காலப் பேழையும் கவிதைச் சாவியும்
கவிதை 37 · 37 / 58
அரண்மனைக்குள் ஒளிந்து கொண்டு அஞ்சி நடுங்கும்
ஆண்மையற்ற கோழையினை வெற்றி கொளல்
பெருமையாமோ ?” என
கிள்ளிவளவன் முன் சென்று அந்த ஆலத்தூர்கிழார்
அள்ளிப் பொழிந்த அறிவுரைப் பாடல் கேட்டு
துள்ளி வந்த படையுடனே திரும்பிச் சென்றான் -
கொள்ளி மீது வீழ்ந்த பூழு மீண்டது போல் மீண்டான் கருவூர்
மன்னன்!
‘காலனும் காலம் பார்ப்பான், உயிர் கொண்டு செல்ல ;
- சோழர் குலக்
காவலனே! நீயோ ; களத்தில் பகைவர் உயிரை
நினைத்தவுடன் ஒரு கணத்தில் போக்குகிறாய்!” - என்று
வினை முடிக்கும் அவன் வீரத்தை வியந்துரைக்கும்
கோவூர்க்கிழார் ;
‘விறகு வெட்டச் சென்றவற்குக் காட்டில் பொன்
கிடைத்தாற்போல்
வேந்தன் கிள்ளியிடம் வந்தோர்க்கு பரிசு கிட்டும் என்று
கூறுகின்றார்.
‘தாய்ப்புலி, தன் குட்டிதனைக் காப்பது போல்
தமிழ்க் குலம் காக்கின்ற வேந்தன் நீதான்!
கரும்பிடைத் தேனும் கடைமடை வாளை மீனும்,
கன்னியர் பறித்து வரும் செங்கழுநீர்ப் பூவும்,
கழனியில் உழுவோர் கண்டெடுத்த ஆமையும்
காவிரியின் நீர்ப் பெருக்கால்
திரும்பிய பக்கமெலாம் நெல்மணியும்
திகழ்சோழ வளநாட்டை ஆளுகின்ற கோவே!” என்று
இடைக்காடனார் எனும் புலவர் ;
ஏற்றிப் புகழுகின்றார் ; கிள்ளிவளவனையே!
“வெயிலுக்கு மறைக்கின்ற குடையல்ல ; வேந்தே - உந்தன் குடை
;
அது,
வேதனையை விரட்டி நல்லாட்சி தருகின்ற வெண்கொற்றக்
குடையாகும்
வெள்ளப் பாழ் வறட்சியினால் பாதிக்கப்பட்டாலும்
உள்ளம் தளராமல் உழைக்கின்றார் வேளாண் குடியினர்
போர்முனையில் உன் வீரர் தீட்டுகின்ற வெற்றியெல்லாம்
ஏர்முனையின் துணையின்றி நடவாது என்பதாலே ;
மழவர் குலம் வாழ வைக்க
உழவர் குலம் போற்றி வாழ்க!” என்று
வெள்ளைக்குடி நாகனார் எனும் புலவர்
வேந்தனுக்கு அறிவுரையும் வாழ்த்தும் சொன்னார்!
“இயற்கையின் சீற்றத்தால் இவ்வுலகே அழிய நேரிடினும்
எதற்கு நாம் அஞ்ச வேண்டும் கிள்ளிமன்னன் இருக்கையிலே”
என்று
எண்ணற்ற புகழ் முத்துக் கவியாரம் தொடுத்தார்;
எருக்காட்டூர்ப் புலவர் தாயங்கண்ணனார்!.... அவர்
தஞ்சைக் குளிக்கரைக்கு அருகில் வாழ்ந்த
தமிழ்ப் புலவரேறு எனக் கூறிடுவர் ஆய்வாளர்!
★ ★ ★
சிறுகுடி யெனும் சோழ நாட்டுச் சிற்றூரில்
தருநிழல் போல ஒரு நண்பன் உண்டு கிள்ளிக்கு! அப்
பெருங்குடிக் கிழவன் பண்ணன் நிலத்தில்
அறுவடையாகும் நெல்மணி யாவும் வறியோர்க்கு
அளித்தனன் நன்கொடையாக என அறிந்து கிள்ளி ஆங்கு
சென்றான்.
அவனுக்குப் ‘பசிப்பிணி மருத்துவன்’ என்று பட்டமும் ஈந்தான்!
‘வான் போலக் கொடை வழங்கும் பண்ணனே - நீ
யான் வாழும் நாளும் சேர்த்து வாழியவே!’ என்று
புறப்பாடல் ஒன்றெழுதி அவன் கையில் கொடுத்துப்
புறப்பட்டான்; தலைநகராம் உறையூரை நோக்கி!
மாற்றார் எப்படை கொண்டு வரினும்; இவனிடம்
தோற்றார் என்றே வீர வரலாற்றைத் தீட்டிய வளவன்;
ஆவின் பாலொத்த அருள் வடிவும் முகத்தழகன்,
காவின் பிடிதனிலே ஒரு நாள் சாய்ந்து விட்டான்செருக்களத்தில்
செய்தி கேட்டு செவிப்பறை கிழிந்தது போல்
செந்தமிழ்ப் புலவர் கூட்டம் சிந்தியது கண்ணீர் அருவி!
‘இறந்தோரைப் புதைப்பதற்குத் தாழிதனைச் செய்வதிலே
சிறந்தோரைக் கேட்கின்றேன்; எம்மன்னன்
கிள்ளியினை வைத்துப் புதைக்கின்ற தாழி யெனில்
கீழ்த்திசை மேற்றிசை வானத்தை வளைத்து வைத்து
நிலவுலக முழுவதையும் குயவர் ஆழியாக அமைத்திட
நிமிர்ந்து நிற்கும் மேருமலையை குழைத்தன்றோ தாழி செய்தல்
வேண்டும்!
பூத உடல் புதைப்பதெனில் பொருந்தும் உம் தாழி - கிள்ளியின்
புகழ் உடலை வைப்பதற்கு இந்தப் பூதலமே ஏற்ற தாழி’ - என்று
சோகமுடன் ஐயூர் முடவனார் இரங்கற்பா எழுதும்போதும்
சோழனது கீர்த்திக்கு எல்லையில்லை என்று கண்டார்!
தொல் பழங்காலந் தொட்டுத் தென்னக வரலாறு எழுதிடத்
தொடங்கின் பழம் பெரும் ஆதிகாலத் தமிழ் மன்னர்களாம் ;
சேர, சோழ, பாண்டியர்களின் பட்டியல்கள்,
நெடியவை குறுகியவை அனைத்தும் நேரில் வந்து நிற்கும்.
மூன்று கொடி கொண்டவர்கள் முத்தமிழ் வளர்த்த மூவேந்தர்கள்
முதல், இடை, கடை என மூன்று சங்கம் கண்டவர்கள் -
சேரன் என்றால் பேரரசன் செங்குட்டுவன் என்றும் ;
சோழன் எனிலோ திருமாவளவன், கரிகால் பெருவளத்தான்
என்றும் ;
பாண்டியன் எனும்போது கடல் கொண்ட கபாடபுரத்தைத்
தலைநகராய்க் கொண்டு, தமிழையும் வளர்த்த முடத் திருமாறன்
என்றும் ;
முச்சங்கம் வாழ்ந்திட்ட முதிர் நிலை வரையில் முடிசூடி
ஆண்டோரின்
பிடி தளராப் பேரரசுகள் பெருவாழ்வு வாழ்ந்தன!
அக்காலம் அவரவர் ஆண்டிருந்த நிலப்பரப்பை
நீட்டித்துக் கொள்ளவும் நெடும்பகை தீர்த்துக் கொள்ளவும்,
கடும் போர்கள் விளைத்தனர், கட்டித் தழுவி, காழ்ப்பும்
தவிர்த்தனர்.
தமதாட்சித் தனித்தனி பகுதிகளிலே எனினும் நட்புறவு காத்தனர்.
இவர்களில் யார் வரலாற்றையும் ஆதி முதல் அரிச்சுவடியிலிருந்து,
இறுதியாக இதுவே என அறுதியிட்டு எவரும் எழுதவில்லை ;
எழுதவும் இயலாது!
பின்னர் பிற்காலச் சோழர் ஆட்சி பிறந்து வளர்ந்து பெரு வலிமை
பெறுவதற்கு முன்பு இடைப்பட்ட காலமான அய்நூறு
ஆண்டுகளில்,
களவர் என்றும், களப்பிரர் என்றும், கங்கையாறு வரையில்
கட்டியாண்ட சாதவாகனர் என்றும் - எத்தனையோ பிரிவினர் ;
குறுகிய
கோட்டங்கள் போல் அரசுகள் அமைத்து அதற்கே கோட்டைகள்
படைத்து
கோலோச்சி வாழ்ந்திட்டார் எனினும் ; மங்காப் புகழ் பெற்ற
மகேந்திர வர்மனும் அவன் மகன் மாவீரன் நரசிம்ம வர்மனும்
பல்லவ மன்னர்களிலேயே வல்லவர்களாம் மிக நல்லவர்களாம் ;
சிம்ம விஷ்ணு மரபில் வந்த
சிங்க ஏறுகளாம் ; அவர்கள்
காஞ்சி நகரைத் தலைநகராய்க் கொண்டு
மூன்றூறு ஆண்டுக் காலம் முடியாட்சி நடத்தியதுண்டு!
பாண்டிய சோழ மன்னர்களைக் கூட களங்கள் சிலவற்றில்
பல்லவ நந்திவர்மன் போன்றோர் வெற்றி பெற்று வீழ்த்தியதாக
வரலாறு!
சமண மதமே தனக்குச் சம்மதம் என்றிருந்த மகேந்திரன்
சைவ மத வேந்தனாக மாறிய பின்னர் ; சமணத்தைக் கேலி
செய்து,
‘மத்த விலாசம்’ என்றோர் நாடகம் எழுதி ; அதனை
மதப் பிரச்சாரக் கருவியாகப் பயன்படுத்தியது கண்டு,
மாற்று முகாம் சென்றவுடன் மனம் இப்படியும் மாறுமா என்று
சமணரெல்லாம் கடந்த காலத்தை எண்ணி கவலை மிகக்
கொண்டனர்.
பல்லவர் தலைநகராம் காஞ்சி தானா என்பதிலே அய்யம் கூட
பல ஆய்வாளர் எழுப்பியதுண்டு ; அதற்குச் சான்றாக
