உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

காலப் பேழையும் கவிதைச் சாவியும்

கவிதை 2 · 2 / 58

( படிமுறை வளர்ச்சி = Evolution )

பழம் பெரும் நாகரிகத்தின்

தொடக்கம்தான் என சுட்டிக் காட்டப்படும்

எகிப்து, மாயா, மொசபடோமியா

அவைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு

எடுத்த எடுப்பிலேயே

சிந்துவெளி நாகரிகம்

கண் சிமிட்டிக் கவருவதால்

கருநிலை அதற்கெங்கே யென்று

கடும் ஆய்வு நடத்தியவர்கள்

கடலுள் மூழ்கிய குமரிக் கண்டப் பகுதியைக்

கண்டு பிடித்துக் ‘கருவூர்’ அதுதான் எனக்

கழறுகின்றார் ; நாமும் காணுகின்றோம்.

மலைப்பு விளைக்கும் கேள்வியொன்றை

மதிவாணர் எழுப்பி விடையும் கூறுகின்றார்.

குரங்கிலிருந்து மாந்தன் தோன்றியதாய்ப்

பரிணாம வளர்ச்சி பகர்கிறதே ;

இன்றுள்ள குரங்குகள் ஏன்

அன்று போல் மாந்தராய் மாறவில்லை ?

சிறிய செடி பெருமரமாய் வளரும்போது

உச்சக் கிளை மட்டுமே உயர்ந்து கொண்டே போகும்

பக்கக் கிளைகள் நாம் பார்த்த இடத்திலேயே

நிற்கும் நிலை போலவே

படி முறை யெனும்

பரிணாம வளர்ச்சியும்

பாடமாய் அமைகிறது

பகுத்தறிந்து பதில் தருகிறது.

மிதித்துக் குழைத்த சேறு ; நாம்

மதித்துக் காத்திடும் சுவராய் மாறுது!

குழைத்த இடத்தில் கிடக்கும் சேறு ;

குட்டிச் சுவரொன்றுகூடப் பெறுவதில்லை வேறு -

குரங்கினமும் அப்படித்தான்

கொலுவேறிக் குந்துகின்ற

மனித இனமாக ஒரு பக்கம் உயர்ந்தாலும்

மண்ணிலே குழைத்த சேறு மிச்சமாக

மண் மீதே கிடப்பது போல

மனிதரிடை மாந்தக் குரங்கும் இருக்கும்.

மாளிகை யொன்றை எழுப்புவதற்கு முன்பு

மண் குடைந்து அடித்தளம் அமைத்திடல் வேண்டுமன்றோ!

அறிஞர் இராகுல சாங்கிருத்தியாயன்

அப்படித் திட்டமிட்டு ஆதிகாலத்து வரலாற்றை

அரிச்சுவடியில் துவங்காமல் ; ஆறாயிரம்

ஆண்டுக்கு முன்பிருந்து துவங்கியதே

வால்காவிலிருந்து கங்கை வரை எனும்

இருபது கதைகளடங்கிய எண்ணக் கருவூலமாம்.

இப்படிப் பலரும் எழுதிய கருத்துகள், கதைகள்,

ஒப்பிலாக் கற்பனைகள் ஒன்றாகத் தொகுத்தளிக்கும்

முயற்சியிலே முனைந்து நின்று முந்தை நாள் தொட்டு ; சில

முத்தாரக் கதைகள் சொல்லி ;

அயர்ச்சியிலே உமை ஆழ்த்தாமல்

அமைத்துச் செல்கின்றேன் என்னோடு பயணம் வாரீர்!

காலடி பெயர்ந்தவுடன் அடுத்த நொடியில்

காலப் பேழை கண்ணுக்குத் தெரியுமென்றும்

கவிதைச் சாவியிட்டுத் திறந்து பார்க்கலாமென்றும்

கனவில் மிதந்து கொண்டு என்னோடு வாராதீர் -

அள்ளிப் பருகி ஆட்டம் போடலாம் கங்கை காவிரி நீரையென்று

துள்ளிக் குதிக்காதீர் - பின்னர் துவண்டு போகாதீர்!

நாகரிகம் நடை பயிலத் தொடங்கிய தாழ்வாரம்

நமது குமரிக் கண்டமென்பதற்கு உண்டு பல ஆதாரம்!

அதனால்தான் இந்திய நாட்டு வரலாற்றைக் கூட

கங்கைக் கரையிலிருந்து எழுதாமல் ;

காவிரிக் கரையில் தொடங்குவதே பொருத்தமென

வின்சென்ட் ஸ்மித் சொன்னதை விளக்கிக் காட்டிய அண்ணா

“ஆற்றோரம்” என்ற தலைப்பில் ஆற்றிய உரையின்

அழகை மட்டும் சுவைத்தால் போதுமா ? அந்தச்

சூடும் சொரணையும் அகலாதிருக்கத் தமிழனுக்குச்

சுயமரியாதை உணர்வு தலை தூக்கிட வேண்டாமா ?

காட்டுமிராண்டியாக மனிதன் வாழ்ந்தது உண்டு -

காட்டுவது தவறென்று தெரியாமல் முழு உடலைக் காட்டியே

ஆண் பெண் இருபாலார் வாழ்ந்த கற்காலம் இருந்ததும் உண்டு -

அபிநய மூலமே அவரவர் எண்ணம் அறிவித்ததும் கண்டு -

ஆதி மனிதனின் ஆரம்ப மொழி நாடக மொழி யென்றும்

அடுத்த கட்டம் அவன் இசை மொழி பேசத்

தொடங்கினானென்றும்

இயல் என்பது இவற்றுக்கு அடுத்ததே யென்றும்

இன்றைக்கு இயல் இசை நாடகமெனப் பட்டியலிட்டாலும் ;

அன்றைக்கு நாடகமே முதலிடம் பெற்று எண்ணத்தை வெளியிட்டு

என்றைக்கும் இசைக்கு இரண்டாம் இடமேயென வரிசை பெற்று

இயல் என்பது முந்திக் கொண்டு முதலிடம் பெற்றதே மொழி

வரலாறாகும்!

இதில் கூத்து மொழி மட்டுமே இருந்த காலமாம் -

இருண்டகாலமாய்த் திகழ்ந்த ;

கடந்த காலமாம் கற்காலத்து

மாந்தர் நிலை மறைக்காமல் தொடர்ந்து

‘காந்தக் கல்’ கதையொன்று சொல்லுகின்றேன்.

“மாந்தக் குரங்கு

குரங்கு மாந்தன் என

மாறி வரும் பரிணாம வளர்ச்சி வழியில்

மகிழ்ச்சியுடன் வரவேற்கும் மாறுதலாய்

நிமிர்ந்து நடந்த குரங்கு மனிதன்

நியாண்டர்தால் மாந்தன் என

நீண்ட வரலாற்றில் நெடிய தொலைவு

தாண்டி வந்தவனைத் தரம் பிரித்துக்

கற்கால மனிதன், பொற்கால மனிதன்,

செம்புக்கால, வெண்கலக் கால மனிதன் - என

இனம் வகுத்துச் சீர்படுத்தி

இரும்புக் கால மனிதன் வரை

இட்டுக் கட்டி எழுதலாம் பல கதைகள்!

இருப்பதை வைத்துத் தான்,

மறைப்பதை முடிந்த வரை மறைத்து நான் -

மன்றத்தில் ஆட வந்துள்ளேன் ; பேனா நாத்தனம்”

பேசிக் கொண்டே இவ்வாறு பீடு நடைபோட்டுப்

பெருமிதம் பொங்கிடப் பேனாவின் மூடி திறந்தார்.

சொக்க வைக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரர்

சொன்மழை பொழிகின்றார் நனையுங்கள்!

காலம் கி.மு. ஆறாயிரம் என்று கணக்கிட்டுக் கொண்டு - அன்று,

ஞாலம் பெற்றிருந்த நாகரிக ஞானம் கருதிப் பார்ப்போம்!

“வால்கா” எனும் வரலாற்றுப் பின்னணியின் முதல் கதையில்

வாய் திறந்து பேசுகின்ற பாத்திரங்கள் ; என் கதையினில்

பேசமாட்டார் -

காரணம் ; கற்காலத்து மனிதர்கள் பேச்சாற்றல் பெறவில்லை

என்பதுதான்!

காலம் பல கடந்தால்தான் கடுகளவுப் பேச்சுப் பின்னர் கடல்

அளவுமுழங்கிடுவர்!

இதயங் கவர் எழுத்தாளர் இராகுலர் கண்ட

உதய சூரியனைத்தான் நானும் கண்டேன்

நான் பெறும் இன்பம் என் நண்பனும் பெற்றிட

நடந்திடுக நண்பா என்னோ டென்றேன்.

இருவருமே இணைந்து சென்றோம் ;

எதிர்வரும் ஒரு பெண்ணைக் கண்டோம்.

புதிர் ஒன்றும் நான் போடவில்லை ;

புடவையேதும் அவள் உடலில் இல்லை.

புலித் தோலோ, நரித்தோலோ கூட - அவள்

பொன் மேனி மறைக்கவில்லை.

கிளி மூக்கு அவளுக்கு ;

கிளி நோக்கு எங்களுக்கு!

உடையேதும் அணியாத தேன் ?

தடையேதும் விதித்ததோ இடை ?

முதல் பதிப்பு: ஜூன் 2006 — தமிழ்க்கனி பதிப்பகம் / பூம்புகார் பதிப்பகம், சென்னை