காலப் பேழையும் கவிதைச் சாவியும்
கவிதை 11 · 11 / 58
மான், மரை, இரலை, யானை, பன்றி முதலிய விலங்குகளை
கவண் கல் வீசித் துரத்தியும்,
“பூவைகாள்! புறவங்காள்!
மயில்காள்! மணிக்கிளிகாள்!
குயில்காள்! குருகுகள்!”
‘ஆலோலம்! ஆலோலம்!’ எனப் பாடி
அவற்றையெல்லாம்
விரட்டியடித்தாள் வள்ளியென்று ; பனியில்
புரட்டியெடுத்த குளிர்த் தமிழால் கூறுகின்ற வாரியாரின்
கூற்றினைக் கூர்ந்து நோக்கின் –
காற்றிலே போய் விடாத காலப்பேழையின் கருத்துக்களைக்
கூட்டிப் பார்த்தால் – அன்று நம்
காட்டிடை கிடைத்த பறவையினம், விலங்கினம்
பட்டியல் மட்டுமல்ல ;
பசியாறப் பயன்படும் உணவின் பட்டியலும்
தரப்பட்டுத் தமிழ் நிலத்தின்
வனவளமன்றோ, அவற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள
பாங்கினைக் காணுகின்றோம் ;
பரவசம் அடைகின்றோம்!
பரண் மீது நின்று பாதுகாப்பு செய்தவளின் – மன
அரண் மீது தாக்குதல் நடத்த வருவான்
ஒருவன் எனத் தெரியாது – வந்து விட்டான் முருகன்,
தந்துவிட்டான் தனது நெஞ்சத்தைத்
தன்னை அறியாது வள்ளி!
அப்படி என்ன நடந்தது அங்கே?
வகுத்தளித்த வேலையை வள்ளி நிறைவேற்றிக்
கொண்டிருந்தபோது
வனவேடன் ஒருவன் கன வேகமாய் ஓடிவந்து ;
“யாரடி கள்ளி? என் மீது கல் எறிந்து காயப்படுத்தியது?
யாரடி பச்சை ரத்தம் பாய்ந்தோடும் காட்டியினை” என்று ;
தலையில் பட்டிருந்த கல் விளைத்த காயத்தைக் காட்டி நின்றான்.
வலையில் பறவை போன்றுவீழ்வது போல்
வள்ளி அவன் வடிவழகில் வீழ்ந்து விட்டாள்.
பின்னர் “யாயும் ஞாயும் யாராகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும் –
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாங் கலந்தனவே” எனும்
சங்கப் பாடல் ஆதிக்கம் செலுத்தியது அங்கே –
தங்கத் தலைவன் நம்பிராஜன் ; பொங்கி எழுந்து
பொன் மகள் வள்ளியைக் கடிந்து கொண்டு ; நீ
என் மகளாயின் முருகனை மறந்து விடு என்றான்.
சுற்றுமுற்றும் சுழன்று பார்த்து விட்டு
சொன்னாள் வள்ளி தந்தையிடம் –
அப்பா ; அந்த முருகன் என்னைக் கேட்டார் ;
அஞ்சுவது எதைப் பார்த்து என்று!
ஆனையைக் கண்டால்தான் பயம் என்றேன் ;
அதற்கவர் ; “அது பரவாயில்லை – ஆனையைக்
கண்டு நீ அஞ்சிடுவாய் – இயற்கை அது! சில பேர்
பூனை குறுக்கிட்டாலே பயந்து நடுங்குகின்றார்”
எனக் கேலி செய்தார் என்றாள் –
“அதற்கென்ன இப்போது?
ஆனையிடுகிறேன் என்கிறேன் நான் ; நீயோ
ஆனையையும் பூனையையும் பற்றி
அளக்கின்றாய் இங்கே!”
நம்பிராஜனுக்கு நங்கை வள்ளி
விளக்கம் சொன்னாள் –
“ஆனை பூனை எனும்
அடுக்குச் சொற்களல்ல
அவர் கூறி, எனைக் கவர்ந்த சொற்கள்!
ஆனைக்குக் கூட அஞ்சாமல் ; குறுக்கே போகும்
பூனைக்கு அஞ்சுகிற மனிதர்களின்
அறியாமையைக் கேலி செய்யும்
அறிவுச் சுடரொளியாய் அவர் திகழுகின்றார்.
அந்தப் பகுத்தறிவுப் பேரொளிக்கு என்னையே
பரிசாகத் தருவதில் என்னப்பா தவறு?” என்றாள் வள்ளி!
“தவறேதுமில்லை” என்றுரைத்த தாயும், தந்தையும்
“ஒன்று கேள் ; வள்ளி!
உன்னையே முருகனுக்குப் பரிசாகத் தந்து விட்டதாக
உரைத்திட்டாய் ; அது பெருந் தவறு!
பண்டமாற்று செய்து கொள்க, இதயங்களை!
அப்போதுதான் ; ஆண் பெண் சமத்துவமெனும்,
சம உரிமைச் சங்கொலி முழங்கும்!”
தம்பதியர் சம்மதமென்றனர் ;
தாயும் தந்தையும் வாழ்த்தி மகிழ்ந்தனர்!
தடை = மூங்கில்
குளிர் = கவண் கல்
தழல் = கோல்
மரை = மானில் ஒரு வகை
குருகு = நாரை
“யாயும் ஞாயும் யாராகியரோ ?” – குறுந்தொகை (சங்க இலக்கியம்)
கற்காலம் பொற்காலமெனக் காலங்கள் வகுத்து – அக்
காலங்களில் நாகரிக வளர்ச்சி, பண்பாடு, பழக்கவழக்கம்
நாட்டுக்கு நாடு இனத்துக்கு இனம் எவ்வாறு என
வரலாறு வரையப்பட்டதுண்டு – அந்த
வரிசையில் வந்ததே மகத்தான வழிகாட்டும் நூலான
‘வால்காவிலிருந்து கங்கை வரையில்’!
அந்நூலில் அதன் ஆசிரியர், அக்கால நிலையில் – அந்தந்தப்
பகுதிக்கேற்பக் கதாபாத்திரங்களென அறிமுகப்படுத்தி,
கதை சொல்லும் பாணியினைக் கடைப்பிடித்துள்ளார் – நான்
எழுதும்
காலப்பேழையின் நோக்கமும் அதுதான் எனினும் ;
இலக்கியத்தில், சரித்திரத்தில், பழம்புராணத்தில்
இடம்பெற்று அறிமுகமானவர்களை அறவே ஒதுக்கிடாமல்,
படிப்படியாக பல துறைகளிலும் முன்னேறிடும்
இந்திய வரலாற்றில் திராவிட இனத் தமிழர்க்குரிய
பங்கினைப் விட்டுப் போகாமலிருப்பதற்காக
அடையாளம் காட்டும் வகையில்
அவர் அனைவரையும் இணைத்திட இயலாவிடினும்
சிலரையாவது சேர்த்து வழங்குகின்றேன் ;
சீரான வரலாறு எனும் சிறப்பு
சிதைந்து விடாமல் இருப்பதற்காக!
இதோ ;
தமிழர்க்கு வாய்த்திருந்த தொல் பழங்காலம் ;
தங்கக் காலமாய்த் திகழ்ந்தது என்பதற்கு
இங்கு சில கவிதை வரிகளை
எடுத்தியம்புகின்றேன் –
இவற்றுக்கு ஆதாரமாகப் பன்மொழிப் புலவர்
அப்பாதுரையார் எழுதியுள்ள குறிப்புகளையும்
கூறிட விரும்புகின்றேன் –
“தமிழ் மூவேந்தரும் ஒருவருடன் ஒருவர் போட்டியிட்டு
இமயத்தில் வில், கயல், புலிக்கொடிகள் பொறித்தனர் என்று
சங்க நூல்கள் பலகாலும் பகர்கின்றன. இவை வெறும்
புனைந்துரைகளென்று பல புலவரும் பெரும்பாலான வரலாற்றா
சிரியர்களும் கொள்கின்றனர். வரலாற்று வான விளிம்பில் உள்ள
தெற்கு வடக்குத் தொடர்புகளையும் தமிழகத்திலிருந்து தமிழர்
கடற்போர், தொலைவடவர் போர் பற்றியும் ஆரியருடன் போர் செய்து
பெற்ற வெற்றிகள் பற்றியும் வரும் மிகப் பலவான குறிப்புக்கள்
புனைந்துரைகளாகக் கொள்வதற்கு இடந்தராதவை.”
“நெடுஞ்சேரலாதனே இமயம் முதல் குமரி வரை ஆண்டதாகப்
பத்துப்பாட்டுக் கூறுகிறது.
“ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்
தென்னங் குமரியொடு ஆயிடை
மன்மீக் கூறுநர் மறந்தபக் கடந்தே!”
இது நேடியாட்சியாகவோ, எல்லா அரசராலும் ஏற்றுக்
கொள்ளப்பட்ட மேலிமையாகவோ, அல்லது மாநிலமெங்கும்
ஆற்றிய வெற்றி உலாவாகவோ நிகழ்ந்திருக்கலாம்.”
“சோழருள் ஒருசன் ஆரியரைத் துஞ்சையடுத்த வல்லம்
