உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

காலப் பேழையும் கவிதைச் சாவியும்

கவிதை 45 · 45 / 58

“கீர்த்தி பராக்கிரம சோழன்” என விருது பெற்று

வெற்றியும் பெற்று அந்தத் திருமகன் திரும்பினான் தஞ்சைக்கு!

★ ★ ★

அன்றைய மைசூரில் ஒரு பகுதி கங்கபாடி

அதற்கப்போது தலைநகர் தலைக்காடு -

அரசர்க்கரசன் இராசராசன் காவிரி தாண்டினான் முதலில்!

அடுத்து கங்கபாடியில் நுழைந்தான் ; படையுடன்!

அதனையும் கைப்பற்றி,

அத்துடன் தடிகைபாடியையும் தன்னாட்சிக்குக் கீழே

கொண்டு வந்து - கொடி நாட்டினான் - சோழர்

கொற்றம் தழைத்தது ஆங்கே!

★ ★ ★

கீழைச் சாளுக்கிய நாடு பெருங்குழப்பத்தில் தவித்ததாலே ;

பகையைச் சமாளிக்க முடியாமல் சக்தி வர்மன் என்பான் ;

பயந்து, சரணடைந்தான் இராசராசன் முன்னிலையில்!

படையுதவி புரிந்து வேங்கி நாட்டை வீழ்த்தி

வெற்றிக் கொடியை ஏற்றிய சோழன் ;

பற்றிக் கொள்க இதனையென்று - தன்

கருணைக் கரம் நீட்டினான்.

பற்றிக் கொண்டான் சக்தி வர்மன் -

அதன் பிறகும் இராசராசன் தனது மகள்

குந்தவையை - சக்தி வர்மன் தம்பி விமலாதித்தனுக்கு

மணமுடித்து; பலம் பெருக்கிக் கொண்டான் வேங்கி நாட்டில்!

அவன் இராசராசன் மட்டுமல்ல ; அரசியலில்

அவன் இராச தந்திர ராசனுங்கூட என்பதை

இத்திருமணம் தெரிவித்தது!

★ ★ ★

கலிங்கத்தை வென்றான் என்றும் ;

இலங்கையிலும் ஒரு பகுதியை கைப்பற்றினான் என்றும் ;

கல்வெட்டுக்கள் வெற்றிக் கவிதைகளை

விண்முட்டப் பாடுகின்றன.

★ ★ ★

இராசராசனின் வெற்றி வரலாற்றில்

இமயச் சிகரமாக “இலட்சத் தீவு”களைக்

கைப்பற்றிய நிகழ்ச்சி அமைகிறது எனலாம் ;

கி.பி. 1013ல் அவன் கடற்படை யொன்று கண்டான்.

அப்படையைப் பயன்படுத்தாமலே ‘அத்தீவுகளை’ வென்றான்

தந்தை தொடங்கிய அம்முயற்சிதான் பின்னர்

தனயன் இராசேந்திரனின் கடற்படைப் போர்களில்

வெற்றிகளைக் குவித்திட முன்னோட்ட முயற்சி எனலாம்.

வெற்றி குவிக்கும் படை வரிசைகளும் - எதிரியின்

நெற்றிப் பொட்டில் அடித்து விரட்டும் பாசறைகளும் -

பயிற்சி பயிற்சி என எந்நேரமும்

தளர்ச்சியின்றி வீரக்கட்டுப் பயிற்சி தரும்

தளகர்த்தர்களும் கொண்ட அந்தத் தமிழன் சேனையில்

வேளக்காரர் படையென ஒன்றும் உண்டாம் -

அந்தப் படையினர்; தமது அயர்வால் அரசர்க்குச் சிறு

ஆபத்து விளைந்திடப் பார்த்தாலும்; தம்முயிரை மாய்த்துக்

கொள்ளத்

தயாராக இருக்கும் தற்கொலைப் படையினர் ஆவர் ;

தஞ்சை மன்னன்பால் நெஞ்சம் முழுமையும் பறிகொடுத்தவர் அவர்!

★ ★ ★

தஞ்சைப் பெரிய கோயில் கோபுரம் ;

தமிழகத்திற்கு இராசராசனின் நினைவுக் கொடை எனப்

புகழ்கிறோம் - போற்றுகிறோம் - நிலைத்த கொடையும்

அதுவேதான்!

அதிலும் ஒரு குறை ; கோயில் கட்டினான் என்றல்ல ; ஒரு

கோட்டையிலிருந்து தானே அந்தக் கோயிலைக் கட்டினான் ;

கோயிலிருக்கிறது - கோட்டை எங்கே?

இந்த வினா; தஞ்சையில் மட்டுமல்ல -

தமிழக முழுவதுமே; எழுகின்ற ஏக்க வினா!

நல்லவேளை நமது மன்னர்களும் - அவர்தம்

வழித்தோன்றல்களும் - அந்தக்

கல்வெட்டுக்களையும் ஆவணங்களையும் -

அக்கால இலக்கியங்களையும்

காத்தளித்தாவது நம் வரலாற்றை அறவே அழியாது;

வைத்துள்ளனரே என்றெண்ணிப் பூரிப்போம் -

குடிமக்கள் நலனுக்கு கோவேந்தன் இராசராசன்

படிப்படியாக தீட்டிய திட்டங்கள் -

ஆட்சி முறை - அதற்கான அமைப்பு முறை - அனைத்தும்

மாட்சிமை நிறைந்தது எனினும் ; வடமொழி ஆதிக்கம்

மேலோங்கி,

தாய்மொழி தமிழ் தவித்திடும் நிலை பிறந்தது ;

இவ்வாறு தமிழ்க் குலம் தாங்கிக் கொண்ட

குறையிருந்தது எனக் கூறினாலும், அது

பாலில் மோர் கலந்தது போலத்தான்!

உழைப்போர்க்கு, உழுவார்க்கு இன்னும்

நலன்பல புரிய முனைந்திருக்கலாம்

மன்னர்களுக்கு ; மகேசன் தொண்டு அதிகமானதால்

மக்கள் தொண்டு ; சிறிது படுத்துக் கொண்டது போலும்!

அது காலத்தின் குறை என்பர் ;

காவலன் குறையெனக் கூறுவதே பொருந்தும்!

“காலத்தின் குறையையும் ஒழுங்குபடுத்தி

காவலன் நிறை காண வேண்டும்” என்பதுதானே நல்லோர்

கருத்து.

அக்கருத்து தான் மூலக் கருத்து எனினும் -

அக்கால முதல் இக்காலம் வரையில் - ஓர்

அரசின் வலிவுதான் - பொலிவுப் பட்டியலில்

ஆரம்ப வரிசையில் அமர்ந்து கொள்வதால் -

அதற்கே முதலிடம்

வழங்கப்படுகிறது வரலாறுகளில்!

இதோ இராசராசன்

அமைத்தளித்துள்ள

அந்தத் தஞ்சை ஆலயம் கூட

காட்டுகின்ற கல்வெட்டு கண்டால்,

“திருமகள் போலப் பெரு நிலச் செல்வியும்

தனக்கே யுரிமை பூண்டமை மனக்கொளக்

காந்தளூர்ச் சாலைக் கலமறுத் தருளி

வேங்கை நாடுங் கங்க பாடியுந்

தடிகை பாடியும் நுளம்ப பாடியும்

குடமலை நாடுங் கொல்லமுங் கலிங்கமும்

முரட்டொழிற் சிங்கள ஈழ மண்டலமும்

இரட்டபாடி யேழரை இலக்கமும்

முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரமுந்

திண்டிறல் வென்றித் தண்டாற் கொண்ட தன்

நெழில்வள ருழியு ளெல்லா யாண்டும்

தொழுதக விளங்கும் யாண்டே செழியரைத்

தேசு கொள் கோராச கேசரி வர்மரான

உடையார் ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு”

இந்தப்

பன்னிரண்டு நாடுகளை வென்றான்

இவற்றைத் தன் குடைக் கீழ்க் கொணர்ந்தான்.

அவற்றின் காவல்களாம்....

செழியன், சேரன், மகிந்தன், உதகை அரசன்,

குடமலை நாட்டு மன்னன், நுளம்பப்பாடி அரசன்,

கங்கபாடி மன்னன், தடிகைப்பாடி அரசன், சத்தியாசிரியன்,

தெலுங்க வீமன், சக்தி வர்மன், கலிங்க மன்னன்,

முந்நீர்ப் பழந்தீவுகளின் அரசன், பழுவேட்டரையர்,

கொல்லி மழவன் ஒற்றியூரான் பிருதிகண்ட வர்மன், திருவையன்

சங்கர தேவன், கொடும்பாளூர் வேளான் சுந்தர சோழன்,

நன்னமரையன், வீர சோழன் இலாடப் பேரரையன்,

இராசராச வாணகோவரையன், மலையமான்,

வல்லவரையன் வந்தியத் தேவன், விமலாதித்தன்

என்று தான் விளக்கப்பட்டியல் இருக்கிறது; அவன் விரல் நுனியில்!

எது எப்படியிருப்பினும் ;

எம்மரபும் தமிழகத்தில்

எல்லோரும் போற்றும் வண்ணம் ;

அனைத்துக் கலையிலும் சிறந்தவனாய் –

முதல் பதிப்பு: ஜூன் 2006 — தமிழ்க்கனி பதிப்பகம் / பூம்புகார் பதிப்பகம், சென்னை