உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

காலப் பேழையும் கவிதைச் சாவியும்

கவிதை 28 · 28 / 58

“நெடுநாள் தவமிருந்தாலும் ‘காலன்’ என்போன் எங்கள்

நெடுஞ்செழியனை வெற்றி கண்டிட முடியாதெ”ன்று!

★ ★ ★

களத்திலும் சரி ; வாழ்வெனும் கடலிலும் சரி ;

வீரமெனும் படகில் ஏறி - துணிவு எனும்

துடுப்பு கொண்டு பயணிக்கும் உறுதி கொண்டார் -

தலையாலங்கானத்து நெடுஞ்செழியனைப் போல்

தவமிருந்து வரம் பெறாமலே ;

தமிழ் உள்ள வரையில் வாழலாம் என்று - அவன்

தளிர் விரல்களைத் தடவிக் கொடுத்து,

தடந்தோள்களில் முத்தமீந்து,

தமிழ்ப் புலவர்கள் வாழ்த்தினர்.

தமிழ் நிலமே தலை நிமிர்ந்து வாழ்த்தியது!

தலைசிறந்த புலவர் ஏறுகளாம் நக்கீரரும், மாங்குடி மருதனாரும்

கலை மணங் கமழும் காப்பியப் பாடல்கள் போல நிலை பெற்று

வாழும்

‘நெடுநல்வாடை’யும் ‘மதுரைக் காஞ்சி’யும் இயற்றிய

திருநாளைக் கொண்டாடிட ஒரு நாள் வரும் என ;

இந்தத் தமிழ் நிலமே ;

இதயமார வாழ்த்தியதாம்! இப்போதும் வாழ்த்துகிறதாம்!

புறம்பாடிய புலவர் குடபுலவியனார் ; இப்போரினைப்

புகழ்ந்துரைக்கும் போது குறிப்பிடுகிறார் -

இருபுறமும் தமிழர்களே அணி வகுத்த போர்க்களத்தில்

இடையே எருமையூர்ப் பகைவர் படைகளும் கலந்த போதும் ;

பாண்டிய நெடுஞ்செழியன், பார் புகழும் வெற்றியைப் பெற்று

தூண்டிற் புழுக்களாய்ப் பகையைத் துடிக்க விட்டு

தோல்வியை அவர்தம் தோளில் சுமக்க விட்டுத்

துரத்தி விட்டான்! மீனக் கொடியை வானில் உயர்த்திவிட்டான்.

தமிழ் மானக் கொடியைத்

தன் கையில் பிடித்து விட்டான்.

போர் முனைக்குப் புறப்பட்ட போது அவன் புலிக்குட்டி -

போர்க் களத்தில் பகை ; அவனுக்குப் பூனைக்குட்டி!

இதனை

இடைக்குன்றார் கிழார் எனும் புலவர் ஏறு

எப்படிப் பாடுகிறார் ; எழுச்சியுடன் என்பதுதான் -

இங்கே நாம் காண வேண்டிய காட்சி ;

கண்டு மகிழ வேண்டிய மாட்சி!

“கிண்கிணி களைந்தகால், ஒண்கழல் தொட்டு ;

குடுமி களைந்த நுதல், வேம்பின் ஒண்தளிர்

நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து ;

குறுந்தொடி கழித்தகை, சாபம் பற்றி

நெடுந்தேர்க் கொடுஞ்சி பொலிய நின்றோன் -

யார் கொல் ?”

(புறம். 77)

அதாவது ;

கிண்கிணி அணிந்து விளையாடும் மழலைக் குழந்தை ;

அதனை அவிழ்த்து விட்டு,

வீரக் கழல் பூட்டிக் கொண்டு -

தலையில் சிறு குடுமியைக் களைந்து விட்டு,

வேம்பு மாலை சூடி ; அத்துடன்

அமர்க்களத்துக்கான ஆரமும் பூண்டு,

காப்பு இருந்த கையில் கணையும் வில்லும் தாங்கி,

தேரின் முகப்பில் நிற்கிறான்

பாலகன் பாண்டியன் நெடுஞ்செழியன்

என்கிறார் பாவலர் ஏறு!

அது மட்டுமா ?

வளர்நிலா போன்ற பாண்டியன் - ஒரு

வஞ்சினமும் கூறுவதாக ; அவனே

இயற்றிய புறப்பாடல்

எழுச்சிப் பாடல் ; இதோ கேட்போம்!

“நகுதக் கனரே நாடு மீக்கூறுநர்!

இளையன் இவன் என உளையக் கூறி....

சிறு சொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை

அருஞ்சமம் சிதையத் தாக்கி, முரசமொடு

ஒருங்கு அகப் படேஎன் ஆயின் - பொருந்திய

என் நிழல் வாழ்நர் செல் நிழல் காணாது

‘கொடியன் எம் இறை’ எனக் கண்ணீர் பரப்பி

குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக!......

புலவர் பாடாது வரைக என் நிலவரை!....

இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே!”

(புறம் 72)

அதாவது ;

பகைவர்களைச் சிதற வைத்து அவர்தம்

முரசுகளை ஒலிக்காமல் முடக்குவேன்!

இல்லையேல் என்னைக் கொடுங்கோல் பட்டியலில்

இவ்வுலகம் இணைக்கட்டும்!

இரவலர்க்கு எதுவும் ஈயாதவன் என்ற

இழி சொல் என்னைத் தாக்கட்டும்!

இந்தப் புலவர்கள் எவரும் என்னை

ஏற்றிப் பாடாதிருக்கட்டும்!

இப்படியொரு மானமிகு இளைஞனை, மறக்குல மைந்தனை,

தமிழ்ப் பாண்டியர் குலத்தில் கண்டது போல் -

இந்தத் தமிழகம் எங்கும்

கண்டிட வேண்டுவோம் தமிழன்னையை!

தாயே ; தந்திடு எமக்கு அத்தகு

தன்மானச் செல்வங்களை ஈன்று!

ஆற்றலின் அளவுகோல்;

அவன் செங்கோல்!

கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கும்

கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கும்

இடைப்பட்ட காலம் எண்ணூறு ஆண்டுகளும்

இங்கே தமிழகத்தின் சங்க காலம் என்போம்.

மூவேந்தராம் முடியுடை வேந்தர் - தமிழில்

பாவேந்தர்களின் பாமாலை சூட்டப் பெற்று

படிம வளர்ச்சியின் பல படிகளைத் தாண்டிய

பல்வேறு நாடுகளின் நாகரிக மேம்பாட்டுக்குத்

தாயகமாக விளங்கிய இந்தத் தமிழகம் - கடல்

நாயகமாகவும் வாணிபத்தில் திகழ்ந்து

சேரர், சோழர், பாண்டியர் என

வீர நிறைந்த பூமியாகவும் நிமிர்ந்து

கற்புடைய மகளிர் பொற்புடைய மறவர்

வெற்புடைத்து வெற்றி கொள்ளும் மரபினர்;

என உலகம் போற்ற உயர்ந்து நின்றபோது

எழுஞாயிறாக ஒளிர்ந்தது முதலில் சோழ நாடாம்!

முதலிரண்டு கரிகாலன்கள், கிள்ளி வளவன் - இந்த

மூவரையொத்த செங்கணான், நலங்கிள்ளி எனும்

அய்வரும் தான் ஆதிகாலச் சோழ அரசர்களாம்

அவர்களிலே இரண்டாம் கரிகாலன்தான் திருமாவளவன்

அழுந்தார் வேளிர் மகளுக்கும், இளஞ்சேட் சென்னிக்கும்,

அன்பு மகனாய்ப் பிறந்து உறையூரில் இருந்து ஆண்டவனாம்!

அருளாளர், ஒளியர் என்பார் ஆரம்பத்தில் எதிர்ப்பு காட்டி

அவனாட்சியினை இறுதியில் ஏற்றுப் பணிந்தனராம்.

ஆக்கப் பணிகள் பல புரிந்தான் என்றும்,

அமைதி தவழ நாடை நடத்தினான் என்றும்

வளநாடு தமிழகம் என்று வையம் வாழ்த்திட

உளமகிழ்ந்து கவிஞர்கள் பாடிட ஆட்சி நடத்திப் பின்னர் ;

ஆழ்கடல் தாண்டி அயல்நாடு உறவுகள் கொண்டிட

அடுத்தொரு தலைநகராய் பூம்புகாரை ஆக்கிக் கொண்டான்

அனைத்துலகச் சிறப்புடைய வண்ணம்

அவன் செங்கோல் ; சோழர் ஆற்றலின் அளவு கோலாயிற்று!

அந்த மாமன்னன் புகழ் அனைவரும் பாடுதல் கண்டு

வெந்து நொந்து போன வடநாட்டார் சில மன்னர் ;

வாளாட்டிப் பார்த்ததினால் - வளவன் ;

வாளெடுத்துக் கிளம்பினான் ; பகை வீழ்த்திச் சாய்த்திட!

வணங்கி பேற்றிட வந்து விட்டோம் என்று

வச்சிரம், அவந்தி, மகதம் முதலிய நாடுகளில்

வணங்கா முடியாய் இருந்தோர் அனைவரும் ;

வளைந்து குனிந்து பல பரிசுகள் வழங்கினர்.

முதல் பதிப்பு: ஜூன் 2006 — தமிழ்க்கனி பதிப்பகம் / பூம்புகார் பதிப்பகம், சென்னை