காலப் பேழையும் கவிதைச் சாவியும்
கவிதை 44 · 44 / 58
கேட்பான்.
வந்து விட்டேன் என்று வந்து கொண்டே வந்தியத் தேவன்
சிரிப்பான் -
அக்காளின் கணவன் அரசின் மிகப் பெரிய அதிகாரி ;
அவன் குந்தவையிடம் ; என்ன எனக்கேட்டு கண் சிமிட்டுவான்!
அங்கிருந்து சற்று விலகிச் சென்று
குந்தவையும் தேவனும் அந்தரங்கம் பேசுவர் -
உரையாடல் நடைபெறும்போதே மகளிர் குழு ஒன்று
மகிழ்ச்சி பொங்க அங்கே வந்து சேரும் -
மகளிர் குழு என்றால் ; அது தான்
மன்னன் இராசராசனின் மனைவியர் கொண்ட குழு -
உலக மகாதேவி, சோழ மாதேவி, நக்கன் தில்லை அழகி,
பஞ்சவன் மாதேவி, திரைலோக்கிய மாதேவி,
அபிமான வல்லி, இலாட மாதேவி, பிரிதிவி மாதேவி,
மீனவன் மாதேவி, வீர நாராயணி, வானமாதேவி
இவர்களில் வானமாதேவிக்குக் கிடைத்த பேறு ;
இராசேந்திர சோழனின் அன்னை என்பதாகும்.
அவனும் ; சோழ மாதேவி தொடங்கி ;
ஒரு சுற்று பதினொரு பேரிடமும் நலம் விசாரித்து விட்டு ;
பாட்டி செம்பியன் மாதேவி பாதம் தொழுது ;
ஈட்டி யொன்றை அவள் கையால் வாங்கிக் கொண்டு......
அவைக்க்களம் நோக்கி ஆலோசனைக்குச் செல்வான்
அன்றாடம் இது அருண்மொழி வர்மனின் அரசப் பணியாகும் -
அதற்கிடையே அவன் குடும்பத்திற்கென ஒதுக்கிடும்
நேரத்தில்தான்
அத்தனை சந்திப்புகள்! அன்பு உரையாடல்கள்! அனைத்தும்
களத்தில்
வீசப்படும் வாள்களின் வேகத்தில் ; வேல்களின் விரைவினைப்
போல்!
பரபரப்பு! சுறுசுறுப்பு! என்றோ ஒருநாள் இயற்கை அளித்தால் ;
இடைவேளை!
இப்படி இராசராசன் பம்பரமாய்ச் சுழன்றான் - பரிதியாய்க் கடமை
ஆற்றினான் -
இளைய மகள் குந்தவை ; விமலாதித்தன் மனைவி, வருவாள் -
அவள்
இல்வாழ்வு பற்றிப் பேச்சிருக்காது ;
இருவரும் ‘ராஜ்ய பாரம்’ பற்றியே விவாதிப்பார்.
வேலேந்தி விட்டால் களத்தில் அதற்குரிய வேலை தான் பார்க்க
வேண்டும் ;
கோலேந்தி விட்டாலும் ; குடிகளைத்தானே கவனிக்க
வேண்டும் -
குடும்பத்தையே கவனிக்க முடியுமா ?
முடியாது என்பதற்கு இந்த மும்முடிச் சோழனே முன்மாதிரியாகத்
திகழ்ந்தான்.
அந்த வருங்காலமே;
அருங்காலமாகும்!
எங்கேனும் கண்டதுண்டா ?
எவரேனும் சொன்னதுண்டா ?
இளவரசனாக பதினாறு ஆண்டுகளும்
நாடாளும் நாயகனாக முப்பது ஆண்டுகளும்
மொத்தம் நாற்பத்தி ஆறு ஆண்டுகளில் - மும்முடிச் சோழன்
என்றும், செயங்கொண்ட சோழன் என்றும்,
முறையே மண்டலப் பெயர்களையும், வளநாட்டுப் பெயர்களையும்
மற்றும் - சோழேந்திர சிம்மன், சிவபாதசேகரன், சிகாமணி,
ஜனநாதன், நிகரிலி சோழன், இராசேந்திர சிம்மன்,
சோழ மார்த்தாண்டன், இராசாசிரியன், இராச மார்த்தாண்டன்,
நித்திய விநோதன், பாண்டிய குலாசனி, கேரளாந்தகன்,
சிங்களாந்தகன், இரவிகுல மாணிக்கம், தெலுங்கு குல பாலன்
என்றும்......
இன்னும் இன்னும் எண்ணற்ற பட்டங்களும், விருதுகளும்,
சென்ற இடமெல்லாம் வெற்றியும் ஈட்டித் தந்து
தமிழகப் பேரரசு ஒன்றை முன்னூறு ஆண்டுகள் நிலைபெறச் செய்ய
அடித்தளமிட்ட அந்த வீராதி வீர - வெற்றித் திருமகனுக்கு -
அவன் பிறந்த ஆண்டு எதுவென்று ;
அவனுக்கும் தெரியாது - அவன் வீட்டுக்கும் தெரியாது.
நாட்டுக்கும் தெரியாது - அதை நம்பத்தான் முடியவில்லை.
நம்ப முடியாதவைகளும் நடப்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு!
களம் பல கண்ட அவன் நிகழ்ச்சிகளுக்கு
கல்வெட்டுச் சான்றுகள் கணக்கிலடங்காதவை உண்டு -
அமைத்திட்ட ஆலயங்களுக்கும்
ஆவணங்கள் பல உண்டு -
அவன் அரசு நிர்வாகம், ஆட்சி முறை
செங்கோல் சிறப்பு பற்றிக் கூற செய்திகள் உண்டு.
ஆனால் அகிலத்தை உலுக்கிய அலெக்சாண்டரினும்
ஆற்றல் மிக்கவனாய் உறுதிபடைத்தவனாய்
புகழ் செதுக்கிய அந்தப் பூபதிக்குப்
பிறந்த நாள் மட்டும் குறிப்பிடப்படாமலே போய்விட்டது!
ஆண்டு எதுவென அறியாத நிலையில் ஐப்பசி திங்கள் சதய நாளில்
அவன் பிறந்தான் என்ற குறிப்பு மட்டுமே உள்ளது -
அந்த அடிப்படையில் இராசராசனின் சதய விழா
ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
கல்வெட்டுகள், சாசனங்களில் குறிப்புகள் வரைந்து
சோழரின் பேரரசு காலத்து நிகழ்வுகளை செதுக்கி வைத்த
மன்னவனுக்கு; அவனுடன் இருந்தவர்களோ; அவன்
மக்களாகப் பிறந்தவர்களில்
எவருமே உருப்படியாக யோசித்து, அவன் மறைந்த நாளை
எழுதி வைக்கவும் மறந்து விட்டனரே!
எதிர்காலச் சொத்தாக அவற்றை எடுத்துக்காட்டவில்லையே என்பது
ஏமாற்றத்துக்குரியதுதான்; அதற்கு நாம் தலைகுனிய
வேண்டியது தான்!
பிறந்த நாள் குறிப்பு இல்லாமையினால் ஒருவர்
பிறக்கவே இல்லையென்று ஆகி விடுமா ?
கார்காலம் கனமழை பொழிவது குறிப்பாக எந்த மேகத்திலிருந்து
எனக் கணிக்க முடிகிறதா ?
நிரம்பியுள்ள - ஏரி குளங்களைக் கண்டு தானே
நிச்சயிக்கிறோம் பெருமழை பெய்ததை!
அது போலத் தான் பேரரசு ஒன்று அமைந்ததை வைத்து
இராசராசன் பெருமையைக் கணக்கிட்டுப் புகழ்கிறோம் -
அவன் நடத்திய போர்களை எண்ணி வியப்புறுகிறோம் -
அவன் பெற்ற வெற்றிகளை நினைத்து நெஞ்சமிக விம்முகிறோம்....
மேகத்தை மறந்தாலும் மழையை மறக்காதது போல் - அவன்
பிறந்த நாளை மறந்தாலும் - பெருமைகளை மறந்தோமில்லை!
தமிழர்களைத் தனி மகிழ்ச்சி அடையச் செய்த ஆட்சியன்றோ
தரணி புகழ் இராசராசன் ஆட்சி!
நாடாள மகுடம் புனைந்த நான்காம் ஆண்டே
சேர நாட்டின் மீது படையெடுத்தது சோழ நாட்டுச் சீயம் -
அதற்குத் தலைமையேற்ற தளநாயகன்
பஞ்சவன் மாராயன் எனப் பெயர் கொண்ட
அஞ்சா நெஞ்சன் அருமைப் புதல்வன் இராசேந்திரச் சோழன்
அப்போரில் எதிர்த்து வந்தோர் சேர பாண்டியர்
அவர்களிருவரையும் வென்று காட்டிக்
குன்றமென நிமிர்ந்து நின்றதாம் சோழர் குலம்.
★ ★ ★
குடமலை நாட்டில் இராசராசனின் தூதன்; பெருமை குலைந்திட
நடத்தப்பட்டதாக குமுறியது சோழர் பெரும் படை -
‘மகனே; புறப்படு’ எனும் மன்னன் ஆணை கேட்டு
மாற்றாரை மண்டியிட வைத்தே திரும்புவேன் என்று
இராசேந்திர சோழன் எடுத்துப் பிடித்த வாளினைத்
தடுத்து நிறுத்த எவராலும் முடியவில்லை!
குடமலை நாடு பணிந்தது - குலுங்கச் சிரித்து ;
கோபம் தணிந்தது தஞ்சை!
★ ★ ★
கொங்கு நாடு கொடுங்காளூர் சிற்றரசர்கள்,
மேலைக் கடற்கரையை ஆண்டவர்கள்
அனைவருமே அடி பணியவும் அவர்தம் முடி
தாழ்த்தவும் தயாராயினர் -
தடையின்றி அங்கெல்லாம் எங்கு
நோக்கினும் சோழர் படை! சோழர் படை!
