உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

காலப் பேழையும் கவிதைச் சாவியும்

கவிதை 26 · 26 / 58

பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்,

பாரி மகளிர், பேய்மகள் இளவெயினி,

ஒக்கூர் மாசாத்தியார், நல் வெள்ளியார்,

ஆதிமந்தியார், நெட்டிமையார்,

நப்பசலையார், வெள்ளி வீதியார்,

காமக்கணிப் பசலையார்,

கழார்க்கீரன் எயிற்றியார்,

கச்சிப் பேட்டு நன்னாகையார்,

ஊண்பித்தையார், மாற்பித்தியார்,

பூங்கண் உத்திரையார்,

வெறிபாடிய காமக் கண்ணியார்,

அஞ்சி அத்தைமகள் நாகையார்

★ ★ ★

அரிவையர் ஆடவர் அருங்கவிஞர்களாகி

அருவித் தமிழால் ஆக்கிய இலக்கியங்களே - தமிழர்

ஆதி வரலாறு போதிக்கின்ற ஆதாரங்களாம் -

அற்றை நாள் கல்வில் செதுக்கிய எழுத்துக்களே - நமது

அறிவு, ஆற்றல், காதல், வீரம், பண்பாடு அனைத்துக்கும்

அழிக்க வொண்ணாச் சான்றுகளாம் -

விரிவாக்குவோம், அப்பணியை வாரீர் ;

விழித்தெழுவதற்கு ; இதோ ‘செம்மொழி’ விடியல்!

நடை தளராமல் நமது வரலாற்றுப் பயணம் தொடரும்போது

இடையில் சற்று இங்கே அமர்ந்து இதுபற்றியே பேசுவோம்.

காலப் பேழையில் நிறைந்துள்ள கருவூலங்களை

கவிதைச் சாவி கொண்டு நான் திறந்து காட்டி ;

கனவிற் கண்ட காட்சிகள் நினைவுத் திரைக்கு மீண்டும் வராதா

என

கவலை கலந்த களிப்பில் ஆழ்ந்திருக்கும் நமக்கு ;

நினைவில் வருவது மட்டுமல்ல ; நிகழும் வரலாறாகவே

நிலைத்து விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உண்டு!

அதனால்தான் இதுவரையில் இருபத்தி ஆறு கவிதைகள் தீட்டி ;

அந்நாள் மனிதன் தோன்றிய காலம் அதற்கு முந்தைய காலம் -

அனைத்துயிரும் தோன்றிய விதமும் படிம வளர்ச்சியும் பற்றி

அளித்த விளக்கங்களுடன் ; அடுத்தடுத்து கடந்து வந்துள்ள

ஆயிரமாயிரம் ஆண்டுகளில் அனைத்து நாடுகளுடன் நமது

அருமைத் தமிழகம் பெற்றிருந்த நட்புறவு, நாகரிக தொடர்பு,

கலைப்பிணைப்பு

கலாச்சாரக் கைகோப்பு - கடல் வாணிபம் - களம் பல கண்ட

வாய்ப்பு ; எனக்

கருவூலம் தருகின்ற கனிச் சுவைகள், கசப்பு மாத்திரைகள்,

அனைத்தையும்

அடியேன் நான் ; அபாரப் படிப்பினாலோ - அஷ்டமாசித்தி

பெற்றதாலோ -

அளிக்கின்றேன் என்று எவரும் அவசர முடிவுக்கு வந்திடாதீர்! -

ஆதாரங்களைத் திரட்டுகின்றேன் ; அம்முயற்சியிலே அடிப்படைப்

பணியாக ;

அன்பர் மதிவாணன் நூல்களைப் போற்றுகின்றேன் - கண்ணனின்

மணியாக!

அவருந்தான் எத்தனை மேற்கோள்கள் காட்டுகின்றார் -

ஆய்வாளர், அறிஞர் பெருமக்கள் கருத்துக்கள் பலவற்றை

எடுத்து நிறைத்துள்ளேன் இப்பேழையில் என்றாலும்

கொடுத்திடத் தொடங்கியது முதல் தோன்றாத் துணை நிற்பது

இவர் கருத்தே!

மணிகள் கோப்பதற்குத் தங்கச் சரடு வேண்டுமன்றோ ; கற்றவராம்

மற்றவர் கருத்துக்களையும் அந்தச் சரட்டோடுதான் இணைத்துக்

கொண்டேன்.

இதுவரையில் நம் தரணியில் உயிர்கள் முளைத்தது முதல், இங்கே ;

இந்தியத் திருநாட்டில் ஆரியர் வருகைக்கு முன்பே திராவிடர்

வரலாறும்,

வடக்கே, தக்கணம், சிந்து, கங்கைச் சமவெளிகளில் குடியேற்ற

நகரங்களை

வகையாக அமைத்தனர் கி.மு. ஆயிரம் ஆண்டின் முன்பே

என்பதையும்,

காடு கொன்று நாடாக்கி நாகரிகம் கொழிக்கும் நகரங்களை

அமைத்தும் ;

கட்டமைப்பு கட்டிடக் கலைகளிலே காண்போர் வியக்கும்

திறனைப் பெற்றும்

திகழ்ந்தனர் திராவிடத் தமிழர் என்பதையும் கண்டு

வெகுண்டவராம் ஆரியர்கள் ;

தீய நோக்குடன் திராவிடரைத் ‘தஸ்யூக்கள்’ என அழைத்து ;

“அந்த தஸ்யூக்களின் அரண்மனைகள் பொன்னாலும்

மணியாலும்

அழகு பெற்று விளங்குகின்றன ; அவர்களின் வலிய

கோட்டைகளும்

வானைத் தொடும் மதில் அரண்களும் மனதைக் கவருகின்றன.

வாழ்க்கைத் துணைவி இருவர் ‘கோவன்’ எனும் குயவருக்கு ;

அவர்கள்

பாலில்தான் குளிக்கிறார்கள் என்பதால் ;

பாவிகள் ; சிபா நதியில் வீழ்வார்களாக!”

ஆரியர்களின் ‘ரிக் வேதம்’ இவ்வாறு சாபமிடுகிறது - அதனை

ஆராய்ந்திடும் போது தான் ; ஆரியர் வருகைக்கு முற்பட்ட

இந்திய நாகரிகம், திராவிட மொழியாளர்க்கே உரியது என்று

இம்மியும் அய்யத்திற்கிடமின்றி இறுதியாக அறுதியிடப்படுகிறது.

இவ்வாறு

வளர்ந்த நாகரிகம், வாழ்க்கை முறை, வையத்து நாடுகளுடன்

வாணிபத் தொடர்பு - கலையுணர்வு - காதல் உறவு

களம் காணுதல், மானம் காத்தல், மனித நேயம் போற்றுதல்

கலாம் விளைக்கும் மத பேதம் அகற்றுதல் எனப் பல்வகை

அணிமணி நிறைந்த அற்புதப் பேழையாக அமைந்த - இந்தக்

காவியப் பேழையைக்

கவிதைச் சாவி கொண்டு

திறக்கும் போதெல்லாம் ;

திராவிடர் தமிழர் வரலாறுகள் எனும்

அணிமணிகள் காண்பதாலேயே - இது

அரசியல் பேழை எனக் கருதாமல் ;

அரசியலுக்கு அப்பாற்பட்ட

வரலாற்றுப் பேழை தான் என்று

வரித்துக் கொள்வீர் இதயத்தில் - உயிர்களின்

உதயத்தில் அல்ல ; உதயத்திற்கு முன்பே

உலகு உள்ளிட்ட கோள்களின்

உலாவலில் இருந்தே தொடங்கி

எத்தனை இனத்தினர்

எத்தகை மனத்தினர்

எத்துணை அரசர்கள்

எவ்வகை ஆட்சிகள் -

முடிந்தது ; முடியாதது!

விடிந்தது ; விடியாதது!

விளைந்தது ; விளையாதது!

வளைந்தது ; வளையாதது!

இமயம் முதல்

காவிரி வரையில் அல்ல -

காவிரிக் கரையிலிருந்து

கங்கைக் கரை வரையில்

நீண்டு கிடக்கும் நிலப் பரப்பில்

ஆண்டு முடித்தோர் சரித்திரமும்,

வாழ்ந்து முடித்தோர் வரலாறும் - இனி

வாழ்ந்திடவும் ஆண்டிடவும் ;

வழி காட்டும் வண்ணம்

தொடர்ந்து காலப் பேழை,

கவிதைச் சாவி கொண்டு

திறக்கப்படுவது திண்ணம்!

பார் முழுதும் பரவிய

பழம்பெரும் நாகரிகம்!

தேய்க்கத் தேய்க்கச் சந்தனம் மணப்பது போல் - பட்டை

தீட்டத் தீட்ட வைரம் ஒளி விடுவது போல் ;

திரும்பத் திரும்ப திராவிட இனத் தொன்மை பற்றிச்

சொன்னால்தான்

முதல் பதிப்பு: ஜூன் 2006 — தமிழ்க்கனி பதிப்பகம் / பூம்புகார் பதிப்பகம், சென்னை