காலப் பேழையும் கவிதைச் சாவியும்
கவிதை 40 · 40 / 58
பல்லவர் வரலாற்றுப் பகுதியின் விளக்கம் பயன்படுமாக!
★ ★ ★
‘காஞ்சித் தலைநகர் அல்ல’ என்று கடும் வாதமிடும் நண்பர் ;
“திருக்கழுக்குன்றத்து குடைவரைக் கோயிலில் உள்ள
வாதாபி கொண்ட நரசிங்கப் போத்தரையன் கல்வெட்டு
அந்தப் பல்லவ மன்னன் காலத்து எனக் கருதப் பெறுகிறது” என
எழுதியிருப்பது கவனிக்கத் தக்கது ; எண்ணியதை மாற்றிக்
கொள்ள ;
ஏற்ற சான்றாக அமையத் தக்கது!
வாதாபி வீழ்ச்சியைத் தொடர்ந்து
வலிமை இழந்த புலிகேசி மன்னனும்
வீழ்ந்திடவே ; அடுத்து அவன் வழித் தோன்றல்
விக்கிரமாதித்தன் வீறு கொண்டெழுந்தான்!
வீழ்த்தி நசக்க வேண்டும் காஞ்சிப் பல்லவரையென்று,
ஆத்திரத்தில் ; சேர, சோழ, பாண்டிய சிற்றரசர்களாம்
எவர் உதவியும் தனக்குத் தேவையில்லை யென்று
எண்ணிலா வீரர் கொண்ட பெரும்படையுடனே
பல்லவச் சீமை மீது சூறாவளியாய்ச் சூழ்ந்தான் - அது கண்டு,
பாண்டியன் அரிகேசரி நெடுமாறன் ; எரிச்சலுற்று
சேரனையும், சோழனையும் ; அவர்கள் சிற்றரசர்கள் எனினும்
சேர்த்தணைத்துக் கொண்டு செருமுனையில் கூட்டாக ;
நெருப்புமிழும் படைகளுடன் அணி வகுத்து,
நெல்வேலிப் போர்க்களத்தில் ;
சாளுக்கிய விக்கிரமாதித்தனை சந்தித்த காரணத்தால்,
சமாளிக்க முடியாமல் பல்லவர் எல்லையைத் திரும்பிப்
பாராமலே அவன் ;
பயந்து, பதுங்கி ; வந்தேன் வந்தேனென்று வாதாபிக்கே
ஓடிவிட்டான் - அதனை
வியந்து சேக்கிழார் தமிழக அணி பெற்ற வெற்றிக்கு வாழ்த்துப்
பாடினார்!
நெல்வேலிப் போர் கி.பி. 675ல் என்றும், அது நிகழ்ந்த போது ;
பல்லவ மன்னனாக முதலாம் பரமேஸ்வர வர்மன்
இருந்தானென்றும் -
விக்கிரமாதித்தனுக்கு மட்டும் வீம்பு இல்லாமலிருந்தால் ;
வீழ்ந்திருக்க மாட்டான் என்றும் ;
ஆய்வாளர்கள் பலர், உண்மையினை அகழ்ந்தெடுத்து
அனைவரும் உணர்ந்திட உரைக்கின்றார் -
வீழ்ச்சியோ வெற்றியோ ; எதற்கும் இருக்கும் ஒரு காரணம் -
வீண் ஆணவமே
வீரனையும் வீழ்த்தி விடுமென்பதற்கு விக்கிரமாதித்தனே ஓர்
உதாரணம்!
★ ★ ★
தோற்றோடிய விக்கிரமாதித்தன், தோல்விப் புண்ணின் வலியை
ஆற்றிக் கொள்ள முடியாமல் ; தொடர்ந்தான் அதே ஆண்டு ;
காஞ்சித் தலைநகர் மீது பெரும்படை கொண்டு போராட்டம் -
கலங்கியது திடீர் தாக்குதலால் பல்லவர் சேனை!
சாளுக்கிய மன்னன் காஞ்சியில் பெற்ற அந்த வெற்றியை ;
சரித்திரச் சான்றுகளாக ; கட்வல் ; சோர, கேந்தூர்
பட்டயங்கள் தெரிவிப்பதாகப் பன்மொழிப் புலவர் கூறுவார் -
பல்லவனின் காஞ்சிக்குள் தன் பட்டத்துக் குதிரை மீதேறி
விக்கிரமாதித்தன் வெற்றிப் பவனி நடத்தியதோடு ;
வீராதி வீரன் மாமல்லன் நரசிம்மனின் பேரனான
பரமேசுவர வர்மனைத் தன் பாதம் பணியச் செய்தான் என்கிறது
பகைவன் அமைத்த அந்தப் பட்டயம் -
தனக்குக் கிடைத்த வெற்றியினால் சாளுக்கியன்
தலைகால் தெரியாமல் ஆடியதைப் பொறுத்திட முடியாமல் ;
தமிழரசர் அனைவரும் மீண்டும் ஒன்றாகக் கூடினார் - அவர்களின்
தானைகள் புறப்பட்டன பெருவளநல்லூர் போர்க்களம் நோக்கி!
எலிகள் ஏழெட்டு ஒன்று சேர்ந்தாலே ; அவற்றை
எதிர்க்க முடியாமல் பூனை திணறும் - இதோ ;
புலிகளே ஒன்று சேர்ந்து விட்டால் - இந்தப்
புவியும் அவர் வலிமை உணரும்!
தமிழகத்து அரசர்களின் ஒற்றுமையால்
சரணடையும் நிலைக்குத் தாழ்ந்தது சாளுக்கியப் படை!
துணைக்கு வந்த தமிழ் மன்னர்களுக்கெல்லாம்
தூய மனத்துடன் நன்றி கூறிப் பல்லவ மன்னன் ;
“பரமேஸ்வர வர்மன், ‘அரிவாரண’ மெனும் தனது
பட்டத்து யானை மீதேறிப் பவனி வந்து,
காஞ்சி வீதிகளிலே பகைப் படை வீரர்களைக் கலக்கினான்.
கந்தலாடை யொன்றினால் தன்னை மறைத்துக் கொண்டு
வீதிகள் பல கடந்து
விக்கிரமாதித்தன் ;
கால் பிடரியில் இடிபட ஓடினான் ; ஓடினான் ;
காஞ்சி நகர் எல்லையை விட்டே ஓடினான்”
(இக்கருத்தமைந்த வெற்றிப் பட்டயம்
“கூரம் பட்டயம்” எனும் பெயரால்,
பெருவள நல்லூர்ப் போர் முடிவை
அடுக்குச் சொற்களால்
அழகுபட வர்ணிக்கிறது)
அது மட்டுமா?
(சாளுக்கியரின் ‘கேந்தூர்’ பட்டயமும் ;
பாண்டியரின் ‘சின்னமனூர்’ செப்பேடும் ;
சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரமும் ;
இதற்குச் சரித்திரச் சான்றுகளாக
பறைசாற்றுகின்றன ;
பல்லவர் பெற்ற வெற்றிக்குக்
கொடி ஏற்றுகின்றன)
பகல் நேரக் கதிரொளியாய்ப்
பரந்து விரிந்து வெளிச்சம் தந்த
பழந்தமிழ்ச் சோழர்களாம்
பாண்டியர் பல்லவர் சேரர்களாம்
பயன்விளைக்கும் ஏர் முனையாய்ப்
பகை சாய்க்கும் வாள் முனையாய்ப்
பாரினிலே புகழ் எய்திப் பின்னர்
தேரினிலே அச்சாணி கழன்றாற் போல்
தேயமெங்கும் ஒற்றுமை கட்டுக்குலைந்து
தேய்ந்திடும் நிலவின் கோட்டுப் பிறைகளாகி
குடுமிகளாக்க குறுநில மன்னராட்சிகளும் - அவை
குருவித் தலைப் பனங்காய் எனும் காட்சிகளும் -
செங்கோல் மட்டுமே உடைமையாய்க் கொண்ட
சிற்றரசர்கள் செய்யப்பட்ட ‘மாட்சி’(?)களும் -
இப்படிப் பல பிரிவுடனே களப்பிரர், கள்ளவரும் கலந்து,
மூவேந்தர் முத்தரையர் கூட்டும் சேர்ந்து,
முரண்பட்ட சூழ்நிலைகள் முட்டியும் மோதியும் -
முடிவாகப் பகை, படை, போர், அழிவு எனச் சிதைந்து,
“நேற்றிருந்தார் இன்றில்லை என்பது போல் - எம்மோடு
விற்றிருந்தார் எங்கு போனார்?” என்று வினவிடும் நிலையில்,
வேற்படை, வாட்படை, வேழப்படை, புரவிப் படையிருப்பினும்
வேலைகள் அவற்றுக்குள்ளவற்றை வீர்பால் ஒப்படைத்துவிட்டு ;
வியர்வை நீக்கிடவும் - அயர்வைப் போக்கிடவும் - ஓய்வு கொண்டு
உல்லாசம் அனுபவிக்க ஓடிவிடும் ‘உத்தம’ தலைவர்களை
விடுத்து ;
யுத்த களத்தில் போராட உத்தி வகுத்துச்
செயல்பட்டவர்களால் பெருவெற்றி கிட்டியது -
பெயருக்கு அரசராக இல்லாமல் - அவர்கள்
பேரரசர்களாகவே விளங்கினர் -
வீரமும் வெற்றியும் கடையில் விற்றிடும் பொருள் என்றும்
அதைப் பெறுவதற்குக் கூடக் கடவுள் அருள் தேவை என்றும்,
எண்ணுவோர், லட்சியத்தில் திண்ணியராய் இல்லாத காரணத்தால்
கண்ணியம், கடமை, கட்டுப்பாடு கெட்டுப் போய் - அந்தக்
கெடு நிலைக்கான காரணங்கள் அனைத்தையும் போக்கிட
நெடுநாள் காத்திராமல் பெருந்திறன் காட்டியதால்
இடைக்காலமென அறுநூறு ஆண்டுக் காலம் ;
எடைக்கேற்ப தாராசுத் தட்டு மேலும் கீழும்
மாறி மாறி உயர்ந்தும் தாழ்ந்தும்
ஏறியும் இறங்குவதும் போல
தோன்றிய பல்லவ அரசில் துளிர்த்துப்
பாண்டிய அரசில் செழித்த - இந்தத்
