காலப் பேழையும் கவிதைச் சாவியும்
கவிதை 1 · 1 / 58
வெளி! வெளி! வெளி!
யாரும் பார்க்காமல் -
பார்க்க முடியாமல் ;
பார்த்திட யாருமே இல்லாமல்
பரவிக் கிடக்கும் வெளி!
ஒளி வந்தது முதலில் -
எந்தத் திசையில் ?
தெரியாது ; தெரியவே தெரியாது.
வந்த திசைக்குத்தான் வழங்கினோம் பெயரை!
வணங்குகிறோம் திசையை!
வெளியையும் கண்டதில்லை
ஒளியையும் பார்த்ததில்லை
நாமே இல்லாத போது
நமக்கேது பார்க்கும் சக்தி ?
பாழ் வெளியில் பற்பல ஒலிகள் !
பற்பல நேரங்களில்!
யாரும் கேட்காமல் ;
கேட்க முடியாமல்
கேட்க யாருமே இல்லாமல்!
பல கோடி இடிகள்
ஒரு கோடியில் இடித்திட
சிவப்புக் கோள்
நெருப்புப் பந்துகள்
சீறிப் பாய்ந்து
சிதறிப் பறந்தன.
ஒன்பது பத்து கோள் இருக்குமென்பார்
ஒன்றிரண்டு கூடவும் இருக்கலாம்
உலகம், அவற்றில் ஒன்றென உறுதியானது ;
கலகமும் பிறகே ஆரம்பமானது!
இது எதுவுமே அப்போது தெரியாது ;
எத்தனையோ கோடி ஆண்டு கழித்தே ;
தண்ணீர் கேட்டது தாகமெடுத்த உலகம்!
கண்ணீர் கொட்டியது ‘இல்லை’ என இயற்கை
மழை அதுவென பெயர் மாற்றிச் சொல்லி
மன ஆறுதல் பெற்றது பூமி!
உடற் கொதிப்பை ஆற்றிக் கொண்டு
கடற் பரப்பாய் மழை நீரும் தேக்கியது.
நீர், நிலம், காற்று, விண்வெளி
நெருப்பு - ஐம்பெரும் பூதங்களிடையே ;
நித்தமும் பகையாம் ; நிலையான உறவாம்.
முத்தமிடாமலே உயிரினம் புதுப் புது வரவாம்
அதிலும் மாறுதல் அவற்றுள் மாறுதல்
புதிதாய்க் கண்டு புணர்வும் கொண்டு
புழு, பூச்சி, புள்ளினப் பெருக்கம்
பொல்லா விலங்குக் கூட்டம் -
பொறுமை நிறை வீட்டுப் பிராணிகள் கூட்டம்
பொலிவு மிகும் பரிணாம வளர்ச்சியில் நாட்டம்.
குரங்கிலிருந்து மெதுவா மெதுவா குதித்த மனிதர் நாம் -
அரங்கில் நின்று கொள்கைக் குரல் கொடுத்திடுவோம் ;
“உடைமை பொது - உரிமை பொது ;
உலகம் தனியார் சொத்து எனல் தீது!”
வாழும் இந்த உலகின் வயது
அய்நூறு கோடி ஆண்டுகளாம்
நாகரிக வளர்ச்சி அடிப்படையிலும்
நானில உயிர் இனப் படிமுறைக் கணக்கிலும்
அய்ந்து லட்சம் ஆண்டு முதல்
அதனையொட்டிப் பத்தாயிரம் ஆண்டு வரை
கி.மு. காலம் எனப் பிரித்துப் பார்த்து ;
கிழப் புலிகள் நம் முன்னோர்கள்
இதனைத் தான் இலெமூரியா காலமென்றார்...
எஞ்சிய காலந்தான் குமரிக் கண்டம்,
தோற்றுவித்த நாகரிகத்துடன்
சிந்துப் பெருவெளியில் மக்கள்
ஏற்றிருந்த சிறப்புமிகு நாகரிகக் காலமாகும்.
மாற்றுக் கருத்தேதும் இல்லாத காரணத்தால் - பத்தரை
மாற்றுக் கருத்து இதுதான் என
மனத்தில் பதித்துக் கொண்டால் ;
எண்பது கோடி ஆண்டுக்கு முன்பு
இவ்வுலகில் உயிர் தோன்றியதையும்
நாற்பது லட்சம் ஆண்டின் முன்னே
நடந்தான் தரையில் நம் குரங்கு மனிதன் என்பதையும்
வரைந்து காட்டும் வரலாற்றுப் பேரறிஞர் குறிப்புகளை
வரிக்கு வரி ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.
அய்ந்து லட்சம் ஆண்டின் முன்னே
அவதரித்த காலமே முதற் கற்காலம்!
அய்ம்பதினாயிரம் ஆண்டுக்கு முன்பே
அழகிய ; குமரி கண்ட நாகரிகம் ;
அதுதான் குமரிக் கண்ட நாகரிகம்!
அரும்பியது அங்கே - எனினும்
ஐயாயிரம் ஆண்டுக்கு முன்பு வரை அது ;
சிரித்துச் செழித்திருந்து சிந்து வெளியில்!
இலெமூரியா கண்டமென
இனிய நம் குமரிக் கண்டத்துக்கு ;
இன்னொரு பெயர் வாய்த்த காரணம் என்னே ?
இரவில் இரை தேடக் கிளம்பும் இலெமூர் குரங்கினம் ;
இக்கண்டத்தில் எங்கும் நிறைந்திருந்த காட்சி கண்டு
இரவில் திரியும் பேய் என்பதற்கு இலத்தின் மொழியில்
‘இலெமூர்’ என்றும் பெயர் இருந்ததாலே
இப்பெயராலே ‘கிளேட்டர்’ என்பவர் கண்டலாய் அழைத்தார்.
ஒருவேளை உருமாறிச் சீறியும் அளவுக்குப்
பெருங்குமரிக் கண்டத்தைப் பேயாட்டம் நடத்திக் குறுக்கி
நிலம் புடை பெயர்த்ததாலே நீலியே இனி உனக்கு
இலெமூரியா எனும் பெயரே ஏகப் பொருத்தமென
இட்டன்றோ வரலாற்றுப் பேராசிரியப் பெருமக்கள் ;
எனவோர் ஐயப்பாடும் எனக்கு உண்டு என்பேன்!
இவற்றையெல்லாம் இன உணர்வுப் பாவாணர்
தேவநேயர் தெளிந்துரைத்த வரலாற்று வழி நின்று
இனிய நண்பர் பன்மொழி அறிஞர் இரா. மதிவாணர்
எழுபத்தி ஐந்தாம் ஆண்டு எனக்கென வழங்கிய
“இலெமூரியா முதல் அரப்பா வரை” என்ற
ஏற்றமிகு புத்தகத்தின் துணைக் கொண்டும் - இராகுல
சாங்கிருத்தியாயன் எழுத்துக்களின் பின்னணியுடனும் ;
சரித்திரப் புதையல்கள் பலவற்றை ஆய்ந்தறிந்தும் -
சாறு பிழிந்து தருகின்றேன் கவிதை நடைத் தொடர் காவியம்
மாறுபடும் கருத்துடையோர் மடல் மூலம் தெரிவித்திடின்
மகிழ்வேன் ; புகழ்வேன்!
மாற்றம் எதுவும் மறுநாள் விழித்ததும் வந்திடவில்லை
மாந்தக் குரங்கினம் எழுந்து நிற்கவே ;
மாமங்க காலம் ஒன்றிரண்டு பல கோடி வரவேண்டியிருந்தது.
மனிதனாய்க் குரங்கு மாறிட மாநாடு போட்டுத் தீர்மானம்
நிறைவேற்றினால் போதுமா ?
பரிணாம வளர்ச்சி என்பது பல்லாயிரம் ஆண்டுகள்
பட்டறையில் வைத்து உளியொன்றை உடை வளர்க்குவதன்றோ ?
இலெமூர் குரங்குகளுக்கு பற்கள் முப்பத்தி ஆறு
இதற்கடுத்துத் தோன்றிய குரங்கிற்கு முப்பத்தி நாலு -
மனிதக் கணக்கில் மாறி விட்ட பல் எண்ணிக்கையல்ல - அந்த
எண்ணிக்கை மாற்றத்துக்கே இடையில் எத்தனையோ
நூற்றாண்டு!
கற்கால மனிதர்க்கு பற்கள் முப்பத்தி இரண்டென முளைத்துளதும் ;
பிற்காலத்தில் இருபத்தி எட்டேதான் என மாறிவிடும் என்கிறார்.
வாலூன்றி நின்ற வானரப் பிராணி
காலூன்றி நிற்பதற்கும் நடப்பதற்கும்
ஒலிம்பிக் தட களத்தில் ஓடுகின்ற
மனிதப் பிராணி ஆவதற்கும்
இடையில் ஓடியது ; எத்தனை ஆயிரம் நூற்றாண்டு -
இதற்குப் பெயர்தானே படிமுறை வளர்ச்சி என்றும்,
பரிணாம வளர்ச்சி என்றும் பகிர்ந்திடுவர்.
