காலப் பேழையும் கவிதைச் சாவியும்
கவிதை 48 · 48 / 58
வங்காளத்து மிதுனபுரி மாவட்டத்தில்
தண்டபுத்தி நாடு தர்மபாலனை நோக்கியும்
சுழன்றது ; அதனால் அந்தப் பாலனின் முடி கழன்றது!
அடுத்து அடியெடுத்து வைத்து சோழர் சேனை ;
இரணசூரன் எனும் தெக்கண லாட மன்னன் பூமியில்!
மற்றுமோர் வங்க மாநில அரசன் கோவிந்தச்சந்தன்
வெற்றியைச் சோழன் காலில் வைத்தான்!
இன்னொருவன் இணையற்ற வீரன் எனும் மகிபாலன் –
இவனாட்சி காசி வரை பரவியிருந்ததெனினும் ;
இராசேந்திர, இராசாதிராசர் படைகளிடம் – காற்றில்
தூசி போல் பறந்து விட்டதாம்!
வாதாபி வெற்றியின் அடையாளமாக
பல்லவ தளபதி பரஞ்சோதி
எடுத்து வந்த சிலை ;
வாதாபி கணபதியாம்!
வடபுலத்து மன்னர் பலரை
வென்றதின் நினைவாக –
சோழர் தளபதி ; கொண்டு வந்த சிலைதான்
குடந்தை நாகேசுவரர் கோயில்
கங்கை விநாயகர் சிலை எனக்
கூறுவர் விளக்கம்!
ராசேந்திர சோழனின் கடல் கடந்த வெற்றிகளில்
கடாரம் வெற்றியே களிப்பினில் ஆழ்த்திய வெற்றியாம்.
அதைப் பற்றிய செய்திகளை அவனது மெய்க்கீர்த்திகளும்,
திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் இன்றைக்கும் கூறுமாம்.
தோற்றுப் போன வடபுலத்துப் படைவீரர் தலைகளில்
ஏற்றுக் கங்கை நீர்க் குடங்களை யென்றுரைத்து ;
அவ்வாறே அணி வகுத்து வந்தவர்களை –
கோவேந்தர்களாம் இராசேந்திரன் – இராசாதி ராசன்
இருவருமே வரவேற்க நீட்டினர் இரு கை!
இனி தலை காட்டுவோம் ஒரு பகை!
குருதிக்களமே;
கொலு மண்டபம் ஆனது!
இராசராச சோழனுக்கு
இராசேந்திரன் என்ற வீரப் பிள்ளையும்
இராசாதிராசன் என்ற பேரப் பிள்ளையும்
மூவரும் ஓரணியாகவும் தனித்தனி அணியாகவும்
போர் நடத்திய நாடுகளில் – தங்கள் தோள்களில்
புதிய புதிய வெற்றிகளை மட்டும் தூக்கி வரவில்லை ;
பொன்னும் பொருளும் முத்தும் பவளமும்
மின்னும் வைரமும்
இன்னும் விலை உயர்ந்த பொருள்களாகக்
கண்ணைப் பறிக்கும் அணிமணிகளும்,
குவியல் குவியலாய்க் கொண்டு வந்தது ; தங்கள்
குடியோ கொற்றமோ உயர்ந்திட அல்ல – தஞ்சைக்
கோபுரம், உயர்ந்திட – கங்கைச் சோழபுர
ஆலயம் ; ஆகாயமளாவ எழுந்திட, மற்றும்
ஆக்கப் பணிகளுக்கே அள்ளிக் குவித்தனர் செல்வத்தை,
அருண்மொழி வர்மனும் அவன் வழித் தோன்றல்களும்!
ஆடற்கலை வல்லார்க்கும் இசைவாணர்க்கும்
அன்பளிப்புகளும் ; அரச மாதேவியர் வழங்கிடத் தவறியதில்லை.
இதற்கிடையே இராசாதி ராசன் ;
இடையூறு விளைத்தவாறு இருந்த
சாளுக்கியரை வென்று அவர்களின்
தலைநகர் “காம்பிளி”யைக் கைப்பற்றி –
கிருஷ்ணையாற்று “பூண்டூர்” போரிலும்
அவர் படையைப் பூண்டோடு அழித்தான்.
இராசேந்திரனது இறுதிக் காலத்தில் சாளுக்கிய ‘ஆகவமல்லன்’
படையெடுத்துப் பார்த்து பலிக்காத காரணத்தால் ; சூது புரிந்து
நண்பனைப் போல் நடித்து நயவஞ்சகமாக
நாட்டைச் சுருட்டும் கேட்டைத் தொடங்கும்
சதிச் செயல் திட்டத்துடன் தூதுவர் சிலரை இராசாதிராசனிடம் ;
மதி மயக்கும் மாயமந்திர வாதிகளென அனுப்பி வைத்து ;
அவர்களால் ஆகாத காரியம் எதுவுமில்லை யென்று கூறி – அவர்
தம்
‘ஆசிர்வாதம்’ பெறுமாறு ஓலையொன்றும் எழுதி வைத்தான்!
வேள்வியும் யாகமுமே வெற்றிக்குக் கை கொடுக்குமென்று கருதி
– தன்
வீரத்தையும் விவேகத்தையும் நம்பாதவனல்ல என்பதால் ;
சூழ்ச்சிதனைப் புரிந்து கொண்ட இராசாதிராசன்
எதிரிக்கு ஏற்ற பதில் இது தான் என்று ; தூதுவராய்
வந்தோரில் இருவரைப் பிடித்து வைத்து,
ஒருவனுக்கு ‘அய்ந்து குடுமி’ வைக்கச் செய்தும்
அடுத்தொருவனுக்கு “அரவாணி” பெண் வேடம் போட்டும்
அவர்களிருவருக்கும் ; “ஆகவமல்லன்”, “ஆகவமல்லி” எனப்
பெயர் வைத்து ஆகவ மல்லனிடமே அவர்களை அனுப்பி
வைத்தான்!
ஆத்திரமும் அவமானமும் தாங்காமல் ஆகவமல்லன்,
“போர்! போர்!” என்று முழங்கிக் கொண்டே
‘பூண்டி’ எனுமிடத்தில் இராசாதிராசனுடன் மோதினான்.
அதன் விளைவு ஆகவமல்லன் வீழ்ச்சியுற்று; கல்யாணபுரத்தையும்
கைப்பற்றிக் கொண்டான் இராசாதிராசன்; “விஜய இராசேந்திரன்”
எனும்
வீரம் கொழிக்கும் பட்டத்தையும், அந்தக் களத்திலேயே சூடிக்
கொண்டான்.
வீராபிஷேகமும் அங்கே நடத்தப்பட்டு; வாயிற்காவலர்
சிலையொன்றும்
வழங்கப்பட்டது வெற்றிக்கான அடையாளப் பரிசாக! அந்த
வச்சிரச் சிலையின் பீடத்தில் “கலியாணபுரம் வென்று கொணர்ந்த
துவரபாலகர் சிலை” என எழுதப்பட்டிருந்தது ; இன்னமும்
தஞ்சைப் பெரிய கோயிலில் அந்தச் சிலை இருக்கிறதாம்!
இதற்கு முன்பு அச்சிலை ; தாராசுரம் அயிராவ தேசுவர்
ஆலயத்தில் இருந்ததாகக் கூறுவர் ; ஆய்வாளர்கள்!
★ ★ ★
‘விஜய ராசேந்திர’ விருது பெற்ற மகிழ்ச்சியுடன் மமதையும் சிறிது
கொண்டு
பகைவன் எனினும் பண்போடு அணுகாமல்; இராசாதிராசன் ;
ஆகவமல்லனின் தூதர்களை அய்ந்து குடுமி வைத்தும்,
அரவாணி வேடமிட்டும்
அநாகரிகமாக நடந்து கொண்டது சோழர் வரலாற்றில் ஒரு ‘கறை’
தான் என்பேன்!
விஜய இராசேந்திரனால் வெகுவாக அவமானமுற்ற
சாளுக்கிய ‘ஆகவமல்லன்’ சபதம் செய்து கொண்டு
எப்படியும் எதிர்த்துப் போர் புரிந்து, அவனை
வீழ்த்திக் கொல்வதற்கு விபரீத யோசனைகளில் ஈடுபட்டான்.
அவசரப்படாமல் ஆற்ற வேண்டும்
அந்தக் காரியத்தை என்றெண்ணி,
கி.பி. 1054 ஆம் ஆண்டு வரையில்
இராசாதிராசனைப் பழி வாங்கக்
காத்திருந்த ஆகவமல்லனாம் சாளுக்கியன்
சரியான சமயம் பார்த்து சதியை மீண்டும் தொடங்கினான்.
இன்று “சித்திரா பூர்” என அழைக்கப்படும்
கிருஷ்ணா நதி வலது கரையிலமைந்த “கொப்பம்” எனும் களத்தில்
பெரும்படை தயாரிப்புடன் இராசாதிராசனாம்
விஜய இராசேந்திரனை வீழ்க்க வகுத்து வளைத்தான்.
இரு தரப்பிலும் இடி முழக்கப் போர்!
ஆகவ மல்லனின் படை வீரர் அனைவரும்
விஜய இராசேந்திரனையே சூழ்ந்து கொண்டு
பழி வாங்கும் பணியை நிறைவேற்றிட
அவனை மட்டுமே குறி பார்த்துக் கணைகளை ஏவினர்
வாட்களை வீசினர் ; ஆகவமல்லனின் படையினர்!
பட்டத்து யானை மீதமர்ந்து போர் புரிந்த
வீராதி வீரன் வில்லில் விஜயன் எனப் புகழப்பட்ட
இராசாதி இராசன் யானை மீதிருந்தே
சாய்ந்திட நேரிட்டது ; சரமாரித் தாக்குதலால்!
சரிந்தான், சாய்ந்தான், சமர்களத்தில்
விழுப்புண் பட்டு வீர மரணம் எய்தி ; எந்நாளும்,
விழாப் புகழுக்கு உரியவனானான்.
