உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

காலப் பேழையும் கவிதைச் சாவியும்

கவிதை 50 · 50 / 58

மனுகுல தீபன், உலகுய்ய வந்தான்,

பார்த்தகன், சுங்கம் தவிர்த்த சோழன் –

பல பெயர்கள் உண்டு – பெற்ற பட்டங்களும்

பற்பல உண்டாம்!

கி.பி. 1070 ஜூன் திங்கள் ஒன்பதாம் நாள்

கிரீடம் தரித்தான் ; சோழச் சக்கரவர்த்தியாக!

அதனால் “திரிபுவன சக்கரவர்த்தி” என்று

அடைமொழி கொண்ட முதல் மன்னனும் இவனேயாவான்!

கங்கை கொண்ட சோழபுரத்தில் முடிசூடிக் கொண்டு

காஞ்சிபுரத்தையும் ஒரு தலைநகரமாக்கிக் கொண்டு

பழையாறை, திருமழபாடி நகர்களைத் தனது

பரிபாலனத்திற்கேற்ற இடங்களாக மாற்றிக் கொண்டு

தனது உள்ளங்கவர்ந்த செல்வனாம் விக்கிரம சோழனை

தனக்குத் துணையாகவும் தனக்குப் பின் அவனேதான் எனவும்

அறிவித்து ஆட்சி நடத்திய குலோத்துங்கன் அய்ம்பது

ஆண்டுகள் ;

அரச நடத்தினான் எனினும் ; கலிங்கத்துப் பரணிக்குக்

காரணமான

கலிங்கப் போரில் அவன் கண்ட வெற்றியே, அவன் ஆட்சியில்

பெற்ற

கடைசி வெற்றி போலும் ;

விக்கிரம சோழன் ஆட்சியும் நேர்மை நியாயம் போற்றிய ஆட்சியாக –

தந்தை

விட்டுச் சென்றதை இழக்காத ஆட்சியாக விளங்கிற்று எனினும்

இலங்கையில் இருந்த பிடிப்பை இழந்தது ; அதனைப்

பேரிழப்பின் ஆரம்பம் ; பின்னடைவின் துவக்கமாயிற்று எனலாம்

மன்னார்குடிப் பெருமாள் கோவில்

மன்னன் குலோத்துங்கன் எழுப்பியதே ; அதனால்

குலோத்துங்க சோழ விண்ணகரம் என்று

அழைப்பர் அதனை!

குலோத்துங்க சோழன், நாகை புத்த விகாரத்துக்கு

நிலக் கொடையும் கொடுத்த ‘செப்பேடு;’

‘ஆலந்து’ நாட்டு லீடன் நகரப் பொருட்காட்சியில்

அமைந்துள்ளதை இன்னும் காணலாம்.

இறுதியாக ஒன்று ; முனைவர் இராசமாணிக்கனார் கூறியபடி

கங்கை கொண்ட சோழபுரம் தலைநகரமெனும்

தகுதி பெற்ற பின்னர்

தில்லை நகராம் சிதம்பரம், சிறப்பு பெறலாயிற்று!

விஜயாலயச் சோழன் காலம் முதல்

இராசராசன் காலம் வரையில் அவர்கள்,

திருவாரூரையே

மிகச் சிறப்பாகக் கருதினர்!

அது இரு ஊர்களுக்கும் இடையே உள்ள

உறவின் காரணம் போலும்!

படையெடுப்பை முன்கூட்டியே

அறிவிக்கும் பண்பாடு!

“சுற்றிச் சுற்றி வருகின்றாயே சோழர் வரலாற்றையே ;

பற்றுக் கொண்டோர் நாங்கள் பாண்டியர் வரலாற்றில் ;

முற்றுப் பெற்றவுடன் பல்லவர் சோழர் வரலாறுகள் ;

சற்று விரைவில் வருக பாண்டியர் பக்கம்” என,

வேண்டியவர், வேண்டாதவர் என்றில்லாமல் ; என்

விருப்பத்துக்குரியோர் பலரும் விரும்பி அழைத்தனர் –

பாவேந்தி வருகின்ற பழைய வரலாறுகளில்

பாண்டியரையே முதலில் வைத்து நான் வடித்த கவிதை

1945 ஆம் ஆண்டிலேயே அய்யாவின் ‘குடியரசு’

அலுவலகத்தில் பணியாற்றிய போதே வெளிவந்ததைப்

படித்துப் பார்க்க வேண்டுகிறேன் ; பாசமுள்ள நெஞ்சங்களை!

நொடிக்குள் உணர்வீர் ; என்னுள்ளத்துக் கொந்தளிப்பை!

“காவிரியின் கரையினிலே

பெண்ணையின் பாய்ச்சலிலே

சரிதமில்லை ; சரிதமில்லை!

அய்யகோ தமிழ்நாடே ;

ஆரம்பம் கங்கையிலாம்! பாண்டியர்

ஆண்டதை யார் கண்டார் ?

சேர் செழிப்பைச் செதுக்கியதெவர் ?

சோழர் வளப்பம் சொன்னதும் உண்டோ ?”

இப்படியொரு கவிதையும்

இன்னும் வேகமுடன் ;

“சேர் வாழ்ந்த சிறப்பிடம் எங்கே ?

வீர பாண்டியர் அரசேன் கவிழ்ந்தது ?

சோழர் உலவிய சோர்விலா நாட்டில்,

தோழைக் கொள்கை குவிந்தது எவ்விதம் ?

வெடித்தன வினாக்கள் ;

வெதும்பிய மனத்தில்......

நாட்டு வெறி பிடித்த காளைகளே!

கிலி பிடித்த மனிதர்களை ; கீழே தள்ளுங்கள்!

புலி வாழ்வின் உச்சியிலே புதுமைத்தனைப்

பொறித்திடுவோம்!”

இப்படியும் ஒரு கவிதை எழுதியவன்

எப்படி மறப்பேன் மூவேந்தர்களில் ஒருவராம் முத்தமிழ்ப்

பாண்டியரை ?

★ ★ ★

எங்கிருந்து தொடங்குவது பாண்டியர் வரலாறு......

எவரைப் பற்றி முதலில் தொடங்குவது அந்த வரலாறு ?

முச்சங்கம் முளைத்ததற்கும் – அது ;

முதல், இடை, கடை என முகிழ்த்ததற்கும்

மூலப் பொருளாக இருந்தவரும் –

மூளைப் பொருள் வழங்கியவரும் ;

முன்னாள் பாண்டிய மன்னர்களாம் ; அவர்களில்

முதல்வராக இருப்பவன் முடத்திருமாறனாம் –

முதல் சங்கம் நிறுவி நடத்தியோர் ; என

‘காய் சின வழுதி’ முதல் ‘கடுங்கோன்’ ஈறாக

பாண்டிய மன்னர் எனப் பட்டியல் இருப்பினும்

வேண்டிய ஆதாரம் ஏதுமில்லை அந்த வரலாற்றில்!

இடைச் சங்கம் பற்றிய இறையனார் களவியலுரையில்

இதனை நடத்தியோரில் முடத் திருமாறன் தவிர்த்து முன்னோர்

குறித்த

விபரங்களை ; வெளிச்சத்தில் தேடியும் கிடைத்தபாடில்லை!

பளிச்செனக் கிடைத்தது பாண்டியன் முடத் திருமாறன்,

கடைச் சங்கம் நிறுவிய செய்தி! அக்காலம் தான் இரண்டாம்

கடற்கோள் நிகழ்ந்து ; குமரியும் பஃறுளியாறும் அடியோடு

அழிந்து விட்ட காலமென்றும் வரலாற்று அறிஞர் கூறுகின்றார்.

ஆர். இராகவ அய்யங்கார் ; முடத் திருமாறனே நிலந்தரு

பாண்டியன் என்பார்!

“இவனுக்கடுத்த பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி”

இவ்வாறு குறிப்பிடுழுதி உரைப்பவர் உ.வே.சா. அய்யராவார்.

இம்மன்னர் மீது காரிகிழார், நெட்டிமையார், நெடும் பல்லியத்தனார்

எனும்

புலவர் பிரான்கள் போற்றிப் பா எழுதியுள்ளனர் – அதில் ;

“முற்றுகையிட்டு ஒரு நாட்டைத் தாக்கிடப்

படையுடன் வரும் மன்னன் ;

முதலிலே அந்நாட்டு அப்பாவி மக்கள் அறிவதற்குப்

படை வருவதைப் பறையொலி மூலம் தெரிவிப்பானாம் –

என்னே ; போர் முறையில் பண்பாடு –

இன்னே ; எங்கு ஒளிந்தது அந்தப் பண்பாடு ?”

★ ★ ★

புராணம் போல ஒரு வரலாறு உண்டு பொற்கைப் பாண்டியனுக்கு!

புகழுகின்றேன் சுருக்கமாக ; புரிந்து கொள்வீர்!

நாள் தோறும் மாறு வேடம் பூண்டு

நள்ளிரவில் கூட நகர் சோதனைக்கு வரும்

மன்னன் பாண்டியன் ஓர் இரவு

மறையவர் ஒருவர் தன் மனைவியிடம்

வெளியூர் சென்றிட விடைபெற்றிடும்போது ;

வேந்தனிருக்கிறான் நமக்கெல்லாம் காவல் என

விளம்புவதைக் கேட்டு விடுகிறான் – பின்னர்

திங்களொன்று கடந்து திரும்பி வந்த

கணவனுடன் வீட்டில் மனைவி பேசுவதை

கதவோரம் நின்று கேட்டுவிட்டு ; கணவன் மனைவியென்று

முதல் பதிப்பு: ஜூன் 2006 — தமிழ்க்கனி பதிப்பகம் / பூம்புகார் பதிப்பகம், சென்னை