காலப் பேழையும் கவிதைச் சாவியும்
கவிதை 12 · 12 / 58
என்ற இடத்தில் நிகழ்ந்த போரில் முறியடித்ததாகப் பாவைக்
கொட்டிலார் என்னும் புலவர் தெரிவிக்கிறார்.
“மாரியம் பின் மழைத்தோல் சோழர் வென்றேவல்லில்
ஆரியர் படையின் உடைக என
நேரிறை முன்கை வீங்கிய வளையே!” (அகம் 336)
காதலி, காதலனிடம் உள்ள கோபத்தைச் சுமலும் வளையல்
மீது செலுத்தி, வல்லத்துப் போரில் உடைந்த ஆரியர் படை போல்
என் வளைய உடையட்டும் என்கிறாள்!”
“வட ஆரியர் படை கடந்து
தென் தமிழ்நாடு ஒருங்கு காணப்
புனரதீர் கற்பின் தேவி தன்னுடன்
அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன்
நெடுஞ்செழியன்”
(சிலப்பதிகாரம், மதுரைக்காண்டம் இறுதிக்கட்டுரை)
இந்தச் சான்றுகள் ;
இரு பெரும் இனங்கள் ஆரியர் – திராவிடர் என
இருந்ததை விளக்கும்
இந்திய நாட்டு நிலவரமல்லவா?
மேலும் ;
காரவேலனாம் கலிங்கப் பேரரசனை இந்தக்
காலப் பேழையில் கவிதைச் சாவி கொண்டு
திறந்து காட்டுவது சிறந்த சரித்திரக் குறிப்பாக
அமையும் என்பதும் ; அசோகனையும்
அவன் பெற்றிருந்த வெற்றிகளையும்,
இரண்டாம் இடத்துக்குத் தள்ளிவிட்டு
முதலிடத்துக்குத் தன் பெயரைக் கொண்டு வரவும்,
அரச நிலைக்கவும், ஆட்சிப் பரப்பு விரிந்திடவும்,
ஆற்ற வேண்டிய அரசியல் சூழ்ச்சிகள் அனைத்தையும்
ஆற்றிப் பார்த்தவன் அவன் என்பதும் –
அவன் புகழ் பெற்றிருந்த கால கட்டம்
கி.மு. 163க்கும் கி.மு. 153க்கும் இடைப்பட்டது
அதாவது இப்போதைக்கு 2158 ஆண்டுக்கு முற்பட்டது ; எனினும் ;
தான் பெற்றதாக வெற்றிச் சாதனைகளைக் கூடத்
தானே பெற்றதாகக் கல்வெட்டுகள் வைப்பதிலே
கை தேர்ந்த மன்னாதி மன்னன் என்பதும் –
கைப்புண்ணைக்குக் கண்ணாடி எதற்காக எனக் கேட்டது போல்
கல்வெட்டுக்களே சாட்சிகளாக நிற்பதாகக் கூறுகின்றோர் பலர்
கூறியிருக்கின்றனர்; கைப்பா எழுதியிருக்கின்றனர்.
கதையல்ல ; கற்பனையுமல்ல ;
கண்ணுக்கு மெய்யாக காட்டிடும் சான்றாக ;
“113 ஆண்டுகளாக நிலவி வந்துள்ள
தமிழரசர்களின் கூட்டணியைச் சிதைத்து விட்டதாகக்
காரவேலன் ஒரு கல்வெட்டில் குறித்திரான்”
என்கிறார் பன்மொழிப் புலவர்.
புவி மெச்சிட வாழ்ந்த அசோக மன்னன் புத்த சமயத்தை
பூமிப் பந்தில் பரப்பிட முனைந்ததைப் போல ; அதற்குப் போட்டியாக
காரவேலன் சமண சமயத்தைப் பரப்பிட முன்வந்து,
“சமண சமய அசோகன்” என்று பட்டமும் சூட்டப் பெற்றான்.
அப்படிக் கூடிவெற்றிகொண்ட அரசனைக் சுற்றி
ஆயிரம் பேர் இருப்பார்களே!
மெளரியர் என்றுமே ; தமிழகத்தின் மீது போர் தொடுத்து
மோதிடாத அளவுக்கு ; அவன் மோதிட முன்வந்தான்.
(முரசு கொட்டி முன்னேறியது அவன் படை ;
மேலும் ; அப்படையின் நுழைவினால் ; தமிழ் நிலம்
மோசமாகாமல் தடுத்து நிறுத்திட – அவன்
முடுக்கி விடும் போர்களினால் ;
தடுக்கி விழாமல் தமிழ் இனத்தைக் காத்திட –
மூவேந்தர்களும், வேளிர்குல மன்னர்களும்,
நெருப்புப் பொறியென செருப்பாழி கடந்த இளஞ்சேட் சென்னியும்
காரவேலனைக் கடுமையாய் எதிர்த்துக்
களத்தில் சந்திக்கப் போர்க் கூட்டணி யொன்று கண்டு ;
கூர் தீட்டினார் வாளுக்கும் வேலுக்கும்!
அந்தக் கூட்டணியைக் குழி தோண்டிப் புதைப்பதாகக் காரவேலன்
கண்ட கனவு பலிக்காமல் போயிற்று என்பதைத்தான்
“தற்பெருமை கொள்கிறான் கல்வெட்டு வாயிலாக” என்று
தமிழறிஞர் அப்பாதுரையார் “தென்னாட்டுப் போர்கள்” நூலில்
எடுத்துக் காட்டுகிறார் – அதை நாம் கூர்மையாகப்
படித்துப் பார்த்தால் ஆணவ ஆட்சிக்குக்
கூற்றுவனாய் அமைகின்ற கூட்டணி கண்டு – எப்படிக்
குதிக்கிறார்கள், குமுறுகிறார்கள் கோவேந்திகள் என்பது
நேற்று இன்று புரிகின்ற உண்மையல்ல ;
காற்று வாக்கில் வரும் செய்தியுமல்ல!
கலிங்க மன்னன் காரவேலன், தனக்குற்ற
எதிர்ப்பு கண்டு ; கொண்ட கோலம் எதுவென ;
எச்சரிக்கிறது வரலாறு ;
எடுத்துரைப்பதே என் கடமை!
செருப்பாழி = போர்க்களப் பாசறை.
பழங்காலத் தமிழக வரலாறு
பட்டுத் துணி எனினும் நமக்கு
ஒட்டுத் துணியாகத்தான்
படிக்கவும் நடிக்கவும்
கிடைத்துள்ளது என்பதை – இன்று
மறைப்பதில் பயனில்லை ; எஞ்சி
இருப்பதை மட்டும்
எடுத்துச் சொன்னாலே – நமது
எழிலார் தோற்றம் தெரியும் – உலகில்
எல்லோர்க்கும் நாம் மூத்தவர்கள் ;
இலக்கியத்தில், இலக்கணத்தில்
இயலிசை நாடகமென இனித்திடும்
மொழிவளத்தில் நம்
முழு வடிவம் புரியும்!
திட்டவட்டமாகவும் தெளிவாகவும் –
தீட்டி வைக்கவில்லை யாரும் ;
தென்னக வரலாற்றுக் குறிப்புகளை!
எனவே தான் இலக்கியங்கள் துணையுடனும் –
இங்கங்கு காணுகின்ற கல்வெட்டுகள் ; உதவியுடனும்
வடிகட்டி வழங்கிய உண்மைகளை ;
வரலாறு எனத் தொகுத்தளித்து வருகின்றோம்.
நெடியோன் எனும் பாண்டிய மன்னன்
நிலந்தரு திருவிற் பாண்டியன் என்றும்
தொல்காப்பியர் காலத்துடன்
தொடர்புடைய காலத்தினன் என்றும்,
மூவாயிரம் ஆண்டுக்கு முன்னிருந்தவன் என்றும்,
ஏறத்தாழவென ஒரு காலத்தைச் சுட்டிக்காட்டும் நம் வரலாறு!
கரிகாலன் எனும் சோழ மன்னன் – வீரம்
சரியாமல் ஆண்டவன் என –
சரித்திரம் புகழ் சாற்றும் எனினும் ;
இமயம் வரை படையெடுத்துச் சென்ற கரிகாலன் ;
இரண்டாம் கரிகாலனே என்பார் ஆய்வாளர் –
இருமுறை வடதிசை சென்றவன்
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மகன்
இணையற்ற வீரன் செங்குட்டுவன் –
இவன் தம்பி இளங்கோவே அரசாள்வான் என
ஆரூடம் சொன்ன நிமித்திகன் வாக்கைப் பொய்யாக்கி
அத்தம்பி அறநெறித் துறவியாக மாறிக் கொண்டு ; அருந்தமிழ்க்
கண்ணகியின் காவியம் தந்தான் ; அந்தக்
கற்பரசி சிலையெடுக்க அண்ணன் சென்றவன் ;
கனக விஜயன் முடி நொறுங்கக்
கல்தூக்கி வரச் செய்த கதை ; காணீர் ;
ஓரங்க நாடகமாக!
காட்சி 1
கங்கைக் கரை கனக விஜயர் மாளிகை.
தீராதி தீர தீன தயாபர தெய்வீக புருஷ வேதாந்த சாகர
வேந்தர் குல திலக உத்திரதேசத்து மன்னாதி மன்னர்கள் கடவுள்
அவதார கனக விஜயர் பாரக்! பாரக்!
மன்னர்கள் : நமஸ்கார்!
கனகர் : நமஸ்கார்!
விஜயர் : நமஸ்கார்!
