காலப் பேழையும் கவிதைச் சாவியும்
கவிதை 57 · 57 / 58
★ ★ ★
சின்ன மருது, பெரிய மருது சிவகெங்கைச் சீமை ஆண்டு ;
சிவந்த மண்ணின் வரலாற்றில் செங்குருதி மலராய்ப் பூத்த
சிங்க நெஞ்சு மாவீரர் இருவருக்கும் சிலைகள் இருக்கின்ற,
காளையார்கோயிலுக்குப் பழங்காலத் தமிழகத்தில் ;
‘கானப்பேர்’ என்ற பெயர் உண்டு ; இன்னும் அது,
மானப் போர் தொடுக்கின்ற மறவர் பூமி-அங்கு;
வேங்கை மார்பன் எனும் குறுநில வேள் வேந்தன்
ஓங்கு புகழ் கொண்ட அரண் ஒன்று அமைத்து-அதனை
வெற்றி கொள்ள யாரால் முடியுமென அறைகூவல்
விடுத்திருந்தான்.
அணுவைத் துளைத்து அதற்குள் நுழையவும் கூடும்-
ஆனால் அந்த
அரணுக்குள் நுழைதல் இயலாதென்று
அடலேறு வீரரெல்லாம் திகைத்து நின்றார்!
அப்போது பாண்டி நாட்டை ஆண்ட மன்னன் உக்கிரப் பெருவழுதி!
அரிமா தான் போர்க்களத்தில்!
ஆனைகளைத் தாக்கிப் பந்தாடும் பலமுடையான்!
அவன் வாளுக்குத் தப்பிப் பகைவர் உயிர் வாழ்தல் அரிதரிது!
ஆற்றல் பெருக்குடனே அறிவார்ந்த கலையுள்ளம் கொண்டதாலே ;
அகநானூறு பாடல்களைத் தொகுத்தளித்துப் பெருமை பெற்றான்.
அணையாப் சுடர் விளக்காம் திருக்குறளின் நல்லபாடும்
அரங்கேற்றுவிழா அவன் முன்னிலையில்தான் நடந்ததென்பார்!
ஒளவை ஒருநாள்; அவனும், சேரமான் மாரிவெண்கோவும் வீற்றிருந்த காட்சி
கண்டு,
அருந்தமிழ்க் கவியாரம் தொடுத்துச் சூட்டி,
அங்கு மூவேந்தர் ஒற்றுமைக்கு வாழ்த்துரைத்தாள்.
கயற்கொடி கொண்ட மன்னன் உக்கிரப் பெருவழுதி
கயல் விழி மங்கையொருத்திக்குக் காதலனாம் - அந்தக்
காதற்கிழத்தியுடன் ஒருநாள் கட்டிலறைக்
காவியம் படித்தபோது ; அவள்
கடைவிழியோரம் வினாக்குறியைத் தொங்கவிட்டு,
“கண்ணாளா! எனக்கோர் ஐயம் போக்கிடுக” என்றாள்.
“என்ன கண்ணே ; உனக்கு ஐயம் ? அதோ நீந்துகின்ற
அன்னத்தின் தூவி போல் மென்மை உனக்கு
எப்படி வந்ததென்று என்னைக் கேட்கின்றாயா ?-அல்லது
வண்டுகள் கொண்டு வந்து கொட்டாமலே உன் வாயிதழில்
மொண்டு குடிக்கின்றேனே தேன் ; அது
வந்தவிதம் தெரிந்து கொள்ள விரும்புகின்றாயா ?
செந்தாமரையைப் பார்த்துச் செய்யப்பட்டது உன் முகமா ? அல்லது
செவ்வமே! உன் முகம் பார்த்துத் தான் செந்தாமரை உருவானதோ
என்ற அய்யமா ?
செண்டு இரண்டும் தாங்காமல்-குளத்தில்
கெண்டைக்குப் போட்ட தூண்டிலில் நெளிகின்ற புழுப் போல
நெளியும் இடை நிலைக்குமா ? அல்லது
ஒளியுமிழும் உன் தந்தத் தொடைகள் அதனைத் தாக்கி
நிறுத்துமா ?
உன் மனத்தில்
விளைந்த ஐயமெல்லாம் இதுதானே ?” எனக் கேட்ட
வழுதியின்முன் ;
வளைந்த கதிர்போல தலை நாணிக் கொண்டு அவள் ;
“என் மீது கவிதையெழுதிப் பரிசு பெறக் கேள்வி எழுப்பவில்லை
நான்!
“எயில்” என்றால் இன்பத் தமிழில் பொருள் என்ன சொல்லுங்கள்”
என்றாள்!
“அட, மட மயிலே! இது தெரியாதா ? அயலார் படை தடுக்க ;
அரண் கட்டுகின்றோமே தலைநகரைச் சுற்றி -
அதற்குப் பெயர்தான் “எயில்” என்றான் மன்னன்!
“எனக்கும் தெரியும் அது; ஆனாலும் ஒன்று!
எவராலும் உடைக்க முடியாத “எயில்” ஒன்று இருக்கிறதாம் ;
அதனை
இவராலும் நெருங்கவொண்ணாது என ஒரு வேந்தன்,
இறுமாப்பு துள்ளப் பேசுவதை அறிவீரோ ?” எனக் கேட்டு
“இவராலும்” என்ற போது; வழுதியைச்
சுட்டிக்காட்டிக் கட்டிக் கொண்டாள்!
“காதுவழி எனக்கும் எட்டியது அச்செய்தி
கானப் பேர் எனும் நகரில் கட்டியதாம் அந்த அரண்!-நமது
அவைப் புலவர் அய்யூர் மூலங்கிழார் அது குறித்து
அரியதோர் வண்ணனையே செய்துள்ளார்!
அதை நான் உனக்குச் சொல்லுகின்றேன் கேள் ;
ஆண்டுகளின் வரிசையில் அதற்கு முதலிடமே பொருந்தும்!
நிலத்தின் ஆழத்தையும் கடந்த நெடியதோர் அகழியும்,
நீலவானை நிமிர்ந்து தொடுகின்ற நிலையில் உயர்மதிலும்,
அவ்வானில்
நிறைந்து கிடக்கும் விண்மீன்கள் போன்று
விரைந்து செயலாற்றும் ஏவறை உச்சியும்,
கதிரவனின் ஒளிபுகவும் இடமின்றி மரம் செறிந்த காவற்காடும்,
கணக்கிலாச் சிறுசிறு துணை அரண்களும் சூழ்ந்ததே
களிறுகள் ஆயிரம் முட்டினும் அசைந்திடாத கானப்பேர் எயில்!
அதனை நம் புலவர் ;
கவித் தமிழால் கூறக் கேட்டு நான் பல முறையும்
களிப்புற்றிருக்கின்றேன்” என்றான் மன்னன்!
முற்றுகையிட்டு எதிர்ப்பை மீறி அரணைச்
சுற்றியுள்ள அகழியில் இறங்கி விட்டால்
மதில் மேலிருந்து கவண் கற்கள் அம்பு
மழை பொழியும்-அதனையும் கடந்து விட்டால் ;
காய்ச்சிய எண்ணெய் ஈயக் குழம்பு
கடகடவெனக் கீழ் நோக்கி வரும்!
எல்லாவற்றையும் சமாளித்து அரண் உச்சி
ஏறும்போது ஏணிகளை நொறுக்கி விடுவர்.
எறிய பிறகும் உலோகப் பறவை இயந்திர அலகுகளால்
உச்சந்தலை குத்தப்படும்-
அவையனைத்துக்கும் தப்பித்தான்
அரணுக்கு அடுத்த பக்கம் கோட்டைக்குள் இறங்கவேண்டும்.
‘பாண்டியர்க்கு நெடுந்தூரம் இருக்கின்ற பகையெல்லாம்
தெரிகிறது ;
கூண்டிலிட்ட புலி போல எதிரிகளைக் கொண்டு வருகின்றீர் ;
ஆயினும்
பக்கத்தில் கானப்பேர் எனும் நகரில் அரண் அமைத்து
படை கொண்டு எவராலும் நெருங்க முடியாதென்று
உடைவாளை ஓங்கிக் கொண்டு
ஊர் அதிர ஒலிக்கின்றான், வேங்கை மார்பன்!
நமது வீரத்தை மறைமுகமாய்ப் பழித்த பின்னும்
நமக்கென்ன என்றிருத்தல் நாணத்தகும் செயலன்றோ ?
-என் இதய
ஆழத்தின் அடியிற் கிடந்த பல நாள்
அய்யத்தை இன்றுமுற்றுப் போட்டுவிட்டேன் ; மதங் கொண்ட
வேழத்தைக் கூட எதிர்த்து மத்தகத்தைப் பிளந்தெறியும்
மன்னருக்கு ;
வேங்கைமார்பன் கட்டியுள்ள மதில் சுவரென்ன ; விந்திய மலைத்
தொடரா ? அவன்
தோண்டியுள்ள அகழியோர் ஆழக் கடலாயினும் ; என்
பாண்டியர்க்குத் தாண்டும் தொலைவு தானே!
பின் எதற்காக
அறைகூவல் விடுகின்ற வேங்கை மார்பன்
ஆணவங் கண்டும் அடங்கிக் கிடக்க வேண்டும் ?
அரசர் இந்த அய்யத்தைப் போக்கிடுக- அதன் பிறகு
சாசனமிடலாம்” என ஊடினாள்!- பாண்டியனோ,
எட்டிச் செல்ல முயன்றவளைக்
கட்டியணைத்துக் கால்பின்னி நெய்தவாறு,
“காலை மலரட்டும் கானப் பேர் எயில் நோக்கிக்
காலாட் களிறு புரவியுடன் தேர்ப்படை புறப்படக்
கட்டளையிடுகிறேன் ; கவலையை விடு! இப்போது துடிக்கின்ற
கையினை எடு” என்றான்- எடுத்துவிட்டாள்!
கண்ணிமைக்கும் பொழுதுக்குள் ஊடல் மறந்து-
கதிர் விரியும் நேரம் வரை கூடல் தொடர்ந்தது!
மறுநாள்
வாக்குறுதி தந்தவாறு பாண்டிமாதேவியின்
