உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

காலப் பேழையும் கவிதைச் சாவியும்

கவிதை 33 · 33 / 58

விளக்கம் பெறுவீரே!

★ (Vide his “History of the Tamils” - Page 80)

உயிரினும் மேலான

உயர்ந்த நட்பு!

அறிவுடைநம்பியாம் பாண்டியன் அறிவு விளக்காக அமைந்திட்ட

செறிவுடைச் செந்தமிழ்ப் பேரொளியாம் பிசிராந்தை ;

சோழ நாட்டு வேந்தன் கோப்பெருஞ்சோழன்பால்

சொல்லாலே நெய்வதற்கு இயலாத அன்பதனைக் கொண்டிருந்தார்

பிறந்த இடமாம் பிசிர் எனும் ஊரில் - நிழல்

அடர்ந்த தோப்பில் நெறியுடைக் கவிஞர் ஒருநாள் ;

ஆருயிர் நண்பன் சோழனைக் குறித்து பாடலொன்று ;

யாத்திடும் ஆசை நிறைவேற வேண்டுமென்று,

அன்னச் சேவலை மையமாய் வைத்து - அழகுறப் பாடல்

கன்னல் தமிழில் கற்பனையுற்றாய் எழுதியார் புலவர்!

“அன்னச் சேவலே! அன்னச் சேவலே!” என அழைத்து

இன்னுயிருள்ள தன் நெஞ்சைத் திறந்து காட்டி,

மன்னவன் பெருங்கோ கிள்ளியெனும் கோப்பெருஞ்சோழனை

இன்னமும் காணுகிற வாய்ப்பினைப் பெறவில்லையே யென்ற

மனப்புயல் ஒருபுறம், அடக்கிக் கொண்டு - அவன்

மார்பகமுற்றி எடுத்துரைத்தார்!

“அன்னச் சேவலே! அன்னச் சேவலே! நீயோ

கன்னிக் குமரியின் முனையிலேயிருந்து

அயிரை மீனைக் கொத்திய அலகுடன் - வெகு

உயரம் விண்ணில் பறந்தவாறு,

பனிமலை நிறைந்த வடக்கு திசைக்குப்

பயணம் செய்கிறாய் ; நின் பயணம் வெல்க!

கடக்கும் வழியில் என் கண்மணிச் சேவலே! பகை

அடக்கும் சோழன் தலைநகர் உளது!

வழியில் நீயும் நின் பெடையுடன் சென்றால் - சோழன்

விழியில் அன்பின் ஒளியினைக் காண்பாய்!

ஆந்தையார் எனும் புலவர் வாழ் பிசிர் எனும் ஊரைச்

சார்ந்தோர் நாங்கள் எனச் சாற்றுவாயாகில்;

அரசனே ஓடி வந்துமே வரவேற்று வாழ்த்தி

அணிமணி பலவும் நின் பேடைக் களிப்பான்!”

★ ★ ★

ஆந்தையார் சொற்கேட்டு அன்னச் சேவலார் - சோழ

வேந்தனிருக்குமிடம் சென்றாரோ இல்லையோ;

ஆருயிர் நண்பன் சிறப்பைச் செதுக்கிய மனநிறைவுடன்

அன்பு மனைவியிடம் புலவர் அதனைப் பாடிக்காட்டி மகிழ்ந்தார்!

“அன்னச் சேவல் கற்பனை மிக அருமை” என்றுரைத்தவாறு

அன்னம் படைத்திட்டாள் துணைவி; அவருக்கும் பேரக்

குழந்தைகட்டும்!

“முல்லை வரிசை இரண்டிங்கே சிரிக்கின்ற காட்சி பாராய்”

என்றார்!

வில்லையொத்த புருவம் விரித்து “எங்கே?” எனக் கேட்டாள்

துணைவி!

“பாவையந்தன் பாலைச் சிரிப்போடு - இதோ

பச்சரிசிச் சோறின் சிரிப்பையுந்தான் முல்லையென்றேன்” என்றார்!

“பார்த்துப் பேசுங்கள்; பக்கத்தில் குழந்தைகள்” என்றாள்! -

“நமது மகன்;

வார்த்தெடுத்த வைரச் சிலைகளுக்கு இம்மொழி புரிய வயது

போதாது!

வளர்ந்த மகன், மனைவியுடன் வயலுக்குச் சென்றுளான்

- அவர்கள்

வருவதற்கு நேரமாகும் ; அஞ்சாதே!” என்றார்.

“வந்துவிடுவார் இப்போது கொஞ்சாதீர்” என எச்சரித்தாள்! - உடன்

வாய் மூடிக் கொண்டார் புலவர் ; அவள் வடித்திட்ட சோறாலே! - அது

போய்த் தொண்டையிலே அடைத்ததாலே

புரையேறிப் புலவர் தவித்தார்!

தையலோ தாவிப்பாய்ந்து கணவன் தலையிலே ஒரு தட்டுத்

தட்டிக்

கையினால் நெஞ்சைத் தடவிக் கொடுத்தபோது தழுவினார் ;

நழுவிவிட்டாள்!

கவலைவென ஒலிக்கின்ற சதங்கைக் போலக் காதல் முதியோர்

களிப்புமிகக் கொண்டவாறு சிரித்துவிட்டார்!

கரும்பின் அடிப்பாக இனிப்பைப் போல மழலைக் கொட்டி -

பிஞ்சுக்

கைகளையே தட்டிக்கொண்டு பேரன் பேத்தி சிரிக்கலுற்றார்!

மடையுடைத்தாற்போல் பொழிந்த மகிழ்ச்சிக்குத் திடுமென

தடைவிதித்தாற் போல் செவியில் விழுந்தது ஒரு செந்தமிழ்

செய்தி!

உறையூர் வேந்தன் கோப்பெருஞ்சோழனை எதிர்த்து - அவன்

உயிராய் போற்றிய மைந்தர்கள் படை எடுத்தனர் என்றும்,

கிள்ளை மொழித் தமிழால் கவிபுனையும் சோழ மன்னவனோ

பிள்ளைகளின் செயலால் பெருந்துயரில் ஆழ்ந்திட்டான் என்றும்

வெள்ளை மலர் உள்ளத்தான் வேறு வழியே இன்றி

வீர் வாளைக் கரமேந்திக் களம் காண எழுந்திட்டான் என்றும்

தந்தைக்கும் மைந்தர்க்கும் மூண்டு விட்ட போராட்டம் குறித்து

விந்தைச் செய்தியினைக் கேட்டுப் பிசிராந்தைப் புலவர்

சிந்தையில் தொலைத்துவிட்ட பொருளாயிற்றே தமது மகிழ்ச்சி

எனக் கூறி

சிந்தை மிக நொந்து புறப்பட்டார் சோழ நாடு!

★ ★ ★

கோப்பெருஞ்சோழன் அமைத்திட்ட ஊர்ப் பொது மன்றமொன்றில்

கூடியுள்ளனர் அவ்வூர்ச் சான்றோர் எனக் கேள்வியுற்று

வார்த்தையில் அடங்காப் பரபரப்புடனே இதயம் துடிக்கப்

போர்ப்புகை அணைத்ததா என்றறிய அங்கு சென்றார்.

பொத்தியார், பூதநாகனார், நத்தத்தனார் மற்றும்

புல்லாற்றூர் எயிற்றியனார் எனும் புலவர் பெருமக்கள்

மன்றத்திலிருந்து குதித்தோடி வந்து, பிசிராந்தையாரை

மார்புறத் தழுவி “வருவீர் வருவீர்” என வாழ்த்திக் களித்தனர்!

“அங்கம் பதறி அகம்பதறி வந்துள்ளேன் அய்யா

சிங்கத்துக்கும் அதன் குட்டிகட்கும் மூண்ட போர்

என்ன ஆயிற்று?” என வினாக்குறியாய் நின்றார் புலவர்!

“எதொன்றும் தீங்காய் முடிந்திடவில்லை கேளீர்!

இன்னவொன்று தோன்றிற்று அதனை இந்தப் பெருமகன்

மின்னலெனப் பாய்ந்து சென்று தடுத்து விட்டார்

குஞ்சுகள் மிதிப்பதாலே கோழியும் பதைக்கலாமோ எனக்கேட்டு

கொஞ்ச தமிழ்க் கவிதையாலே கோப்பெருஞ்சோழனையே

குளிர்வித்துப்

போர் நிறுத்தம் செய்வதற்குக் காரணமான

புல்லாற்றூர் எயிற்றியனார் இவர்தான்” என்று

பொத்தியார் அறிமுகம் செய்து வைத்தார்!

பூரிப்பால் பிசிராந்தை துள்ளினார் - பின்னர் ;

உவகை மலர்ந்திட ஊர் திரும்புவானார் - அவர்

உள்ளம் புயலாகும் ஓர் செய்தி அங்கு காத்திருந்தது!

★ ★ ★

கிழக்குதித்த சூரியன் போல் நாடாண்ட சோழ மன்னன் ;

தனக்குதித்த பிள்ளைகளின் எதிர்ப்பாலே உடைந்த மனம்

ஒட்டாமல் ;

வடக்கிருந்து உயிர் விடுவதற்குச் சென்றான் என்று

மடற்கத்தி போல ஓலையொன்றைக் கண்டார் கவிஞர்!

“இக்கணமே புறப்பட்டு இல்லம் சென்று விடைபெற்றுத்

திரும்புகிறேன்

இக்கணமாய் நட்புக்கு வாழ்ந்த நாங்கள் இறப்புலகில்

பிரிவதில்லை!

வடக்கிருக்கச் சென்றுள்ள சோழனிடம் கூறிடுவீர்! - அவன்

அருகிருக்கப் பிசிராந்தை விரைவில் வருவானென்று!”

இதைக் சொல்லிப் புலவர் ஏறு இலையினின்றுதிர் பனிநீர் போல

இமை இரண்டில் விழி நீர் சொட்ட ; பயணமானார்!

★ ★ ★

ஆண்ட நாள் ஆண்ட செந்தமிழ்ச் சோழன் - மைந்தரால்

மூண்ட போரினையெண்ணி மூடுபனி நெஞ்சு கொண்டு ;

வடக்கிருந்து மாண்டிடவே விழைந்தான் என்றும் - மன

வாட்டம் அறவே தீர அதுதான் மார்க்கமெனத் தேர்ந்தான் என்றும்

தமிழகம் வாழ்புலவர் கேள்வியுற்று - தங்களுயிர்

அமிழ்தல்ல என்றுரைத்து அவனோடு சென்றமர்ந்தோரில் சிலர்

முதல் பதிப்பு: ஜூன் 2006 — தமிழ்க்கனி பதிப்பகம் / பூம்புகார் பதிப்பகம், சென்னை