காலப் பேழையும் கவிதைச் சாவியும்
கவிதை 35 · 35 / 58
“பார்வையினை இழந்தீரோ அப்பா நீங்கள்!
பழிவாங்காமல் விட மாட்டேன் பாவிகளை!” யென்று
போர் முரச ஒலியெழுப்பி மகள் அழுதாள்!
“கண்ணை அழித்து விட்டு உன்னைக் கள்வாட
எண்ணி விட்டார்! கற்பெனும் வாளேந்திய என்
பெண்ணை நெருங்கிட எவனுக்குத் துணிவுண்டு?”
தந்தை பேசி முடிப்பதற்குள்
தலைவில் நின்றவள் பதில் சொன்னாள்.
“உயிர் போன்ற தந்தையினைக் குருடாக ஆக்கியவர்தம்
உயிர் போகுமட்டும் - நான்
உண்கலத்தில் உண்ண மாட்டேன்,
உடை மாற்றம் செய்ய மாட்டேன்,
பழி வாங்கித் தீரும் வரை பசி தூக்கம் எதுவுமில்லை!
பகை முடிப்பேன்! பார்வையிழந்த தந்தைக்குப்
பலி கொடுப்பேன் எதிரிகளை!”
அன்னி மிஞிலியின் சூளுரை - அடுத்த நாளே
அழுந்தூர்த் திதியனுக்கு எட்டியது.
கன்னியவளுக்கு உற்ற துயர் கேள்விப்பட்டுக்
கவலை கொண்டான் - அவளைக் காணத் துடித்தான்.
செவியில் செய்தி நுழைந்ததைத் தொடர்ந்து
செந்திப் பிழம்பென தன்னெதிர் நின்ற “அன்னி”யைக் கண்டான்.
“கண்ணுக்கினியவளே! கருத்துக்கு ஏற்றவளே! உன் இதயப்
புண்ணுக்கு மருந்திட வகையறியேன், வழியறியேன்” என்று
நொந்தான்.
“குதிரைப் படையுண்டு, உன் கோட்டையில் மன்னா!
குன்றனையத் தோளுண்டு உனக்கு என் கண்ணா!
அன்னி மிஞிலியாம் என்னை நீ காதலிப்பது உண்மையெனில்
அட்டியின்றிப் புறப்படுக போருக்குக் கோசர் மீது!
அந்தகாராய் ஆக்கி விட்டார் தந்தையினை - அந்த
அறியாய்க்காரர்களை வீழ்த்த வேண்டும்.
கண்குத்திப் பாம்புகளைத் துண்டாடும் தீரியென்று
திண்டோள் திதியனைத் தேடி வந்தேன்” என உரைத்தாள்.
“வாளுறை விட்டு எழுந்தது பார்! என்
சூளுரை பொன்றும் அறிக அன்பே!
உன் தந்தையாம் - என் மாமனுக்கு ஊனம் விளைத்தோர்
உயிர் போக்கித் திரும்பிய பிறகே
உனைத் தீண்டும் என் கரங்கள்”
ஆர்ப்பரித்தான் அழுந்தூரான்!
போர்ப்படை கிளம்பிற்று!
பொல்லாக் கோசர் உடல் நொறுங்கிற்று -
நில்லா நெடுஞ்சுவர் போல் வீழ்ந்திறந்தார்.
விரும்பியவாறு சூளுரை முடித்தாள்
திரும்பிய திதியனின் தோளில் சாய்ந்தாள்!
அகநானூறு பாடல் இதற்கு அடிப்படையானது.
★ ★ ★
குறிப்பு:- (பாணர் பாடிய அகநானூறு பாடல் 262. இந்த வரலாற்று
நிகழ்ச்சியில் வரும் பாத்திரங்கள் கற்பனையல்ல - கால
முரண்பாடும் - இடங்கள் வேறுபாடும் இருக்கலாம். இலக்கியச்
சான்றுகளை ஒப்பிடும் பொழுது ; உண்மையில் நிகழ்ந்த
உருக்கமிகு சோழர் கால சரித்திரப் பகுதியேயாகும்)
அன்பால் அவனை
விலைகொள்ள முடியுமோ?
கற்கண்டுத் தமிழில் கவிதைகள் வடிக்கும்
நற்கண்ணை என்றொரு பெண்பாற் புலவர்,
இகம், பரம் என்று பாடல் இயற்றிக் கொண்டிராமல்
அகம், புறம், நற்றிணை எனும் சங்கத் தொகுப்பில்
கனகமணிகளாய்ப் பதித்திட்ட பாடல்கள் ஆறு - அவை
காதற்கனிகளைப் பிழிந்திட்ட கவிதையின் சாறு!
அந்த ஆறு பாடலுடன்,
காவற்பெண்டு எனும் மறக்குலத் தாயொருத்தி
களம் சென்ற மகனைப் பற்றி வினவிய கன்னியிடம்,
புலியிருந்த குகையிதோ எனப் பூரிப்பு பொங்கக் கூறி,
புறப்பாட்டு ஒன்றைப் போர்ப் பாட்டாய் இசைத்ததையும்,
அந்தத் தாய் தான் பெருநற்கிள்ளி யெனும் சோழப் பெருமகனைச்
சொந்தத் தாய் போல வளர்த்த செவிலித்தாய் என்பதையும்,
கிள்ளியின் அழகு, ஆற்றலில் மயங்கி - நற்கண்ணை; அவனை
அள்ளிப் பருகுதல் போல் கனவுலகில் மிதந்ததையும்,
பெருநற்கிள்ளியின் பேராண்மையினை - கவிப்
பெருமான சாத்தந்தையார், பீடு நடை போடும்
புறப்பாட்டாய்த் தீட்டிப் புகழ் மாலை சூட்டியதையும் - சற்று
ஆழமாய்ச் சென்று ஆய்ந்து படித்ததாலே
ஆவுக்கு விழுதெனவே தோன்றிற்று ஒரு கற்பனை!
★ ★ ★
நற்கண்ணைக்கு நற்கிள்ளி மீது காவியெழுந்த காதல்,
பொற்கிண்ணத்துப் பாலாய்ப் பொங்கித் தரையில் வழிந்த
கதையை,
“ஒரு தலைக் காதல்” எனும் உருக்கமிகு தொடரோவியமாய்க்
குறுந்தொகைக் காவியமாய்ப் படைத்திட்டேன் ; அந்நாளினைப்
படித்துச் சுவைத்திட முன்னர் ; ‘முரசொலி’ “காலப்பேழை” யில்
குடித்துச் சுவைக்கும் கரும்பாக ; அதன் முதல் பகுதி இப்போது
காணீர்!
இதுவும் சோழர் கால முற்பகுதியின் சரித்திரத்தைச் சுட்டுவதால்
இதையும் அச்சரித்திரச் சங்கிலியின் கரணையெனக் கருதிடுவீர்!
★ ★ ★
பச்சைப் பட்டாடை உடுத்திக் கச்சையுடன்
பரதமாடும் பருவமயில் போல - கழனியிலே
பயிர்கள் ஆடும் வளமிகு சோழநாட்டின்
பழங்காலத் தலைநகராம் உறையூரின்கண்
வீரவேண்மான் வெளியன் தித்தன் என்பான்
வெண்டொற்றக் குடையின்கீழ் வீற்றிருந்து,
தாரை வார்த்தபடியிருந்தான் ; அரசின் பெருஞ்செல்வத்தைத்
தபோதனர் நடத்துகின்ற வேள்விக்கும் யாகத்திற்கும்!
“தமிழ் மரபுக்கு இது ஏற்றதல்ல” என்று அவன் மகன்
தடுத்து நின்று அதனைத் தொடர்ந்து எதிர்த்தும் வந்தான்.
சோழவேந்தன் தித்தனோ; தன் மகன் பெருநற்கிள்ளி
சொல்லுகின்ற கருத்தையெல்லாம் புறக்கணித்து
அறியாக் குழந்தை ; நோய் போக்கும் கசப்பு மருந்தின் அருமை
தெரியாமல்
அதனை அருந்திட மறுத்துத் தட்டுதல் போல நற்கிள்ளியனித்த
நல்லுரை எதனையும் ஏற்றிட மறுத்து,
நாட்டின் செல்வம் வாரியே இறைத்தான்.
“அரச கருவூலத்தை நிரப்புவது குடிமக்கள் வேலை! அவர்
வாழ்வைத்
தரிசு நிலமாக்கி இதயத்தில் சொருகுவதோ வேலை ?
கொற்றவர்க்கு அழகு; குடி தழுவிக் கோலோச்சுதல்;
கொள்கை அற்றவர் செயலோ நல்ல குறிக்கோளுக்குக்
கொள்ளிவைத்தல்!
பாலும் தேனும் பசுநெய்யும் குடம் குடமாய்த் தீயிலாற்றிப்
பலியாக ஆடு, மாடு, குதிரையெலாம் வெட்டி வீழ்த்தி,
அவிர்பாகம் பெறுவதற்கு யாககுண்டங்கள் வளர்த்துத்
தவமிருந்தல்
‘அன்பே கடவுள்’ எனும் தத்துவத்தின் அடித்தளம் ஆட்டுகின்ற
செயலன்றோ ?”
எனக் கேட்டுத் தடுத்தான் கிள்ளி!
“நாடாளும் மன்னன் நான் எனை எதிர்த்து என்னமகன் நீயே
நாத்தழும்பேறி நாத்திகம் பேசுவதோ ? உன்
நாவை அறுத்து நாய் நரிகளுக்கிடுமுன்
நடந்திடுக நாட்டை விட்டு” என ஆணையிட்டான் தித்தன்!
“இன்றே பிரிகின்றேன் எனைப் பெற்ற உறையூரை; ஆனால்
மன்னா,
ஒன்றே தெய்வமென்றும் அதற்கு உயிர்ப்பலி வேண்டாமென்றும்
நான் கூறியதை நாத்திக மென்றகிறீர் - நீரோ,
வான் மீது தொங்குவதாய்க் கூறுகின்ற சொர்க்கம் காண
வையகத்தை நரகமாக்கி வதைக்கின்றீர் உயிர்களையே!
பித்தனையும் தெளிவிக்கக் கூடும்; ஆனால் என் தந்தையாம்
தித்தனை இனித்திருத்தல் இயலாதென்ற முடிவோடு
போகின்றேன்” என்று
பொற்கோவாம் பெருநற்கிள்ளி உறையூர் விட்டு
