உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

காலப் பேழையும் கவிதைச் சாவியும்

கவிதை 55 · 55 / 58

வாள்வீரர் முத்துவேளிர்க்குரிய

முடியினைப் பறித்து – அவர்தம்

முத்துக் கூற்றமும் கவர்ந்திட்டான்!

“சேரமான் யானைக்கட்சேய் இரும்பொறை” என்னும்

வீரமா மன்னன் படையழித்து, அவனைச்

சிறைதனில் அடைத்துப் போட்டு விட்டான்!

இவ்வாறு

மலை மலையாய் வெற்றி மாலை குவித்திடவே

அலை அலையாய்ப் படைகொண்டு ஆர்ப்பரித்துக் கிளம்பியதால்

குலை குலையாய்ப் பழமிருந்தும் உண்ண முடியாமல்

நிலைகுலைந்து துடிக்கின்ற பறவையைப் போல்

பாண்டிமாதேவியவள் பதைத்திட்டாள்....

பகல் இரவுப் பொழுதுகளை நகர்த்த முடியாமல் கண்ணீர்

வடித்திட்டாள்!

வாடையெனில் குளிர் காற்று தாக்குமன்றோ!

ஆடை போர்த்தாவிடினும் ஆண்மகனின் மேனி போர்த்தி

ஆரணங்கும்; ஆரணங்கின் மேனி போர்த்தி

ஆடவனும்; அக்குளிர் காற்றை வெல்வாரன்றோ!

இங்கென்ன நிலையென்றால் பாண்டி மன்னன்

பொங்குற்றே சென்றுவிட்டான் போர்முனைக்கு!

வீரம் விளைக்கின்ற வெம்மையிலே வாடைக் காற்றின்

விண்மிரட்டல் பலிக்கவில்லை வேந்தனிடம்!

ஆனால் அரசியின் நிலையோ, அந்தோ! பரிதாபம்!

பாட்டுப் புலவர் நக்கீரனார் பாடுகின்றார் ;

வாடைக் காற்றின் குளிர் தாங்க மாட்டாமல்

வீட்டுக் கோழிகள் படும் பாட்டைப் பாரீர் என்று!

பெட்டையும் சேவலும் பெருவெளியில் திரிந்து

இட்டமுடன் இரைதேடித் தின்று மகிழ்ந்து

இன்பமாய்க் கழித்த நாளெல்லாம் சென்று ; இன்று

இரவு பகலெது எனத் தெரியாது திகைத்து

அடைத்திருக்கும் பலகைக் கூண்டுகளுக்குள்ளே

அடுத்தடுத்துக் கடுக்கும் கால்களை மாறி மாறி வைக்குமாம்!

இவ்வண்ணம்

கொல்லுகின்ற வாடையிலே – நெஞ்சில்

துள்ளுகின்ற காதலுடன்

புள்ளிமயில் புரளுகின்றாள் ; படுக்கையிலே! – யாரும்

வெல்லவொண்ணா தமிழ் எடுத்து – “நெடு

நல்வாடை” தீட்டுகிறார் நக்கீரனார்!

கொடுமுடியன்ன உயர்ந்த கோபுரம் – அதில்

கொடிகளோ வானவில்லென வண்ணங் காட்டும்!

திண்ணிய நீலமணி நிறம்பார்ந்த தூண்களிலே

வெள்ளியைத்தான் வெண்சாந்தாய்ப் பூசின்றோ ?

செம்பினால் படைத்திட்ட மதில் சுவரோ எனும்படி

செப்பரிய வலிவுடனே அமைத்திட்ட

செழியனது அரண்மனையைச்

செந்தமிழால் சித்தரிக்கும் நக்கீரர் ;

சிந்தையெல்லாம் அவன் நினைவால் துவளுகின்ற

செம்பருத்தி இதழ்ப் பெண்ணாள் பாண்டிராணி ;

படுத்திருக்கும் மஞ்சத்தைப்

பாட்டால் காட்டுகின்றார் பார்த்திடுவீர்!

முரசுபோல் கால்கள் கொண்ட

முரட்டுப் போர் யானையொன்று

முற்றாக நாற்பது வயது சென்று

போர்த்தொழில் புரியுங்கால் இறந்துவிட – அதன்

கூர்த் தந்தம் இரண்டெடுத்து கோலச்

சீர் தந்து அழகூட்டி அமைத்த கட்டில் – அதில்,

சூல் கொண்ட மகளிர் கொங்கை

பால் கொண்டு வீங்கியது போல்

நாற்புறமும் திரண்டுருண்ட

நல்லழகுக் கலசங்களாம்!

முத்து மணிமாலைத் தொங்கல்களாம்!

முல்லை மல்லிகை மலர் ஓவியமாம்!

அரிமா வேட்டையினைச் சித்தரிக்கும்

அரிய கலை நுட்பம் திகழ்கின்ற போர்வையுடன்,

அன்னத்தின் இறகெடுத்து செய்திட்ட

அணை, தலையணை, சாயணை அனைத்தும் கொண்ட

பஞ்சணை! ஆனால்

“அணை” என்று சொல்லத்தான் அவனில்லை ; அதனாலே

அணையுடைத்துப் பெருகிற்று அரசியாரின் துன்ப வெள்ளம்!

அடி வருடினார் செவிலியர்கள்

“அம்மையே உறங்குக” எனக் கூறி!

“அடி போடி வேலையில்லை உங்களுக்கு” – என

அலறினாள் அரசியவள் மிகச் சீறி!

அங்கிருந்த வானவெளிச் சித்திரத்தில்

அருகருகே சந்திரனும் ரோகிணியும்

அகலாமல் இருத்தல் கண்டு

அப்படி நான் நற்பேறு பெற்றேனில்லை

இப்படி ஏன் நலிகின்றேன் வீணேயென்று ;

நீர் இமைகளிலே எட்டிப் பார்க்கும்

நீர்த்துளியை விரல் கொண்டே அவள்

வழிந்தெறிந்தாள் எனினும்; கவலைதனை

அழித்தெழுத முடியாமல் அல்லற்பட்டாள்!

இவ்விதம்,

மதுரையின் மாளிகையில் அரசியார்

மது சுமந்து வண்டுக்கெனக் காத்திருக்கும்

மலர்க்கொடியாய்த் தவிக்கும்போது ;

நெடுஞ்செழிய பாண்டியனின் நிலை என்ன ?

“நெடுநல் வாடை”யிலே காண வாரீர்!

காதலொன்றும் பாண்டியனின்

கடமை உணர்வுக்குத் தடையாமில்லை!

கோப்பெருந்தேவியின் நினைவாலே – அவன்

கொண்ட குறிக்கோள் தவறவில்லை!

வாடைக்காற்று அவன் பாசறைக்கும் வந்ததுண்டு! அதனாலே

அவன்;

வாளேந்தும் போர் முகத்தை மறந்துவிட்டு,

வளையலேந்தும் கரம் நாடி ஓடவில்லை!

இங்கு;

பாண்டியன் நள்ளிரவில் புறப்பட்டான் ; எதற்காக ?

பஞ்சணையில் பரதவிக்கும் பத்தினியைப் பார்ப்பதற்கா ? இல்லை!

இல்லை!

குன்றும் நடுங்குகின்ற கூதிர்காலத்தில்

வடக்கிருந்து வீசுகின்ற குளிர் காற்றால்

தெற்கு நோக்கிச் சுடர் சாயும் தீவட்டி எனினும்

வடக்கிலோர் பாசறையில் இருக்கும் மன்னன்

வாஞ்சைமிகு பாண்டிமாதேவிக்காகத் தெற்குத் திசை

திரும்பவில்லை!

வாடிக்கைப் பணியினை ஆற்றுதற்கு

வாளேந்தும் மறவர் சுடரேந்தி சூழ்ந்து வர

இடக்கோளில் இருந்து நழுவி விழும் மேலாடைதனை

இடப்புறக் கையால் தூக்கி அணைத்தவாறு,

வலியதோர் வாள்வீரன் தோளில் – தன்

வலக்கையினைத் தோழமையுடன் போட்டுக் கொண்டு,

மழைத்துளிகள் வீழ்கின்ற நள்ளிரவில்

மாவீரர் பலர்; காயமுற்றுப் படுத்திருக்கும்

பகுதியெல்லாம் சென்று பார்த்தான் - அவரைப்

பரிவுடனே நலம் கேட்டு நன்றி கூறி அரவணைத்தான்!

பகல் போரில் பகைவர்களின் படையழித்து விரட்டும்போது

புழுதுபட்ட தாள், கை, உடல்களுடன் படுகின்ற துயரமெல்லாம்

மறந்தனவாம்; தம் தலைவன் பணிப்பார்வை பட்டதாலே!

காதலனைத் தேடிப் பேரரசி கலங்குகின்றாள் ; அவனோ,

கடமையினை ஆற்றுதற்குக்

கால்கடுக்கச் சுற்றுகின்றான் ; பாசறையை!

அகமென்றும் புறமென்றும் வாழ்க்கையினை

அழகாக வகுத்துக் கொண்டு

அன்று தொட்டு வாழ்ந்து வரும் இனம்

அருமைமிகு நம் தமிழ் இனம்தான் என்பதற்கு

ஆதாரம் வேண்டுமெனில்

முதல் பதிப்பு: ஜூன் 2006 — தமிழ்க்கனி பதிப்பகம் / பூம்புகார் பதிப்பகம், சென்னை