உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

காலப் பேழையும் கவிதைச் சாவியும்

கவிதை 54 · 54 / 58

வீர மைந்தரைப் பெற்றதற்குப் பெருமையுற்றனர்!

நெடுஞ்செழிய பாண்டியனின் அவைக்களத்துப்

பெரும்புலவர் மாங்குடி மருதனார் என்பவரோ ;

கடும் போரிட்டுக் களவாகை சூடி வரும்

காவலனாம் பாண்டியனின் திறம் வியந்து

களிப்புற்றார் எனினும் – அவன்

களம் காணும் ஆசையிலே சூழ்வது கண்டு

சலிப்புற்றார்!

மாவீரன் பாண்டியனின்

போர்த்தாகம் குறைக்க

“மதுரைக் காஞ்சி” பெயரும் நூல் செய்தார் – அந்த

மாங்குடி மருதனார் பாடிய புறப்பாட்டில் ;

“கடலைக் கிழித்துச் செல்லும் மரக்கலம் போல்

களத்தில் ஊடுருவும் யானைப்படையின் பின்னே

வேல்கொண்ட வீரர் அறுத்தெடுத்த

கோள் கொண்ட மன்னர்தம் தலையை அடுப்பாக்கி

குருதிநீர் பொங்குகின்ற உலையில் – போரில்

கொலையுண்டோர் தசையினைக் கொதிக்க வைத்து

தோள்களாம் துடுப்பு கொண்டு துழாவிய உணவால் – கள

வேள்வி நடத்துகின்ற பாண்டியனே!” என்று,

பலபடப் பாராட்டிவிட்டு – அவனது

பகைவரையும் புகழ்கின்றார்!

மாற்றார் எனும் பெயர் பெற்று – உன்னிடம்

தோற்றார் எனினும்,

விழுப்புண் பெற்று வீழ்ந்ததாலே ;

வீரர் உலகில் என்றும் அவர் வாழ்கின்றாரே! என

எதிர்த்தோர்க்கும் ஏற்றம் தந்து

உதிர்த்தார் கவி முத்துக்களை!

“வேந்தன் இனிப் போர் விடுத்து

வாள்வீரர் வாழ்த்த வாழ்க!” என்றார்!

“வள்ளலாய் நின்று இல்லாதார்க்கு வாழ்வளித்திடுக!” என்றார்!

“வளையல் அணி மகளிர் தரும் தேறல் உண்டு,

வாழ்வெலாம் இன்பமும் அமைதியும் கொண்டு,

வையம் போற்றிடத் திகழ்க!” என்றார்!

“ஒழுக்கம் காப்பவரே உயர்ந்து வாழ்வோர் என்றும், அஃதிலார் ;

உலகில் வாழ்வோர் என்படார் – என்றும்

அறிக!” என்றார்!

தமிழ்ப் புலவர் கூட்டம் புகழ,

தமிழ் எழுத்து ஒவ்வொன்றும் போற்ற,

தலையாலங்கானத்தான் வாழ்ந்தான்!

மருதனார் இயற்றித் தந்த

“மதுரைக்காஞ்சி” பெற்று – அந்த

மாமன்னன் வாழ்ந்தான்!

“நெடுநல்வாடை” தனை நக்கீரர் பாடி வழங்க

நெடுஞ்செழிய இளவல் நெடிதுநாள் வாழ்ந்து

நீள்புகழைத் தமிழ் நிலத்தில் நாட்டானே!

★ ★ ★

குறிப்பு:

அகநானூறு – பாடல் 36 – நக்கீரர் பாடியது.

புறநானூறு – பாடல் 25 – கல்லாடனார் பாடியது.

புறநானூறு – பாடல் 76 – இடைக்குன்றார்க் கிழார் பாடியது.

புறநானூறு – பாடல் 19 – குடபுலவியனார் பாடியது.

புறநானூறு – பாடல்கள் 24, 26 – மாங்குடி மருதனார் பாடியது.

(இப்புலவர் பெருமக்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற

பாண்டியன்

நெடுஞ்செழியனைக் குறித்து இயற்றிய பாடல்கள் அடங்கியுள்ள

கருத்துத் தொகுப்பே; பாண்டியர் வரலாற்றுத் தொகுப்பில் ஒரு

பகுதியாகும்.)

நெடுஞ்செழியனும்

நெடுநல்வாடையும்!

“தமிழ்ச் சங்கங்கள் மூன்று கண்டு,

தமிழுக்குப் புரிந்தனர் நல்ல தொண்டு – எனப்

பாராட்டப் பெற்ற பாண்டியர் வரலாறு பற்றி

பல ஏடுகள் படிக்கத் துடித்த போது

‘பாண்டிய நாட்டுத் தலைநகரம் எது?’ என்ற அய்யத்தைப்

போக்கியவர்

அறிஞர் “அய்யம்பெருமாள்” கோனார் என்பேன்.

அவர் எழுதிய நூலில்; முதற் சங்க காலத்தில்

இன்றைய மதுரைக்குத் தெற்கே

பல காதம் தொலைவில் பழங்காலத் தென்மதுரை

பாண்டிய நாட்டின் தலைநகராய் விளங்கியதாம்.

முதற் கடற்கோளால் தென்மதுரை அழிந்த பின்னர் ;

முகிழ்த்த தலைநகரம் கவாடபுரமாம் –

அங்குதான் இடைச் சங்கம் இருந்ததெனவும் ;

அதுவும் கடற்கோளால் அழிந்திடவே – அதன் பின்னர்

அதில் மூழ்கி மடியாதிருந்த மன்னன் முடத்திருமாறன்

அமைத்த தலைநகரே இன்றுள்ள மதுரை மாநகரம் ஆகும்!

அத்தலைநகரில் அரியணை ஏறி; பாண்டிய வேந்தர்கள்

ஆட்சி நடத்திய காட்சியையும் மாட்சியையும்; காண்போம்

இப்போது!

★ ★ ★

அகமென்றும் புறமென்றும் வாழ்க்கையினை

அழகாக வகுத்துக் கொண்டு

அன்றுதொட்டு வாழ்ந்து வருகின்ற இனம்

அருமைமிகு நம் தமிழ் இனம்தான் என்று

ஆயிரங்காலத்துப் பயிராக நமக்கு வாய்த்த

ஆன்றோர் செய் இலக்கியங்கள் சான்று கூறும்!

★ ★ ★

அதற்குப் பற்பல எடுத்துக்காட்டுகள் உண்டெனினும்,

ஆரம் போல் கோத்தளித்தார் நக்கீரனார் ;

பத்துப் பாட்டுள் – ஒரு

முத்துப் பாட்டாய்த் திகழ்கின்ற

“நெடுநல்வாடை” எனும் தமிழ் அமுதம்! அது ;

நெடுஞ்செழிய பாண்டியனின் வீரம்சொல்லி,

நீண்ட நாள் அவன் பிரிவால் ஏங்குகின்ற

நேரிழையாள் கோப்பெருந்தேவி மனம் ;

நெருப்பாகச் சுடுகின்ற நிகழ்வைக் கூறி,

அகம், புறம் எனும் வாழ்க்கை

அந்நாள் தமிழகத்தில்

இகம், பரம் என்ற கூற்றுக்கே

எதிரிடையாய் இருந்த நிலை

எடுத்தியம்பும் நூலாகும்!

★ ★ ★

தலையாலங்கானத்துப் போர்க்களத்தில்

தனிமையில் ஓர் இளைஞன் சிக்கினான் என்று

தவறாகக் கணக்கிட்ட ஏழு மன்னர்

தடந்தோள் பழுதிபடத் தோற்றே போனார்!

அதன் பின்னர் நெடுஞ்செழியன்

அன்றிலென வாழ்வோமென்று

அழகு மணிப்புறாவொன்றை

அரசியென ஏற்றுக்கொண்டான்....

இளவயதில் போர்முனையில்

எழுவர் படை வீசிய வேல்வாள் பட்ட

விழுப்புண்கள் ஆறிப்போய்

வடுக்களாய் மாறிப்போயிருப்பினும் – அவை;

பாண்டியன் மார்பகத்தில் – தங்கப்

பதக்கம் போல் மின்னுவதாய்

எண்ணிக்கொண்டு எழிலரசி ;

எண்ணாமலே கொடுத்திட்டாள் முத்தம் ; நித்தம்!

மனமுடித்து மஞ்சத்தில்

மனங்கவர் அஞ்சுகத்தை

கண்ணோரம் பிரியாமல் இரவெல்லாம்

கட்டிய கட்டுக் குலையாமல் இருப்பதற்கு

காலம் இடம் தரவில்லை.... போர்க்

களங்களின் அழைப்போ பெரும் தொல்லை!

தலையாலங்கானப் போருக்குப் பின்னும் – அவன்

தலைமையேற்று வென்றிட்டான் ;

“வேள் எவ்வி”யெனும் மன்னவனின் மிழலைக் கோட்டம்!

முதல் பதிப்பு: ஜூன் 2006 — தமிழ்க்கனி பதிப்பகம் / பூம்புகார் பதிப்பகம், சென்னை