காலப் பேழையும் கவிதைச் சாவியும்
கவிதை 49 · 49 / 58
வீரத்தின் விளை நிலமாய்த் திகழ்ந்தவனும்
வெற்றிகளின் உறைவிடமாய் உலவியவனும்
விரோதிகளின் விலா எலும்பால்......
தலை சீவிக் கொள்ளும் தைரியம் வாய்ந்தவனும்
இந்திரஜித்தன், அபிமன்யுவுக்கு இணையானவனுமான,
எதிரிகளின் சிம்ம சொப்பனமாம் –
இராசாதிராசன் எனும் எழுச்சிப் புயலாம் ;
விஜய ராசேந்திரன் வீழ்ந்தது கண்டு
விழி நீரைத் துடைக்கவும் நேரமில்லாமல் ; அவன் தம்பி
இராசேந்திர சோழ தேவன்; இடி, மின்னல், புயல்
இவையனைத்தும் இணைந்து தாக்கினாற் போல
எதிரிகள் மீது பாய்ந்து தாக்கினான் –
கர கர வெனப் பலர் கரங்களை வெட்டியும்
பட பட வெனப் படைத்தனை ஊடுருவி ;
பகைக் கூட்டத்தின் தலைகளை அறுத்தும்,
வெற்றி ; வெற்றி ; என்ற பெருங்கூச்சலிட்டு
சாளுக்கியரைச் சடசட வென சாய்த்துக் கொண்டே
சண்ட மாருதமெனப் போரிட்டு வெற்றி கண்டான்.
விஜய இராசேந்திரனை வீழ்த்தியவர்கள் வீழ்ந்தார்கள்
விழி ஒளி அணைய உடன்பிறப்பை
வீழ்த்தியவர்களை வீழ்த்தி,
வெற்றி கண்ட இராசேந்திர சோழ தேவனின்
உடல் முழுதும் ஒரு நூறு கணைகள்!
களத்தில் தைத்த அந்தக் கணைகளுடனே –
அவற்றைக் காண்பதில் ஒரு களிப்புடனே ;
“கொண்டு வா மகுடத்தை!” எனச் சோழர் கூட்டம்
கூவிடக் கூவிட; கொந்தளித்தது போர்க்களம்!
குருதி பொங்கும் அந்த இடத்தையே
கொலு மண்டபமாகக் கொண்டு, சோழ நாட்டுக்
கோவேந்தும் விழா நிகழ்ச்சியை
நிறைவேற்றிக் கொண்டான் ;
இராசேந்திர சோழ தேவன்! இதுதோர் புதுமை ;
இந்தியத்துப் போர்க்கள வரலாற்றில்!
இவ்வாறு வரலாறு படைத்த
இராசேந்திர சோழ தேவன் ;
அங்கிருந்து கோல்காபூர் சென்றான்
ஆங்கே வெற்றித் தூண் ஒன்று நாட்டி விட்டு
அதன் பிறகே தலைநகர் மீண்டான்! முடிசூட்டியது ஒரு
மனிதனுக்கு ; அதற்காக முடிவெய்திடுவது முப்பதாயிரம்
மனிதர்களா ?
இப்படி சமர்களத்தின் பக்கமாக
சமணத் துறவி யொருவர் பாடிக் கொண்டே சென்ற காட்சி
இரக்கமற்றோர் கண்களையும்
ஏரி, குளமாக்கும் காட்சியாகும்!
திருமணங்களாலும்
வருவதுண்டு திருப்பம்!
இராசேந்திர சோழ தேவனாம் ;
இரண்டாம் இராசேந்திர சோழன்
‘கொப்பம்’ போர்க்களத்தையே
கொலு மண்டபமாக்கிக் கொண்டு
மன்னர் மன்னனாக மகுடம் புனைந்தவுடன்
மாற்றார் படையாம் சாளுக்கிய படையின்
தளபதிகளான ஜெயசிங்கன், புலிகேசி,
தசபன்மவன், ஆரையன், அசோகமையன்,
ஆகியோர் தலைகளை அங்கேயே வெட்டி வீழ்த்தினான்.
அரச குலப் பெண்டிர் சத்தியவை, சங்கைவை
இருவரையும் கைப்பற்றிக் கொண்டதோடு
இரத்த வெறிப் பழியுணர்வு அடங்காமல்,
பகை நாட்டுப் பட்டத்து யானைகளான
சத்துருபயங்கரன், கரபத்திரன், மூல பத்திரன்
மற்றும் ஒட்டகங்கள், குதிரைகள் போன்ற – சாளுக்கியக்
கொற்றவனின் உடைமைகளையும் தனதாக்கிக் கொண்டான்.
இவன் கி.பி. 1054இல் – பிணக் குவியலுக்கு மத்தியில்
இந்த மண்ணில் பேரரசுப் பட்டம் சூட்டிக் கொண்டு ;
இரண்டாம் இராசேந்திரன் எனும் பெயருடன்
ஒன்பதாண்டு காலமே உலகில் வாழ்ந்தான் என்றும்
அதன் பின்னர் 1063இல் உயிர் விட்டான் என்றும் –
தொடர்ந்து ஆள வந்தவர்கள் அவன் தம்பியர்
இராசமகேந்திரன், வீர இராசேந்திரன் என்றும் ;
அவர்களும் அதிக காலம் வாழவில்லையென்றும்
வரலாறு முற்றுப் பெறுகிறது ; ஆக ; வீர
இராசேந்திரன் 1070இல் மறைந்தவுடன் ;
அதி ராசேந்திரன் என்பான் ஆட்சிக்கு வந்து ; அவனும்
உள்நாட்டுக் கலகத்தினால் அற்பாயுளில் உயிர் விடுத்தான்.
இவ்வாறு கி.பி. 850 ஆம் ஆண்டு
கடற்கரம் நீட்டியெழுந்த சோழர் அரசு ;
இருநூறு ஆண்டுகள் மக்கள் பணியென்றும்,
இறை பணி என்றும், மாற்றாரைக் களத்தில்
சந்திக்கும் போர்ப்பணி என்றும், ஆட்சிப் பணியாற்றி
அதிராசேந்திர சோழனுடன் அத்தமித்தது எனினும்
அதன் பின்னர் ‘சாளுக்கிய சோழர்’ எனும் பெயரால்
அய்ம்பதாண்டுக் காலம் குலோத்துங்க சோழன்
கோலோச்சிய சரித்திரத்தையும் ஒளியுமிழ்
ஓவியமாகத் தீட்டித்தான் காட்டுகிறது –
ஒளியுமிழ் ஓவியமெனினும் ; அந்தச் சோழ
நிலவில் “ஒளவைக் கிழவி”யாம் நிழலாக
ஒட்டிக் கொண்ட “சாளுக்கிய மரபு” என்ற
குட்டிக் குறைபாட்டினையும் ; குலோத்துங்கன்
எட்டித் தள்ளி விட்டு
ஏற்றமிகு ஆட்சி நடத்தினான்.
இரு நூற்றாண்டு சோழர் வரலாற்றில்
இவன் யார் சாளுக்கிய சோழன் ?
இந்தக் கேள்வியும் இடம் பிடித்து விட்ட பிறகு
விடையளிக்காமல் விலகிட முடியுமா ?
சமர் வெற்றிகள் மட்டுமல்ல ;
சமரச உடன்பாடுகள் –
பெண் எடுத்தல் கொடுத்தல் எனும்
கொள்வினை கொடுப்பினைகள்
மூலமும் – மூளையைப் பயன்படுத்தி
சோழ தேச நிலப் பரப்பைக்
கட்டுக் காவலுடன் காத்து நிற்பதற்கு
இராசராசனும் ஓர் இணையற்ற வழிகாட்டியன்றோ ?
அவன்தானே அன்றைக்குத் தனது
அருமை மகள் இளைய குந்தவைக்கும்
சாளுக்கிய மரபு வழித் தனயான வீரன் விமலாதித்தனுக்கும்
மரபு வழிக் கலப்பு மணவிழாவை நடத்தி வைத்தான் –
இருவருக்கும் பிறந்தவன் இராசராச நரேந்திரன் –
இவன் இராசராசனின் மகன் வழிப் பேரன்
முதலாம் இராசேந்திரனின் இரண்டாம் மகள் அம்மங்கை தேவி –
இவளும் இராசராசன் மகன் வழிப் பேத்தியாவதும்.
இராசராச நரேந்திரனுக்கும் அம்மங்கை தேவிக்கும்
பிறந்தவன் குலோத்துங்க சோழன் எனில்
சாளுக்கிய சோழர் குலமெனச் சாற்றுதற்குச்
சரித்திரம் சற்றேனும் தயங்குமா ; அதுவும் நமது
சமுதாயக் கோட்பாடு வளர்ந்து வரும் விதத்தில் ?
சாத்திரக் குப்பை மேடுகள் பெருகி வரும் காலத்தில் ?
★ ★ ★
தவழும் பருவத்திலேயே குலோத்துங்கன்
தடம் பார்த்துத் தவழுவதில் குறியாக இருந்ததாலே
தாத்தா போலவே தந்திரக்காரன் என்றும்
தவறியும் தோற்கும் வழி செல்ல மாட்டான் என்றும்
இளம் வயதில் இராசேந்திரன் என்றே ஊரில்
எல்லோரும் அழைத்தார்கள் ; அவன் பெயரை!
வேங்கி நாடு இளவரசன் ஆன போது
விஷ்ணுவர்த்தனன் எனும் பெயரை வைத்தனர்.
வேறு சிறப்புப் பெயர்கள் எத்தனையோ உண்டு ;
விருதராச பயங்கரன், கரிகாலன்,
