காலப் பேழையும் கவிதைச் சாவியும்
கவிதை 6 · 6 / 58
கவிதைச் சாவியிட்டுக் காலப் பேழையினைக்
கவனமாகத் திறப்போர் ; காண வேண்டிய
காட்சியென ஒன்றைக் காட்டுகின்றேன், அந்தோ
கற்காலத்து ஓவியங்கள், கண்ணீர்க் காவியங்கள்!
புதிய தம்பதியாய் ஆனவர்க்கு
மதிய உணவு முதலைக்கறி விருந்து என - நெஞ்சில்
புதிய வைத்த பாசமுடன்
மனைவியும் சொன்னாள் மற்றவரும் சொன்னார்கள்.
“ஆற்றுக்குப் போய் அண்ணன் தம்பி நாலு பேரும்
அலைந்துதேடி அகப்பட்ட முதலையுடன் வந்துள்ளனர்.
அதையறுத்துத்தான் கறி சமைக்கப் போகின்றேன் -
அமிர்தம் போல் ருசிக்கும் தன் கைப்பக்குவம்!” என்று
அத்தானை அழைத்து வர அலமு என்பாள்
அனுப்பிவைத்தாள் அண்ணன்மாரை!
அப்படியே இப்பொழுதே அவரோடு வருகின்றேன் என்று
அண்ணன்களில் ஒருவன் பறந்து சென்றவன்,
அயர்ந்து திரும்பி தங்கை முன் வந்து நின்றான்;
அழுதான், புலம்பினான், ‘அய்யோ’ என்று கத்தினான்!
“என்ன அண்ணே? எங்கே அவர்?” கேட்டாள் தங்கை!
எங்கு தேடியும் இந்த ஊரில் கிடைக்கவில்லை என்று கலங்கினான்.
“வருந்துவது எதற்காக? வெளியூர் சென்றுள்ளார்; வந்துவிடுவார்
இப்போது!
வாருங்கள் முதலில் முதலையை வெட்டிக் கறி சமைத்து;
விருந்தைப் பரிமாறி வைக்கலாம் - அவரும்
விரைந்து வந்து அருந்துவார், பாருங்கள்” என்றாள்!
“வெட்டுதற்கு முதலையை அரிவாள் கொடு முதலில்”, என்று,
பட்டு மேனிப் பாவை அலமுவிடம் அண்ணன் கேட்க;
அவளும் பளபளக்கும் அரிவாள் எடுத்துக் கொடுத்தவாறு;
“அண்ணே; பக்குவமாய் வெட்டிக் கொடு” என்று கூற,
அண்ணன் தம்பிகள் ஆளுக்கொரு பக்கமாகப் பிடித்து
அந்த முதலையை வெட்ட அரிவாளை ஓங்கிப் போட்டவே;
இரு கூறாகப் பிளந்தது முதலை ;
இமாலய ஆச்சரியம் எல்லோரும் அதிர்ந்து விட்டார்!
அலமுவோ அலறியடித்து மூர்ச்சித்து வீழ்ந்து விட்டாள்
அந்த முதலை வயிற்றுக்குள் இருந்தது அவள் கணவன் உடல்!
ஆம் ; உயிரற்ற உடல்!
அய்யகோ ; அதிகாலை நேரம் -
ஆற்றோரம் சென்றவனை
முதலை விழுங்கிற்று!
அப்போதங்கே ; கோடையிடி முழக்கம் போல
“ஆ” “ஊ” என்று கத்திக் கொண்டு
பத்துப் பேர் ; காட்டில் வாழ் - காண்டாமிருகத் தோற்றத்தார்
மனித உருவில் மலையொத்த மாமிச வடிவத்தார்
மாட்டுக் கொம்புகளைத் தலையில் மாட்டிக் கொண்டு
மன்னர் கிரீடம் அவை தான் என எண்ணிக் கொண்டு
எருமை மாட்டுத் தோலால் ஆன ஆடையினைப்
பெருமை பொங்க அணிந்து கொண்டு
சூலமும்
சுமந்திருக்கும் கைகளை ஓங்கிக் கொண்டு
பற்களைக் கடித்து பல குரல் எழுப்பி
கற்களை வீசிக் கொண்டு -
சாவு வீட்டு அழுகுரலை நல்ல
சங்கீதம் போல் ரசித்துக் கொண்டு
குத்துவோம் கொம்புகளால்
கொலை செய்வோம் ; உலை வைப்போம் உங்கள் உயிர்களுக்கு
என்ற பிளிறலுடன்
நுழைந்து விட்டார் - அந்த வீட்டுக்குள்
எதிர்க்க முடியாமல்
எல்லோரும் ஓடி விட்டார் -
வந்த கூட்டம் -
வாய்களைக் குகைகளாக்கி
பச்சையாக முதலை மாமிசத்தை
இச்சையுடன் தின்று முடித்து
முதலை வயிற்றுக்குள் இருந்த
முதிரா வயதுடைய ஆணழகன் - அலமுவின்
அத்தானவன் அங்கங்களையும்
உண்டு களித்து
ஊருக்குள்
நடனமாடிச் சென்றார்கள் -
நாகரிகப் பண்பாடு ஒரு புறம் ஒளிரவும்
நாசகாலத்தின் வெளிப்பாடு மறுபுறம் வளர்வுமான
வரலாற்றுக்
காலத்தின் கோலமிது!
சாங்கிருத்தியாயன் தீட்டிய
சரித்திரப் பின்னணிச் சிறுகதைத்
தொகுப்பில் - “வால்காவிலிருந்து
கங்கை வரையில்” ; ‘அமிர்தாஸ்வன்’ எனும்
தலைப்பில் அந்தக் கால வாழ்க்கைத்
துணைவியார்க் கென்றே வகுத்துள்ள
தனி இலக்கணத்தை அந்நாவலில்
அண்மையில் நான் 54 ஆம் பக்கத்தில்
வாசித்தறிந்த நினைவுடன் எழுதுகிறேன் ;
வரலாற்றறிஞர் ‘இராகுலன்’ வரைந்துள்ளார் :
“அதிதிகள், நண்பர்கள் வீட்டுக்கு வந்தால்
அவர்க்கு விருந்தளித்து மகிழ்விப்பதுடன்,
தற்காலிகமாகத் தங்கள் மனைவியரையும்
தந்து கெளரவிப்பது ஆச்சாரமாக இருந்தது” என்கிறார்.
கணவாய் வழி இப்படிக் காலடி வைத்து வந்த
கலாச்சாரம்தான் கடவுள் அவதாரம் என்று
காட்டிக் கொண்டு வந்த அதிதி ஒருவருக்கு
இயற்பகை நாயனார் தனது இல்லத்தரசியை
கட்டிலறைக்கு அனுப்பி வைத்த கதை போன்ற
இழிவரு எடுத்தது போலும்.
இருப்பதைத் தான் எடுத்தியம்புகின்றேன், இதனைப்
பொறுப்பதும், பொறுத்திடாது என்னை வெறுப்பதும்
புத்தகம் இரண்டையும் படித்த பிறகு - நீவீர்
தீர்க்கமாகத் தீர்மானிக்க வேண்டியதாகும்.
ஆரியர்கள் வருகை என்றும் ஆதி முதல் வாழுகின்ற
திராவிடருடன் மோதல் என்றும் ‘அசுரர்’ எனும்
திராவிடருக்கும் - அமரர் எனும் ‘தேவர்’ கட்கும்
ஆண்டு பதினெட்டு அயராமல் யுத்தம் நடந்ததென்றும் ;
அறிஞர் பெருமக்களாம் அய்யர், அய்யங்கார்கள்,
சாமா, சாஸ்திரியார்கள் அன்றே எழுதினர் சரித்திரங்கள்!
இராமாயண யுத்தமே ஆரிய, திராவிடப் போராட்டம் தானென்று
இந்தியப் பிரதமர் ஆவதற்கு முன்பே எழுதியவர் நேருபிரான்.
இத்தினையையும் உள் வாங்கிக் கொண்டு
வடிவெடுத்ததுதான்
வால்காவிலிருந்து எனும்
வரலாற்றுப் பனுவல்!
வளைக்கவில்லை அதனை என் போக்கிற்கு ;
வானத்தைப் பூமியெனச் சொல்ல எனக்கென்ன பைத்தியமா?
வற்றாத ஜீவ நதி கங்கையைப் போல்
வளம் பெருக்க வேண்டும் காவிரியும்
தமிழகத்துக்கென்று ; வரம் கேட்டுத்
தவம் இருப்பேனே தவிர,
வறண்ட பேராறு கங்கையெனக் கூறும்
வடிகட்டிய பொய்யனாக வேடம் கட்டி வருவேனா?
அப்படித்தான் அடித்துச் சொல்லுகிறேன்
எப்பொழுதும் ஆதார பூர்வமாக
ஆரியக் கலாச்சாரம் திராவிடக் கலாச்சாரத்தை
விழுங்கிடவும் வீழ்த்திடவும் வந்த கதை!
மூவாயிரம் ஆண்டுக்கு முன்பே
முற்றுகை யிட்ட கலாச்சாரத்தினால்
மூண்டு விட்ட தீயின் கொடுமையைத்தான்
ஆண்டு பலவாக அனுபவித்து வருகின்றோம்.
ஆயிரமாயிரம் ஏக்கர் நிலம்
ஆலயத்துக்கு என்றும் ஆதீனத்துக்கென்றும்
அந்த நிலங்களிலே நித்தமுழைத்து
