உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

காலப் பேழையும் கவிதைச் சாவியும்

கவிதை 38 · 38 / 58

ஆந்திரப் பகுதியில் உள்ள பெத்த காஞ்சி என்பதையே

பல்லவத் தலைநகரமான காஞ்சி என்றும் பெரிதாக

அறிவிக்கின்றார்!

‘யுவான் சுவாங்’ எனும் சீன யாத்திரிகர் கூட அந்தக் காஞ்சியைத்

தான்

உரைத்திருக்கக் கூடுமென யூகித்துச் சொல்லுகின்றார் ;

உண்மை அறிவோம்!

சீன யாத்திரிகரின் சிறப்புக் குறிப்பில் நம்

சிந்தைக்குத் தேன் துளியாகச் செய்தி ஒன்றும் உளது ;

“திராவிட நாட்டில் பல தூண்களை அசோகன் நாட்டினான் ;

அவைகளில் சில தூண்கள் பழுதடைந்து நிற்கின்றன”

எப்போதெல்லாம், எத்தகைய அறிஞர்களால் எல்லாம்

‘திராவிட’ எனும் பெயர் உச்சரிக்கப்பட்டுள்ளது என்பதை எண்ணி ;

இதயம் விம்முகிறது -

இன்பம் பொங்குகிறது!

சாளுக்கிய புலிகேசி என்பான் சமருக்கு வந்தான்

மகேந்திர வர்மனைப் போரில் மண்டியிடச் செய்வதற்காக ;

பொங்கும் எரிமலையாய்ப் போரில் குதித்தனர் ;

இருபெரும் படையினரும் -

அப்போதொரு பொய்யைக் கல்வெட்டில் செதுக்கினார் ;

புலிகேசி மன்னன் ; புள்ளலூர்ப் போரிலே மகேந்திரன் ஓடி ஒளிந்து

விட்டானென்று!

அதை மறுத்தறிவித்த மாமன்னன் நரசிம்மன்

மாமல்லனும் ஆனபடியால் ; அந்தப் பெயரால் தானே

மாமல்லபுரமே உருவானது - என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் -

வருகிறாயா “நெருக்கு நேர் போருக்கு” என்று ;

அறைகூவல் விடுத்தவுடன் - ஓடி

மறையும் அறை எங்குளது என்று ;

புலிகேசி ஓடி ஒளிந்துகொண்டான் ; அதில் புகுந்து கொண்டான்!

பல்லவன் நரசிம்மன் விடவில்லை ; அந்தப் புயங்கொள்ளியை!

பரஞ்சோதியாம் தளபதியை பின்தொடரச் செய்து -

வாதாபி யெனும் புலிகேசியின் தலைநகர் வரையில் சென்று ;

அங்கே ;

புலிகேசியின் முதுகு புண்பட்டை உலகிற்கு உணர்த்தி -

அவர்களை

வாகை சூடியதற்கு அடையாளமாக ;

வாதாபி நகரில் இருந்த அழகான யானைச் சிலை ஒன்றையும்

போரில் கிடைத்த பொருளாகத் தமிழகத்துக்கு எடுத்து வந்தான் -

வாதாபி கணபதி வாழ்த்துடன் இசை நிகழ்ச்சி இன்றைக்கும்

தொடங்குவது ;

அன்றைக்குத் தளபதி பரஞ்சோதி எடுத்து வந்த அந்த யானைச்

சின்னம்

தமிழர்க்கு அறிமுகமான பிறகே தான் ; எனவே

தானாக வந்து வரம் தருபவரல்ல பிள்ளையார் - நம்

தளபதியாம் பரஞ்சோதி போரில் வென்று ; வாதாபியிலிருந்து

தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டவர் என்பதே வரலாறு!

★ ★ ★

“மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாபித்

தொன்னகரம் துகளாகத் துணைநெடுங்கை வரையுகைத்தும்

பன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும்

இன்னன எண் ணிலகவர்ந்தே இகரைசன்

முன்கொணர்ந்தார்”

(பெரிய புராணம் - சேக்கிழார்)

இறையினால் அனுப்பப்பட்டவர் எனப் போற்றப்படும்

இஸ்லாம் தீர்க்கதரிசி முகம்மது நபிகளார்,

மெக்காவிலிருந்து மதினாவுக்குச் சென்ற கி.பி. 622

“ஹிஜ்ரா” எனக் கூறப்படுவதாகும்!

அதே காலத்தில்தான் இங்கே அப்பர் எனும்

அருளாளர் திருநாவுக்கரசரும், மகேந்திர வர்மனும்

வாழ்ந்தனர் என்று ‘மகேந்திரன் வரலாறு’ எழுதிய

மயிலை சீனி. வேங்கடசாமி ஒப்பிட்டு உரைத்து ;

காஞ்சிப் பல்லவ மன்னனின் காலத்தைக் கணக்கிட்டுக்

காட்டுவது நமக்கெல்லாம் களிப்பூட்டும் ஒரு செய்தியாகும்.

அந்த மகேந்திர வர்ம பல்லவனின் மைந்தன்

நரசிம்ம பல்லவனின் நாட்டுக்கு எல்லை எது ?

வடக்கே சாளுக்கியர் ஆட்சியும், தெற்குத் திசையில்

வைகை நதிக்கரை பாண்டியர் பரிபாலனமும்

மேற்கு திசை மேவிடிலோ சேரர் பூமி யென்றும் சூழ்ந்திட

மத்தியில் அமைந்ததே எல்லை என்று வரலாறு வரைந்து காட்டும்.

அந்தப் பல்லவர் ஆட்சி வலிமை பெற்றிடக் கூடாதென்றும்

ஆழமாக வேரூன்றி விடல் ஆகாதென்றும் அழுகையை கொண்டு,

அடிக்கடி படையெடுத்த ஆதிக்க வெறியன் சாளுக்கிய

புலிகேசியின்

ஆணவத்திற்கு முடிவு கட்ட ஆர்த்தெழுந்தான் நரசிம்மன் -

புய வலிமையினாலும், போர்த் திறனாலும் புலிகேசியை

புறமுதுகிடச் செய்து காஞ்சிப் பல்லவர் படை

வாதாபி வரையில் அவனைத் துரத்திச் சென்று ; பல்லவன் ; தனது

தளபதி பரஞ்சோதியின் ஆற்றலையும் புலிகேசிக்குப்

புரியவைத்தான்.

பல்லவரின் சின்னத்தை வாதாபி ஆலயத்தில் அழகுறப் பதித்து

அது இன்றைக்கும் காணுகிற அளவுக்குச் சரித்திரச்

சின்னமாயிற்று!

நரசிம்மவர்மனின் நாடு புகழ் வெற்றியினைக் குறிப்பிடும்

கல்வெட்டுகள் ;

“பல நூறு யுத்தங்கள் நடத்தியவனும், பரியலும், மணிமங்கலம்,

சூரமாரம்

எனும் களங்களில் தோற்றோடிய புலிகேசியின் முதுகில் ;

தனது வெற்றியை எழுதியவனுமான பல்லவ மன்னன்” என ;

வியந்து பாராட்டுகின்றன வேலூர், கூரம், சந்திரமங்கலம்

பட்டயங்கள் ; இதனை வரலாறு பறை சாற்றுகின்றது!

காஞ்சியைச் சேர்ந்த தர்மபாலர் எனும் பேராசிரியர்தான்

நாலந்தா பல்கலைக் கழகத்தில் பணியாற்றியவர் என்பதால்

பெருமையுடன் காஞ்சி வாழ் கற்றறிந்தோர் ; பேருவகையும்

பெருமிதமும் இன்றைக்கும் கொள்கின்றனர்.

திராவிடப் பகுதியாம் காஞ்சிபுரத்தில் திகம்பர சமணர் பலர்

திருவுடையார் எனத் திகழ்ந்து வாழ்ந்ததையும் -

கெளதம புத்தரே காஞ்சிக்கு வருகை தந்து

நூற்றுக்கணக்கானவரை

பெளத்தராக்கியதையும் சீனத்து யுவான் சுவாங் குறிப்பிட்ட

மறக்கவில்லை.

இனிய நண்பர்களையும் நரசிம்ம வர்மன் கைவிட்டுப்

பழக்கமில்லை.

இலங்கையில் மானவர்மன் என்றோர் சிற்றரசன் ; அவனை

மாற்றார் தோற்கடித்துக் குடும்பத்துடன் தோணியொன்றில்-இந்து

மாக்கடலில் மிதக்க விட்டு நாட்டை விட்டே துரத்தி விட்டார்!

மனமொறிந்த மானவர்மன் ; நண்பன் நரசிம்மன் தனது

இன்மில்லாவிடினும் ; நட்புக்குப் பெருமை சேர்க்கும் இனிய

குணம் கொண்டவன் என்ற நம்பிக்கையில் ;

மாமல்லபுரம் துறைமுகம் நோக்கித் தோணியைச் செலுத்தினான் ;

முகம் கோணி வரவேற்பானோ நரசிம்ம நண்பன் என

அகம் வினவு ; அங்கு வந்தடைந்த மானவர்மன் ;

அதிசயத்தால் அயர்ந்து போனான் -

ஆச்சரியத்தில் மயங்கிப் போனான்!

அவனையும் அவன் துணைவியையும்

சொந்தச் சோதராக் குடும்பத்தினர்போல

அண்ணனாக நரசிம்மன் மாறி தன் அரண்மனைக்கு

அழைத்துச் சென்று, அணிமணிகள் அனைத்தும் வழங்கி ;

“ஆருயிர் சோதரா! ஆக வேண்டியது அனைத்தையும் தந்திட

ஆதரவுக் கரம் நீட்டியுள்ளேன் - இலங்கையில் உன்

பகைவரை வீழ்த்தி மீண்டும் நீ மகுடம் புனைய, என்ன வேண்டும்

கேள் ;

தயங்க வேண்டியதில்லை ; தட்டாமல் தருகிறேன்” என்றான்

பல்லவன்.

“வாள் முனையில் வெற்றிகளைக் குவிக்கும் வீரரே ; நண்பனாய்

நடித்த ஒரு

தேள் மனத்தான் சூழ்ச்சியாலே மண் இழந்தேன்,

மாளிகையிழந்தேன் -

மானமிழக்காமல் மானவர்மன் வாழ்வதற்கு வகை செய்க என்றே

முதல் பதிப்பு: ஜூன் 2006 — தமிழ்க்கனி பதிப்பகம் / பூம்புகார் பதிப்பகம், சென்னை