காலப் பேழையும் கவிதைச் சாவியும்
கவிதை 39 · 39 / 58
தானம் கேட்க வந்துள்ளேன் உன் துணையை” என்றான்
இலங்கை நண்பன்.
எத்தனை படை வீரர்கள் தேவையெனினும் அழைத்துச் செல்க;
இதோ
எஃகினைய உளம் படைத்த பரஞ்சோதித் தளபதியிருக்கிறார், அவர்
தேவையானவற்றையெல்லாம் செய்து தருவார் என்று; பல்லவன்;
பார்வையைப் பரஞ்சோதியின்பால் திருப்பிடவே;
பரஞ்சோதி “நான் தயார்; தங்கள் நண்பருக்குத் தேவையான
படை அனுப்புவதற்கு” எனத் தலையசைத்து விடை பெற்றான்.
★ ★ ★
காஞ்சிப் படையுடன் களம் காண மானவர்மன் புறப்பட்டான்
வாஞ்சையுடன் தழுவி நரசிம்மன் நண்பனை வழியனுப்பி
வைத்தான்.
இலங்கைப் போரில் எதிரிகளுக்கே வெற்றி கிட்டியதால்
இதயம் நொறுங்கி இனிய நண்பன் காஞ்சிக்கே திரும்பி வந்தான்.
வீழ்ச்சிக்கான காரணத்தை விளக்கமாக அறிந்து கொண்டு - இனி
வியூகம் எப்படி வகுத்திட வேண்டுமென்ற வித்தையையும் கற்றுத்
தந்து
மானவர்மனை வழியனுப்ப நரசிம்மன் மாமல்லைத் துறைமுகம்
மகிழ்ச்சியுடன் கிளம்பி விட்டான்.
அங்கோர் அதிர்ச்சி காத்திருந்தது அவர்களுக்கு -
“அரசர் நரசிம்மர் இல்லாமல் நாங்கள் கப்பல் ஏற மாட்டோம்”; எனப்
படை வீரர்; அனைவருமே ஒருமுகமாய் எதிர்ப்புக் காட்டி -
“பல்லவ பூபதியும்; இலங்கைக்கு எம்முடனே வந்தால்தான்,
ஏறுவோம் கப்பல்” என்று வேண்டுகோள் விடுத்தனர் -
மானவர்மன் மனக் கலக்கம் கண்டு அஞ்சாதீர் என அமைதிப்படுத்தி;
நரசிம்ம வர்மன் அந்தக் கப்பலிலே ஏறிக் கொண்டான் -
“மன்னர் வாழ்க!” ஒலியுடன் காஞ்சிப் படை பயணம் தொடங்கியது
கடலில் கொஞ்ச தூரம் சென்றவுடன் - தன்
உடலைக் கம்பளியால் மூடிக் கொண்டு;
கப்பலின் வேறு வழியாகக் காஞ்சியின்
காவலன் இறங்கி விட்டான்; படகொன்றில்!
அவன் படை போய்ச் சேர்ந்தது இலங்கைக்கு!
மன்னன் தம்மோடு இருக்கின்றான் என்ற மனத் தெம்போடு
மாவீரர் வளைத்தனர் மாற்றார் படையை; விளைவு
மானவர்மனுக்கு வெற்றி மாலை!
மாற்றார், களத்தில் மாய்ந்தனர்;
மாமல்லை மன்னாதி மன்னன்,
நரசிம்மன்; நண்பனையும் காத்து அவன்
நாட்டையும் காத்து; இருவரிடையே - தூய
நட்பு பூத்திருப்பதை இச்செயலால்
நல்லதோர் காட்சியாக்கிக் களித்தான் -
மண்ணாளும் மகராசர் என்றால் - அவர்க்கட்டு
மனமென்ற ஒன்றே இருக்காது; இருந்தாலும் அதில்
மனித நேயம் துளிர்க்காது என எண்ணுவோர்க்கு
மண்டையிலடிக்கும் பதிலாக;
மானவர்மனை மீண்டும் நரசிம்மன்
மன்னராக்கிய நிகழ்ச்சி அமைந்தது -
எல்லாம் காஞ்சி காட்டிய கனிவும் கருணையும் - எனக்கூறி நட்புக்கு
நல்லான் நரசிம்மன் வாழ்க என மடல் வரைந்தான் மானவர்மன்!
அதில்;
பாறைகளைக் குடைந்து மண்டபங்கள் கண்டார் உம் தந்தை - நீயோ
பகைப் புலத்தைக் குடைந்து வெற்றிக் கம்பங்கள் நாட்டுவதால்
பனிக்காற்று பட்டது போல் குளிர்கிறது எம் மக்களின் சிந்தை!”
இனிய மடல் கண்டு மகிழ்ந்தான் மன்னன்;
எனினும், மமதை கொண்டானில்லை!
பல்கலைக் கழக மாணவர்களுக்குப்
பாடநூல்கள் எழுதி அவற்றில் பல நூல்கள்,
மாணவர்க்குப் பாடமாகவும் இருக்கும் நிலையில்,
முனைவர் ந.க. மங்களமுருகேசன் எழுதிய
“பல்லவர் வரலாறு” பாடநூலை படித்தபொழுது
பல்லவர் ஆட்சிக்குக் “காஞ்சி - தலைநகர் அல்ல” என்று
பெரிதாக வாதிட்டிருப்பது பெரும் வியப்பளித்ததினால் ;
பேராசிரியர் அன்பழகனாரிடம் அதுபற்றிப் பேசிய வேளையில்,
“பல்லவர்க்குக் காஞ்சிபுரம் தலைநகரல்ல என்பதைவிட,
பல்லவரே இல்லை ; காஞ்சிபுரமே இல்லையென்று
கூறிவிடலாமே!” என்றார்.
காஞ்சி ; பல்லவர்க்குத் தலைநகராயிருந்ததில்லை யென்ற
கருத்தொன்று மாணவரிடையே பரவி விடக் கூடாதே என்பதற்காக ;
ஆதாரங்களை நான் தேடியதில் அறிந்தவற்றை அளிக்கின்றேன்.
ஆய்வு செய்து வரலாறு எழுதுவதில் வல்லவராம்
மயிலை. திரு. சீனி வேங்கடசாமி எனும் அறிஞர் ;
“மகேந்திர வர்மனின் தந்தை சிம்மவிஷ்ணு,
காஞ்சியைத் தலைநகரெனக் கொண்டே
கட்டியாண்டார் பல்லவ நாட்டை” யென்று ; கதையல்ல,
காசாகுடி வேலூர்பாளையம் செப்பேட்டுச் சாசனங்கள்
சான்றுகளாகி விளக்குகின்ற நிகழ்வுகளை நினைவூட்டுகின்றார்.
புலிகேசியுடன் பல்லவர் போரிட்ட புள்ளலூர் ; செங்கை மாவட்டம்,
காஞ்சிக்கு வடக்கே பதினைந்து கல் தொலைவு தான் என்பதும் ;
மகேந்திரன் நரசிம்மன் காலத்து
மலைப்பாறை சிற்பங்களும்
மனங்கவர் குகைக் கோயில்களும், குறிப்புகளும்
மாமல்லபுரமென்றும், பல்லவபுரமென்றும்,
மாமண்டூர், சிங்கவரம், மண்டகப்பட்டு என்றும்,
மகேந்திரவாடி, திருக்கழுக்குன்றம், தளவானூர் என்றும்,
பல்லவ மன்னர் அடையாளச் சின்னங்களென
மங்கல முருகேசனே சுட்டிக் காட்டுவதால் ; அவரே
மறுக்கத் தேவையில்லை ; காஞ்சித் தலைநகரை -
மாற்றி அமைக்கவும் தேவையில்லை ; ஆந்திர தேசத்திற்கு!
சீன யாத்திரிகர் யுவான் சுவாங் குறிப்பில் ; குறுக்கே
காஞ்சிக்கும் கடற்கரைக்கும் இருப்பது கல் தொலைவு
என்கிறபோது, அதை மறைத்தும் மறுத்தும்
காஞ்சிக்கருகே கடலே இல்லை என்று ;
மாமல்லபுரத்தை மறந்து விட்டுப் பேசுவதால், நமக்கு
மன மகிழ்ச்சி எப்படி இருக்க முடியும்?
“மகேந்திரவர்மன் காஞ்சிக்கு அண்மையில் உள்ள
“மகாபலி”புரத்தை கவனியாதிருக்க முடியுமா? அங்கே
தர்மராசர் மண்டபமும், கொடிக்கால் மண்டபமும்
மகேந்திரன் காலத்தவை” என முனைவர் இராஜமாணிக்கனாரின்
ஆய்வினை அலட்சியப்படுத்திடல் இயலுமோ? அவற்றை
அமைத்தவர் ஒரு பல்லவ மன்னர் என்பதில் அய்யப்பாடு
உண்டோ?
மதம் மாறி சைவத்திற்குச் சென்ற
மகேந்திர வர்மன் “மத்த விலாசம்” என
நகைச்சுவை நாடகம் எழுதி, நடிக்கச் செய்து
சமண புத்த மதங்களை நையாண்டி புரிந்தபோது அந்த
மதப் பிரச்சார நாடகத்தில் மாதகர் காஞ்சியின்
மகிமையுடை கோபுரங்களில் தவழும் முகில்களை குறிப்பிட்டு ;
“கருமுகில் தவழுமாடக் கச்சி யேகம் பன்றே” எனும்
அருள் வாக்கும் அப்பர் வாக்கும் இணைந்து வருவதாக ;
மயிலை வேங்கடசாமி விளக்குவதை விலக்கி விட இயலாதே?
மற்றவை ஒரு புறம் இருப்பினும் ;
மகேந்திரனின் சிறப்புப் பெயர்களில் ஒன்றான
“சித்திர காரப் புலி” எனும் பட்டம் காஞ்சியில் உள்ள
ஏகாம்பரேசுவரர் கோயில் மண்டபத் தூண் ஒன்றில்,
இடம் பெற்றிருப்பது எவ்வாறு எனும் வினா எழுகிறதே!
பல்லவர்களின் ஆட்சிச் சின்னமும் அவர்கள் போற்றிய
பல்வகைக் கலைச் செல்வமும் - பரவியது
பல திசை எனினும் - காஞ்சியைச் சுற்றிலும் அதன்
பக்கமாகவும் தானே பல சான்றுகளைப்
பார்க்க முடிகிறது என்பதையும் ; அதைப்
பெயர்த்தெடுத்து ஆந்திரத்தில் அமைப்பதென்பது ;
வியர்த்தமான வேலை என்பதையும் வீணாகக்
காஞ்சியின் புகழுக்குக் களங்கம் விளைக்கும் செயல் என்பதையும்
உண்மையான தமிழக வரலாறுகள்
உலகின் கண்களில் படாமல் திரையிடப்பட்டுள்ள நிலையில்
இது மற்றோர் திரையாக ; ஆகாமல் தடுத்திட இந்தப்
