காலப் பேழையும் கவிதைச் சாவியும்
கவிதை 34 · 34 / 58
வெள்ளமெனக் கருதாமல் வேந்தன் பிரிவதற்குத் துணிந்த உயிர்
மெல்லக் கரைந்து மேனிமுற்றும் தளர்ந்த போது - சிலர் ;
கோப்பெருஞ்சோழப் பெருமகனை நோக்கி “மன்னர் மன்னா!
பாப்புனையும் பைந்தமிழ்ப் பேராசான் பிசிராந்தையார்,
காணாமலே அகம் கோணாத நட்பு கொண்டவர் என்பாய் - உன்
வாணாளும் முடியப் போகின்றதே ; அவர் வராத காரணம்
என்ன?” என்றார்!
“அருகிருந்து உயிர் விடுவதாய்ச் சூளுரைத்துப் போனவர் -
திரும்ப
வருகின்றேன் என்ற வார்த்தை என்ன ஆயிற்று?” எனும் கேலி
ஒலித்திடவே ;
சாவதற்கு வந்த இடத்திலும் நண்பாது சான்றாண்மை குறித்துச்
சந்தேகம் எழுப்பியவர்பால் மன்னன் சீற்றம் கொண்டான்.
“பாண்டி நாட்டுப் பழகு தமிழ்ச் சிற்றூராம் பிசிர் எனும் பதியில்
தோன்றியெடுத்திட்ட தங்கமாய்த் தோன்றிய ஆந்தையார்
நட்போ ;
வாழுங்கால் வந்து தலைகாட்டி ஆடாவிடினும்
தாழுங்கால் தயங்காது ஓடிவந்து துணை நிற்கும் தூய நட்பு!
ஆன்றோரே! இதனை அறிவீர்!” என்றே விடையிறுத்த மன்னன் ;
ஆவிதனை அடுத்த மறுநாள் விடுத்தே நடுகல்லாய்
ஆகிவிட்டான்!
தாமதமாய் வந்தார் எனினும் பிசிராந்தை ; ஆங்கு
தமது நண்பாது பக்கத்தில் வடக்கிருந்து உயிர் நீத்த
நிகழ்ச்சியினை ;
கண்ணகனார் எனும் புலவர், கண்ணீரை மலராக்கி
கவிதை மாலை தொடுத்து அந்த நடுகற்களுக்கே சூட்டுகின்றார்!
அது ; இது!
“சான்றோர் என்றுமே சான்றோர் அருகிருப்பர்.....
சான்றாண்மை இல்லாதார், வரலாற்றில் சருகாகி உதிர்ந்து
போவார்!”
உயிரினும் மேலான உயர்ந்த
நட்பன்றோ ; இந்த உத்தமர்கள் நட்பு!
இளையவன்;
அவன் ஒரு தமிழ் மகன்!
துள்ளி வரும் வேல் கொண்டும் - ஆவேசத்தை
அள்ளிவரும் வாள் கொண்டும்
பள்ளி செல்லாப் பருவத்து இளங்கொழுந்தும்
கிள்ளி எறிவேன் பகையை என்று
கிளர்ந்தெழுந்த காலம் அது - தமிழர்க்குத்
தங்கமென வாய்த்த காலம் - புலவர் பலர்
சங்கம் வளர்த்த காலம்! வீரர்
பொங்கும் புலியெனப் போர்க்களம் சென்றார்
மங்கல மங்கையர் அவரை வாழ்த்தியே நின்றார்
காற்றடிக்கும்போதும் - அதில்
தமிழ் வீரம் வந்து மோதும்! கடலின்
அலை உயர்ந்து கிளம்பும்- அதில் தமிழன்
நிலை உயர்ந்து விளங்கும்!
அகிலின் புகை மணக்கும் - அதிலும்
தமிழின் புகழ் மணக்கும்!
முகிலிடை எழில் மதி தோன்றும் - அதில்
முத்தமிழ்க் காவிய நிதி தோன்றும்!
அவனி புகழ் பெருநிலத்தை ஆண்டிருந்த
அசோக மன்னன் கூட தன்
ஆட்சிக்கு உட்படாதோர்
ஆற்றல்மிகு தென்புலத்தார் என்று சொன்ன ;
தென்னகத்துத் திண்டோள் இனத்தாரில்
தீரம் நிறை கோசர் எனும் ஒரு பிரிவு!
வீரம் விளைவிக்கின்ற திறன் படைத்தோர்,
தூய்மை சேர் வாய்மைக்குப் பேர் பெற்றோர்,
துளுநாடு நீங்கிக் கீழ்க் கடல் வரையில்
அலைந்து திரிந்த போக்கினை நிறுத்தி
“நியமம்” “செல்லூர்” பகுதியில் நிலைத்ததாய் வரலாறு!
“● செல்லூர்க் குணா அது
பெருங்கடல் முழக்கிற்றாகி, யாணர்
இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர்
கடுங்கண் கோசர் நியமம்”
★ ★ ★
அகநானூறு இலக்கியம் அறிவிக்கும் செய்தி இது.
‘அன்னி’யென்றும், ‘மிஞிலி’ யென்றும் அகப்பட்டு ;
அடலேறத் தமிழ் வீரர் இருவரை அறிமுகம் செய்யும்.
இருவீர் பெயர் இணைத்து இளையவள் ஒரு தமிழ் மகள்
பருவத்தை விழியைப் போர்க் கருவியாக்கிக் காளையரை
வீழ்த்துகின்ற
பருவத்தாள் எனினும், பண்புடைய திருக்குமரி!
தழுவத்தான் பலர் துடித்தார்- கோசர் சிலர் அவர்
தந்தையிடம் பெண் கேட்டார். மறுத்துவிட்டார்.
‘அன்னிமிஞிலி’ எனும் அழகு நங்கை
அமர்க்களத்தில் உயிர் நீத்த அன்னி யெனும் வீரன் போல்
அனல் உமிழும் கற்புடையாள்!
‘ஆய் எயினன்’ எனும் வீரனை வென்று வீழ்த்தி
நன்னனது ஊரினையும் தனதாக்கிக் கொண்ட
‘மிஞிலி’ எனும் வீரனைப் போல் உறுதிமிக்காள்!
“நிலவுச் சித்திரம் போல் - நீரில்
உலவு நீள் விழிக் கெண்டை போல்
குலவிடும் கிள்ளைப் பெண்ணாள் - நற்
கலவிக்கு ஏற்ற கண்ணாள்-”
என நினைத்து இனித்து வந்த சில கோசர்களை
என்ன நினைத்தாய் என் மகளை எனக் கேட்டு
கன்னலடா என செல்வி அதைக் கடுங்குரங்கின்
கையில் தரச் சம்மதியேன்! அவள்
எண்ணமெலாம் அழுந்தூரான் மீது அறிவீரோ ?
திதியன் எனும் அவ்வூர்க் காவலனே அவளுக்கும் காவலனாம்!
அடுத்தொரு முறை வருவது கூடாது- நான்
எடுத்துச் சொன்னதைப் புரிந்து கொண்டு நடந்திடுக உடனே
என்றார்!
வாய்மை நிறைக் கோசரிலும் வன்னெஞ்சம் கொண்டோர் சிலர்
வாழ்ந்திட்டார் என்பதுதான் வரலாறு! அவர்
வகுத்திட்டார் ஒரு திட்டம் வஞ்சிதனைக் கைப்பற்ற!
பயற்றும் பயிர் விளையும் பாங்கான நிலங்கள் பல
நியமத்தில் நிலைத்திட்ட கோசர்க்கு உரிமைச் சொத்து!
பசுவொன்றே அன்னி மிஞிலியின் அன்பான குடும்பச் சொத்து!
பயங்கரத் திட்டத்தால் அப்பசுவை விரட்டியடித்துத் - தங்கள்
பயற்றும் பயிர்க் காட்டில் மேய விட்டார் சில கோசர்!
பசித்திருந்த பசுவுக்குப் பயிர்க்காட்டு மேய்ச்ச லென்றால்
பாய்ந்து சென்று தின்னாமல் பயந்து கொண்டா ஓடிவிடும்?
பாட்டாளி வர்க்கத்தின் உழைப்பையெல்லாம்
கூட்டாகச் சேர்த்து தின்று உப்புகின்ற
கொடும் ஆதிக்க வர்க்கத்தின் தொப்பையைப் போல்
இனியில்லை இடமென்ற அளவுக்கு உப்பியது அந்தப் பசுவின்
வயிறு!
கன்னியில்லை என்று சொன்ன கிழவனது
கண்ணில்லை என ஆக்கிவிட்டால் - பின்னர்
துணையில்லை தோகைக்கு! எல்லோரும் அந்த
இணையில்லாப் பேரழகைப் பகிர்ந்து கொள்வோம்
இப்படித் திட்டமிட்ட இழி குணத்தார் ;
செப்படி வித்தை காட்டிச் செயல் புரிந்தார்.
அன்னி மிஞிலியின் அப்பனைக் கூண்டிலேற்றி
அன்றந்தப் பயற்றங்காட்டில் பசுமேய்ந்த கதையைச் சொன்னார்
ஊர் மன்றக் கோசர்களும் உண்மை என்ன உரைப்பீர் என்றார்!
கார்கொண்ட வானம் போல் முகம் கறுத்து அக்கிழவர் ;
“யார் கண்டது என் பசு மேய்ந்ததை என நான் கேட்கமாட்டேன் ;
யார் எதிர்ப்பினும் பொய் சொல்லாப் பரம்பரை நான்
பயற்றும் பயிரை என் பசு மேய்ந்தது உண்மையே!” என்றார்.
குற்றத்தை ஒத்துக் கொண்டான் - அதனால்
குத்திப் பெயர்த்திடுக அவன் கண்ணையென்று
கோசர்களின் மன்றத்தில் தீர்ப்புச் சொன்னார்.
அடுத்த கணம் அன்னி மிஞிலியின் தந்தையை இழுத்துச் சென்றார்
பழுத்த கிழம் - பாவம் ; அவர் கண் இரண்டும் பெயர்த்துச் சென்றார் ;
