உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

காலப் பேழையும் கவிதைச் சாவியும்

கவிதை 58 · 58 / 58

நோக்கு நிறைவேறக் கிளம்பியது படை வரிசை!

கானப்பேர் எயில் என்னும் காவல்நிறை அரணை மோதி,

கடுமைப் போர் நடத்திப் பின்னர் முற்றுகையை முடித்துவிட்டான்.

உக்கிரப் பெருவழுதியின் உறுதிமிகு தாக்குதலால்

உருக்குலைந்து போயிற்று வேங்கை மார்பன் கோட்டைக் காவல்!

நெற்றித் திலகமிட்டு வழியனுப்பி வைத்த அரசிக்கு,

வெற்றிச் சேதி சொல்வதற்குப் பாண்டி மன்னன் திரும்பி வந்தான்.

குத்துண்டு புண்பட்ட கோவேந்தன் மார்பகத்தில்

ஒத்தடங்கள் ஒவ்வொன்றிக் கொடுத்திட்டாள் ; உடல் மேட்டால்!

ரத்தம் கசிந்திருக்கும் விழுப்புண்கள் எல்லாம்- அவள்

முத்தங்கள் பெற்று முழுமையாக ஆறினவே!

★ ★ ★

சில நாள் சென்று

அய்யூர் மூலங்கிழார் பாண்டியன் அவைக்கு வந்தார்.

அரசே! மதியாத பகைவரெல்லாம் உமை மதித்துப் புகழ்கின்ற

பெருமை என்னே!

களம் சென்றால் வெற்றியன்றி வேறொன்று அறியாத வேந்தே!

இன்று முதல் உம்மை ;

“கானப்பேர் எயில் கடந்த உக்கிரப் பெருவழுதி” என

காவியங்கள் பாடட்டும்! கவியரங்கம் புகழட்டும்!

கதிர் உள்ளளவும் அப்பெயரே நிலைக்கட்டும்”

எனப் புகன்றார்.

“நன்றி புலவரே!” எனப் பணிந்த வேந்தன் ; அவரைப் பார்த்து

இப்போரில்

குன்றிவிட்ட வேங்கை மார்பன், கோபக் கனல் உமிழ

கானப்பேர் எயிலை மீட்பதற்கு மீண்டும்

களம் அமைக்கப் போகின்றானா ? எனக் கேட்டான்.

அதற்கு அய்யூர் மூலங்கிழார் சொன்ன பதில்

அரியதோர் உவமையினை அன்னைத்தமிழுக்கு வழங்கியது!

அஃதென்ன ?

உலைத் தீயில் கொல்லன் காய்ச்சிடும் இரும்பில்

ஒரு துளி நீர் பட்டால் அந்நீரை மீட்டிடல் முடியுமா ?

(அவ்வாறே)

உக்கிரப் பெருவழுதி வென்று விட்ட கானப்பேர் எயிலும்

உலைக்களத்து இரும்பு உறிஞ்சிய நீர்த்துளியாய் ஆனது என்று

உமது பெருமையைப் பேசி- வேங்கை மார்பன்

உளம் நொந்து நிற்கின்றான் என்றார்!- அந்தத்

தங்கப் புலவர் தந்த உவமை அழகுக்குத்

தக்க பரிசு என்ன தருவதென்று புரியாமல்

தவித்திருப்பான் பாண்டியன் என்கின்றேன் நான் ;

தவறுண்டா என் கருத்தில் ?

தமிழின் சுவை அறிந்தோரே! கூறிடுவீர்!

பகைவாள் முனை மருங்க;

நாள் எல்லாம் உழைப்போம்!

ஒளி மிகு புகழுடன் ஒப்பற்றோர் ஆட்சி

நடத்தியவன் முதலாம் குலோத்துங்கன் - எனும்

முத்திரையை வரலாற்றில் பெற்ற மன்னவனாக

சீன நாட்டுடனும் நட்பு கொண்டு, நாடாண்டு

கி.பி. 1077இல் 72 பேர் கொண்ட தூதுக்குழுவை

சீனப் பேரரசுக்கு அனுப்பிச் சிறப்புற்றவன் என்றும்,

மாமன்னர்களாகவும் மாவீரர்களாகவும் இருந்த

கரிகாலன், செங்குட்டுவன், நெடுஞ்செழியன் எனும்

மூவேந்தர்களின் அறிவுக்கும் திறமைக்கும் வீரத்துக்கும்

முற்றிலும் நிகராக ஆற்றல் நிறை ஆட்சியினை

நடத்தினான் என்பதை விட ஒரு படி மிஞ்சியும்

நிர்வாகத் திறன் கொண்டவன் என்பதை

நிருபிக்குமளவுக்கு நில அளவை முறை,

சுங்கம் தவிர்த்த ஆணை போன்ற மக்கள் நலத்

திட்டங்களில் ஆர்வமுடையனாகவும் விளங்கி

தீராதி தீரனாகத் திகழ்ந்த குலோத்துங்கன் ;

சோழப் பேரரசை செழிக்கச் செய்த பின்

சோடையாக ஓர் அரசு அமைந்தது -

இரண்டாம் இராசராசன், இரண்டாம் இராசாதிராசன், மற்றும்

மூன்றாம் இராசேந்திரன் என ஏழு பேர் சோழ மன்னர்

ஆண்ட பின்னர் ;

எழுவரில் மூன்றாம் இராசராசனே ஆட்சியில் சோடையாகி ;

சோழப் பேரரசு வீழ்வதற்குக் காரணமானான் என முடிகிறது அந்த

வரலாறு!

இரண்டாம் குலோத்துங்க சோழன் ஆட்சியிலேயே 1132இல்

பட்டத்துக்கு வந்த பாண்டிய மன்னன் மாறவர்ம சீவல்லபன்,

திருவரங்க ராயம் வளைத்து, பாண்டியப் பேரரசுக்கு, வித்திட்டான்.

பாண்டியப் பேரரசின் முடிவும் பதினான்காம் நூற்றாண்டிலேயே

வந்துற்றதாம்

மூன்றாம் இராசராசனே சோழர்களில் வலிமையற்றவன் என்பதை

முன்னரே குறிப்பு காட்டியிருப்பதால் ;

மாவீரனாம் மானவர்மன் சுந்தரபாண்டியன் 1219லேயே

தாவினான் தஞ்சைப் பக்கம் படை கொண்டு - பாண்டியனின்

தாக்குதலால் பதறிப் போன மூன்றாம் இராசராசன் ;

தீக்கு இரையாகக்கித் தஞ்சை உறையூரைத் தரைமட்டமாக்கி விட்டு,

தலைமறைவாக ஓடி ஒளிந்து கொண்டான் ; தப்பிய வரையில்

போதுமென!

தஞ்சை அபிடேக மண்டபத்தில் பாண்டியன் வெற்றி விழா

நடத்திக் கொண்டான்!

பொன்னமராவதியெனத் தற்போது வழங்குகிற நன்னகரில்

மன்னன் சுந்தரபாண்டியன் ஓய்வு கொண்டுள்ளான் எனும் செய்தி ;

செவியில் விழுந்ததும் சோழன் சீறிக் கிளம்பி எதிர்த்துப்

போரிட்டான் என்றில்லாமல்,

புவியாளும் பொறுப்பைப் பிச்சையாகத் தருக என இருகரம்

கூப்பிக் கேட்க ;

பொன்னமராவதிக்குப் புயல் வேகத்தில் ஓடினான் -

என்ன செய்தி ? எதற்கு வந்தீர் ? எனப் பாண்டியன் வினவ ;

பாராண்ட சோழன் குனிந்து பணிந்து

கும்பிட்டு வீழ்ந்து சொன்னான்

பாண்டிய மன்னா ; பார் புகழும் தலைவா!

வேண்டுதல் ஒன்றுண்டு விருப்பத்தை நிறைவேற்றிடுக -

ஈண்டு வந்துளானே என்னோடு என் மனைவி ;

இருவரும் உம் தாள் வீழ்ந்து கேட்கிறோம் -

எம் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருதி இரக்கம் காட்டிடுக -

பிடித்த எம் நாட்டைக் கொடுத்தாலே போதுமானது!

பறித்த சோழர் நிலம் திரும்ப ஒப்படைப்பதே சிறப்பானது - மேலும்,

இதில் இழிவொன்றும் எமக்கில்லை - உமக்கும் இருக்கத்

தேவையில்லை.

தலை வணங்காத தமிழன் இராசராசனின் வழி வந்த ஒரு மன்னன்

தலை குனிந்து வளைந்து வணங்குதல் கண்டு ;

“தமிழ்த் தாயே; அந்தோ சுயமரியாதை இழந்து விட்ட

சோழ மன்னனை மன்னித்து விடு” என்று சொல்லி

தனக்குத் தானே தன் நெஞ்சில்

சுந்தர பாண்டியன் சூடொன்று வைத்துக் கொண்டான் ;

தன்மானம் பற்றியும், தமிழ்மானம் பற்றியும்

அவன்தான் கவலைப்பட்டான்!

இந்த நிலையையே அடுத்தடுத்து தொடர்ந்து -

அண்ணன் தம்பி சோதரர்களுக்குள்

மூவேந்தர் முட்டி மோதிக் கொண்டும் -

பிற இனத்தார்க்கு இடம் கொடுத்து -

பின்னடைவைச் சேர்த்திட்டார் - தமிழ் இனத்துக்கு

அதனாலே பேரரசுகளாக இருந்த மூவேந்தர் பூமிகள் ;

சிற்றரசுகளாகி - பின் சின்ன சின்ன அரசுகளாகி

இறுதியில்

சிற்றெறும்பு அரசுகளாயின் -

எழுச்சியுற்றிருந்த தமிழக வரலாற்றை

எழுதி எழுதி மகிழ்ச்சியுற்ற எனக்கும்

படித்துப் படித்து உணர்ச்சி பெற்ற உங்களுக்கும்

இனியும் இதனைத் தொடராமல் இருப்பதே நலம் -

நம்மை நாமே எண்ணிப் பார்த்து

நமக்குள் ஒற்றுமையும் உறவும் வலுப்பெற

நாளெல்லாம் உழைப்போம் - பகைவர்

வாளெல்லாம் முனை மழுங்க வெற்றி குவிப்போம்!

(முதல் பாகம் முற்றிற்று)

முதல் பதிப்பு: ஜூன் 2006 — தமிழ்க்கனி பதிப்பகம் / பூம்புகார் பதிப்பகம், சென்னை