உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

காலப் பேழையும் கவிதைச் சாவியும்

கவிதை 53 · 53 / 58

முடத்திருமாறனாம் நிலந்தரு திருவின் பாண்டியனுக்குக்

கிடைத்தது ; என்பதை உணர முடிகிறது! உவகை கொள்ளவும்

முடிகிறது.

★ ★ ★

குறிப்பு:

இலங்கை பெற்ற வரலாறு

“இராஜாவளி” நூல்

கி.மு. 265க்கும் 161க்கும்

இடையே இலங்கையை அடுத்துள்ள

பகுதியில் கடற்கோள் நிகழ்ந்ததாகக் கூறுகிறது.

மற்றொரு வரலாறு ;

“மகாவம்சம்” 60 ஆண்டுகள் வித்தியாசம் என்கிறது.

எனவே இடைச் சங்க காலத்து இரண்டாம்

கடற்கோள் ; கி.மு. 150ல் நிகழ்ந்ததாக

ஆய்வாளர்களால் கூறப்படுகிறது.

தலையாலங்கானத்துச்

செருவென்றான்!

“என் எழுத்தோவியங்கள் பலவற்றில் பாண்டியர் சிலர்

ஏற்கனவே இடம் பெற்றுள்ளனர் என்பதால் மீண்டும் விரிவாக

அந்தப் பாண்டியர் வரலாறு கூறுவது விடுத்து

கடைச் சங்க காலத்தும் அதற்குப் பின்னரும்

தங்க காலம் உருவாக்கிய பாண்டியர்

வரலாறு தொடர்வோம்” எனக்

குறிப்பிட்டிருந்ததைப் பார்த்துக்

கோபங் கொண்ட தம்பியார் சிலர் ;

“பரவாயில்லை எத்தனை முறை எழுதினாலும்

படிக்கத் தெவிட்டுவதில்லை பழந்தமிழர் வரலாறு!

ஆண்டு பலவாயினும் மீண்டும் எழுதுக –

வேண்டுகோள் தாண்டிச் செல்லாதீர்” என்று ;

தொலைபேசி வாயிலாகத் துளைத்தெடுக்கவே – அந்தத்

தொல்லையிலும் ஒரு சுகம் கண்டு தொடங்குகின்றேன்

★ ★ ★

இளமைக் காலத்திலேயே எனக்கு அன்புமகன்

நெடுஞ்செழியன் எனும் பெயர்கள் மீது ஒரு மயக்கம் –

இயக்கத்தில் அவர்கள் நேரடியாக ஈடுபடாத காலம்

இளைஞனான நான் ஈடுபட்டிருந்ததாலே – ஆரூரில்

துண்டு வெளியிட்டாம் “முரசொலி” ஆண்டு விழா அழைப்பையேற்று

கண்டு நிகர் உரையில் எனைக் கவர்ந்தார்கள் இருவருமே அன்று!

நெடுஞ்செழியன் அன்புமகன் போல என் பெயரும் மாற்றி

நெடுநாள் ஆசை நிறைவேற்றிக் கொள்ள ;

அருமை அண்ணன் அண்ணால் தங்கோ ஆலோசனையேற்று

“அருட்செல்வம்” என மாற்றிக் கொள்ள அண்ணாவின் ஆணை

வேண்ட ;

அவர் சொன்னார்; “ஏற்கனவே அறிமுகமாகிப் பரவிவிட்ட பெயர்

அதனாலே இப்போது மாற்ற வேண்டாம்” என்று!

எண்ணிப் பார்த்தேன் நானும்

எல்லா மதத்தினர்க்கும் என் பெயர் பொதுவாக இருப்பதாலும்

குறிப்பிட்ட ஒரு சாமி பெயராக இல்லாத காரணத்தாலும்

குறுக்கிட்டு இப்போது மாற்ற வேண்டாமென

“கருணாநிதி” மாறாமலே இருந்து; கழகத்திலும் மாறாமல்

இருந்து விட்டேன்.

கருத்திலும், வலுவாக – தெளிவாக; ஈரோடு காஞ்சிப் பாசறையில்

போராடும் குணத்தையும் பெற்று “நிரந்தரப் போராளி”

ஆகிவிட்டேன்.

வேறாக இருந்து கட்சி வளர்த்தோர் வேறுபட்டு போனாலும்

அவரைச்

சீரோடும் சிறப்போடும் வாழ்க என வாழ்த்தியிருக்கின்றேன் – என்

சிந்தை கவர் நெடுஞ்செழியனாரின் நட்பும் அவ்வாறே – அவர்

மறைந்து விட்டார் எனக் கேட்டு டெல்லித் தலைநகர் விட்டு –

அன்றிரவே

உடைந்து விட்ட உள்ளத்துடன் ஓடிச் சென்றேன் அவர் இல்லம்

நாடி –

கொள்கையற்ற கூட்டமொன்று வாசலில் சூழ்ந்து நின்று என்னைக்

கொச்சைப்படுத்தி கூச்சல் எழுப்பி இப்போது வந்து விட்டாயா

என்று –

குடிலனைப் போல் குரோத உள்ளங் கொண்ட குள்ள மனிதர்கள்

குக்கல்களாய்க் குரைத்துப் பார்த்துக் கடிக்கப் பாய்ந்தனர்.

எங்கள் நட்பின் ஆழம் தெரியாமல் நன்றி கெட்டுக் கூவிப்

பிதற்றினர்.

அங்கும் பொறுமை காட்டி இறுதி மரியாதை செலுத்தி வந்தேன்.

நோய்ப்பகைவர் முகாமுக்கு நாவலர் சென்று விட்டாலும்

நெடுஞ்செழியன் என்ற தனி நண்பர் மீதும் – அந்தத் தமிழ்ப் பெயர்

மீதும்

நிகரற்ற பாசம் கொண்ட என் நெஞ்சம்; தமிழக

வரலாற்று ஏடுகளிலும் நெடுஞ்செழியன், கரிகாலன்,

செங்குட்டுவன் எனும் பெயர்கள் வரும் போதெல்லாம் – என்

செம்மொழிக் கவிதையில் அவர்கள் திருப்பெயர் இடம் பெறவே

விருப்புற்று தம்பிமார்கள் வேண்டுகோளை நிறைவேற்றுகின்றேன்

‘மீண்டும் வரட்டுமென்று’ மீட்டிய வீணைக்குப் பதிலாக ;

நீட்டும் கவிதை வரிகள், இதோ ;

காலப் பேழையில் இரு பகுதிகளாக!

★ ★ ★

சேரனும், சோழனும், எழினியும், திதியனும்

இருங்கோ வேண்மான் எனும் ஐவருடன்

பொருநனும், மற்றும் எருமையூரனும் இணைந்த

போர்முனையில் எழுவர் படையை மோதிடவே,

இளங்காளை நெடுஞ்செழியன் புறப்பட்டான்

களங்கண்டான், வென்றிட்டான் என்றும் – பகைவர்

முரசு கவர்ந்து முடித்திட்ட சூளுரையால்

அரசர்க்கரசனாய் ஆனான் என்றும்,

அகமகிழ்ந்து கூறுகின்ற செய்தி ஒன்றை

அகநானூறில் பாடுகின்றார் அரும்புலவர் நக்கீரர்!

“கதிரவனும் நிலவும் சேர்ந்த மண்டீது வீழ்ந்தாற்போல்

களம் பட்டார் சேர சோழ மாமன்னர்” என்று

புலவர் கல்லாடனார், புறப்பாடல் ஒன்றின் மூலம்

புலமிக்க பாண்டிய இளவந்தனைப் போற்றுகின்றார்!

“ஒருவரோடு ஒருவர் போரிடுதலும் – அந்த

இருவரில் ஒருவர் வீழ்தலும் இயற்கை!

எழுவரை ஒருவன் மடக்கி அடக்கிடப்

பழுதறப் போர் புரிந்தான் என்பதும்

எழுவரும் தோற்றார்

இவன் ஒருவனே வென்றான் என்பதும்

இவ்வுலகிலோர் புதுமை என்பேன்” என்று,

இடைக்குன்றார்க்கிழார் எனும் புலவர்,

எழுத்தில் வடித்தார் பாண்டிய இளவலின் வெற்றியை!

தமிழ் மன்னர்களே தங்களுக்குள் முட்டி மோதியதைத்

தாங்கொணாக் கவலையுடன் குடபுலவியனார் எனும் புலவர்,

“தமிழ் தலை மயங்கிய தலையாலங்கானம்” என்றார்!

தடந்தோள் பாண்டியனே இறுதியில் வென்றான் – எனவே

தழுவிடத் துடித்தார் அவனை உடனே!

வேட்டுவர்கள் புலி பிடிக்கும் பொறியைப் போல்

விரிந்து பார்த்த செழியனின் வீர மார்பை

விரைந்து சென்று தழுவிட விரும்புகின்றேன் என

வித்தாரத் தமிழ் முழக்கும் அப்புலவர் ; அவனது

முத்தார மார்பைத் தழுவிக் கொண்டார்!

தலையாலங்கானத்துப் போர்க்களத்தை – அத்

தமிழ்ப் புலவர் வாணிக்கும் விதம் பாரீர்!

கடும்பகை எதிர்த்துக் கணைகள் பறந்திட

திடுமெனச் சாய்ந்தன எதிரியின் யானைகள்!

வீழ்ந்த யானையின் துதிக்கையை அதன் வாயுடன்

வீர மறவர் வாளால் வெட்டிட ; அவை துண்டாகிக்

களத்தினில் பரவிக் கிடந்திட்ட காட்சி ;

கழனியோர்த்துக் கலப்பைகள் போல் விளங்கிற்றாமே!

படைத் தலைவர் பல்லோர் மாண்டு மடிந்திட – அவர்

பக்கத்தே தம்புதல்வர் மரணமெய்திக் கிடந்தது கண்டு,

நெற்றித் தோலும் சுருங்கிய மூதாட்டியர் பலர்

சுற்றி நின்று அழுது புலம்பினர் எனினும்

வெற்றி இதனினும் வேறொன்று உளதோ என

முதல் பதிப்பு: ஜூன் 2006 — தமிழ்க்கனி பதிப்பகம் / பூம்புகார் பதிப்பகம், சென்னை