காலப் பேழையும் கவிதைச் சாவியும்
கவிதை 47 · 47 / 58
எம்மதமும் சம்மதம் எனும் கருத்துடன் வாழ்ந்த
இராசராசன்; சைவ மதத்தின் பால் தனி ஈடுபாடும்
எல்லா மதத்தினரையும் அரவணைக்கும் நிலையும் எடுத்து
நல்லார் எம்மதத்தினராயினும் அவர்களை ஆதரித்து மகிழ்ந்தான்.
அவன் அக்காள் குந்தவை நாச்சியாரே;
தாதாபுரம் எனுமிடத்தில்
சைவர், வைணவர், சமணர் என
மூன்று சமயத்தினருக்கும்
நிறைவு ஏற்படும் வண்ணம் மூன்று ஆலயங்களை அவரே
முன்னின்று எழுப்பியுள்ளார் –
★ ★ ★
தந்தை வழியை தவறாமல் கடைப்பிடித்து தமிழ் மக்கள்
சிந்தையில்
இடம் பெறுவேன் என்று சூளுரைத்து; தன் முன்னோர்
தாள் பணிந்து வாள் பிடித்த இராசேந்திர சோழன்
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தியிருப்பச் செயல்
மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை
எந்நோற்றான் கொல் எனும் சொல் – எனும்
அய்யன் திருவள்ளுவரின் இரு குறளுக்கும்
இலக்கண உருவாய்த் திகழ்ந்து
மகன் இராசேந்திரன் ஆட்சி நடத்திய காட்சி கண்டு
மாவீரன் இராசராசன் மனம் பறி கொடுத்தான்
கலை இலக்கியத்திற்கு இருவரும் வழங்கிய
மலையளவு ஆதரவு; ஒரு புறம்
ஆத்திகத்துக்கு அரணாக அமைந்தது எனினும் –
ஆடற்கலையையும் பாடல் கலையையும்
அழியாத சிற்பக் கலையாகவும்
அழகிய ஓவியக் கலையாகவும்
படைத்தளிப்பதற்கு அவர்கள் ஆற்றிய
பணியும் பார் புகழ் பணியே ஆகும் –
அவைதான் தஞ்சை ராஜராஜேச்சரமும்
அதற்கிணையான கங்கை கொண்ட சோழபுரமும் ஆகும்!
களம் பல கண்டனர்;
கடற்போரிலும் வென்றனர்!
தாய் எட்டி பாய்ந்தால்
குட்டி பதினாறு அடி பாயும் – இந்தப்
பழமொழி; தந்தை இராசராசன் –
தனயன் இராசேந்திரன் –
இருவரையும் பொருத்த ஈடற்ற
எடுத்துக்காட்டாகவே அமைந்து விட்டது!
இராசாதிராசச் சோழன், தனது
ஆட்சியின் இறுதிக் காலத்தில்தான்
மகன் இராசேந்திரனுக்கு
மகுடம் சூட்டி மன்னராக்கினான்.
இராசேந்திரச் சோழனோ;
ஆட்சியில் அமர்ந்த
ஏழாம் ஆண்டிலேயே
நாடாளும் நாயகன் பொறுப்பை
இளைய மகன் இராசாதிராசனுக்கு
வழங்கி; வரலாற்றில் ஒரு
திடுக்கிடும் திருப்பம் ஏற்படுத்தினான்.
மகனும் தந்தையுமாக சோழ
மண்டலத்தை இருபத்தி ஐந்து ஆண்டுகள்
இணைந்தே ஆட்சி நடத்தினர் என்பது;
இந்திய நாட்டுச் சரித்திரத்தில்
இதுவரை காணாத புதுமை!
இன்னும் சொல்லப் போனால் ;
இராசாதி இராசன் இளவரசன் பொறுப்பில்
இருந்து நடத்திய போர்களை வரலாற்றாசிரியர்கள்
இரண்டு பகுதிகளாகப் பிரித்து வழங்கிடுவர்.
இரு பகுதிப் போர்க்களங்களிலும்
தந்தைக்குத் துணையாகவும் – இணையராகவும்
ஒன்றிரண்டில் தந்தையை மிஞ்சியவனாகவும்
இளைய மகன் இராசாதிராசன் புகழ் பெற்றான்.
இடைத்துறை நாட்டுப் போர் – இது
இரு நதிகள் கிருஷ்ணா, துங்கபத்திரைக்கு
மத்தியில் உள்ள சமவெளி; இன்றைய “ரெய்ச்சூர்”;
இங்கே முதல் வெற்றி இராசேந்திர சோழனுக்கே!
கங்கவாடிக்கு வடக்கே – நுளம்பாடிக்கு மேற்கே
பொங்கியெழுந்த மேலசாளுக்கியர் படையை;
கொதிக்கும் உலையில் நீர் தெளித்து அடக்குதல் போல
துதித்துத் தொழுதிட வைத்தான் பகையை!
ஆந்திரத்து அய்தராபாத்துக்கு வடகிழக்கில்
அன்றைய ‘கொள்ளிபாக்கை’ இன்று “குல்பர்கா”
கூளி முறிப்பது போல் சோழன் படை முறித்துப் போட்டு
அள்ளிக் கொண்டு வந்தது அடுத்தடுத்து வெற்றிகளை!
‘மண்ணைக் கடக்க’மெனும் இராட்டிரகூடர் தலைநகரை வீழ்த்தி
‘மண்ணை கொண்ட சோழன்’ எனும் மாப்புகழும் பெற்றான்.
கி.பி. 1017 ஆம் ஆண்டு இராசேந்திரன் படை ;
அய்ந்தாம் மகிந்தன் எனும் இலங்கை வேந்தனை –
முற்றுகையிட்டுப் போர் தொடுத்து – முன்னேறியது!
முன்பொரு முறை இராசராசனிடம் முதுகு காட்டி ஓடிய
அந்த ஈழவேந்தனை வென்று காட்டி – அவன்
பறித்து வைத்திருந்த பாண்டியரின் மணிமுடியை
மீட்டுக் கொடுத்த பெருமையும் – அவனைச் சோழ தேசக்
கைதியாகப்
பூட்டி வைத்த பெருமையும் இந்த இருவர்க்கும் உண்டு!
இவ்விதமாக ஈழப் போரில்
சோழர் படையின் வெற்றியை;
மகாவம்சம் சுட்டிக் காட்டும்; தமிழ்
மாவீரர் புகழை நிலைநாட்டும்!
ஈழத்தில் புலிக்கொடி பறக்க விட்ட
சோழப் பேரரசு; பாண்டிய நாட்டின் மீதும்
படை கொண்டு பாய்ந்தது!
அரசர்க்கரசன் இராசராசன் காலத்திலே
அடிமைப்பட்டிருந்த வல்லப பாண்டியன்,
இப்போது வணங்க மறுத்தோ என்னவோ
எதிர்த்துச் செயல்படுகிறான் எனக் கேட்டு; அவன்
இடுப்பொடித்துப் போட்டது சோழர் படை; என்பதை
‘காந்தளூர்ச் சாலையில் கலம் அறுத்தான்’ எனும்
கல்வெட்டு சொல்லிக் காட்டுகிறது!
★ ★ ★
போர்க்களங்கள் பல கண்ட இராசேந்திர சோழன்
கங்கை கொண்ட சோழன் என வீர விருது பெறவும் –
அதற்கு அடையாளமாக கங்கை கொண்ட சோழபுரம் என்று
வெற்றிச் சின்னம் ஒன்று அமைக்கவும் –
தலையாய காரணமாக விளங்கிடுவதுதான் – அவனது
தலையாயப் படையெடுப்பான கங்கைப் படையெடுப்பாம்!
வேங்கி நாடு தொடங்கி, சக்கரக் கோட்டத்துப் போர் முடிவில்
ஓங்கி உயர்ந்தது சோழனின் புலிக் கொடி!
நாமணைக் கோணமும், பஞ்சப் பள்ளியும்,
சிந்து நதிக் கரையில் மாசுணி தேசப் பகுதியும்,
மகா கோசலமெனும் தென் கோசலத்தின்
ஒட்டர தேசமும், மகாநதிக்கரையினை
ஒட்டியுள்ள பகுதிகளையும் வென்று ; பகைவரிடம்
பெட்டி பெட்டியாக பன்மணிக் குவியலைத்
திறை கொண்டது சோழர் படையென
திருவாலங்காட்டுச் செப்பேடு செம்மாந்து பேசுகிறது.
அந்தச் செப்பேடு தான் – நம் செந்தமிழ்ச் சோழன் ;
கங்கையாற்றைக் கடந்திட
பல நூறு யானைகளை வரிசையாக நிறுத்தி
பாலமாக அமைத்து ; அதில் படையை நடத்தி –
மறுகரை சென்றான் என்றும்
மாற்றாரை வென்றான் என்றும் இன்னும் கூறும்!
பண்டாரத்தார் கூறுவார் ;
பூர்வ தேசமெனும் கோசலப் பகுதியும்
போர் முனைப் பரிசாக சோழர்க்கே கிடைத்ததென்று!
எங்கனும் வெற்றி வெற்றி எனச் சுழன்ற வாள்;
