உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

காலப் பேழையும் கவிதைச் சாவியும்

கவிதை 52 · 52 / 58

இரண்டுமல்ல!”

“பணி வெவ்வேறல்லவா ?”

“ஒன்றைப் புரிந்து கொள் தமிழரசி ;

வெளியிடப்போது

ஓலைச்சுவடியல்ல – அது

உலகச்சுவடி! –

பணி ஒன்று போல் தெரியும் ;

ஆனால், பயன்கள் வெவ்வேறு!”

பஃறுளி ஆறு மக்கள் வளத்துக்கு வகை செய்வது –

தொல்காப்பியம் மக்களின் வாழ்க்கைக்கே

வழி காட்டுவது –

முன்பு வந்ததை முதல் கடற்கோள்

என்றார்கள் – எனினும் குமரி ஆறும்

பஃறுளியும் பாதுகாப்பாக இருக்கிறது –

அடுத்தொரு கடற்கோள் வந்தால்

தடுத்திட முடியுமோ பஃறுளி, குமரி ஆறுகளின் பேரழிவை

யென்று

தவிக்கிறது என்னுள்ளம்!”

அரசி பெருமிதமுடன் பதில் சொன்னாள் –

“எத்தனை கடற்கோள் வரினும் ; இன்று அரங்கேறும்

தொல்காப்பியத்தை அணுகித் தொடக் கூட முடியாது –

ஆறுகள் கடல்கள் நாடுகள் கூட திசைமாறும்

ஆனால் தொல்காப்பியம் போன்ற தமிழ் ஏடுகள்

அழியா வலிமை பெற்றவை – எவராலும், எதனாலும்

அழிக்க முடியாது; என்றும் ‘சிரஞ்சீவி’!”

அளவிலா மகிழ்ச்சியுடன் முடத்திரு மாறனாம்

நிலந்தரு திருவின் பாண்டியன்

அவளை ஆரத்தழுவிக் கொண்டு

நன்றியை செயல்படுத்த நினைத்தான்

எனினும் நகரின் நடுவீதி

என்பதால் கண்களால் மட்டும்

அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டான்.

★ ★ ★

அணிதோள் புரவிகள் அரச குடும்பத்தின்

அவசரம் புரிந்தது போல –

அரங்கேற்றம் நடைபெறும்

அத்தாணி மண்டப வாயிற்புறம்

அதற்குள் வந்தடைந்தன.

“இன்னொரு கடற்கோள் வரக்கூடுமாம்” ;

இந்த அச்ச உணர்வு அவைப் புலவரிடையே

இருந்ததையும் உணர முடிந்தது அவர்களின் உரையாடல் கேட்டு!

அரச குடும்பத்தினர்க்கு அவைப் புலவர்களை

அறிமுகப்படுத்தினார் அதங்கோட்டாசான் ;

ஆசிரியர் என்றே அவரை அனைவரும்

அழைப்பர், அன்பு பொங்கிட!

தொல்காப்பியர், அகத்தியர், இருங்கையூர்க்

கருங்கோழி மோசி, வெள்ளூர்க் காப்பியன்

சிறுபாண்டிரங்கன், திரையன்மாறன்,

துவரைக் கோமான், கீரந்தை

இவர்கள் எல்லாம் இடைச்சங்கப்

புலவர்களாக வீற்றிருந்து,

இணையிலாக் காப்பியமாம் தொல்காப்பியத்தை

நிலந்தரு திருவின் பாண்டியன் முன்னிலையில்

அரங்கேற்றம் செய்து கொடுத்துவிட்டு

அதங்கோட்டாசான் வாழ்த்தையும் வழங்கச் செய்து,

அங்கிருந்து இனிது கலைந்தனர்.

இன்னும் சில மாதங்களில் இன்னொரு கடற்கோள்

வரப்போவதை அறிந்து கொள்ளாமலே!

இந்நாள் பொன்னாளாய்த் திகழ்ந்தது எனினும்

பொல்லா நாளொன்று விரைவில் வந்து புகுந்து

அந்நாள் தான் அடுத்தொரு அழிவினைக் கொண்டுவரும் –

என்பதை

இடைச்சங்கப் புலவர்கள் அறிந்து கொண்டிருந்தால்

இசைப் பாடல்களாம் கலியும், குருகும், வெண்டாளியும்

வியாழ மாலை அகவலும் எனப் பாடல்கள் பல பாடிக்

களித்திருப்பாரா ?

இயற்கையோடும் போராடும் இயல்பினர் – அவர்கள் ;

எஃகு இதயத்தினர் –

இதை மட்டுமல்ல ;

எதையும் சந்திப்பர்!

வீரமிக்க விற்பன்னர்களும் கூட

அந்தத் தமிழ் வித்தகர்கள்!

அவர்தம் களிப்பு நீடிக்காமல்

அறைகூவல் விடுப்பது போல் – ஆறு திங்கள் கழித்து

இயற்கையின் வெறிக் கூத்து

கவாடபுரத்தில் ஆரம்பமாயிற்று! ‘பேய்’ பிடித்த இயற்கை;

பிரமாண்டமான இரும்புக் கரம் கொண்டு

பெருங்கடல் அலைகளின் மீது கருந்தாக்குதல் நடத்த,

இருள் காடாயிற்று அந்தப் பகுதி முழுதும் –

இடியாக ஒலித்து, மின்னல்களாக இறங்கி –

பூகம்பமாகக் குலுங்கி, கடலுக்குள்

நிலநடுக்கமாகப் புகுந்து

குமரியாறு – பஃறுளியாறு இரண்டும் ஒன்றாகி

எங்கே போயின என்று தடம் மாறி – இடம் பெயர்ந்து –

இல்லாமலே மறைந்து விட்டன எனில் ;

இயற்கைச் சீற்ற விளைவை யார் தான் கணிக்க இயலும் ?

அழிவு வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு

கடற்கோள் “பைசாசம்” ஆடி அடங்கிய பிறகுதான்

அமைதி ‘தலை’ காட்டியது – ஆம்

அகன்று நீண்ட பெருவெளியில்

அங்கு நடந்த ‘கெடுதலை’க் காட்டியது!

மக்கள் நடமாட்டமே இல்லை

எங்கே போயினர் எல்லோரும் ?

திகைப்பு – திகைப்பு! எங்கெங்கு

காணினும் சாவின் நகைப்பு!

அன்றொரு நாள் ஆறேழு திங்கள் முன்னே

தொல்காப்பியம் அரங்கேறிய அத்தாணி

மண்டபம் மட்டுமே – அங்கு

எஞ்சியிருந்திட ;

மற்ற எல்லா மாட மாளிகைகளும்

கூட கோபுரங்களும் மண்ணுக்குள் புதைந்து போயின!

“அடியார்க்கு நல்லார்” வழங்கிய

சிலப்பதிகார உரையின்படி ;

“தென்பாலி முகத்துக்கு வட எல்லையாம்

பஃறுளிக்கும் குமரியாற்றுக்கும் இடையே

எழுநூற்றுக் காவத தூரம் இவற்றின் நீர்மலிவான்

என மலிந்த ஏழ் தெங்கநாடும், ஏழ் மதுரை நாடும்,

ஏழ் முன்பாலை நாடும், ஏழ் பின்பாலை நாடும்,

ஏழ் குறும்பனை நாடுமென

மொத்தம் நாற்பத்தி ஒன்பது குறு நாடுகளை

முழுக்கச் செய்து முடிவுரை தீட்டப்பட்டது ;

மூர்க்கத்தனமிக்க அந்தக் கடற்கோளால்!

தனது ராணி தமிழரசி எங்குற்றாள்

என முடத்திருமாறன் தேடியலுத்து ; அவள்

கடற்கோளில் காணாமல் போய்விட்ட

குடிப்படைகளில் ஒருத்தி என்று குறித்துக் கொண்டு

கண்ணீர் வடித்தான் எனினும் ;

“தமிழரசிதானே தப்பவில்லை; என்

தமிழ் தப்பியதே” எனத் தகத்தகவெனக்

குதித்து “தப்பிய தமிழை தக்கவைப்போம்”

என்று சூளுரைத்து – இரண்டாம் தமிழ் சங்கமாம்

இடைச் சங்கத்து எஞ்சிய புலவர்களுடன் இவனும் இணைந்து

முனைந்தனன் உடனே மூன்றாம் தமிழ்ச்சங்கமாம்

கடைச் சங்கம் கண்டிட!

இயற்கைச் சீற்றத்துக்குள்ளான இடைச்சங்க

இறுதிக் காலத்திலும் – கடைச் சங்க துவக்கக்

காலத்திலும் – இருந்த பெருமை ;

முதல் பதிப்பு: ஜூன் 2006 — தமிழ்க்கனி பதிப்பகம் / பூம்புகார் பதிப்பகம், சென்னை