உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

காலப் பேழையும் கவிதைச் சாவியும்

கவிதை 46 · 46 / 58

அக்கலைகளைப் பரப்பியவனாய் –

வீரம் விளைத்தவனாய்; வெற்றிகள் குவித்தவனாய்;

வேளாண்மையில் விருப்பமுற்று

நிலவளம் செழிக்க

நீர் வளம் கொழிக்க

ஆறுகள் வாய்க்கால்கள்

ஆழமான அகலமான ஏரிகள்

அமைப்பதில் அக்கறையுடையவனாய்;

அவற்றை அடிக்கடி தூர்வாரி

சீரமைப்புச் செய்து

பயிர் விளைக்க பயன்படப்

பணி தொடர்பவனாய்,

பாழ் வெள்ளம்

புயற் காற்று

பாதிக்காமல் மக்களைப்

பாதுகாப்பவனாய்;

பல்லாண்டு காலம் ஒருவன் வாழ்ந்தான்

படை நடத்திப் பகை அகற்றினான் –

அவன் நல்லவன்

வல்லவன் –

அதனினும்; நமக்கு மகிழ்ச்சி தருவது

அவன்

“நம்மவன்”

என்பதேயாகும்.

நம்மவர்கள் எல்லாம்

நல்லவர்களாக

வல்லவர்களாக வாழ்ந்திட

அந்த வரலாறு வழங்கிட

வருங்காலமே தமிழர்க்கு அருங்காலமாகும் –

அது வருங்காலமாகவே இருக்கட்டுமே!

அழியாத சிற்பக் கலையும்,

அழகிய ஓவியக் கலையும்!

இராசராசன் ; தன் தந்தையாம் இரண்டாம் பராந்தகன்

இயற்கை எய்திய பிறகு ; தமையனாம் ஆதித்தனும்

சதியினால் சாய்ந்த பிறகு ; சரியாகவோ, தவறாகவோ – அதில்

சம்பந்தப்பட்டதிப் பேசப்பட்ட மதுராந்தகன் மகுடம் புனைந்து

மரணமுறும் வரை ஆட்சி செய்து ; அந்த மூவருக்குப் பின்னரே

மன்னராக முடிசூடிக் கொண்டான் என்கிறபோது ;

என்ன இருந்தாலும் வயது அவனுக்கு கி.பி. 985இல் ;

நாற்பதுக்கும் அய்ம்பதுக்கும் நடுவில்தான் இருக்க வேண்டும்!

அவனும் முப்பதாண்டு ஆட்சி நடத்திய பிறகே; இராசேந்திர

சோழன்

அரசப் பொறுப்பு ஏற்றான் எனில் அவன் வயது, அப்போது

அய்ம்பது என;

ஆய்வு செய்து எழுதுகிறார் அறிஞர் இராசமாணிக்கனார்!

அவனுக்கும் ஆட்சிக்கு வந்த ஆண்டு – கி.பி. 1012 என்று மட்டுமே

தெரிகிறது.

மார்கழித் திங்கள் திருவாதிரை நாளில் பிறந்தான் – மற்ற விபரம்;

அந்த

மன்னாதி மன்னர் குடும்பத்தில் எதுவுமே இல்லை!

தந்தைக்குச் சதய நாளும், தனயனுக்கு திருவாதிரை நாளும் – இத்

தரணியில் “அவதரித்த” நாள்கள் என்று மட்டும்

கண்டுபிடித்துவிட்டார்கள்!

தனயன் இராசேந்திரன் ஆட்சி பீடம் ஏறிய பிறகே; இயற்கையாகத்

தந்தை இராசராசன் மறைவுற்றான் எனினும்; மறந்தே போனது

அந்த நாளும் –

வரலாற்றில், என்கிற போது; மனம் புண்ணாகித் தான் போகிறது!

நல்ல வேளை;

வரை மறந்தார் முன்னோர்; தேதிகளை எனினும்; சேதிகளை

மறக்கவில்லை!

மாதமும் நட்சத்திரமும் சொன்னால் மட்டும் போதுமா ? ஒவ்வொரு

மாதமுந்தான், நாள், நட்சத்திரம் வரும், போகும்; பரவாயில்லை;

நமது பழைய கால

மாளிகைகள்; பிறந்த நாள், இறந்த நாளை மறந்து விட்ட வரலாற்று

மகிமை கொண்டவைகள்! மறைவாய்ப் புதைத்த

ஒடுக்கலாகிவிட்டவைகள்!

சரி, போகட்டும்; சரித்திரமாவது – கிழிந்த துண்டாகக்

கிடைத்ததே; அதற்கும்

தரித்திரம் வராமல் – அதனால் ஆறுதல் அடைந்து, தொடர்வோம்!

★ ★ ★

இராசராசன் காலத்து சோழ நாடு,

தஞ்சையைத் தலைநகராய்க் கொண்டு –

வடக்கில் துங்கபத்திரையும்

வடகிழக்கே வேங்கி நாடும்,

தெற்கே ஈழத்தின் மையப் பகுதியும் – இன்றைய

தென்னாற்காடு, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டையென

எல்லைகளைக் கொண்ட பண்டைய சோழ மண்டலமாக அமைந்து

தொல்லைகளைத் தவிர்த்திடும் வகையில் ‘வளநாடுகள்’ பல

உருவாயின.

வள நாட்டின் உட்பகுதிகளும் நாடுகள் என வழங்கலாயின –

‘பாப்பா நாடு’ ‘உறத்த நாடு’ எனப் பட்டியல் நீளும் –

அரசனுக்கு உதவி செய்திட அமைச்சர்கள் கொண்ட குழு –

‘பெருந்தரம்’, ‘சிறு தரம்’ எனப் பிரிவுகளைச் சார்ந்த

அரச அதிகாரிகளும் அவர்களுக்கு அடுத்த நிலை அதிகாரிகளும்

அவர்களுக்கெனத் தனி ஊதியம் பணமாகப் பெறாமல்

நிலங்களை மானியமாகப் பெற்று; அதில் கிடைக்கும்

பயனையே அந்த ஊழியர் ஊதியமாகப் பெறுவர்.

அதிகாரிகளின் நேர்மை, நாணயம் அருஞ்செயலைப் பாராட்டி

அவர்களில் சிலருக்கு நிலத்தை இறையிலியாக வழங்குவதும்

உண்டு.

‘நாடு’ எனப்படும் ஒவ்வொரு பகுதியும் – ஒரு

காவல் அதிகாரியின் கண்காணிப்பில் இருந்தது.

நாடு முழுதும் எவ்வளவு நிலங்கள் என அளந்து கணக்கிட்டு,

காடு மேடு கழனி என தரம் பிரித்து நிலவரி ஒழுங்குபடுத்திட ;

உத்திரவு பிறப்பிக்கப்பட்டு அது உடனடியாகவும் நடைமுறைக்கு

வந்தது.

“உலகளவித்த திருவடிகள் சாத்தன்” என அதிகாரி பெயரை

அறிவித்திடும்

கல்வெட்டு ஒன்று; கருவூரில் காணப்பட்டதாகக் குறிப்பு உண்டு!

கடல் போல் காட்சி தரும் ஏரிகளும் சோழ மன்னர்

அருட்கொடைகள்தான்!

ஊர் தோறும் மன்றங்கள் அமைப்புப் பெற்று நான்கு வகை

ஊராட்சி மன்றங்கள் ஆங்காங்கு தேர்தலில் உருவாக்கப் பெற்று,

ஊடே புகுந்த உயர்சாதி ஆதிக்கத்தினால் – அந்த

ஊராட்சிகள்; “சதுர்வேதி மங்கலசபை” என்றும்,

“தேவதான மன்றங்கள்”, “பிரமதேயச் சபை” என்றும்

“பிராமணரல்லாதார் தேர்வான ஊர் மன்றங்கள்” என்றும்

கதையொன்றும் கட்டவில்லை; கல்வெட்டுச் சான்றுகளைத்

காட்டுகின்றார் ஆய்வாளர் – என்கிறேன்! இந்த

அடித்தட்டு ஊராட்சி முறையில், இராசராசனுக்கு –

அறுபது ஆண்டுக்கு முன்பே அரசோச்சிய;

பராந்தக சோழனுக்கும் பங்குண்டு என்று

‘உத்திரமேரூர்க் கல்வெட்டு’ம் உரிமை கொண்டாடும்.

வாரியங்களும் அமைத்தனர் – பொதுக்

காரியங்கள் நடத்திட!

ஒழுக்கம், பண்பு, நாணயம், நேர்மையில்

ஒரு துளி இழுக்கு என்றாலும் அவர் பெயர்;

குடவோலையில் குறிப்பிடப்படக் கூட முடியாமல்

உடனடியாகத் தகுதியிழப்பர் –

தக்காரே தேர்ந்தெடுக்கப்படுவர் –

தகவிலார் தள்ளப்பட்டு விடுவர் –

ஏரி வாரியம் என்றும் கழனி வாரியம் என்றும்

கணக்கு வாரியம் என்றும் – கலிங்கு வாரியம் என்றும்

மக்கள் கடமையாற்றும் வாரியங்களில்

மாசு மறுவற்றோரே பொறுப்பு வகிப்பர் –

ஊராட்சிகளை ஒன்றியமாக அமைத்து முதலில்

சீராட்சி நடத்தியவனும் இராசராசன் தான் –

முதல் பதிப்பு: ஜூன் 2006 — தமிழ்க்கனி பதிப்பகம் / பூம்புகார் பதிப்பகம், சென்னை