உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

காலப் பேழையும் கவிதைச் சாவியும்

கவிதை 8 · 8 / 58

பிடிக்கும். அவர்களுடைய கடை வீதி, தாமரை மலர்

நிறைந்திருக்கும் தடாகங்கள், அதன் உயர்ந்த படிக்

கட்டுகள், அகன்ற ராஜவீதிகள் போன்ற அமைப்புகளை

நம் ஆரிய பூமியில் காணவே முடியாது”

ஏறத்தாழ இன்றைக்கு நாலாயிரம் ஆண்டின் முன்னே ;

கி.மு. இரண்டாயிரம் ஆண்டின் காலப்பேழைதான் நீவீர் காண்பது!

அந்நாளில் அசுரர்கள் வழிபட்ட லிங்க வடிவத்தின் தத்துவத்தை

அநாகரிகத்தின் உச்சமென்றும் அடி முட்டாள்தன மென்றும்

ஆரியர்கள் கருதியதை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது

அன்பர் இராகுலனாரின் வால்காவிலிருந்து கங்கை வரையில்!

நாலாயிரம் ஆண்டுக்கு முன்னே நாம் கண்ட கடவுள் வடிவம் ;

அசுரர் எனும் திராவிடரின் கலாச்சார உருவாயிருந்து இன்றைக்கு

ஆலயங்கள்தோறும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதென்றால் ;

அசுரர் கண்டுபிடித்த கடவுள் வடிவத் தத்துவத்தை

ஆரியக் கலாச்சாரம் ஆமோதித்து விட்டதாக அர்த்தமா ?

ஆவுடையார் லிங்க இணைப்பு இப்போது மட்டும் பொருத்தமா ?

தினந்தோறும் வண்தண்ணும் திரண்டிருக்கும் பெரு மீசைகளும்

திடுக்கிட வைத்திடும் கொடும் உருவம் கொண்ட தேவதைகள்,

திராவிட அசுரர்களுக்கென கொண்டாடும் தெய்வங்களாக ;

தீவட்டிராயன் என்றும், தீரன் மதுரை வீரன், காத்தவராயன்,

முனீஸ்வரன், சனீஸ்வரன், காடன், மாடன், கருமையிரு இடும்பன்

எனத்

துஷ்ட தேவதைகளையே குல தெய்வங்களாகக் கொண்டாடும்

குலம், அசுர குலம் என்பதற்கு அடையாளமாகத்தான்

கோயில் குளங்கள் அவர்கள் பெயரால் அமைந்துள்ள

நிலமையதை

அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் காண்கின்றோம் -

பாடல் பெற்ற ஸ்தலங்களிலும் பார்த்துக் களிக்கின்றோம்.

பலாயிர முறை தரிசித்தாலும் ஒரு முறையேனும் நாம்

படித்த கதை நினைத்து அதைப் பார்த்து முகத்தைச்

சளித்தோமா ?

கடவுள்களைக் கேலி செய்யும் நோக்கமல்ல ; காசினியில்

கலாச்சாரம்கூட கடவுள் பிரச்சினையிலும் தனித் தனிதான்

என்பதையே மெய்ப்பிக்கும் எடுத்துக்காட்டன்றோ ; இது ?

இறைவனை வழிபடதில் கூட இரு வேறு கலாச்சாரம் ;

இலிங்க உருவம் அசுரர்களுடைய தென்றும் -

இதனை ஆரியர்கள் ஏற்கவில்லை யென்றும் ;

நாலாயிரம் ஆண்டின் முன்னே நாகரிகமல்ல வென்றுரைத்தவர்கள்

நாடு முழுதும் இன்றைக்கு அவ்வடிவுக்கு நாமாவளி பாடுவதேன் ?

கலாச்சாரங்கள் வேறு வேறு - கடவுளை ரசிப்பதிலும் மாறுபாடு

ஆரியர்க்கும் அசுரராம் திராவிடர்க்கும் அதில் இல்லை உடன்பாடு

என்றிருந்த நிலமை இன்று மாறி விட்டதா ? இல்லையேல்

‘சாங்கிருத்தியாயன்’ தான் கலாச்சார வேறுபாட்டை

சரிவரக் கவனிக்கத் தவறி விட்டாரா ?

ஆரியர்கள் கேலி செய்த அந்த லிங்கம் இல்லா

ஆலயங்கள் இன்று எங்கேனும் உண்டா ?

ஆழித் தேர்களிலே - ஆலயக் கோபுரங்களிலே

அந்தக் கடவுள் சின்னங்களை அமைத்திட

ஆத்திகப் பெரியோர்கள் யார் மறந்தார் ?

துஷ்ட தெய்வ வழிபாட்டுக் கோயில்களில்

துணிந்து லிங்க வடிவில் சிலை எவர் வைக்க முன்வந்தார் ?

கடவுளர் சிலை அமைப்பதிலேயே

கலாச்சார வேறுபாடு -

ஆரியர்க்கும் அசுரர் எனும் திராவிடர்க்கும்

அதுவும் வட பகுதி தேசத்திலே ஒரு விதம்

தென் பகுதி தேசத்திலே வேறு விதம் -

ஆங்கு ஆண் பெண் அடையாளம் காட்டும் லிங்கம் ;

ஆரியர் அகாரதியில்.....

அறிவீனம், முட்டாள்தனம்!

இங்கு ஆலயங்கள் ஒவ்வொன்றிலும்

அதுவேதான் அம்மையப்பன் வடிவமாகும்.

வணங்குதற்குரிய உருவமாகும்

வழிபட வேண்டிய தெய்வமாகும்.

வாரிச் சுருட்டி எழுந்து என்பால்

வம்புக்கு வருதல் வேண்டாம்.

தாவிக் குதித்துத் தாண்டி ; எனைப்

பாவி என ஏசவும் கூடாது -

ஆரியர் இருவரிடை நிகழ்ந்த

ஆண்டவன் வடிவு பற்றிய உரையாடல் ;

அசுரர் எனும் திராவிடர் கலாச்சாரத்தை -

அதனைக் கடவுள் வடிவிலே கூட

ஆரியர் ஏற்கவில்லை ; என்பதை

அப்பட்டமாகவே அறிவித்து -

அவர்கள் வடக்கில் ஒரு விதம்

தெற்கில் ஒரு விதமாக

அன்றைக்கே பிரிந்து நின்றதையும்

ஆராய்ந்து பார்க்கும்போது ;

சந்தர்ப்பத்துக் கேற்றவாறு

தங்களை மாற்றிக் கொள்வதில்

ஆரியர்கள் அசகாய சூரர்கள் என்பதை

அறிஞர் சாங்கிருத்தியாயன்

அவருக்கேயுரிய முறையில்

அறிவுறுத்தி விட்டார் என்பதும்

“வால்காவிலிருந்து கங்கை வரை” மட்டுமல்ல ;

வரலாறு என ஒன்று இந்த வையத்தில் இருக்கும்வரை

வாழ்ந்து கொண்டிருக்கும் உண்மை என்பதும் ;

உறுதி! உறுதி! உறுதி!

ஆதாரம் எதுமில்லாமலோ ;

அறிஞர்கள் கருத்தின்

அருந்துணை தவிர்த்தோ ;

அடியேன் எதனையும்

பிடிவாதமாக வலியுறுத்தித்

திமிர்வாதம் நடத்திப் பழக்கமில்லை.

அதிலும் ;

தமிழ் மொழி, தமிழர்கள்

தமிழக வரலாறு எனும்போது

தான்தோன்றித்தனமாகத்

தத்துபித்தென்று

தக்கோர் முன்னிலையில்

தருக்குடன் நடந்திடும்

வழக்கமுமில்லை.

அதனால் தான் ;

தக்க சான்றுகள் திரட்டி

அந்நாள் தமிழர்கள்

அருங்கலம் செலுத்தி

திறன்பல விளைத்து

திரை கடலோடித்

திரவியம் திரட்டிய

தித்திக்கும் சரிதம் ;

தீட்டிட முனைந்துளேன்.

உலக நாகரிக வளர்ச்சிக்கும்

உறவு நாடுகள் தொடர்புக்கும்

உறுதி நல்கும் பெரு முயற்சி

பெருங்கடல் கலம் விடுத்து ; அது

தரும் புகழ் முதலில் பெற்றவன்

தமிழன் என்பது நமது

தகுதிக்குற்ற தனிச் சிறப்பாகும்.

நாணயங்கள் பொற்காசுகள்

நன்முத்துப் பவள அணி மணிகள்

நான்கு திசையிலிருந்தும்

நன்கு குவிவதற்கு மட்டுமல்ல ;

நாகரிகமென நாம் கடைப்பிடித்த

நற்பண்புப் பண்டமாற்றுக்கும்

நல்லவிதமாய்ப் பயன்படுமே

நாவாய்கள் மூலம் நடத்துகின்ற

நானிலம் புகழ்

வாணிபப் பயணம்!

வட அமெரிக்காவில் வாஞ்சையுடன்

முதல் பதிப்பு: ஜூன் 2006 — தமிழ்க்கனி பதிப்பகம் / பூம்புகார் பதிப்பகம், சென்னை