உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

காலப் பேழையும் கவிதைச் சாவியும்

கவிதை 4 · 4 / 58

வெள்ளத்தினோடொரு வெள்ளமுமாய்

வீணையும் நாதமும் ஆகி விட்டார் -

விலகிச் சென்று பிறகு வேறு வேறு

வீணை மீட்ட இருவரும் ஓடிவிட்டார் -

வரை முறையின்றி வழுக்கிடும் வாழ்க்கை

வாய் மொழியில்லா சைகைக் காலத்து வாடிக்கை -

வேண்டாம் என்பதையும் கூடாது என்பதையும்

விரும்பிட முடியாதென்பதையும் முகக்குறியால் காட்டுகின்ற

அபிநயக் கூத்துமொழியே அந்நாள் பேச்சுமொழியாம்

அதன் பின்னர் வார்த்தை மொழி ஒலியெழுப்ப ஒரு வரலாறே

உண்டு

அடிபட்டால் “ஆ!” “ஊ!” என்று கத்துவதும் -

அதி தொலைவில் இருப்பவரை “வா” என்று அழைப்பதுமே ;

அச்சத்தில் பதறிப் போய் ‘அய்யோ’ என்றலறுவதும் -

ஆனந்த மிகுதியால் “ஆவ்” என்று சிரிப்பதுமே -

இரண்டாம் இடத்தைப் பெற்று, இசை ஒலி ஆயிற்றென்றால்

இயல், இசை, கூத்துதானே அனைத்துமொழிக்கும் அடிப்படை

இலக்கணமாம்.

அடி நாக்கின் ஆதிக்கம் தான் நாளடைவில்

அபிநய மொழியினையும் துறையில்லா அமைச்சராக்கி

‘யாகா வாராயினும் நா காக்க’ எனும் அய்யன் ஆணைக்கேற்ப

அதிராம் நாவரசுக்கு அதிரடிப்படை காவல் அமைத்ததாம் -

நாகரிக மேன்மைக்கு வழிவகுத்த நா பேசத் தொடங்கிடவே

நாற்பதாயிரம் ஆண்டுக்கு முன் விளைந்த முன்னேற்றந்தான்

காரணமாம்.

பச்சையாக இறைச்சியினைப் பசி போக்கத் தின்ற மனிதன் -

சுவைத்துண்ண

இச்சை கொண்டு சமைத்துண்ணத் தீ மூட்டக் கற்றுக்

கொண்டான்.

வேட்டையாடி விலங்குகளைக் கொன்றால்தானே வயிற்றுப்

பாட்டை சமாளிக்க வழி காண முடியும் - அந்த வேட்டையிலும்

போட்டி, பொறாமை, போர் என்று புதுப்புது பிரச்சினைகள் - நம்

பாட்டி, முப்பாட்டி காலத்தில் முளைத்த இம்மோதுதல்கள் - இன்று

பேத்தி, பேர் காலத்திலும் நின்றபாடில்லை.....

ஆத்தி சூடி கூறும் ‘ஆறுவது சினம்’ என்ற

அறிவுரை எவர் காதிலும் ஏறுவதில்லை ;

அது ஏனோ தெரியவில்லை.

பகை வாழ்க்கையைப் பழகி விட்ட

இக்கால மனிதர்களை விடவும் ;

குகை வாழ்க்கையில் நாகரிகமற்று நடமாடிய

அக்கால மனிதர்கள் எவ்வளவோ மேல் என்று ;

எண்ணுகின்ற நிலைமை

ஏற்படாதிருப்பதற்கு ;

மண்ணுக்கு இருக்கின்ற தங்கமனம்

பெண்ணுக்கும் ஆணுக்கும்

பெரிதாய் வேண்டும் ; அது

அரிதாய்க் கிடைக்கும்.

அன்பைப் படைக்கும் -

அமைதியை விளைக்கும்!

அடுத்தொரு கதை கிளைக்கும் ;

அதற்கான விதை நாளை முளைக்கும்!

கற்காலத்து மனிதன், புதிது புதிதாகப் பலவற்றைக்

கற்க விரும்பினானோ இல்லையோ ;

தாய் தன் குழந்தைக்குப் பாலூட்டி விடுவது போல்

தானே முன்வந்து இயற்கை ; அவனுக்குப் பலவற்றைக் கற்றுத்

தந்தது.

உணவுக்காக மிருகத்தைக் கொன்று அதன் இறைச்சியைத் தின்று

உரித்த தோலை ஆடையாக மனிதன் உடுத்திக் கொண்டது ;

உண்மையில் அவன் மூளை விரித்த ஆணையின் விளைவு தானே!

வன்மையுடன் அவன் வாழ்வதற்குரிய கருவிகள் செய்து

கொள்ள ;

இரும்பையும் கல்லையும் எடுத்துக் கொள் என்றதும் இயற்கையின்

கனிவுதானே! ஒரு

துரும்பையும் கிள்ளிப் போடாமல், தொந்தியைப் பெருக்க வைத்து,

வரும்படி கொட்டிக் கொண்டு வாழ்கின்ற நில ஆதிக்க சொர்க்கம் -

அழும்படி ஆக்குதற்கு ஆர்த்தெழும் ஏழைத் தொழிலாளர் வர்க்கம் ;

அன்றில்லை இன்றுண்டென்றால் அதற்குக் காரணம் ; இங்கு

அடிமை நிலை தகர்க்கின்ற அறிவுப் புரட்சி முழக்கம்

ஒலிப்பதன்றோ!

என் ? எதற்காக ? எப்படி ? எனக்கேட்ட ஏழைபாழையிடம் ;

எல்லாமே கடவுளாணை என்றுரைத்த கயவர் கூட்ட மீதிலே -

கடவுள் என்ற கட்டுறுத்துத் தொழிலாளரை ஏவுக எனக்

கவி மன்னாதி மன்னன் பாரதிதாசன் படை முரசு கொட்டியதால் ;

கனிவும் பணிவும் காணுகிறோம் கனதனவான்கள் மாளிகையில்!

கருணையும் பண்பாடும் கற்காலத் தொடக்கத்தில் காணமுடியக்

காரணத்தால் ;

களம் அமைத்துப் போரிட்டார் ; காடுகளில், மலை மேடுகளில்!

பொற்காலம் மேலென்றாலும் பொல்லாத சீமான்கள் பூமான்கள்

ஆதரவை,

பூதக் கண்ணாடி கொண்டுதான் பார்க்க வேண்டும் ; அதிலும்

வேதக் கண்ணாடி அணிந்தோர் விழிகளுக்கு

வியர்வைத் துளிகள் மட்டும் தெரியவே தெரியாது.

விழாக்கள், வேடிக்கைகள், விதவிதமான கேளிக்கைகள் என்று

வேற்றுமையில் ஒற்றுமை கண்டிருந்த நிலை மாறி,

வேறுபாடும் மாறுபாடும் வேகமாக வளர்ந்து விட்டபடியால்

விரோத உணர்வு வேர் விட்டு விஷத் தருவாய் விழுதும் விட்டு

வெட்டிக் கொண்டும், கற்களால் முட்டிக் கொண்டும்

பட்டியல்படி நூற்றுக் கணக்கில் பலியாகி - இரு தரப்பு

உடைமைகள் அனைத்துமே பயன்படுத்த வழியின்றிப் பாழாகிப்

போனதங்கே

மடைமை இருளில் இரு தரப்பு வீரர்களில் எஞ்சி நின்றோர் ;

மரண விளக்கு ஏற்றி வைத்து மண்டியிட்டு மண்ணைத் தொட்டு

மவுன அஞ்சலி செலுத்தலானார் வீர மரணத் தியாகிகளுக்கு!

இதனை நான் எழுதிக் கொண்டிருக்கும்போது

பல முறையும் படித்த பண்டித நேருவின்

உலக சரித்திரப் புத்தகத்தின் ஒரு பகுதி ;

நெஞ்சில் நிழலாடி பல நினைவுகளைத் தூண்டியது.

இதோ ; நேரு கூறுகிறார் :-

“சரித்திரத்தைக் கூர்ந்து கவனித்தால்

இவ்வுலகம் ;

“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்” - வளர்ந்து மாறி வருகிற

பரிணாம வளர்ச்சி முறையை அறிவலாம்”

மாணிக்க வாசகரின் திருவாசகத்தையே ஆதாரம் காட்டி

அழைத்திடுகிறார் சாட்சிக்கு ;

ஆசியாவின் ஜோதி - பண்டித நேரு - என்பதுடன்

அவரே மனிதனின் பகுத்தறிவு வல்லமையைப்

பாராட்டி விட்டு ; அதே நூலில்,

“உலக யுத்தத்தில் கண்டது போல்

ஒன்றுபட்ட சகோதரர்கள் ஒருவரை

யொருவர் அழித்துக் கொள்வதே

முன்னேற்றமென்றால் அந்த

முன்னேற்றத்தில் அடிப்படைத் தவறு

ஏதோ இருக்கிறது” - என்று

கூறிடும் அவர்போன்றார் கவலை தீர்க்க

என்னதான் மருந்து?”

மருந்துக் கிண்ணம் எடுத்துக் கொண்டு

மங்கை யொருத்தி அங்கே வந்தாள் -

கறாராகச் சொல்ல முடியும் ; அவள் அந்தக்

‘காந்தக்கல்’ அழகு மோகினியல்ல!

கண்ணை அகல விரித்துக் கொண்டு

காயமுற்றுக் கிடந்தோர் பக்கம்

இட்டடி நோக எடுத்தடி கொப்பளிக்க

மெல்ல நடந்தாள்.....மிக மெல்ல நடந்தாள்.

உடல்கள் ஒன்றிரண்டைப் புரட்டிப் பார்த்தாள்

ஒடிப்போன வீரர்கள் உடல் தவிர ;

முதல் பதிப்பு: ஜூன் 2006 — தமிழ்க்கனி பதிப்பகம் / பூம்புகார் பதிப்பகம், சென்னை