன் எனப்

பழகிட வடமொழியில் பக்தி ரசப்

பயிற்சியளித்து விட்டார்.

ஆய மகன் கண்ணனை ‘அரே கிருஷ்ணா’ என்றார்.

அந்தத் திருமாலையே ‘மகாவிஷ்ணு’ எனத்தரித்து

அழைத்திட்டார் வடமொழியில்!

மொழிவழியில் நம் கலாச்சாரத்துக்கு

முழுக்குப் போட்டால்தானே ; நம்மை

மொட்டையடித்துச் சிறு

குடுமையினத்தார் வாழ முடியும்?

வேல் தாங்கி வில் தாங்கி

வேட்டையாடி விலங்கு கொன்று

காடகத்தே குடில் அமைத்து

காலம் ஓட்டுகின்ற வேட்டுவர்கள்

மேற்படி வள்ளிமலைச் சிற்றாரில்

ஏற்பாடு செய்த ஒரு கூட்டத்தில்

நம்பிராஜன் என்பவரைத்

தலைவராகத் தேர்ந்தெடுத்து ; இனி

தம் மன்னர் அவரே என அறிவித்தார்.

தொண்டை நன்னாட்டில் நம்பிராஜன்

தொண்டைப் பாராட்டாதார் இல்லை.....அந்த

‘நம்பிராஜன்’ பெற்றெடுத்த நங்கை வள்ளி ;

நற்றாய் ‘கொடிச்சி’ என்பாளின்

பாலருந்தி வளர்ந்த பருவப் பாவை,

வேர் குலத் தருவின் விழுது போன்றாள் ;

தேடக் கிடைக்காத தேனில் பிசைந்த தினைமா –

அவளைத் தான் நம்பியும் கொடிச்சியும்

அங்குள்ள தினைப்புனத்துக் காவலுக்கு நியமித்து

உழைக்கும் குல மக்களின் வியர்வையிலே விளைந்த பயிர்

ஒருக்கணமும் உறங்காமல் காத்திட வேண்டுமெனக்

கண்டிப்புக் கட்டளையிட்டார்!

வள்ளியோ தன்னை வட்டமிடும் தோழியருடன்

வகுத்துக்கொண்டாள் தினைப்புனம் காத்திடும் திட்டம்!

பரண் ஒன்றை உயரமாக அமைத்துக் கொண்டு

உரம் வாய்ந்த நெஞ்சுடன் தடை, குளிர், தழல் ஆகிய

கருவிகளை ஏந்தி, காடை, கிளி,

கவுதாரியாம் பறவைகளை ஓட்டியும் ;

முதல் பதிப்பு: ஜூன் 2006 — தமிழ்க்கனி பதிப்பகம் / பூம்புகார் பதிப்பகம், சென்னை