காலப் பேழையும் கவிதைச் சாவியும்
கவிதை 5 · 5 / 58
மற்றவர்கள் மரணத்தை வரவேற்கும்
மானமிகு வீரர்களாய்ச் சாய்ந்து கிடந்தார்
மருந்துக் கிண்ணமுடன் மங்கை நடந்தநடை ; நிமிர்ந்த நடை -
எனந்தப் பீடு நடை பெருமித நடை என்பரேல் ;
பலருக்கும் பட்டா பதிவாகியிருந்த அந்தப்
பகுதி நிலம் அத்தனையும் பாவி அந்தப் பண்ணைக்காரர் ;
பணம் நிரம்பப் பெற்றுக் கொண்டு
பகிர்ந்து கொடுத்து ஏப்பம் விட்டு விட்டார்.
செய்த பாவத்தை மறைப்பதற்குச்
செய்திடுவேன் யாக யோக மென்றும்,
ஜெயித்திடுவேன் பயமில்லை யென்றும்
பயித்தியம் போல் பேசலானார் ;
உரிமையுடையோர்க்கு உடைமையாக்கிட வேண்டியதை
நரிக்குணத்தார் தமக்கே உரிமையாக்கிக் கொண்டு
நல்லவர் பலரை நடுத்தெருவில் விட்டு விட்டாரே
நாசமாய்ப் போக எனச் சபித்தவாறு,
ஊரே கொதித்தெழுந்தது ;
உதயசூரியனும் உதித்தெழுந்தான்.
தானொன்று கிடப்பது போலத் துறையிலே
துணி துவைக்கும் கல்லொன்று கிடைத்து,
தொத்திக் கொண்டாள் தோகை ; அதன் மேலே
“தோழர்களே ; காது கொடுத்துக் கேளுங்கள் ;
நான் சொல்லும் கருத்துக்களை!
நாமோ சிலர் ; நடுக்காட்டில் வசிப்பவர்கள்!
நம்மீது எரிச்சலும் பொறாமையும் கொண்டோர் ;
நம்மைப் போலவே சிலர்!
எரிச்சலைக் கண்டு எரிச்சல் அடைந்தால் மேலும்
எரிச்சல்தான் மிகுந்து ; நம் சாம்பலே மிஞ்சும்.
தூண்டி விட்டு இரு தரப்பை மோத வைத்துத்
துளிக்கூட புத்திசாலித் தனம் தேவையில்லை.
பண்ணையார் படுத்துறங்கிக் கொண்டிருக்கிறார் - கட்டிலறையில்!
பாடுபடும் பாமரர்கள் நாமேதான் பயணம் போகிறோம் கல்லறைக்கு!
கற்கால மனிதர்களாயிருந்து
கால மாறுதலால்
படிப்படியாய் பண்பட்டு வருகின்றோம்.
பகுத்தறிவும் பெற்றோம் என்பதற்கு
அடையாளமாய் அனைவரும்
ஒன்று சேர்வோம் ; முதலில்
ஏற்றத் தாழ்வை நமக்குள்ளேயிருந்து
எடுத்தெறிவோம் குப்பைத் தொட்டியிலே! அதன் பின்னர்
எல்லாவற்றையும் தலைகீழாய் மாற்றுதற்கு
ஏற்றிடுவோம் புரட்சிக் கொடி! கிளம்பிடு கிளர்ச்சி நடத்த!”
மளமளவென மடை திறந்தாற் போல
மங்கையவள் பேசக் கண்டு -
காயம் பட்டோர் படாதோர் எல்லாம்
வாயைப் பிளந்து கொண்டு, வந்து நின்று ;
அடடே அதிசயமாயிருக்கிறதே -
அழகாகப் பேசுகிறாயே -
அதெப்படி முடிகிறதுன்னால் என்று
அத்தனைபேரும் கேட்க ;
அவள் பதில் சொன்னாள் -
“நான் எனக்காக மட்டும் பேசவில்லை -
எல்லோருக்கும் பேசக் கற்றுக் கொடுக்கவே
நான் பேசக் கற்றுக் கொண்டேன்” என்றாள்.
அதுவரையில் இருள் மறைவில்
அசையாமல் படுத்திருந்த
விழுப்புண் நெஞ்சினிலே பெற்ற வீரனொருவன்
விழித்துக் கொண்டு கேட்டான் ; “என்னைத் தெரிகிறதா மங்கை ?”
“என் தெரியவில்லை ? என்னவனல்லவா நீ!
எதிரியின் முகாமில் ஏன் சேர்ந்தாய் ?
துரோகிகளைக் காண்பதே துரோகம்” எனத்
தொலைவிற் சென்றாள்!
“மங்கை நீ என்னை மன்னித்தருள்க -
எதிரிகளை இனம் புரிந்து கொண்டு ; பிறகு
இங்கேயே வந்து விட்டேன் ; தெரியாதா உனக்கு ?
இப்போது நான் இறந்து கொண்டிருப்பது
பகைவனின் கணை என் நெஞ்சிலே
பாய்ந்திருப்பதால்தான் ; பாரடி கண்ணே!” என்றான்.
“அய்யோ” என்றலறி அவன் உடலை
அணைத்துக் கொண்டாள்!
சாவு முனையில் அவன் கேட்டான் - “என்
சுந்தரச் சிலையே! புரட்சி என்றாலே எப்போது ?
கிளர்ச்சி என்றாலே எப்படி ?” என்று!
“கண்ணா ; நான் சொன்னது
கலகம் விளைக்கும் புரட்சியல்ல ;
கலாச்சாரப் புரட்சி!
சண்டை நடத்தும் கிளர்ச்சியல்ல ;
சமூக நீதிக் கிளர்ச்சி!
எல்லாமே அறவழியில்தான்!” என்றாள்.
செத்துக் கொண்டிருந்தவன் சிரித்துக் கொண்டே ;
“கத்தியின்றி ரத்தமின்றி ஒரு யுத்தம் ; அப்படித்தானே ?” என்றான்.
“ஆமாம் ; கத்திப் பகைவன் கொண்டு வருவது ;
இரத்தம் நாம் தருவது -
அதுதான் அறப்போர்!” என்றாள்.
அவளை அணைத்தவாறே
அணைந்து அவன் உயிர்!
பண்ணையார் கூலிப்படை திரட்டிப் போர் நடத்தி
பண்புநிறை ‘மங்கை’யவள் காதலனைத் தீர்த்துக் கட்டி
கடைசி மூச்சினைக் காதலன், காதலியின் மடியில் விட்டப்போது ;
களங் காணும் உரிமைப் போர் அற வழியில் நடத்தட்டுமென்றும்,
தொல்லைகள் நீங்கும் வரை தொய்வின்றித் தொடரட்டுமென்றும்
சொல்லி விட்டுக் கண் மூடினானே ; அதைச் சொல்லப் போனால் ;
அதற்கு முன்பிருந்தே அநாகரிகத்தின் உறைவிடமாக
அந்த வட்டாரம் விளங்கியதும், விலங்குகளுக்கிருந்த
வீரியமும் வேட்டையாடும் வல்லமையுமின்றி ; அவற்றின்
வயிற்றுக்குத் தீனியானார் வரிசையாக என்ற வரலாறும்தான்,
நம் முன்னால் நிற்கும் ; நமது நம்பிக்கையைக் குலைக்கும்.
எடுத்துக்காட்டாக சிலவற்றை இயம்பிட வேண்டுமெனில் ;
மரத்தின் அழுத்தமான வேர் என்று நினைத்து ஒரு
மண்டூகே மனிதன் பாதி வெளிச்சத்தில்
மலைப்பாம்பு ஒன்றின் மீது உட்கார்ந்து விட்டான், அந்த
மனிதக் கனம் தாங்காமல் மலைப்பாம்பு நெளிந்தவுடன்
வீராதி வீரன் “வீல்” என்று கத்தித் துடித்திட அப்போதே
வெடித்து விட்டது அவனிதயமென்று வீட்டாரும் ஊராரும்
அழுது தொலைத்தார்கள் ; அப்படியொரு “பகாசூரப்
பயந்தாங்குளி!”
அது போல ஒன்றா இரண்டா ; அன்றாடம் தொடர்கதைதான்!
காளியாத்தாவுக்குப் படையல் போட்டுக் காட்டு வழி ஆட்டுக்குட்டி
காவு கொடுக்க வேண்டுமெனக் கால்நடைப் பயணம் போனவனை ;
மத யானை வழி மறித்துக் காலால் மிதித்து அவர்கள்
காவூர் செல்லும் வரை விடவில்லை எனும் சேதி ;
காட்டுக்குள் நுழைய நினைப்போரை கதி கலங்க வைத்த சேதி ;
வீட்டுக்குள் கிடக்கும் மனிதரையும் கொட்டிக் கொல்லுகிற
குளவிகளால் பெரும் பீதி!
என் செய்வது? ........
கற்காலத்து அடுத்த கட்டமாக
விலங்கினம் / மனித இனத்துக்கிடையேதான்
வெங்கொடுமைச் சாக்காட்டை விளைவிக்கின்ற போராட்டங்கள்!
அதற்கும் அடுத்த கட்டங்களாகத்தான் மனிதரிடம்
விலங்குகளே விரோதம் பாராட்டாவிடினும் ;
மனிதர்களுக்குள்ளாகவே மாறி மாறி
விலங்கினம் மனித இனப் போராட்டம் என வகுத்துக் கொண்டு
நடைபெறத் தொடங்கிவிட ;
விலங்கு யார்? மனிதன் யார்? என்று
வித்தியாசம் காண முடியாத நிலையில் ; அந்தப்
போராட்டங்கள் நிகழ்ந்து கொண்டு தானே இருந்தன!
அதன் விளைவாகக்
கண்ட விபத்துகளில் ஒரு விபத்தாகக்
