காலப் பேழையும் கவிதைச் சாவியும்
கவிதை 51 · 51 / 58
கருதாமல்
கள்வர் எவரோ வந்து விட்டதாக எண்ணி மன்னன்
கதவைத் தட்டி விட்டான் – அதன்பின் கணவன் மனைவி எனத்
தெரிந்து
அங்கிருந்தே மன்னன் விரைந்து நடந்து விட்டான் –
அய்யர் வீட்டில் சந்தேகம் – அம்மாமி மீது!
யாரடி அவன் கதவைத் தட்டியது எனக் கேட்டு – அவள்
கற்பின் மீதே கடும் அய்யமுற்றார் கணவர்.
அய்யர் வீட்டில் தன்னால் குழப்பமா எனக் கவலையுற்ற மன்னன் ;
அய்யப்பாடு நீக்க, அனைவரது வீட்டுக்கதவுகளையும் தட்டி
விட்டுப் போய் விட ;
மறுநாள் மாளிகைக்குச் சென்று ஊரார் மன்னனிடம்
நள்ளிரவு கள்வன் வந்து கதவைத் தட்டிய கதை சொல்லவே ;
மன்னன் அந்தக் கள்வனுக்கு என்ன தண்டனை தரலாமெனக்
கேட்க ;
கதவு தட்டிய கள்வன் கையை வெட்டலாமென்றனர் அமைச்சர்
குழுவினர் –
அக்கணமே வாளை ஓங்கித்
தன் கையை ; தானே மன்னன் வெட்டிக் கொண்டு –
மன்றத்தினரிடம் ; நடந்த கதையை
மனம் திறந்து சொன்னான்.
ஒடிந்த கரத்துக்கு உபரிக் கரமாக
ஊர்மக்கள் பொற்கரம் செய்து பூட்டினர் மன்னனுக்கு
அன்று முதல் அவன் பொற்கைப் பாண்டியன்
எனப் புகழப் பெற்றான்.
புராணங்களை ஓரளவு ஒழுங்காக எழுதினார்கள் –
புதையல்களாக வரலாறுகளைத்தான் புதைத்தே விட்டார்கள்.
★ ★ ★
கடைச் சங்கக் காலத்துப் பாண்டியரில் அறிவுடைநம்பியும்,
ஒல்லையூர் தந்த நல்லிசைப் புலவர் வரிசையில்
ஒப்பற்ற கவிஞன் பூதப் பாண்டிய மன்னனும் –
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதியும்,
ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனும் –
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனும் –
நன்மாறன் வெற்றி வேற் செழியன் என
நாடாண்ட பாண்டியர்களும்
என் எழுத்தோவியங்கள் பலவற்றில்
ஏற்கனவே இடம் பெற்றுள்ளனர் என்பதால் ; மீண்டும் விரிவாக்கி
அந்தப் பாண்டியர் வரலாறு கூறுவது விடுத்து
கடைச் சங்க காலத்தும் அதற்குப் பின்னரும்
தங்க காலம் உருவாக்கிய பாண்டியர்
வரலாறு தொடர்வோம்.
★ ★ ★
காலத்தால் மூத்த காப்பியம்
கடவுள் வாழ்த்துடன் தொடங்கிடாத காப்பியம்
நிலந்தரு திருவின் பாண்டியன்
நலந்தரு அவையில் ஆன்றோர் சான்றோர்
ஆசிரியர் அதங்கோட்டாசானின்
அன்பு தவழ் இனிய வாழ்த்துக்களுடன்
அரங்கேற்றப்பட்ட அறிவுக் கருவூலம்
அறிஞர்கள் ஏற்றிப் போற்றும் அரிய நூல்
தொல்காப்பியம் ; அரங்கேறிய காலம்;
விழைந்த நாண் ; அக்காப்பிய பூங்காவில்
நுழைந்தவன் மட்டுமல்ல உம்மையும் வருக எனக்
குழைந்து அழைத்துச் சென்று ; “கோடையல்ல இது ;
குற்றால அருவியின் குளிர்” எனக் காட்டியவன் – எனவே
பொற்றாமரைக் குளம் கொண்ட மதுரை முதல்
மற்ற பாண்டிய நாட்டுப் பகுதிகளையும் ஆண்ட
மாவீரர் பற்றி உரைத்திடுவேன் ஒரு தொடராக!
கடற்கோளில் தப்பிய தமிழ்;
கடைச் சங்கம் கண்டது!
இந்தியத் திருநாடு இன்றைய குமரிமுனைக்குத்
தெற்கே எழுபது காதம் தொலைவு பரவியிருந்ததாம்!
எல்லை அரணாகக் குமரி மலைத்தொடர் காவலிருக்க
அதுகிழ் என குமரியாறு, பஃறுளியாறு இரண்டும்
ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் போல
கெட்டியாகப் பாதுகாத்துக் கொண்டிருக்க ;
தென்கிழக்கே சந்தாத் தீவுகள் தொடங்கி
அதன் மேற்கே ஆப்பிரிக்காவை அடுத்து
கீழ்க்கரை ஒட்டிய மடகாஸ்கர் தீவு வரையில்
அகன்றதொரு நிலப்பரப்பே ; ஆழ்கடலின்
அகோரப் பசிக்கு இரையாகி, கடற்கோள் பேரழிவு எனும்
கவர்ச்சிப் பெயரைச் சூட்டிக் கொண்டு தமிழர் நிலம், நலம்,
வளம், பலம் அனைத்தையும் அடியோடு கவிழ்த்ததாம் –
வரலாற்று வல்லுநர்களின் ஆய்வுதான் இந்த முடிச்சினை
அவிழ்த்ததாம்.
தொலைதூரம் பரந்துகிடந்த தொல்பழங்காலத் தமிழர் பூமியில்
பகைமை குலுங்கிடப் பஃறுளியாறு வெட்டி வைத்தவன் ;
பாண்டியன் நிலந்தரு திருவினான் என்பது நெஞ்சுக்கினிய
செய்தியாம்!
பல்லாயிரம் லட்சம் கோடியென இறந்து புதைந்த மனித
உடல்களின் மேல்தான்
பிறந்து வளர்ந்து நாம் புதுவாழ்வு தேடுகிறோம் ; எதிர்கால
இளைஞர்கள்
சிறந்து விளங்கிட எருவாக நம் வரலாறு நாடுகிறோம்.
சூரியன், சந்திரன், சுக்கிரன், ராகு, கேது, கோரசனி
கும்பம், மகரம், ராசி பார்த்தோம் –
பிரபவ, விபவ என ஆண்டுக் கணக்கு அறுபது வருஷம்
என்றோம் –
பிறந்தன பிள்ளைகளாய் நாரதர் கிருஷ்ணன் இருவருக்கு
மென்றோம் –
எல்லாம் சரிதான் ஏமாந்து மறந்து விட்டோமே ; நம் வரலாறு!
சொல்லாமல் எழுதாமல் விட்டுவிட்டோமே – அதனால் இன்று,
கல்லான பூமியிலன்றோ கடப்பாரை போட்டுக் கெல்லி
எடுக்கின்றோம்
நல்லோர்கள், வல்லோர்கள், சரித்திரத்தை!
★ ★ ★
பஃறுளி ஆற்றோரும் நெடிய வீதியொன்றில் பாவிகள் பூட்டிய
தேரில்
புயல் வேகத்தில் நிலந்தரு திருவின் பாண்டிய மன்னன்
வருகின்றான்
வீதியில் அவன் எதிரே வந்த குதிரையிலிருந்து இறங்கி
பாதுகாப்புப் பணியாளர் பணிந்து குனிந்து வணங்குகின்றான்.
மன்னன் கேட்கிறான் ; “மண்டபத்தில் எல்லோரும்
குழுமி விட்டனரா ?”
“அரசே; அத்தாணி மண்டபத்தில் அத்தனை புலவர்களும்
காத்திருக்கிறார்கள் –”
“அரசியார் புறப்பட்டுவிட்டாரா ?”
“அவர் மன்னருக்காக மாளிகையில்
எதிர்பார்த்து அமர்ந்திருக்கிறார்!”
“அப்படியா”
அதன்பிறகு அந்தத் தேர் ஓடவில்லை – தெருவில் பறந்தது.
சினத்தினால் சிவக்கா விட்டாலும்
சிரிப்பின் செழிப்பில்லை, முகத்தில் அரசிக்கு!
புரிந்து கொண்ட பாண்டியன் –
“நேரமாயிற்றே – புறப்படலாமா ?”
“பரவாயில்லை; இவ்வளவு தாமதமாகவாவது!”
சாந்தமாகத்தான் பேசினாள் அரசி; ஆனால் சலிப்பு மிகுதி!
ஏறிக்கொண்டாள் எழில் குலுங்கத் தேரில்
“பஃறுளி ஆற்றுப் பணி முடிய, சற்று
காலம் தாழ்ந்து விட்டது”
“ஓ! அதற்கு அடுத்த பணிதானா;
தொல்காப்பிய அரங்கேற்றப்பணி ?”
“இரண்டும் ஒரே பணிதான்!”
“ஓலைச் சுவடியை வெளியிடுவதும்
ஓடும் நதியை ஒழுங்குபடுத்துவதும்
ஒன்றுதான் என்கிறீரா ?”
“ஒன்றல்ல; ஆனால் நீ சொல்வது போல்
