காலப் பேழையும் கவிதைச் சாவியும்
கவிதை 29 · 29 / 58
மகத நாட்டான், பட்டி மண்டபமும்,
வச்சிர நாட்டான், கொற்றப் பந்தரும்,
அவந்தி நாட்டரசன் தோரண வாயிலும்,
பரிசாக அளித்து அன்பைப் பகிர்ந்து கொண்டனர்.
மணிமுடி மாமன்னன் கரிகாலன்
மதிப்பைக் குலைத்திடத் - தன்
மண்டையில் உதித்த யோசனை யொன்றை,
மந்திரம் போட்டான் “முகரி”யெனும் வட நாட்டான்.
“காவலனே ; கரிகால் மன்னவனே
காவிரிக்குக் கரை உயர்த்திக் கட்ட
இலங்கைக்குப் படையெடுத்து வென்று
ஏராளமான கைதிகளைக் கொண்டு வரலாமே ?” என்றான்.
படையெடுத்தான் கரிகாலன் - இலங்கை வீரர்
பன்னீராயிரவரைச் சிறை பிடித்து வந்து ;
பாசனத்துக்குப் பயன்படும் வண்ணம் ; காவிரி
பாய்ந்தோடும் வகையில் கரை அமைத்தான் மன்னன்!
சூழ்ச்சி மிகு தன் ஆலோசனையினால் - மேலும்
மாட்சியன்றோ வந்தது கரிகாலனுக்கென்று ; முகரி
அடுத்தொரு சதி நடத்த ஆயத்தமானபோது ;
எடுத்தனன் கரிகாலன் ஈட்டியினை ;
அழுத்தினன் அதன் முனையால் ;
கொழுத்த ‘முகரி’யாம் கொடியவன் நெற்றியிலே!
அதுவரை ‘முகரி’ முகத்திலிருந்த
அவலட்சணமாம் மூன்றாம் கண்ணொன்று ;
முரசமொன்று போல் முனையில் கிழிந்ததுபோல்
முற்றாகக் கிழிந்து புண்ணாகிப் போன கதையை
வற்றாத தமிழ்க் கவிஞர் ஒட்டக் கூத்தரும் -
எக்காள முழக்கமிட்டு ஜெயங்கொண்டாரும் ;
கவிதைகளாக்கித் திருமாவளவன் கரிகாலனைப்
போற்றிப் பாடியுள்ள நேர்த்தி ;
சாகாப் புகழ் பெற்றத் தமிழர்
சரித்திரத்தின் கீர்த்தியாம்!
இலக்கியம், கல்வெட்டு, செப்பேடு
இவற்றையே நாம் வரலாற்றுக்
குறிப்பாகக் கொள்ள வேண்டியதால்
குழப்பம் சற்று விளையத்தான் செய்கிறது ;
இரு கரிகாலர்களில் இவர்
எவராயினும் - வரும் புகழ்
தமிழர்க்குத் தானே என்று கருதி
தணித்துக் கொள்வோம், தாகம்!
துடைத்துக் கொள்வோம் ;
முழுமை வரலாறில்லா சோகம்!
மாண்பு நிறை தாயும்
மாசற்ற மகனும்!
இயற்கையின் எழில் அனைத்தும்
இருளும் ஒளியுமாய் ;
வானும் முகிலுமாய் ;
கதிரும் நிலவுமாய் ;
கடலும் நிலமுமாய் ;
இவ்விதம் இணையா -
இரண்டிரண்டாய்த் தோன்றி ; அவை
இரண்டறக் கலந்து என -
பேருரு எடுக்காமல்
சீருரு எடுத்துச் சிரிப்பது போல ;
அலையாடும் அழகு கொண்டு
அருவியென நீண்ட கூந்தலும்,
மொட்டிரண்டு உடல் முகப்பிலும்
பட்டுப் போல் மேனியும்,
பவளச் செவ்வாயும்,
பற்கள் முத்தாரமும்,
அவள் அழகுக்கு அழகு செய்ய
இன்னும் என்னென்ன அழகுண்டோ ;
அத்தனை அழகுகளும் அணி வகுத்துப்
படைத்த பெண்ணுருவே தான் ;
பைங்கிளி மாதவி என்கிற போது ; உயிரில்
பாதியாய் அவளைப் பகிர்ந்து கொண்ட
பல்கலை வித்தகன் கோவலனுடன் கூடி
பாவை அவள் பெற்ற பெண்ணாம்,
மணிமேகலையின் அழகுதனை சிறப்பிக்க,
அணி அணியாய்ப் புலவர்களை அழைத்தாலும் -
அவர் மட்டுமல்ல ; அவர் கற்ற தமிழும் திகைக்கும்
அத்துணைப் பேரழகை வாணிக்க வார்த்தை ஏதென்று!
★ ★ ★
நீர்வீழ்ச்சியென ஆனந்தம் பொழிந்த - அந்த
சீர்மிகு இல்லத்தில் ;
மாதவி கோவலனிடை இந்திர விழாவில் எழுந்த ஊடல் ;
மறுபடியும் அவர்கள் வாழ்வில் மனைவி கணவனாய்க் கூடுதற்கு -
இடமின்றி இற்றுப் போன நிலையால் - மாதவி
இரவில்லா உலகமாகி,
துறவியானாள் உளமுடைந்து!
இல்லறம் இனி இல்லையென முடிவெடுத்த பிறகும்,
முள்ளொன்று அவள் நெஞ்சில் குத்தியது போல்
கள்ளொத்த காதல் வயப்பட்ட காளையொருவன் ;
மாதவி மகள் மணிமேகலை வாழ்வில் குறுக்கிட்டான்
எது செய்வதெனப் புரியாது வாடினாள் மாதவியாள்!
இதயமா மணிமேகலையைக் காதலிப்பதாக,
உதயகுமாரனாம் சோழ இளவரசன் ; “நான்,
வந்திக்கும் வண்ணச் சிலையே! வானமுதே! உனைச்
சந்திக்க மாலை வருகின்றேன் என்றும்,
வேரிலே பழுத்த பலாவே ; உனக்கு
நேரிலே கோரிக்கை வைக்கத்தான்” என்றும்,
மேகலைக்கு மடல் தீட்டி அனுப்பினான் -
மேகலையோ உடல் நடுங்கினாள்!
அவன் வருவதற்குள் ; தன் வடிவழகை
அறவே மாற்றிக் கொள்ளத் துடித்து ; அவ்வாறே
காய சண்டிகை பெயரும் காளி நிகர்த் தோழி போல
மாயத் தோற்ற ஒப்பனையுடன் உதயன் முன் வந்து நின்றாள் ;
ஓர் இருட்டு மண்டபத்தின் உட்புறத்தில் -
உணவு பரிமாறும் தாழ்வாரத்தில்!
ஆய கலைகள் கற்றிருந்தும் அரசர் மைந்தன்
அவசரத்தில் காய சண்டிகைக்கும் மேகலைக்கும் -
அடையாள வேறுபாடுகளை அறியாமலே ;
அங்கு ஆதரவற்ற மக்களுக்கு
அன்னம் அளித்துக் கொண்டிருந்த மேகலையின்
அருகில் நெருங்கி ; அன்பே என்றான், அழுதே என்றான்.
அலங்கோலமாய் ஏன் ஆனாய் என்றான் -
அப்போது காய சண்டிகையின் உண்மைக் கணவன்
அங்கே வந்து விடவே; எதிர்பாரா விபரீதமாக
அவள் கணவன் வித்தியாதரன், தன் மனைவிதான்
தவறான பழக்கம் இளவரசனுடன் கொண்டதாய் எண்ணி
தாதரவென இழுத்துப் போட்டான் மணிமேகலையை ;
தயாராய் இடுப்பில் கட்டியிருந்த வாளை எடுத்து ; இளவரசன்
தலையை வெட்டி எறிந்தான் - எவரும்
தடுப்பதற்குள் தப்பித்து ஓடி விட்டான் ;
தன் மனைவி காய சண்டிகை கற்போடு விளையாடிய
கயவனாம் உதய குமாரனின் கதையை முடித்தேன் எனக்
கர்ச்சித்தான் ; பாவம் ; மணிமேகலை மூர்ச்சித்தாள்!
செய்தி கேள்வியுற்ற செம்பியன் நெடுமுடிக்கிள்ளி
ஒரே மகன் உயிர் இப்படிப் பிரிந்ததே யென்று, உளம்
துடித்தானில்லை
“நானே தந்திருக்கு வேண்டிய தண்டனையை
நாடே தந்தது போல யாரோ தந்து விட்டார்” என்று ஆறுதல்
கொண்டான்.
அத்துடன் நில்லாமல் ;
இத்தனைக்கும் காரணம்
மணிமேகலை தானே யென்ற
மனத் தடுமாற்றத்தில் ;
அவளையும் அடைத்தான் சிறையில்! அதற்கு
