உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

காலப் பேழையும் கவிதைச் சாவியும்

கவிதை 43 · 43 / 58

அனைத்துக் கலைகளிலும் மதுராந்தகன் பயிற்சி தந்தான் ;

ஒருவேளை ; செய்த குற்றத்துக்குப்

பரிகாரம் தேடும் செயலாகவும் இருக்கலாம்.

மறப்போம் பகை துறப்போம் சோழ

மண்டலத்துப் பலம் பெருக்குவோம்

எனச் சொல்லாற்றல் செயல்பட்டு

எப்பகையும் எதிர் நில்லாமல்

ஏறு நீ, ஏறு நீ, என எதிர்கால வெற்றிகளை நோக்கியே

முன்னேறி முடி சூடிக் கொண்டவன்

இராசராசன் கி.பி. 985 ஜூன் திங்கள்

இருபத்தி ஐந்தாம் நாள் -

பட்டத்திற்கு வருவதற்கு முன்பே இராசராசன்

பதினாறு ஆண்டுகள் இளவரசனாகப் பரிபாலனப் பயிற்சி பெற்று

அதற்குப் பின்னர் அவன் பட்டமேற்று முடி சூடிய

ஆண்டைக் கணக்கிட்டால் ; சுற்றொப்ப அகவை நாற்பதில் தான்

அரசாட்சியை நேரடியாக நடத்தலுற்றான்!

அதன் பிறகும் முப்பது ஆண்டுகள் ஆண்டு முடித்தான் ;

அவன் மகன் இராசேந்திரனும் அகவை ஐம்பதில்தான்

ஆயிரத்துப் பன்னிரெண்டாம் ஆண்டு ஆட்சி பீடம் ஏறுகின்றான் -

தந்தை இராசராசன் உயிர் வாழ்ந்த போதே தமிழர்

சிந்தை கவர்ந்த செல்வன் இராசேந்திர சோழன் மன்னனானான் -

தந்தையின் கைச் செங்கோலின் மகிமை ; வட திசையில்

கிருஷ்ணையாறு வரையிலும் பரவியிருந்தது என்றும் -

மேற்றிசையில் அரபிக் கடல் அலையும்

தென் திசையில் இலங்கைத் தீவும் -

எற்றிப் பணிந்தன இவ்விருவர் ஆட்சியை என்றும் -

வானளாவப் புகழ்ந்து வணங்குகிறது வரலாறு!

முன்மாதிரியாகத் திகழ்ந்த

மும்முடிச் சோழன்!

இராசராசன் ஆட்சிக் காலம் ; இன்பத் தமிழ் வளர்ச்சிக்கு,

இன நல பயிற்சிக்கு, இன உணர்வு எழுச்சிக்கு

பண்பாட்டு முதிர்ச்சிக்கு, பழம் பெருமைப் புகழ்ச்சிக்கு

சமத்துவ சமுதாய மலர்ச்சிக்கு, உழவர் தம் மகிழ்ச்சிக்கு

வழிகோலி விழி திறந்த ஆட்சி ; ஆனாலும் அது வரலாற்று ரீதியாகப்

பொற்கால ஆட்சி என்று பதிய வைப்பதிலே தயக்கமிருப்பதை

வெளிப்படுத்துவதிலும், அதற்கான காரணங்கள் பளிங்கு போல்

தெளிவாக இருப்பதைத் தெரியப்படுத்துவதிலும் - துணிவும்

தூய்மையும்

துணையாக நம் பக்கம் இருப்பதை எடுத்தியம்பும் வேளையில் ;

வட புலத்து நிலப் பகுதிகளையும் வசப்படுத்தி, கடலாதிக்கத்திலும்

கையிருப்பைக் காட்டி, குமரி முதல் இமயக் கொடுமுடி வரையில்,

பெரும் பிரதேசத்தை உருவாக்கி பேரரசு எனும் பெருமை

நிலைநாட்டி

மூன்று நூற்றாண்டுக் காலம் தழைத்துச் செழித்திருக்கப் பாடுபட்ட

முன்னோடி மன்னர்களின் சிறப்பைச் சீர்குலைக்க விழையாமல் -

அவர்கள் பெற்ற வெற்றிகள் - பெருமித விருதுகள் - எதிலும்,

சினையினும் சிறிய பிழையும் காணாமல்

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள மறந்த விவசாயி போல ;

வாய்ப்பு வந்த போது தமிழர் வாழ்வை நிலைநிறுத்திக் கொள்ள

நினையாத நெஞ்சத்தினராய் - முடியாத முடவர்களாய் -

முனையாமல்

முடித்துக் கொண்டதே தமிழ் இனம் தன் முன்னேற்றத்தை ; எனும்

முணுமுணுக்கும் சோகம் தான் ; பேரரசு அமைந்த பெருமையை -

அதனை

மும்முடிச் சோழன் அமைத்துக் கொடுத்த அருமையை

முழுமையாகப் போற்ற முடியாத நிலைமையை ஏற்படுத்தி ; இதனை

எழுதும்போதே என் கையை நடுங்கச் செய்கிறது என்பதுதான்

உண்மையாம்!

சோழப் பேரரசர் ஆட்சி நடந்த காலம் -

அரசியல் துறையில் மட்டுமே அது சங்க காலம் ;

அரிய வெற்றி பல கண்ட காலம் ; ஆனால் வாழ்க்கைத் துறையில்

அது சங்க கால மாண்பை - இன மாண்புப் பண்பை எட்டவில்லை!

வரலாற்றுப் பேராசிரியர்கள் மட்டுமல்ல - தமிழின்

வாய்மை போற்றும் தன்மானமுடைய பெருமக்களும் வருந்தினர்.

பழுதொன்று மில்லாத தமிழர்தம் கலை இலக்கியப் பண்பாடு

பழங் குலங்கும் பஞ்சசோலைப் பூ மலராத பழங்காலத்தே ;

புகுந்து விட்ட வண்டு ; பழத்தை நாம் புசிப்பதற்கு முடியாமல்

செய்வதேபோல்

பரந்து விரிந்து தமிழர் தேசப் பேரரசு வட திசையும் சென்றதினால்,

வாரிக் கொண்டு வந்து விட்டது அந்த நாகரிகம், பழக்க

வழக்கங்களை!

வண்டு துளைத்த கனியாகியது வண்டமிழர் பண்பாடு!

உதாரணமாக ; ஒரு கொடுமையே போதும் ; இறந்த கணவனுடன்

உடன்கட்டை ஏறி உயிரோடு கருகிச் சாகும் வழக்கம்,

உண்டா என்றாவது தமிழ் நிலத்தில் ?.......

பூதப் பாண்டியன் தேவி முதல் புவியாண்ட சோழ மாதேவிகள்

வரையில்

பீடித்து விட்ட அந்தத் தொத்து நோய்க்கு மருந்து ;

இராஜாராம் மோகன் ராய்தானே தர முடிந்தது ? -

உடன்கட்டை மட்டுமல்ல ; உயர்வென்றும் தாழ்வென்றும்

உடன் பிறந்த மாந்தருக்குள் பேதம் கற்பித்து - அது

வேதத்தின் கட்டளை என்று அச்சுறுத்தி ;

“நெற்றியில் பிறந்தோரின்” வெற்றி அறுவடையாக,

சாதியக் கட்டுப்பாடுகளும்

சதுர்வேதி மங்கலங்களும் தோன்றி

சமணம் பெளத்தமெனும் சமயங்களாம் தெளிந்த நீராறுகளும்

சமமாகக் கலந்திட முடியாமல் கட்டிய அணைகளும்

வந்து நம்மை நொந்திடச் செய்ததை

வரலாறு காட்டும்போது வாட்டம் தானே வாட்டுகிறது!

தென்னக வரலாற்றில் சங்க காலத்துடன்

திடமாகப் போட்டியிட வல்ல காலம்

சோழப் பேரரசர் ஆட்சி நடந்த காலம்.

அரசியல் துறையில் மட்டுமே அது சங்க காலம் - அதில்

அரிய வெற்றி பல கண்ட காலம் - ஆனால் வாழ்க்கைத் துறையில்

ஆரிய வாடை அப்போதே வீசியதால் வழுக்கல் துவக்க காலம்!

இதனை

வரலாற்றுப் பேராசிரியர்கள் மட்டுமல்ல ; தமிழின

வாய்மை போற்றும் தன்மானமுடையோர் அனைவருமே

வருந்தி உணர்ந்து வாயடைத்துப் போய் நிற்கிறனர் ;

வரலாற்றில் விளைந்து விட்ட மாற்றம் கண்டு!

பழமையா புதுமையா ? பகுத்தறிவா ? அல்லவா ? நம்

பண்பாட்டுக்கேற்றவை எவை யெனப்

பகுத்துணர்ந்து முடிவுக்கு வருவதற்கு முன்பே

பட்டத்துக்கு வந்தோர் வரிசையை இராசராசன் வென்றான்.

“பரிசு” எனப் பற்பல வெளிச்ச மின்னல்கள் உருமாறிப்

புரவி நிலவாகி - உச்சிப் பகல் உயர் சூரியன் என மாறி ;

சோழ வரலாற்றின் ஒளிக் கதிர் வட்டமென நின்றான்.

அவன், ஆண்டில் முதிர்ந்தவனுமல்ல ; அதனால் வாலிபனுமல்ல

வச்சிரமானவன் - வாளேந்தி நின்றான் என்றால்

வான்பிறையைக் கறுப்பு வண்ணத்தில் தோய்த்து மீசை

வடிவத்தில்

முகத்தில் பொருத்தியது போன்ற வீர மிகு உருவப் பொலிவு ;

முத்தமிடக் கூட நெரியாத முகத்தில் ஒரு கம்பீரம் - யானையின்

மத்தகத்தை எடுத்து வலிமை நிறை நெஞ்சகமாகப் படைத்திட்ட

மலைத் தோற்றம் ஒரு மனிதனாகத் தோன்றுகிறதோ - என

அய்யுறும் வண்ணம் அழகிற் சிறந்த ஆண் சிங்கம்

அமர்க்கள வேலையில்லாத ஓய்வு நேரம் அவனுக்கு

அரை நாழிகை ஒரு நாழிகை கிடைத்தாலே அரசமாதேவியர்

அய்ந்தும் ஆறும் ; அவர்களைக் காண விரைந்து வருவான்.

அப்படி வரும் வழியில் பலகணி வழியாக பெண்ணொருத்தி ஒன்று

கேட்கும்

அருண்மொழி அல்லது அருண் என்ற பெயரைக் கேட்டவுடன்

அவன் தன்னை மறந்து குரல் வந்த திசையில் செல்வான்

பாட்டி செம்பியன் மாதேவி தன் பேரனைத் தழுவிக் கொள்வாள்

பக்கத்தில் தம்பி மீது பாசம் பொழியும் குந்தவைப் பிராட்டியார்

நலம் விசாரித்தல் - நாட்டு நட்பை விவாதித்தல் எல்லாம்

பாட்டியிடமும் சகோதரியிடமும் பணிவாக அன்பாக பரிவு மேலிட!

“வரவில்லையா இன்னமும் தேவர்?” என்று குந்தவையிடம்

முதல் பதிப்பு: ஜூன் 2006 — தமிழ்க்கனி பதிப்பகம் / பூம்புகார் பதிப்பகம், சென்னை