உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

காலப் பேழையும் கவிதைச் சாவியும்

கவிதை 7 · 7 / 58

நெற்றி வியர்வை முத்து முத்தாக உதிர உதிர

நெஞ்செலும்பு ஒடிய ஒடிய - வயிறு

பற்றியெரியும் பசியுடனே பயிர் வளர்த்துப்

பாடுபடும் பாட்டாளியாம் ஏழை விவசாயிக்கு - ஒரு

பருக்கை சோறு ஆக்குதற்கு வசதியில்லை, வாய்ப்புமில்லை.

வினா எழுப்பி ‘ஏன்?’ என்று கேட்டால்

விடையளிக்க யாருமில்லை!

கனாக் கண்டும் பயனில்லை ;

கடவுளும் அரசும் நம்மைக்

கவனிக்கப் போவதுமில்லை.

கவலை மேற் கவலையாக இக்கவலை

கவண் கற்களாக நமைக் குறி பார்த்துத்

தாக்கினாலும் - தாங்கிக் கொண்டு

கடவுளையே எழுப்பிப் பார்ப்போம் -

காலை, மாலை, இரவு மூன்று வேளை

உனக்கும் உன் குடும்பத்துக்குமாக

உணவுக்கு ஆகும் செலவு போக

நாள்தோறும் மிச்சமாகும் பணத்தையெல்லாம்

நல்ல நல்ல வங்கிகளில் சேமித்து வட்டி சேர்த்து

ஆண்டவனே உன் பிள்ளைகள் ஆரோக்கியம் பெறுவதற்கும்

அறிவார்ந்த கல்வியிலே அடுக்கடுக்காய் உயர்வதற்கும்

அன்றாடம் செலவு செய்தால் நன்றாக முன்னேறும் நமது நாடு

என்போம்.

இன்றோடு குறுகிய நோக்கங்களைக் குழி தோண்டிப் புதைத்து

விட்டு - புகழ்

குன்றேறி நாம் நிற்பதற்குப் புதுப் புது சிந்தனைகள் வேண்டும்.

குறிக்கோள் நிறைவேறுதற்குச் செயலாற்றும் திறனும் வேண்டும்.

திறன் பெற்றுச் செயலாற்றத் திக்கெட்டும் பார்வை செலுத்த

வேண்டும்.

உரமாக அதற்கமைய நம் பழம் பெரும் வரலாற்றை உணர

வேண்டும் -

வாளும் கேடயமுமாய் வரலாறு கையில் இருந்தால்தான்

வந்து மோதும் பகைப்புலத்தைச் சந்திக்க இயலும் என்பதால்

வையத்துப் பெருவிளக்காய் - திருவிளக்காய் - நம் சரிதம்

ஒளிர்வதற்கு ;

அய்யத்துக்கிடமின்றி அனைத்திலுமே தெளிவாகத் திகழ்தல்

வேண்டும்.

காலப்பேழை அதற்குத் துணை நிற்கும் என்பதால் இன்னும் சில

கவிதை வடிவக் கதைகள் தொடர்ந்து சொல்லுகிறேன், என்

கற்பனையில்!

பழங்கதைப் பேசுவதால் பலனில்லை என்றறிவேன் - நம்

பாட்டன் பூட்டன் கதை பழைய வரலாற்றுக் கதை பேசுவதால் ;

கேட்டை விலக்கலாம் சமுதாயத்தில் -

கடந்த காலச் சரித்திர நிகழ்வுகளில்

கழிக்க வேண்டியது என்ன ?

அந்த நினைவுகளில் மறக்க வேண்டியது என்ன ?

அவற்றில் எதையும் அழிக்க வேண்டியது இல்லை -

வரலாற்றுச் சின்னங்களை ; வாழ விட்டால் தான்

நல்லவைக்கும் தீயவைக்கும்

நமக்கு வழி காட்டப் பயன்படும் -

நல்லவை உணர்ந்து மேலும் நடக்கலாம் -

தீயவை எனிலோ ; உடனே திரும்பலாம்!

திருந்தவும் செய்யலாம்!

கடந்த நாள் காலப் பேழை

சற்று நெடி அதிகமோ என்ற

சந்தேகம் எனக்கே எழுந்ததுண்டு

சரித்திரத்தைச் சொல்லும்பொழுது

சரியான வழியில் தானே செல்ல வேண்டும்.

அய்ந்தும் மூன்றும் எட்டு என்பதை

மூன்றும் அய்ந்தும் எனக் கூட்டினாலும்

கூட்டிய முறையில் வேறுபாடே தவிர ;

கூட்டுத் தொகைக் கணக்கில்

முரண்பாடொன்றும் வருவதில்லையே!

சான்றாக சாங்கிருத்தியாயனின்

சரித்திரப் பின்னணிக் கதைகளில்

கி.மு. 2000 எனும் காலக் கணக்கைத்

திரையாய்க் கொண்டு தீட்டப்பட்ட

‘புருதானன்’ ஓவியத்தைக் காண வாரீர் எனக்

கை கூப்பி அழைக்கின்றேன்

கருணை புரிந்திடுக ; கண்ட பிறகும் நும்

கருத்தைப் பொழிந்திடுக!

உயர்ந்த நூல்களின் வரிசையில் உள்ள

“வால்காவிலிருந்து கங்கை வரையில்”

வரையப்பட்டுள்ள உரையாடல் ஒன்றைக்

காட்டுகிறேன் உமக்கு ; அக்கடமை எனக்கு!

ஆரியர்கள் இருவருக்கிடையே

அமைந்த உரையாடல் ; அதனை

அப்படியே தருகிறேன்

கூட்டவோ, குறைக்கவோ இன்றி, அவர்

தீட்டியதைத் திருத்தவும் செய்யாமல்

காட்டும் என் பணி மதித்திடுவீர்!

அந்த நூலில் உள்ள ஆரியர் இருவரின் உரையாடல்.

( புத்தகம் - பக்கங்கள் 101, 118, 119, 120 )

“இந்திர பதவியை நாங்கள் எடுத்து விட்டோம்”

“எடுத்து விட்டீர்களா?”

“ஆம் ; தென் பிரதேச ஆரியர்களாகிய எங்களுக்கு

இந்தப் பதவி பயத்தைக் கொடுக்க ஆரம்பித்தது”

“பயப்படுவானேன்?”

“சேனைக்கு நாயகனையே நாம் இந்திரன் என்று

அழைக்கிறோமல்லவா?”

“ஆம்”

“ஆம் ; சேனாதிபதியைத் தங்களுடைய சகல காரியங்-

களுக்கும் நாயகனாக ஆரியர்கள் மதிப்பதில்லை.

யுத்த காலத்தில் அவனுடைய உத்திரவை நாம்

அப்படியே ஏற்று நடக்கிறோம் என்பது உண்மையே.

ஆனால் தங்கள் தங்கள் அபிப்பிராயங்களை மனம்

விட்டுச் சொல்வதற்கு அதிகாரமுள்ள சமூகச்

சபையைத்தான் ஆரியர்களாகிய நாம் சகலத்துக்கும்

மேலானதாகக் கருதுவோம்”

“ஆம், ஆம்.”

“ஆனால், இதற்கு நேர்மாறான கொள்கை அசுரர்களுடையது.

அசுரர்களின் இந்திரன் அல்லது ராஜாவே சகல அதிகாரங்-

களும் உடையவன். அவனுக்கு மேலாக எந்த ஒரு சமூகச்

சபையையும் அவன் அங்கீகரிப்பது கிடையாது. அசுர ராஜாவின்

வாயிலிருந்து வெளி வரும் வார்த்தைகள் எல்லாம்

சட்டம். அதை ஒவ்வொரு அசுரனும் அப்படியே ஒப்புக்

கொள்ள வேண்டும். மீறுபவர்களுக்கு தண்டனை மரணம்தான்”

“ஆம், நானும் பார்த்திருக்கிறேன். அவர்களுடைய

புரோகிதர்கள் அசுரர்களைக் கழுதைகளாக ஆக்கி

வைத்திருக்கிறார்கள்”

“ஆம், கழுதைகளுக்கும் இழிவாக, அசுரர்கள் லிங்க பூஜை

செய்கிறார்கள். ஆண் குறி, பெண் குறியில் சேர்ந்திருப்பது

போன்று அந்த லிங்க வடிவம். ஆண், பெண் உறவின்

இன்பத்திற்கு அவைகள் சாதனமென்பதையும், அந்த

உறவின் மூலம் நமது எதிர்கால சந்ததி வளர்கிறது

என்பதையும் நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால்

மண்ணிலோ அல்லது கல்லிலோ அந்த வடிவத்தைச்

செய்து வைத்துக் கொண்டு வணங்குவது பெரிய

முட்டாள் தனமாக இருக்கிறது அல்லவா?”

“ஆம் ; அதிலென்ன சந்தேகம்?”

“அந்த அசுர அரசன், இந்த லிங்க தெய்வத்தின் பெரிய

பக்தன். ஆனால் இதுவும் ஒரு வேஷம் என்றே நான்

நினைக்கிறேன். அந்த அசுர அரசனும், அவனுடைய

புரோகிதர்களும் முட்டாள்களல்ல. ஆரியர்களாகிய

நம்மைப் பார்க்கிலும் அவர்கள் கெட்டிக்காரர்கள்.

அவர்களுடைய நகரங்களைப் போல நகரங்கள்

அமைப்பதற்கு நாம் கற்றுக் கொள்ள நீண்ட நாட்கள்

முதல் பதிப்பு: ஜூன் 2006 — தமிழ்க்கனி பதிப்பகம் / பூம்புகார் பதிப்பகம், சென்னை