காலப் பேழையும் கவிதைச் சாவியும்
கவிதை 42 · 42 / 58
எனினும்
‘உத்தம சோழன்’ எனப்பட்டம் மாத்திரம் பெற்றிருந்த மதுராந்தகன்
உயிர் பறிக்கும் வேலையை ஒரு விளையாட்டாகக் கருதி ;
தன் பெயருக்கே சற்றும் பொருத்தமில்லாமல்,
வன்முறைச் சதியை ஒரு நாள் முடித்து விட்டான் என்பர்.
செயலுக்கும், பெயருக்கும் சிலருக்குப் பொருத்தமில்லை
என்பதற்குச்
சான்றாக அமைந்து விட்டான் ; சான்றோர் அவையில் கலந்து
விட்டான்!
உத்தம சோழன் மீது ஊரார் சுமத்துவது
வீண் பழியே என்றும் - அவனது உற்றார் உறவினரே
ஆதித்த சோழன் கொலைக்குக் காரணமென்றும்
வேறு கதை புனைந்து விளக்கமளிப்போரும் உண்டு.
ஏதோ ஒன்று ஆதித்த சோழன் முடிவுக்குக் காரணமாயினும் ;
எவர் செய்தார் அச்சூழ்ச்சி என்பது மர்மமாயினும்
சூழ்ச்சி செய்தே அவன் உயிரைச் சுருட்டி விட்டார் என்பதை
எதிர்த்து வாதிட்டோர் எவரும் மறுத்ததில்லை.
இனி இராசராசன்தான் மன்னன் என எண்ணியிருந்தோர்
இனிய கனவுகளில் மூழ்கியிருந்தோர்; ஏமாற்றத்தால் தத்தளித்தார்.
ஆனால் இராசராசன் ; அனைவரையும் அமைதிப்படுத்தி -
ஆதித்த கரிகாலன் சாவுக்கு மதுராந்தகனும் காரணமோவென
ஐயுற்றிருந்தும் ;
அந்தச் சிற்றப்பனையே செங்கோல் ஏந்திடச் செய்தான் -
அதனால்
“அருள் மொழித் தேவன்” என்ற பெயர் ;
அவனுக்கு எவ்வளவு பொருத்தம் பாருங்கள் - எனவே
ஆதித்தன் கல்லறையே மதுராந்தகன் மகுடம் புனைந்து
அமருகின்ற சிம்மாசனம் ஆயிற்று ;
ஆம் ; சதி வென்றது - அப்பாவி மக்களே ;
அடடா ; விதி வென்றதே என முணுமுணுத்து
விழிநீர் பெருக்கினர் ; இத்தனைக்கும்
இராசராசன் இதயத்தில் எள் முனைச் சலனமும் இல்லை.
இரும்புத் தூண் ஈக்களின் இறகுபட்டா இற்றுப் போகும் ?
இளவரசனாக இருந்தே இந்த ஆட்சியைக் கண்காணிப்பேன் எனச்
சூளுரைத்துப் பொறுப்பேற்ற இராசராசன் ; சிற்றப்பா மதுராந்தகன்
எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் -
சற்றும் கண் அயராமல் கவனித்து வந்தான் ;
முற்றும் உணர்ந்தவனல்லவா ; சிற்றப்பாவைப் பற்றி!
முடியைத் தனக்கே சொந்தமாக்கிக் கொள்ளத் திட்டமிட்டு ;
முடித்தவனாமே ஆதித்தசோழனின் ஆயுளை ; அதனால்
“முருகன் மயில் மீது அமர்ந்தது போல்” என்பார்களே ;
அது போல், இளவரசுப் பொறுப்பில் அமர்ந்து கொண்டு அந்த
மயிலாக மதுராந்தகச் சோழனையே மனத்தில் எண்ணியிருந்தான்.
பெரிய குடும்பங்களிலே வீட்டுத் தலைமைக்கே போட்டியிருக்கும்
நிலைமையில்
பேரரசுக்கான நாட்டுத் தலைமைப் பதவிக்குப் போட்டியில்லாமல்
போய்விடுமா ?
அதைத் தான்
புத்தி சாதுர்யத்தாலும் - பொறுத்தார் பூமியாள்வார் எனும்
பொன்மொழி மீது கொண்ட நம்பிக்கையாலும்
அவற்றுக்கெல்லாம் மேலாக - அரண்மனைக்குள் குழப்பமெனில்
அது அந்நியர் நுழைவுக்கு இடம் கொடுத்து விடும் என்ற
அச்சத்தாலும்,
இராசராசன் இளம் பருவத்திலேயே இங்கிதம் புரிந்து
நடந்து கொண்டான் - பின்னர் நாடும் ஆண்டான்!
தந்தை இராசராசனும்,
சிந்தை கவர்ந்த செல்வனும்!
குருதி கொண்டு வரையப்பட்ட
“ஆதித்த கரிகாலன் கொலை” என்ற
பயங்கரச் சரித்திரத்திற்குப் பின்னர்
இரண்டாம் பராந்தகன் எனும்
சுந்தரச் சோழன் “காஞ்சிப் பொன்மாளிகை”யில்
பிள்ளைப் பாசத்தினால் மனமுடைந்து மரணமுற்ற
சோகப் பின்னணி இசை ஒலித்துக் கொண்டேயிருந்திட ;
நடந்து முடிந்த அவல நிகழ்ச்சிகளுக்கான காரணங்கள்
வினாக்குறிகளாகப் பேருருக் கொண்டிருந்த போது
மதுராந்தகன் கி.பி. 970ஆம் ஆண்டில் ஆட்சி பீடம் ஏறினான்.
ஆதித்த கரிகாலன் கொலைக்கு
அவனுமோர் காரணமென ஒரு கூற்றும் -
அவனாக இருக்க முடியாதென்ற ஒரு மறுப்பும் -
வரலாற்றுப் பக்கங்களில் வாதப் பொருள்களாயிருந்தபோது ;
அந்த வஞ்சகச் செயல்புரிந்தோரை வரிசைப்படுத்தி,
பஞ்சவன், பிரமாதிராசன், பரமேசுவரன்,
தேவதாசன், சோமன், ரவிதாசன் என
அறுவரின் பெயர் கூறி ; அவர்களில் நால்வர்
அய்யர் என்று அடையாளம் காட்டி
காட்டுமன்னார்குடிக் கல்வெட்டு கண்ணீர் சிந்துகிறது!
ஆய்வு செய்த அறிஞர் பலர்
ஆளுக்கொரு தகவல் சொல்வதால் ;
ஆதித்த கரிகாலன் கொலை என்ற
அதிர்ச்சியிலிருந்து நாமும் நம்மை மீட்டுக் கொண்டு
அதைவொட்டி ஆட்சிச் சக்கரத்தை
அருண்மொழி வர்மனாம் இராசராசன் இயக்கிய
அற்புதத்தைத் தொடர்ந்து செல்வோம் - அவன்
பொற்காலப் பேரரசை அமைத்த விதம் அறிந்து கொள்வோம்.
உத்தம சோழன் எனும் மதுராந்தகன் தான்
உண்மையிலேயே ஆதித்த கரிகாலன் கொலைக்குக்
காரணம் என்றால் ;
அவன் ஆட்சி அமைத்தவுடன் அருண்மொழியாம்
இராசராசனை இளவரசனாக அறிவித்திடாமல்
தன் மகனையன்றோ நியமித்திருப்பான் என
தமிழ்நாட்டு வரலாற்றுக் குழுவினர் ;
வினவுகின்றார்!
அவ்வாறு மதுராந்தகன் செய்திருந்தால் ;
அவன் புரிந்த மாமக் கொலையை மறைப்பதற்காகத் தான்
அருண்மொழி வர்மனை இளவரசாக்கினான் ; என்று
அப்போதும் ; அஃதோர் தந்திரமென மக்கள் அம்பலத்தில்
ஏற்றுவரே!
அதனால்தான் கண் துடைப்பு நாடகமாக ;
அவன் மகனை விடுத்து அருண்மொழியை இளவரசனாக்கினான்
எனவும் கணிக்கலாமல்லவா ? அவன்
கனவும் பலித்ததம்மா என்பதே போல் ;
உத்தம சோழன் உயிராய்க் கருதிய பதவியும் கிடைத்தது - அதைப்
பாதுகாக்கும் கேடயமாக இராசராசன் உறவினரும் கிடைத்தனர்.
வஞ்சகம் புரிந்து ஆதித்த கரிகாலனை வதைத்தவர் பார்ப்பனர்
என்று
வரலாற்றுப் பேராசிரியர் நீலகண்ட சாத்திரியார் தான்
வாதத்தையே ஆரம்பித்து வைத்தவர் ஆவார் - அதை மறுத்து
மதுராந்தகன் நிரபராதி என சதாசிவ பண்டாரத்தார் சான்று
காட்டுகிறார்!
இருவருமே காட்டும் சான்றுகள் ;
கல் வெட்டும் செப்பேடுகளுமே தான்.
நாம் அந்தச் சாட்சியங்களைச் சற்று நகர்த்தி
வெளியே நிறுத்தி விட்டு ; சந்தேக சூழ்நிலையில் அளிக்கும்
விடுதலையை
தீர்ப்பாக வழங்கி விட்டு ;
தென்னகம் மட்டுமன்றி இந்திய
தேசம் முழுதும் தமிழர் பேரரசு நிறுவிய
தங்க மகன் - சிங்கம் நிகர் சோழன் -
இராசராசனைப் பின் தொடர்ந்து சென்றால்,
இவன் ஆட்சியை எப்படி நிலைப்படுத்திக் கொண்டான்
என்பதை ஆராய்ந்து அறியலாம் - அடங்கா மகிழ்ச்சி
அடையலாம் -
இளவரசப் பொறுப்பில் இயங்கும் இராசராசனுக்கு
அரச நிர்வாகம் அரசியல் தந்திரம் -
அடுத்தாரை அரவணைத்தல் எவ்வாறு ?
தடுத்தாரைத் தன் வயமாக்குதல் எவ்வாறு? எனும்
