காலப் பேழையும் கவிதைச் சாவியும்
கவிதை 36 · 36 / 58
முக்காவல் நாடு ஆமூர் சென்றான்! அக்கணமே
சொற்கோவாம் சாத்தந்தையெனும் புலவர் பிரானும் சோழன் முன்
நிற்காமல் கிள்ளியினைப் பின் தொடர்ந்தார்.
அரசிளங்குமரனே கொண்ட கொள்கைக்காக அரியாசனம்
துறந்த பின்னர்,
அவைப் புலவர் பதவியது அற்பமென எட்டித் தள்ளி,
தமிழ்க் குலத்தின் மானம், வீரம், பண்பாடு, மரபு
தாழாது காப்பதற்குச் சூளுரைத்துக் கிள்ளியின் அருகிருந்தார்.
★ ★ ★
முக்காவல் நாட்டு ஆமூரில் ஒரு நாள்
முரட்டு மல்லன் ஒருவன் தோள்தட்டி ஓடிவந்து,
“என்னை வென்றிடுவார் யாருண்டு இவ்வூரில் ?”
என முழக்கி அறைகூவல் விடுத்ததோடு - தன் முன்னே
நிற்க முடியாமல் அவ்வூரார் தோற்று விட்டால்
முக்காவல் நாடு முழுமையும் தனக்குரிமை ஆகுமென்றான்!
நாட்டுடைத் தலைவன் அதுகேட்டுப் போர்நடை போட்டு
முன்வந்து - அந்தக்
காட்டெருமை மனிதனை மற்போரில் வீழ்த்த முயன்று
தோற்றுவிட்டான்!
“ஆமூர் இனிமேல் வெற்றி பெற்ற தனக்குத் தான் உரிமையென்று
ஆகா! ஊகு !” என்று கத்திய மல்லன் முன்னே,
விண்ணில் நட்சத்திரமொன்று வீழ்கின்ற வேகத்தில்
மண்ணில் ஓங்கி உதைத்தவாறு குதித்து ;
‘மல்லனே ; நில்லடா!” என மார்தட்டிக் கொண்டு
மறவர் குல மாவீரனொருவன் அந்த மனித மிருகத்தின் மேல்
பாய்ந்தான்!
யார் அது ? யார் அது ? என ஆமூர் அதிர்ந்தது!
யார் அது ; உறையூர் தித்தன் மகன் பெருநற்கிள்ளியென்று
கையொலி செய்து ஒரு கூட்டம்! என்ன ஆகுமோ என,
கண் கலங்க நின்றது மற்றோர் கூட்டம்!
ஆமூர் தலைவனுக்கே கிட்டாத வெற்றி,
அதனையிற் குறைந்த இளைஞனுக்குக் கிட்டுமோ என்று
மூக்கின் மேல் விரல் வைத்து
முக்காவல் நாட்டு மக்கள் திகைத்து நின்றார்!
“ஊதினால் துரும்பெனப் பறந்திடுவாய் ;
உனக்கு இத்தனை ஆணவமா ?” என்று
மோதினான் முரட்டு மல்லன் கிள்ளியின் மேல்!
சண்டமாருதச் சுழற்சிபோல் நடந்திட்ட மற்போர் நிகழ்ச்சியை
சாத்தந்தையார் வழங்கிய பாடலெனும் பலகணி மூலம்
சற்றுத் தொலைவிருந்து காண்போம் நாம்!
மல்லன் மீது துள்ளிப் பாய்ந்த நற்கிள்ளி
ஒரு காலை மார்புக்கு மேல் மடித்து
மற்றொரு காலால் மாற்றானின் தாக்குதல் தடுத்து,
முரடனது முதுகின்கண் இறுகப் பிணைத்து ; பசியால்
மூங்கிலைத் தின்ன முயலும் யானை ;
அதனை வளைத்தும் முறித்தும் மிதிப்பது போல
மல்லனின் தலையும் காலும் மோதியும் முறித்தும்
மண்படக் கரையில் வீழ்த்தி மாண்டிடச் செய்த சோழமகனை
“போரவைக் கோப்பெரு நற்கிள்ளி” எனப்
புகழ் விருது வழங்கி வாழ்த்திய புலவர்,
புதல்வனது வீரத்தைக் காண்பதற்கு - உறையூர்ப்
புவியாளும் தித்தன் வந்திலையே என மனமிக நொந்தார்.
நற்கிள்ளி போர்புரிந்த வேகத்தை
சொற்கவை நனி சொட்டச் சொட்ட
உயர் தமிழ்க் கவிஞர் சாத்தந்தை,
உவமை கூறி விளக்குகின்றார் ; இதோ :-
★ ★ ★
“சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற் றுற்றெனப்
பட்டமாரி ஞான்ற ஞாயிற்றுக்
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ ;
ஊர்கொளவந்த பொருநனொடு,
ஆர்புனை தெரியல நெடுந்தகை போரே!”
( புறநானூறு - பாடல் - 82
பாடியவர் : சாத்தந்தையார் )
இதற்கு உற்ற பொருள் நான் கற்ற தமிழில் அளிக்கின்றேன்.
இந்த உவமை நயத்தின் இனிமையை நீவிர் உணர்ந்திடுவீரே!
“கட்டில் பின்னும் கடைநிலைப் பட்டாளியொருவன் - அதனை
விற்றுப் பிழைக்கத் திருவிழா தொடங்குமுன்
விரைந்தோடிட வேண்டும் - அவ்வேளையில்
கட்டிய மனையாள் பேற்று வலியால் பெரிதும் துடிப்பதாய்ச்
சேதி வந்து செவியினைத் துளைத்திட ; தன்
செயல் முடித்துப் புறப்பட்ட அவன் படபடக்க - வான
வீதியில் கதிரோன் மேற்கே வீழ்ந்து கனமழைக்கான
அறிகுறியும் கண்டிடவே
கட்டில் பின்னும் அவன் கையுசி எத்தனைக்
கடுமையாய் விரைந்து வாரைச் செலுத்துமோ - அந்த
ஊசியினும் வேகமாய்ப் போரை முடித்து - எதிரியைத்
தூசியென வீசி விட்டான் வீரன் கிள்ளி!”
இவ்வாறு
முத்தமிழ் வித்தகரின் பாமாலைக்கும்
முக்காவல் நாட்டு மக்கள் பூமாலைக்கும்
தலை வணங்கி நன்றியினை ; நற்கிள்ளி தெரிவிக்கபோது,
கலைவண்ண மங்கையொருத்தி ஆங்கே - காதல்
அலையாயும் நெஞ்சுடனே தோழியிடம் ; - அன்பால் அவனை
விலை கொள்ள முடியுமோ என்று விழியால் கேட்டாள்!
நிலை கொள்ள முடியாமல் தவித்திட்ட அம்மங்கை ;
மலை முகடு ஏறிபிறங்கப் பெருமூச்செறிந்திட்ட
நற்கண்ணையெனும் நங்கை!
“சோழநிலா” முத்தொளி பொழிந்து புகழ் பரப்பி ; பின்னர்
பாடும் பல்குழுக்கள் பகை பெருகி ஒற்றுமை குலைந்து ;
தாழும் நிலை தோன்றி “இருள் நிலை”யை எதிர்கொள்வதற்கு முன்பு
ஆளும் பொறுப்பேற்றுப் புகழ் பெற்றோர் இருவர் உண்டு!
அவ்விருவர் ஆட்சிக்குப் பின்னர் முறையாக ஒப்பிடுவதற்கு ;
எவரொருவர் மாட்சியும் இல்லாத காரணத்தால்,
கோலேந்திக் குடிமக்கள் காத்திட்ட கோப்பெருஞ்சோழர்க்
கிணையாக ;
வேலேந்தி வீரப் போர் பல புரிந்த வேந்தன் கிள்ளிவளவன் பற்றிக்
கூற - எழுது
கோலேந்துவதில் இன்பம் காணுகிறேன் ; துன்பத்தை நெஞ்சில்
சுமந்தவாறு!
குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் எனக் குறிப்பிடுவது ;
சோணையும், பாண்டியனையும் ஒரு சேர எதிர்த்துச் சென்று ;
வீரனாக செரு முனையில் விழுப்புண் பெற்ற கிள்ளிவளவன் -
வீழ்ந்த இடத்தின் பெயரே ‘குளமுற்றம்’ என்பதாகும் - சோழ
வரலாற்றில்
குளமுற்றத்தான், கோப்பெருஞ்சோழன் இருவர்க்கும் பிறகு ;
இருண்ட காலமாய் உருண்டது இடையில் அய்நூறு
ஆண்டுகளாம் ;
இதற்குப் பிறகே பிற்காலச் சோழர்கள் வருகின்றார் வரலாற்றில்!
இங்கே இப்போது கிள்ளியாம் குளமுற்றத்துத் துஞ்சியவனை
இலக்கியத்தில் “வாழும் வரலாறாக” நிலைத்தவனைச்
சந்திப்போம்.
★ ★ ★
புறநானூறுக் கருவூலத்தில் இவன் பெருமைகளைப் பாடுகின்ற
புகழ்க் கவிதை பல உண்டு! பாடிய புலவர்களும் பலராவர்!
‘பசுவின் காம்பை அறுத்திடும் பாவிகளுக்கும்
பாவையின் கருவை மிதித்துச் சிதைத்தோர்க்கும்
பாசமிகு பெற்றோரை வதைத்தோர்க்கும் மன்னிப்பு
உண்டெனினும்
பார் முழுதும் தலைகீழாய்த் திசை மாறிக் கவிழ்ந்தாலும்
பாதகாரம் நன்றியினைக் கொன்றோர் வாழ்வு
பாழ்பட்டே நாசமாகு’ மென்று - அவன்பால்
பரிசு பெற்ற ஆலத்தூர்கிழார் எனும் பாவாணர்
பரிவுடனே நன்றி கூறி நல்வாழ்த்துச் சொன்னார்.
கருவூரைக் கிள்ளி மன்னன் முற்றுகையிட்ட போது,
‘காவல் மரங்கள் சாய்கின்ற ஒலி கேட்டு ;
