காலப் பேழையும் கவிதைச் சாவியும்
கவிதை 3 · 3 / 58
நடை வேகம் காட்டுகின்ற பெண்ணே
விடை யென்ன சொல்லுவாய் கண்ணே - என
வினவிடத்தான் விரைந்து சென்றேன் ; அவள்
சினமுற்று சிலையொன்று செல்வதுபோல் சென்று விட்டாள்.
சென்றவளைப் பின்தொடர்ந்து
செங்குத்தாய் நின்ற பாறை யொன்றில்
ஒளிந்திருந்து உற்றுப் பார்த்தோம்
ஒரு வேயாத் திறந்த வீடு
ஒரு மறைவு மில்லாமல் வாழும் கூடு
திரை மறைவு கட்டக் கூடத் தெரியாத குப்பைக்காடு!
வளைந்து செல்லும் வீதியிலே குமரி ; அவ்வீடு நுழைந்து
குனிந்து நிமிர்ந்தாள் கூர் மார்பு குலுங்கி நிற்க!
விளைந்து வந்த கரும்புக்குத் துதிக்கை நீட்டி, மிக
விரைவாகப் பசி தீர்த்துக் கொள்ள பதற்றம் காட்டி,
ஆணைகள் மூன்று வாய் பிளந்து நிற்கின்ற விதமாக,
ஆடவர் மூவர் அவளைச் சுற்றிக் சூழ்ந்து கொண்டார்.
பாவையின் பரட்டைத் தலையைப்
பாசமுடன் தடவிக் கொடுத்தான் ஒருவன்! தடவிக்
கொடுத்தவனைத் தடுத்து நிறுத்திக்
கெடுத்து விடாதே கிடைத்த வாய்ப்பை யெனக் -
கோபத்தைச் சைகையால் உணர்த்தி ; இப்போதென்
தாபத்தைத் தீரடி யென்று அவளிடம் வலியுறுத்தி ;
இஞ்சி இடுப்பழகை இறுகப் பற்றி அணைத்துக் கொண்டான்
வஞ்சி அவளும் துவண்டு கொடுத்தாள் அல்லித் தண்டாக!
வாழைப் பூ மொட்டுதனை வலியக் கொடுத்துவிட்டு ; அதனைக்
கோழையின் கையில் கொடுத்தகூர்வாளென ஆக்கிவிட்டாள்
வகை தெரியா மண்டூகமென அவனை கையினால் எறி விட்டு ;
வகையறிந்த மூன்றாமவன் ; அவனை விரட்டி விட்டு,
அவளையும் வேட்டையாடி விளையாடித் தீர்த்து விட்டான்.....
அத்தனையும் நண்பர் இருவரும் வேடிக்கை பார்த்திருந்தோம்...
காட்டுமிராண்டித்தனமான காட்சிதான் எனினும் ;
கற்புக்குப் புனித இலக்கணம் சொல்கின்ற இந்தக் காலத்திலும்
கற்கால நாகரிகத்தைக் கடைப்பிடிப்போர் உண்டு ; அவரெல்லாம்
கடைவாய்ப் பற்களைப் போல ஒளிந்திருந்து காரியம் சாதிப்போர்.
பச்சையாக எதுவும் பேசுவோராயினும் ;
பதுங்கிப் பாய்ந்து பலனடையும் பேர்வழிகளாயினும் ;
மிச்சம் சிறிது மனச்சாட்சி வைத்திருந்தால்
அச்சமின்றி அவை நடுவே ஆர்ப்பாட்டம் செய்யமாட்டார் -
ஆறாயிரம் ஆண்டின் முன்னே அமைந்திருந்த கற்காலம்
அடுத்து வரும் ஆண்டிலேயும் அமையாதிருப்பதே நற்காலம்!
முத்தனைய பெண்மணியுடன் மூவருலா
எத்தனை முறை நடந்ததெனக் கணக்கில்லை
சத்ததெல்லாம் இழந்து மங்கை சவமாக ஆவதற்கும் வழக்கில்லை
சமுதாயத்தில் அதற்கும் ஒப்புதல் சான்றிதழ் தருவதாகவே ;
கண்ணியம் கெடுவதற்குக் கணக்கு வழக்கே இல்லை!
புண்ணியம் உண்டு உமக்கு ; புழு புழுத்தப் “புரட்சிப்”
பேச்செல்லாம் இங்கு வேண்டாமே!
கற்பு நிலை இருபாலார்க்கும் பொதுவில் வைக்கும் புத்தி
பெறுவோமே ;
அற்பமென்று மக்கள் நினைத்திட யாரும் கத்தி தீட்ட வேண்டாமே!
பெரியாரும் அண்ணாவும் பாரதியும்
பெண்ணுக்குப் பேசப்படும் கற்பு
ஆணுக்கும் பேசப்பட வேண்டுமெனப்
பெரும் புயலாய் வீசினரே தவிர ;
கற்பைப் பற்றி இரு பாலாரும்
கவலைப்படக் கூடாதென்றா கட்டளை பிறப்பித்தார்கள் ?
இப்படிக்
கருத்தாய்வு நடத்திய இரு நண்பர்களும் ;
கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தார்கள்
ஆண் பெண் சமத்துவமென்றால்
ஆலகால விஷத்தில் இருவர்க்கும் சம பங்கு அளிப்பதல்ல ;
அமுதத்தைத்தான் அப்படிப் பகிர்ந்து கொள்ள வேண்டும்
அமரர்க்கு அமுதமும் ; அசுரர்க்கு விஷமும் எனும் தீர்ப்பு ;
புராண காலத்துப் பொருந்தாத் தீர்ப்பு ; அந்தத்
தீர்ப்பை அறவே ஏற்காது புரட்சியில் பூத்த புதிய வார்ப்பு!
விவாதமெல்லாம் முடிந்து திரும்புகையில்
இரு நண்பரில் ஒரு நண்பன் கேட்டான் ;
“ஆமாம் ; அந்தப் பெண்ணின் பெயரென்ன ?”
“அவள்தான் பேசாதவளாயிற்றே
நடந்த தெல்லாம் நாடக மொழிதானே நண்பா - நம்
ஆசைக்காக ஒரு பெயரை வைத்துக் கொள்ளலாம்
கற்காலத்து நாடகம் நாம் கண்டதாலே ; ஆண்களைக்
கவர்ந்து அவள் இழுத்துக் கொண்டதாலே
இரும்புக் காலம்தான் இனி வரப் போகிறதென்பதாலே - இரும்பை
இழுத்துக் கொள்ளும் “காந்தக்கல்” என்று இவளுக்குப்
பெயரிடுவோம் ; முதலில் இந்த இடம் விட்டுப்
பெயர்ந்திடுவோம்” என்றான் அந்த நண்பன்!
( நியாண்டர்தால் பள்ளத்தாக்கில் வாழ்ந்தவன் நியாண்டர்தால்
மாந்தன் என்று அழைக்கப்பட்டான் )
இன்றைக்கு ஏடெடுத்து
எழுதுகோலில் மை நிறைத்து
அன்றைக்கு ஆறாயிரம் ஆண்டின் முன்னே
ஆதி மனிதன் வாழ்ந்த நிலை
அவன் உண்டது, உறங்கியது, உய்த்தது அத்தனையும்
அற்புதமாய்த் தீட்டிக் காட்டுகிறோம்.
ஆயிரம் வசதி வாய்ப்புகளைத் துணையாக
அழைத்துக் கொண்டு ஆய்வு செய்கிறோம் ;
அதன் முடிவுகளை எளிதாக அறிவித்து விடுகிறோம்.
ஆனால் அய்யன் வள்ளுவர்க்கு மூத்த தொல்காப்பியர்
இரண்டாயிரம் ஆண்டு காலத்திற்கு முன்பே
இயற்றியது தொல்காப்பியத்தை எழுத்தாணி கொண்டன்றோ ?
ஓலையில் படைத்திட்ட ஒப்பற்ற அந்த வாழ்க்கை இலக்கணம்
ஓரறிவுள்ள உயிர், உடம்பினால் அறியுமெனத் தொடங்கி,
ஆறறிவு என்பது மனத்தால் அறியக் கூடியது என முடித்து -
அத்தனை வகை உயிர்களையும் எத்தனை அறிவு படைத்தவை
என விளக்கும்
மகத்தான காவியத்தை வாழ்விலக்கண ஓவியத்தை
மரஞ்செடி கொடி துவங்கி மனித வரலாறு கூறும் பாவியத்தை -
இந்த
மண்ணிலோர் மலை ; மலையிலோர் சிகரம் ; என
மாசு மறுவற்ற மரபிலக்கணம் தந்தவரை,
மண்டியிட்டுத் தொழுது வணங்குவது ; மனித வரலாறு வரைதற்கு
மத்தியிலே ஆற்ற வேண்டிய மாபெருங் கடமை என்பேன்!
ஆறாயிரம் ஆண்டின் முன்னே மனிதன் ஆடையின்றி,
அறுசுவை உணவு தயாரிக்கும் ஆற்றலின்றி,
அன்பு காதல் பாசம் கடமை என்ற உணர்வின்றி,
என்புதோல் போர்த்த உடம்புகளிடை உறவு முறையின்றி,
பண்பு, ஒழுக்கமிவை பற்றி எண்ணிடும் பழக்கமின்றி
கண்டதே காட்சி கொண்டதே கோலமாய்க்
காடுமேடு சுற்றித் திரிந்தான்
ஆடு மாடு நட்பும் கொண்டான்.
பசியெடுக்கும் போதெல்லாம் பாதையில் பார்த்ததைப்
பறிப்பதும் - பறித்ததைப் புசிப்பதும் - பழகிக் கொண்டது போல்
‘காந்தக் கல்லை’ அவன் கண்டாலும், அந்தக் கல்லே
பார்த்தவுடன் அவன் பக்கம் வந்தாலும்
ஆந்தையும் கோட்டானும் போல்
ஆனமட்டும் அவரவர் இரையை அவரவர் தேடிக் கொள்வர்.
அதன் பின்னர் இவர் யாரோ ? அவர் யாரோ ? ........
அவதரிக்கப் போவதற்கு யார் பாடுவார் ஆராரோ ? ........
அப்படித்தான் இராகுல சாங்கிருத்தியாயன் கதையொன்றில்
அழகு மோகினி திவாவும், ஆசைக் காதலன் சூர் என்பானும்
அணைத்து மகிழ்ந்து இதழ் குடித்து தமை மறந்து கிடக்கும்போது ;
அன்பனே ; நீ என் அன்னையின் மகன்! அப்படியிருந்தும் உன்னை
நான்
இதுவரை நெருங்காமல் இருந்தமைக்கு மன்னித்து விடு
என்கிறாள்.
இனி நீ என்பால் வெட்கப்படாதிரு, போதுமென்கிறான் ; பின்னர்
அவர்கள்
