காலப் பேழையும் கவிதைச் சாவியும்
கவிதை 56 · 56 / 58
அடடாவோ! “நெடுநல்வாடை” ஒன்று போதாதா ?
★ ★ ★
(தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைச்
சிறப்பித்து சங்கப்புலவர் நக்கீரர் இயற்றிய “நெடுநல்வாடை”
எனும் இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு எளிய
நடையில் எழுதப்பட்டது, இது!)
பற்று கடந்தால்,
பற்றி எரியும் வெறியே!
கடல் கொண்ட முதல் தமிழ்ச் சங்கம் மதுரையில்
நடத்தியவர்கள் பாண்டிய மன்னர்களாம்
காய்ச்சின வழுதி தொடங்கி, கடுங்கோன் ஈறாக
ஆய்வுரையாளர் எண்பத்தொன்பதின்மர் என்பார்!
முதல் சங்கமும், சங்கமிருந்த தென் மதுரையும்
மூழ்கி விட்டக் காரணத்தால் இரண்டாம் சங்கமெனும்
இடைச் சங்கத்தை வெண்டேர்ச் செழியன் முதல்
முடத்திருமாறன் ஈறாக ஐம்பத்தொன்பதின்மர்
தொடங்கி நடத்தினர் ; கவாடபுரத்தில் ; தொடர் அதிர்ச்சியாக
கடற்கோள் ; கவாடபுரத்தையும் விழுங்கிவிடவே ; அப்போது
அந்தப் பெரும் அழிவிலிருந்து மீண்டும் பிறந்தது போல
பாண்டியன் முடத்திருமாறன் உயிர் பிழைத்தான்!
கடற்கோளின் கடுந்தாக்குதலில் காலிழந்து முடமான மன்னவனை
முடத்திருமாறன் என்றே சங்கத்துச் சான்றோர்களும்
ஆன்றோர்களும்
சரித்திரமும் கூட அழைக்கத் தொடங்கியது அன்போடு, மிகப்
பண்போடு!
நிலந்தரு பாண்டியனுக்கு நிலமும் கடலும் தந்த பரிசன்றோ
அந்தப் பட்டம்
சங்க காலப் பாண்டியருள் முடத்திருமாறனுக்கு அடுத்தவன்
பல வேள்விகளை நடத்திய முதுகுடுமிப் பெருவழுதியாவான்
“பல்யாகசாலை” எனும் அடைமொழி பெற்று, ஆரிய நாகரிகம்
பல நூற்றாண்டுகட்கு முன்பே படையெடுத்து விட்டமைக்கு
சான்றாம் அவன்!
முதுகுடுமி முடிந்து போட்டுக் கொண்டே யாகசாலைகளில்
அகவு மேதும், இராஜசூயம் வேள்விகளைச் செய்த மன்னனை
காரிகிழார்; நெட்டிமையார், நெடும் பல்லியத்தனார் - எனும்
கவிஞர் மூவர் வாழ்த்திப் பாடியுள்ளார் என்பது வரலாறு.
காரிகிழார்; தொண்டை நாட்டில் காரி எனும் ஊரினர் ;
இப்போது ‘இராமகிரி’ என அழைக்கப்படும் இடமாம்!
நெடிய இமை கொண்டதால் நெட்டிமையார் என்றழைக்கப்பட்ட
கவிஞரும்;
நெடும் பல்லியத்தனாரும் காரணப் பெயர்களே; கலை பல கற்று
இசை முழங்கும் வல்லவர் என்பதால் ; இவர் இப்பெயர்
பெற்றாராம் -
இவர்கள் அந்த முதுகுடுமிப் பெருவழுதியை நோக்கி,
“உன் புகழ் வடக்கே பனி மூடிய இமயமலை தாண்டியும்
தென் திசையில் குமரியாறு கடந்தும் -
கீழ்த் திசையில் சகரர் தோண்டிய சாகரம் மீறியும் -
மேல் திசையில் பழங்கடலுக்கு மேற்கிலும்; உன் ஆட்சி,
மேம்படுவதாக எனவும் வாழ்த்துகின்றனர் -
மேலும் அவர்கள் கடற் படை கொண்டவர்கள் என்றும்
போற்றுகின்றனர்”
அவைப் புலவர்கள் மொழிந்த வாழ்த்தினையும்
அவற்றில் பொதிந்திருந்த “நின் முடி நான்கு வேதங்கட்கும்
உரிய”
எனும் வார்த்தைகளையும் கண்டு
அய்யம்பெருமாள் கோனார் ;
“அவ்வரசர் காலத்தே வைதீகம் பரவி விட்டது என அறியப்படும்”
என்று
அறுதியிட்டுக் கூறியுள்ளார்!
முதுகுடுமிப் பெருவழுதி ஒரு போரினை முடித்து
வெற்றி கண்ட பிறகு ; எவ்வாறு வெறி கொண்டு
பகைவர் நாட்டைப் பாழ்படுத்துவான் என்பதை
‘நெட்டிமையார்’ பாடக் கேட்போம்.
“குடை நிழலில் குஞ்சரம் ஊர்ந்திடும் குடுமியே!
படை கொண்டு நீ பிறர் மண்ணைக் கவர்ந்த பின்னர்,
அம்மண்ணை அவரிடமிருந்து பறித்து, உன் நாட்டு
பாணர்கள் பொற்றாமரை சூடவும் - யானை கட்டி ஓட்டும்
தேர்களைச் செலுத்தவும்
பயன்படுத்துவது நியாயமாகுமா ?”
எனக் கேட்புப் பாடலைத் தொடருகிறார்!
“தேர்கள் ஓடியதால் குழிகள் தோன்றிய தெருவில்
ஏர் பூட்டி உழுவதற்குக் கழுதைகளைக் கட்டி ;
எதிரிகளின் எழில்மிகு மணி மாடங்களை
எதற்கும் பயன்படாது பாழ்படுத்தி விட்டாய்!
புள்ளினங்கள் ஒலிக்கும் அவர்தம் விளை நிலங்களில்
புரவிகளின் குளம்படிகள் ஒலித்திடச் செய்து விட்டாய்!
பருத்த பாதமும், பயங்கரத் தந்தமும் படைத்த
பகைவர்தம் யானைகளை களம் விட்டு குளம் வீழச் செய்து
விட்டாய்!”
பாடிய புலவர்களும்,
பாட்டப்பட்ட மன்னர்களும்
சைவ சமயப் பற்றுடையார் என ஒரு புறம் ;
வரலாற்றுக் குறிப்பும் வரைந்து விட்டு -
பகைவர்களை அவர்கள் பழி வாங்க கையாண்ட
பல்வேறு கொடுமைகளையும் எண்ணிப்பார்த்தால் ;
மண் பற்றையும் மதப் பற்றையும் கடந்து
மண் வெறியும், மத வெறியும் கொண்டோர் ;
மத நல்லிணக்கம் விரும்பாத
மனித நேயமற்றோரே ஆவர் என்பது,
மலையின் மேவிட்ட விளக்காக
ஒளிர்வது உணரலாம்!
★ ★ ★
மற்றுமொரு பாண்டியன் மதிவாணன் எனும் பெயரில்
பற்று மிகக் கொண்டிருந்தான் நாடகத் தமிழ் மீது என்பது ;
அடியார்க்கு நல்லாரின் சிலப்பதிகார உரைப் பாயிரம்
வாயிலாக அறியும் வாய்ப்பு கிடைத்துள்ளது!
மதிவாணன் ; பாண்டிய மன்னரில் ஒருவன்; அவன்
கடைச் சங்கம் நிறுவியோர் வரிசையில் உள்ளவன்.
தமிழ்ப் புவி மெச்சக் கவியரங்கம் ஏறியுள்ளான் -
அமிழ்தத் தமிழ் வெண்பா, நூற்பாக்களினால்
மதிவாணனின் நாடகத் தமிழ் பொலிவுற்றுப் புகழ் பெற்றதாம்!
பல்லவமகேந்திரன் வடமொழியில் நாடகம் தீட்டினான் ; அதற்கும்
பழங்காலத்திலேயே பாண்டியன் மதிவாணன்
அருந்தமிழ் நூல் ஒன்று; நாடகத் தமிழ் என எழுதி
தமிழன்னைக்குக் கணையாழியைச் சூட்டினான்.
அடியார்க்கு நல்லார் காலம் வரை அக்கணையாழி - தமிழ்
அன்னையின் விரலை விட்டுக் கழலவுமில்லை ;
அதனை யாரும் கழற்றவும் இல்லை.
ஆம்; அக்காலம் வரையில் அந்த நாடகத் தமிழ்
வழக்கில் இருந்ததாக இலக்கிய வரலாறு கூறும்!
உவமை அழகுக்கு
உரிய பரிசு என்னவாம்!
போர் புரியப் படைகளுடன் புறப்படும் வேந்தன்
பகைவனது தலைநகரக் கோட்டை அரணை,
முற்றுகையிடுவதற்கு “உழிஞை” என்பெயராம்-அரணைப்
பற்றி விடாமல் எதிர்த்து நின்று போரிடுதல் “நொச்சி”யாம்.
எதிரும் பகிருமாக இருபடையும் போரிடும் செயலை “தும்பை”
என்பர்.
எவர் வெற்றி பெறினும் அதனை ‘வாகை’ எனக் கூறிடுவர்!
மூவேந்தர் காலத்துப் போர்முறையில் - ஒவ்வொரு கட்டத்துக்கும்
பாவேந்தர்கள் இட்டழைத்த பெயர் இவைதான் என்போம்!
பாண்டியன் உக்கிரப் பெருவழுதி பெயரும் ஒரு மன்னன் ;
‘கானப்பேர் கோயில்’ கோட்டைக்கு வானுயருவிய படை
வீரருடன்
முற்றுகைப் போரிடச் சென்ற நிகழ்ச்சியையும்-அதற்கு
முற்றுப் புள்ளி வைக்கப்பட்டதெவ்வாறு என்ற நிலையினையும்
பாண்டியரின் இந்த வரலாற்றுப் பகுதி விளக்குதல் காண்போம் ;
பகைவரின் வியப்பா ? பாவலர் வியப்பா ? படித்தபின் உணர்வோம்!
