உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

காலப் பேழையும் கவிதைச் சாவியும்

கவிதை 27 · 27 / 58

தென்னங் கன்றுகள் தேக்கு மரங்களாக உயரும்!

வாழைக் கன்றுகள் வாகை மரங்களாக வளரும்!

முருங்கை அரும்பு முல்லையாகி ; முள்ளில் ரோஜாவாக மலரும்!

தாழை மடலை எதிர்த்துத் தடவ முடிகிறதா ?

தமிழனை மட்டும் மிதித்துத் தள்ள முடிகிறதே!

வங்கக் கவிஞர் தாகூர் தேசிய கீதம் வழங்கியவர் ;

சிங்கத் ‘திராவிடர் தந்த செழிப்பும் வலிவும் தான்

ஆரிய நாகரிகத்தின் நலிவு போக்கி அதன்

அடிப்படையை அலுங்காமல் காத்தது’ என்கிறார்.

சோவியத் நாட்டு மொழி அறிஞர் ‘சாகிரப்’ என்பார் ;

வட இந்திய திராவிட மொழிகள், தென்னக திராவிட மொழிகளை

வரிசைப்படுத்தி ஒப்பிட்டுப் பேசுபவர் ;

வடக்கு நோக்கித் தமிழர் தெற்கிலிருந்து பரவினர் என

வன்மையாக வாதிட்டு அதனை நிலைநாட்டுகின்றார் ;

வட புலம் தமிழர் வென்றதை அறிவோம் ; தமிழ் சென்றதை

அறிவோமா ?

“On the contrary linguistic data indicate that the

Dravidian Languages spread from South to North

rather than from North to South”

G. Zograf

Soviet Indologist in a

Survey of Languages of

India, Pakistan, Ceylon and Nepal.

காஷ்மீரில் இன்றும் சில மலை வாழ்வோர் பேசும் மொழி

கன்னட வரலாற்றாசிரியர் ஒருவர் கூற்றுப்படி

திராவிட மொழிப் பிரிவின் கிளை மொழிகளில் ஒன்றெனத்

தெளிவுபடுத்தியுள்ளது ; வெறுங் கற்பனையல்ல!

பீகார் ராஜ்மகால் குன்றுகளில் வாழும் குருக்கர் என்போர்

பெரிதும் பயன்படுத்தும் நாட்டுப் பாடல், பழங்கதைகளில் - அவர்கள்

தென் முனைப் பகுதி வாழ்ந்த திராவிட மக்களே எனத்

தெரிவிப்பதைத் திரையிட்டு மறைத்தார் இலர்!

இந்திய நாகரிக அடையாளமான புடவையும் வேட்டியும்

இனிய திராவிட நாகரிகத்தின் கொடையே யாகுமெனப்

பேராசிரியர் எஸ்.கே. சாட்டர்ஜி பேசுகிறார் ;

“இந்தோ ஆரியன் - இந்து” என அவர் எழுதிய நூலில் (பக். 134)

“ஆரப்பா” புதை பொருள் ஆராய்ச்சியில் தாய்த் தெய்வ வழிபாடும்,

அமெரிக்கா கொலராடோ ஆற்றின் கரையில் சிவனுக்குக் கோயிலும்,

ஆதிச்ச நல்லூரின் “மண்டையோடு” சிந்து வெளியுடன்

ஒத்திருப்பதும் ;

ஆரப்பா, மொகஞ்சதாரோ ஆய்வின் வெளிப்பாடுகளும் ;

அன்றைக்கே திராவிட நாகரிகம் அனைத்து நாடுகளிலும் “ஆதி”

உரிமை பெற்று,

அகன்று படர்ந்தமைக்கு ஆணித்தரமான ஆதாரங்கள் என்போம்.

ஆரியரால் கேலி செய்யப்பட்ட சிவலிங்க வழிபாடும் ;

‘அசுரா’ என அழைக்கப்பட்ட திராவிடர் பண்பாடே !

உலகின் பழைமைமிகு நாகரிகங்களின் எண்ணிக்கையில் ; மூன்றில்

ஒரு பங்கினைப் பிற இனத்தவர்க்கும் ; இரு பங்கினைத்

திராவிடர்க்கும்

உரியதாக்குவதே உண்மையான பங்கீடு என்று கண்டறிந்து,

உரைக்கின்றார் ; சோவியத் நாட்டுப் பேராசிரியர் ‘காந்திரதோவ்’ -

ஆஸ்திரேலியாவும் ஆப்பிரிக்காவும்

அந்நாளில் குமரிக் கண்டத்துடன் இணைந்திருந்த

வரலாற்றையொட்டி ஆண்டவன் வழிபாடும் - பகை

வளைப்பதற்கு ஆயுதங்கள் அறிமுகமும்

அய்யாயிரம் ஆண்டின் முன்னே திராவிடர்க்கும்

ஆரம்பமான பொது நாகரிகமெனப் புகல்வதும் உண்டு.

எழுத்து முறையில் எகிப்தியரின் தனித் தன்மை போற்றி

எப்படி அந்தச் சிறப்பினை அவர்கள் திடுமெனப் பெற்றார் எனக்

கேட்டு ;

வாணிபத் தொடர்பால் தமிழர், அவர்க்கு ;

வழங்கிய கொடை யென்பர் வரலாற்று அறிஞர்கள்!

பாபிலோனிய மதகுரு ஒருவர் எழுதியதாம்

பழங்கதை யொன்றில் ; மெசபதோமியர்க்கு,

நாகரிகம் கற்பித்த நல்லவராம் “ஒனசு” என்பார்,

நன்கு பயிற்சி பெற்ற குழுவினர் சூழ்ந்திட ;

‘எரிது’ எனும் நகருக்கு வந்து நாகரிகம் பயிற்றுவிக்க -

ஏர் உழவுக் கருவிகளைக் கொடுத்தார் என்றும்,

அறிவியல் கலை, கட்டிடக் கலை, ஆண்டவன் வழிபாடு

அனைத்தும் கற்பித்தார் என்றும், கூறப்படுவதால் ;

அந்த நாகரிகம் படிப்படியாகப் பரவிடாமல்

அடித்தவுடன் எழும்பிடும் பந்து போல -

எப்படிப் பரவியதென்பதற்கு ஏற்ற விடையாகத் தான்

கூறப்படுகிறது ; அது குமரிக் கண்டத் தமிழர் உறவினால் என்று!

அக்கண்டமும் ஆழ்கடலின் அகன்ற வாய்க்கு

அப்போதே இரையாகிப் போனது -

அதன் பின்னரும் அங்கிருந்த திராவிடப் பண்பாட்டு இனம் ;

அனைத்து இந்தியப் பெரு நிலத்தின் பேரினம் ஆனது!

அப்பேரின மெனும் பெருந்தருவின்

பெருமை சேர் கிளைகளாகத் தமிழ் இனம் போன்ற

தகைமையுறு இனங்கள் பலவும்,

தகுதி மிகு மொழிகள் பலவும் ;

தழைத்துச் செழித்து, தக்காராம் தமிழ்ப் புலவர்களும் - அப்

புலவர்கள் வாழ்த்திய புரவலராம் புவியாண்ட மன்னர்களும் - அந்த

மன்னர்களாண்ட இந்த மண்ணின் வளமும், அந்த வளம் பெருக்கிட

வலிமை பெருக்கி ; வையம் போற்றிட வாழ்வாங்கு வாழ்ந்த

வரிப்புலியனைய வீரர்களும், அவர்கள் வழி வழி வந்த சூரர்களாம்

தமிழ்க் குலத் தீரர்களும், பகை நாடுகளை எப்படிப் பந்தாடினர் -

வெற்றி சிந்து பாடிட எங்ஙனம் வீரம் விளைத்தனர் -

இவற்றுக்கான சான்றுகளை எல்லாம் எங்கிருந்து தேடிக்

கொணர்வது ?

‘அதற்கேற்ற காலம் சங்க காலம் தான்’ என்று ;

ஆன்றோர்கள் கூறிடுவர் ; அறிவேன் யான்!

இந்தக் காலக் கணிப்பிலே கூட கருத்து வேறுபாடுகள் இருப்பினும்

இராகவ அய்யங்காராம் தமிழ் அறிஞர் காட்டிடும் சான்றுக்கேற்ப ;

கி.மு. நான்காம் நூற்றாண்டுதான் தொடக்கக் காலம், எனக்

கொண்டால் ;

கிழக்கிலிருந்து திசைகளை மேற்கு தெற்கு வடக்கு எனத்

துவங்குவது போல் ;

சேர, சோழ, பாண்டியர் என்று மூவேந்தரை வைத்தே

துவங்கியுள்ளோம் ;

தொடர்ந்திடுவோம் இடையில் துவளாமல் அவ்வாறே!

தாயே தந்திடு எமக்கு

தன்மானச் செல்வங்களை ஈன்று!

‘தலையாலங்கானம்’ எனும் ஊரின் பெயரைக் கேட்கும்போதே

தஞ்சைத் தரணியில் ‘தலையாலங்காடு’ நினைவு மட்டுமல்ல ;

சங்க இலக்கிய காலப் போர்களிலேயே

தலை சிறந்த போர் நடந்த பூமியென்ற சரித்திர நினைவும் எழுமாம்.

இரு முனைகளிலும் நின்று போரிட்டவர்கள் - இந்தத்

திருவிடத்தார் தமிழ் இனத்தார் தான் -

இரண்டாம் நெடுஞ்செழியன் ; வயது வரா இளைஞன்

மிரண்டானில்லை போருக்கு ; வந்து விட்டான் களத்திற்கு!

பேரரசர்கள் இருவர் சேரர், சோழர் குல தீரர் ;

பெரும்படையுடன் ஐந்து வேளிர், அவர்கள் படைகளில்

அளவிலா வீரர்!

இரும்பொறையாம் இணையற்ற வீரன் சேர மன்னனும் -

வரும் பகை மோதிட வல்லவனாம் சோழன் கிள்ளிவளவனும் -

வெகுண்டெழுந்த வேளிர் குலத் தலைவர்களாம்

வேண்மான், பொருநன், எழினி, எருமையூரன்

திதியன் என்போர் ஐவரின் படையும் கண்டு

திகைத்துப் போவான் நெடுஞ்செழியன் என்றும் ;

சிறுபிள்ளை விளையாட்டுப் போல செருமுனையில்

பெரு வெற்றி பெறலா மென்றும்

எண்ணி வந்த திண்ணியர்கள் என்ன ஆனார் ?

கண்ணியமாய்த் தோல்விதனை ஏற்றுக் கொண்டு - “நல்ல

புண்ணியம் நாம் செய்ததாலே புனர் ஜென்மம் எடுத்துப்

போர்முனையை விட்டுப் போகின்றோம் உயிரோடு” எனக் கூறி ;

நண்ணினார் அவரவர் நாடும் வீடும்! களத்தில்

கண்ணினால் பேசிக் கொண்டார் பாண்டியர்கள் ;

முதல் பதிப்பு: ஜூன் 2006 — தமிழ்க்கனி பதிப்பகம் / பூம்புகார் பதிப்பகம், சென்னை