உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

காலப் பேழையும் கவிதைச் சாவியும்

கவிதை 41 · 41 / 58

தமிழகத்தின் மறு மலர்ச்சி, மீண்டும்

சங்க காலப் பெருமை பெற புத்துருக்கொண்ட சரித்திரத்தை ;

இங்கிருந்து தொடங்கிடுவோம்.

இருண்டிருந்த சோழக் கிழக்குச்

சங்கின் வெண்மை வானில் பரவும் ; நம்

வரலாறு, அந்த வான் மேவி ஒளிரும்!

★ ★ ★

அன்றந்தக் காலம் ஆலமரம் போல் தழைத்திருந்த

மூவேந்தர் ஆட்சி ; முடிவிழந்த நிலை கி.பி. 350இல் ஆரம்பம்.

களப்பிரர் ஆட்சி சோழ நாட்டில் கி.பி. 575 வரையில்! அவர்க்குக்

கட்டுண்டே கிடந்தனர் பாண்டியரும் சேரரும்.

பல்லவர் பரிபாலனம் கி.பி. 875 வரை எனப் பதிவு செய்தால்

ஆறு நூற்றாண்டுகள் அடர்த்தியான இருண்டகாலமாகும்;

சோழர்க்கு!

அந்த நிலையைத் தான் இன்றைய முகப்புரையாக

அகமிக நொந்து வடித்துள்ளேன்.

பாண்டியர் சோழர் பல்லவர் சேரர் ; தென்னகம்

ஆண்டிருந்த ஒளி மிகு யுகத்தை இடையிலிழந்து,

அதன் பிறகே கி.பி. 850இல் உறையூர் அரச கட்டிலில்

அமர்ந்திடும் வாய்ப்பு விஜயாலய சோழனுக்குக் கிட்டியதாம்!

அவன் முதலில் தனது முன்னோரைத் தொடர்ந்து பல்லவர்க்கு

நண்பனாக

அடங்கியே நடந்தான் எனப் பழைய வரலாறு கூறும்!

பாண்டியன் வரகுணன் என்பான் பல்லவர் மீது போர்

தொடுத்தபோது,

பல்லவன் அபராஜிதன் பக்கம் விஜயாலயன் நின்றான் - அதற்கு

வெகுமதியாக முத்தரையர் வசமிருந்த தஞ்சையை வென்று ;

அதனை

விஜயாலயன் பெற்றுக் கொண்டு ; வெற்றியைப் பல்லவர்க்குத்

தந்தான்.

பிற்காலச் சோழப் பேரரசைப் பிரசவித்த பெருமை;

பொற்காலம் படைத்த சோழனாம் ஆதித்தனுக்கும் உண்டாம் -

விஜயாலயனின் வீரப் புதல்வன் ஆதித்த சோழன்

விண்ணும் மண்ணும் அதிர நடந்த திருப்புறம்பியப் போரில் - தன்

திறமனைத்தும் காட்டி வெற்றி கண்டதைத் திசையெட்டும்

புகழ்ந்தது.

புறங்காட்ட வைத்தான் பின்னர் அபராஜிதனை என்றும் ; அவனது

தொண்டை மண்டலத்தையும் தோற்கடித்துத் தன்னைத்

தொழுதிட வைத்தான் என்றும் வரலாறு புலம்பும்!

அரசியலில் தன்னலம் தலைதூக்குங்கால்

அன்புக்கும் நட்புக்கும் நன்றி உணர்வுக்கும் ;

இடமளித்தல் “இராஜதந்திரம்” ஆகாது (?) என்பதற்கு ;

இதோ “ஆலங்காட்டுப் பட்டயம்” பகருவதைப் பார்ப்போம்!

பாண்டியரை எதிர்க்கப் பல்லவ அபராஜிதனுடன்

பக்கத் துணையிருந்து ; தஞ்சையையும் தனதாக்கிக் கொண்டு ; பின்னர்

பல்லவனையே தோற்கடித்து ஆதித்தன் தொண்டை நாட்டைப்

பறித்துக் கொண்டான் என்பதோடு ;

கன்னியாகுமரிக் கல்வெட்டொன்று கண்ணீருடன் கூறுவது ;

யாதெனில்,

“ஆனை மீதமர்ந்து போரிட்ட அபராஜித வர்மன் மீது

ஆதித்த சோழன் தாவிப் பாய்ந்து கொன்று போட்டுக்

கோதண்டராமன் எனும் பெயர் பெற்றான்” என்பதாகும்!

பல்லவர் மரபு, பாண்டியர், சோழர் மரபு என்றெல்லாம்

சொல்லுபவர்க்குப் பதில் விளக்கமாக ஒரு செய்தி ;

கல்வெட்டொன்றின் சாட்சியாக ; ஆதித்த சோழன் மனைவி

“பல்லவர் மரபில் வந்த பாவை” யெனும் போது ; திராவிட

இனத்தின்

எல்லா மரபும் தமிழ் மரபு தான் எனும் தெளிவு - வரலாற்று

வல்லார் உள்ளத்தில் தோன்றல் தேவை அல்லவா ?

இரும்புத் தூணும்

ஈக்களின் இறகும்!

ஆதித்த சோழன் காலத்தில் அவன் மகன் என்ற நிலையில்

ஆட்சியில் அமர்ந்தவன் முதலாம் பராந்தகன்

அவனுக்கு மனைவிகள் பன்னிருவர் -

அவ்வர் மகன்கள் -

இராசாதித்தன், கண்டராதித்தன்,

அரிகுலகேசரி, உத்தமசீலன், அரிஞ்சயன்.

இவர்களில் இராசாதித்தன்

இறந்து விட்டான் தக்கோலம் போரில் என்பதால்,

இவனுக்கடுத்த கண்டராதித்தனே பட்டம் பெற்றான்.

மழவரையன் மகள் செம்பியன் மாதேவியை

மணந்து உத்தம சோழனை மகனாகப் பெற்றான்.

மதுராந்தகன் என மற்றொரு பெயரும் இவனுக்கு உண்டு.

கண்டராதித்தன் காலமான போது, மதுராந்தகன்

மழலைப் பருவத்தினன் என்பதால் ;

அரிஞ்சயன் எனும் தம்பி ஆட்சிப் பொறுப்பினை ஏற்றான் எனினும் ;

அவனும் அகால மரணமே அடைந்தான்.

அரிஞ்சயனின் மகன் இரண்டாம் பராந்தகன்

அடுத்து, பட்டத்திற்கு வந்தான்.

இராசகேசரி எனும் விருது இவனுக்கு வழங்கினர்.

இளையவனாக இவன் இருந்த போதிலும் ; போரில்

வீர பாண்டியனை எதிர்த்துச் சேவூர் எனுமிடத்தில்

வெற்றியும் பெற்றுப் பாண்டியனை சாவுருக்கும்

அனுப்பி வைத்தான் என்று திருவாலங்காட்டில்

அமைந்துள்ள செப்பேடு ; இவன் திருப்புகழ் பாடுகிறது.

இரண்டாம் பராந்தகன் துணைவியரில் குறிப்பிடத்தக்கோர்

இருவர் -

ஒருவர் மலையமானின் செல்வி வானவன் மாதேவி -

இவர்தான் தனது கணவனுடன் உடன் கட்டை ஏறியவர்.

“ஏறுவதாக நினைத்தேன்” என்று எவரையும் ஏமாற்றியவரல்ல.

அந்தப் பழக்கம் பகுத்தறிவுக்கேற்றதில்லை யென்று நாமும்

அதனை

அன்றும், இன்றும், என்றுமே ஆதரித்தது இல்லை.

வானமாதேவியும் அவர் வாழ்க்கைத் துணைவர்

இரண்டாம் பராந்தகனும் இன்னுயிர் இழப்பதற்கு முன்பு,

சோழப் பேரரசு உருவாகக் காரணமாய் விளங்கிய

சொக்கத் தங்கமாம் ; சோழ இளவல் இராசராசன்

வானமாதேவியாம் அவன் தாய் மடியில் அமர்ந்து

வாள் சுழற்றி விளையாடிக் கொண்டிருந்தான்.

இரண்டாம் பராந்தகனின் இன்னொரு மனைவி சேரன் மாதேவி -

இவர் பெயரால் அமைந்த ஊர்தான் ; “சேரமாதேவி”யாகும்!

இராசராசனையும், ஆதித்த கரிகாலனையும், குந்தவை

நாச்சியையும்

தந்திட்ட தாயாம் வானமாதேவியின் மணி வயிறு ; சோழரின்

புலிக் கொடி புவியெங்கும் பறந்து கண்டு குளிர்ந்தது! அதற்குத்

தன்

புதல்வர்களின் ஆற்றலே காரணம் என்பதுணர்ந்து ; “ஈன்ற

பொழுதின்

பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்”

என்ற குறளுக்கு

இலக்கணமாகத் தானே ஆனது கண்டு இறும்பூதெய்தினாள்

அந்தத் தாய்!

வானமாதேவியின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் எனினும் ;

அவன்

தனது தந்தை இரண்டாம் பராந்தகன் உயிரோடிருந்த போதே -

பாதகர் சதி யொன்றுக்குப் பலியாகி விட்டான் - அது

பாராளும் உரிமை யாருக்கென்ற கேள்வியால் வந்த வினை!

ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டவுடன் அடுத்து பட்டத்துக்கு

வரவும்

முறைப்படி முடிசூட்டிக் கொள்ளவும் இராசராசன் உரிமை

பெற்றவன் என்பதால் ;

அவனேதான் ஆட்சிக்கு வர ஆவல் கொண்டு அச்சதி செய்து

கொன்றான், என்று

அவதூறுப் பழியொன்று இராசராசன் மீது கிளம்பிற்று! அப்பழியும்

ஆதவனைக் கண்ட பனி போல அக்கணமே விலகிற்று ;

ஆனால் நடந்தது என்ன என்பதை நாடு உணர்ந்து கொண்டது.

உண்மையில் இரண்டாம் பராந்தகனின் மறைவுற்ற மகன்

ஆதித்த கரிகாலன்தான் உரிமையுடையவன் ஆட்சி நடத்திட

முதல் பதிப்பு: ஜூன் 2006 — தமிழ்க்கனி பதிப்பகம் / பூம்புகார் பதிப்பகம், சென்னை