உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

காலப் பேழையும் கவிதைச் சாவியும்

கவிதை 23 · 23 / 58

சமர்கள் விளைந்த நிலையில் சங்கம் கண்ட புலவர்களும்

சகல கலை புணர் சான்றோர் ஆன்றோர்களும்

சமத்துவம் போற்றிடக் காலம் தேவைப்பட்டதெனினும்

அதற்குள் ஐம்பெருங்காப்பியங்களில் இரண்டை

அந்தோ ; தமிழ் நிலம் இழந்தது விந்தையே!

‘வளையாபதி’ வளைந்தது எங்ஙனம் ?

‘குண்டலகேசி’யின் வடிவு குலைந்தது எவ்விதம் ?

காலமெனும் கரையான தின்றதோ ; தமிழரின்

கவனக் குறைவுதான் காரணமாய் நின்றதோ ?

அறுபது ஆண்டுகளுக்கு மேலிருக்கும் ;

அடியேன் அயராது தேடித் திரிந்து -

அதன் பின்னர் அகப்பட்டது கிழிந்த ஏடொன்று - அதில்

அரண்மனை குருநாதரின் ஆசை மகன் ஒருவன்

கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கடத்தல் அனைத்தும்

கலையாக வாழ்வில் கொண்டு காலங் கழித்தவனைச்

சிறை பிடித்துக் காவலில் வைப்பதற்குக் கை கால்

விலங்கிட்டு வீதியிலே இழுத்துச் சென்ற போது, கண்டாள் ;

குன்றிரண்டை மார்பில் சுமந்த மங்கை

குண்டலகேசி யெனும் குணவதி ‘பத்திரை’ யென்பாள்.

அவளை ; அவர் தந்தை அமைச்சர் பெருமான்

அமுதம் என்றே அழைப்பார் அன்பு பொழிந்திட !

அந்த அமுதம், விஷத்தின் மீது விருப்பம் கொண்ட கதையாக ;

விலங்கொடு சென்ற விலங்கின் அழகில் வீழ்ந்து தொலைத்தது.

தந்தையாம் அமைச்சரின் தாளைப் பணிந்து - அவர்

தயவு பெற்று அரசனின் தண்டனையைத் தவிர்க்கச் செய்து ;

பாம்பின் பளபளப்பில் மனம் பறி கொடுத்த பத்திரை - அவன்

பள்ளியறைப் பாவையாகி அள்ளிச் சுவைத்தார் ; இருவருமே

இன்பரச பானத்தை!

கட்டிலறை ஊடலில் ஒருநாள் கட்டித் தழுவியிருந்தவள் ;

“கள்வன் தானே நீ!” என்று கடுமொழியல்ல ; காதல் மொழி தான்

பேசினாள்.

கருங்கோபம் கொண்டவன் அதனைக் காட்டிக் கொள்ளாமல் -

அவளின்

கனதனங்கள் அழுந்த அணைத்துக் கொண்டு ;

அன்பே வா ; அருகில் உள்ள மலையுச்சி கண்டு வரலாமென்றான்

அழைத்தவுடன் அவளும் ஒட்டிக் கொண்டாள் ;

சிறகுத்துப் பறவை யிரண்டும்

சிகரத்தை எட்டியவுடன் -

“சீ! சீ! நீ என்னைக் கள்வன் என இகழ்ந்தாய், அதனால் ;

சிகரத்திலிருந்து தள்ளப் போகிறேன் - சிதறப் போகிறாய்”

என்றான்.

சில நொடிகளிலே உண்மை புரிந்து கொண்ட அந்த

சீதளப் பூ மாலை உள்ளத்தினாள் ;

வஞ்சகத்தை, சூழ்ச்சிதனை வாள் கொண்டல்ல ;

வஞ்சகத்தாலேதான் வீழ்த்த வேண்டுமென -

“ஆருயிரே! அருமருந்தே! என் ஆவியினை நீ

அகற்று முன்னர் ; கொழுநனைத் தொழுதெழ

கொஞ்ச நேரம் கொடு” எனக் கேட்டாள் -

கொடுத்தான் அந்தக் கொள்ளைக்காரன் - குணக்கேடன்!

பற்றுக் கொண்டவள், பக்தி கொண்டவள், பதியின் மீது - எனும்

பாசாங்கு நாடகத்தைத் திறமையுடன் நடித்துக் காட்டி

பாதி சுற்றி முடிந்தவுடன் ; அந்தப்

பாவியின் ஆவி போக்கிடத் திட்டமிட்டு

மறு பாதி சுற்றுக்கு அவன் காத்திருந்த போது ;

மலைப்பாறை உச்சியிலிருந்து தள்ளிவிட, அந்த

மாபாவி மடிந்து போனான் -

மமதை கொண்ட ஆணாதிக்கத்திற்குப்

பெண்ணியத்தின் திண்மை சொன்ன

குண்டலகேசி இலக்கியம் இன்றில்லை எனினும் ;

இலக்கணமாய் எஞ்சி இருக்கின்றாள் ;

இந்தக் குண்டலகேசி - இவள்,

புத்தமதக் கொள்கையினைப் பரப்ப

எத்தனையோ வாதங்களில் வென்று

பின்னர் ;

முற்றுப் பெற்றாள் வாழ்க்கையிலே அன்று!

சற்றொப்ப இரண்டாயிரம் ஆண்டுக்கு முந்தைய

சரித்திரத்தைத் திரும்பிப் பார்த்தால்

சாவிளக்கு கொளுத்தியது போல சமுத்திரத்தில்

சகல நாட்டுக் கப்பல்களும் வரிசையாக நிற்கின்ற

காட்சி தெரிகிறது, கண்ணிரண்டும் ஒளிர்கிறது -

கலை, நாகரிகம், பண்பாடு இவற்றில் வெல்லலாம் ;

காதும் குளிர்கின்ற தமிழகத் தகவல்களையும் தருகின்றேன்.

கடல் வாணிபம், கடல் கடந்த வெளிநாட்டுறவு, கலை இலக்கியம்,

களம் பல கண்டு வாகை சூடுகின்ற ஆட்சியும் மாட்சியும்,

கனிக் குலையாகக் குவிந்துவரை நானும் உம்மோடு

ரசிக்கின்றேன்!

கண்ணகியின் கற்பும் மாதவியின் மாண்பும் கவிஞர் பெருமான்

காரிக் கண்ணர் வாயிலாக பாண்டிய சோழ மன்னரிடை வளர்ந்த

பற்றும், பாசமும், நட்பும், நாட்டுறவும்

முற்றும் அறிந்து மகிழ்ந்துள்ளோம்.

காவல் அரண் - கட்டுப்பாடுத் திறன் - இவையெதிலும்

காவிரிப்பூம்பட்டினத்தில் இல்லை முரண் ;

கலைச்செல்வமெனிலோ கற்பனைக் கெட்டாப் புகழ் மாதவி ; நாம்

மலைத்திடுமளவுக்குப் பூட்டியிருந்த அணிமணிகளின்

பட்டியலைப் பார்த்தாலே மயக்கம் வரும் ; அவற்றில்

சிலவற்றையாவது சிலப்பதிகாரத்தில் காண்போமே!

இதோ ;

நிலவு, அணிமணி பூட்டித் தன்னை அலங்கரித்துக் கொண்டு

நிற்கிறது நிலைக்கண்ணாடி முன்னால் என்று ;

கற்பனை செய்து கொண்டு காணுங்கள் ஒளிந்து கொண்டு!

காலுக்குப் பொருத்தமாகப் பரியகம், சிலம்பு, பாடகம்

அரியகம், சதங்கையெனும் அணிகலன்களுடன்

அழகிய தொடைகளில் இறுக்கமுறக் ‘குறங்கு செறி’யாம்!

முப்பத்திரண்டு விரிசிகையுடன் முத்துக் கோவை ;

முன்னெழிலைக் காட்டி இடையில் ஒளிரும் உடையில் மேகலை

தோளில் தூயமணி சேர் வளையுடன், கண்டிகையாம் ;

தோடு ; மாணிக்கத்தில்! சூடகம், வைரம் பதித்து!

மயிரொழுங்கமைந்த முன் கையில் வளைகள் பல வகை -

வயிர வளையவுடன், சங்கவளை, தங்கவளை, நவமணி வளை

பவள வளையெனப் பலவித வளைகள் அணிந்தவளின்

பொன்னை அனைத்தையும் மிஞ்சும் புன்னகை முகத்தில்!

வாளை மீனின் வாய் பிளந்தன்ன முடக்கு மோதிரம் -

வண்ணத்தில் சிறந்த செந்நிறம் மிளிரும் மாணிக்கக் கணையாழி ;

காந்தள் விரல் கவின் நிரம்ப, கதிரொளி வீசும்

பாந்தமுள்ள வைரங்கள் சூழ் “மரகத்தாள் செறி”

திண்ணியதும் நுண்ணியதுமான சங்கிலிகள்

பூணும் கரமும், பூ வேலை நிறைந்த சவடி, சரப்பணியும் -

முத்தாரக் கழுத்தில் வித்தாரமாய்ப் பின் தொங்கும் கோவை,

கொத்தாகத் திரண்டு திகழும் சந்திரபாணி வைரக் குதம்பை,

இந்திர நீலத்துடன் இடையிடையே காணப்படும் எழிலார் சங்கும்

மந்திரமோ மாயமோ என மாதவியின் அழகுக்கு அழகான

தொய்யகம், புல்லக மெனத் தொடரும் அணிமணிகள்

மெய்யாகத் தமிழக நாகரிகத்தின்

மென்மையை உணர்த்துகின்ற அடையாளச் சின்னங்களன்றோ!

மெல்லிய பூங்காற்றை நுகருகின்ற உணர்வன்றோ; நம் நெஞ்சில்!

அது மட்டுமா ?

அந்த அழகாசி மாதவி ஆடிய

அரங்கின் அமைப்பு எவ்வாறு இருந்தது ?

சிற்ப நூலோர் கூறும் இயல்புகளிலிருந்து

சிறிதும் வேறுபடாத இடமாகத் தேர்வு செய்து

பொதிய மலையில் பிறந்து வளர்ந்த மூங்கிலை ;

கணுவுக்கு கணு இடையிடையே

சாண் அளவு விட்டுச் சரியான

அளவாக வெட்டிக் கொண்டாந்து,

கைப் பெருவிரல் இருப்பது நாலு எண்ணிக்

கணக்கெடுத்து கச்சிதமாக நறுக்கி ;

அரங்கம் அளக்கும் கோலாக

முதல் பதிப்பு: ஜூன் 2006 — தமிழ்க்கனி பதிப்பகம் / பூம்புகார் பதிப்பகம், சென்னை