உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

காலப் பேழையும் கவிதைச் சாவியும்

கவிதை 24 · 24 / 58

அதனையே பயன்படுத்தி

ஏழு கோல் அகலம்,

எட்டுக் கோல் நீளம்

ஒரு கோல் உயரம் உள்ளதாக

நான்கு கோல் நல்ல இடைவெளியுடனே

‘நிலை விளக்கு’, ‘உருவ திரை’ இத்தனையும்

கலையழகு குறையாமல்

அமைத்தனர் ஆடலரங்கு என்பதாக,

அதிகாரம் அறிவிக்கின்றது ; ஆம்

சிந்தை கவரும்,

சிலப்பதிகாரம் ; அறிவிக்கின்றது!

அட்டா ; அரங்கேறுவதற்குத் தான்

ஆடல் ஆசான் என்றும், இசை ஆசான் என்றும்,

இயற்றமிழ் ஆசான் என்றும், இன்னும்

குழலாசான், யாழ் ஆசான் என்றும்

குறையொன்றுமிலா ஆசான்கள்

நிறை கலை வல்லுநர்கள் எத்தனை பேர்!

கலை வளர் தமிழகமாய் இருந்ததற்கும் ; தனது

நிலையில் தளரா நேர்மை கடைப்பிடித்ததற்கும்

ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் எனும்

உயர் தனிக் கொள்கைக்கும் -

ஓர் எடுத்துக்காட்டாக மாதவியாள்

விளங்கியது மட்டுமல்ல ;

கலைத்துறை யொன்றும் கற்புக்குப் பகையல்ல எனும்

நிலையெடுத்து வென்றதற்கும் -

ஆளன் தனை விடுத்துச் சென்ற பின்னர்

துறவு பூண்டு தனியாக நின்றதற்கும்,

மகள் மணிமேகலையைத் தன்னைப் போலவே

மனத் தூய்மை கொள் மாதரசாக வளர்த்த மேன்மைக்கும்,

எடுத்துக்காட்டு மட்டுமல்ல இந்த இலக்கிய வரலாறு ;

ஈராயிரம் ஆண்டின் முன்னே ;

எத்தனையோ நாடுகள் இருளில் மூழ்கிக் கிடந்த போது ;

அத்தனை நாட்டுக் கடலோரங்களிலும் ஒளி காட்டி

கலை இலக்கிய நாகரிகப் பண்பாடு பரப்பும் கலங்கரை விளக்கமாய்

நிலை பெற்றிருந்தது தமிழ்நாடு என்ற கருத்தினை

உணர்த்துவதாகும்!

கண் உறங்கும் தமிழனின் முகத்தில்

கண்ணீர் தெளித்து எழுப்புவதாகும்!

★ ★ ★

பரியகம் = பாத கிண்கிணி

பாடகம் = காலணி

அரியகம் = காற்சரி யெனும் அணிகலன்

குறங்கு செறி = தொடை அணி

விரிசிகை = மாதர் இடையணி

கண்டிகை = கழுத்து நகை

கண்ணகி என்றால் கடுகளவு இன்பமும்

கடுகின் தோல் அளவு துன்பமும்

வாழ்வில் காணாத கவலையின் வடிவம் என்றும்

வாட்டம், வேதனை, வருத்தம், துன்ப, துயரம்

இவற்றைத் தவிர இல்வாழ்வின் சுகம் என்றால்

என்னவென்றே தெரியாமல் இறுதிவரை இருந்தாள் என்றும் ;

இன்ப அருவியில் மாதவியுடன் நீந்திக் களித்து

இதழ்கள் ஒட்டிக் கிடக்கும் முத்த இனிமைதனை

இடைவிடாது அனுபவித்தவன் கோவலன் தானென்றும் ;

இடை குழுங்க, நடை குழுங்க, இரு கனி குழுங்க

காம இன்பம் தானும் சுவைத்து, தன் காதலனும்

தாபம் தீரச் சுவைப்பதற்குத் தனையீந்த தளிர்க்கொடி

மாதவி தான் அத்தகு மாதவம் செய்தவள் என்றும்

மகளிர் ஆடவர் பலரும் எண்ணுகின்றோம் -

இலக்கியத்தைப் புராணமாக ஆக்கியோர் ; அமுதத்தில்

கலக்கிய விஷத்தினால் ஏற்பட்ட களங்கமிது -

பிந்தாங்கி முன் எழும் பாவையாக விளங்கி

எந்நேரமும் அழுகமுது விழியிரண்டும் வீங்கி,

கொழுநனைத் தொழுதெழுந்து கோலமிட்டு வீடு கூட்டி

கோவலனின் இல்லில் ஒரு கொத்தடிமை என்பதன்றி ;

கொஞ்சிடவோ - குலவிடவோ - கூடிடவோ -

எஞ்சியதுண்டோ கணப் பொழுதேனும் கண்ணகிக்கென்று ;

‘சம்பூர்ணக் கோவலன்’ கூத்து கண்ட “ஜைனர்கள்” எல்லாம்

சஞ்சலப்படுவதுண்டு அக்காலத்தில் - அதிலும்

பெண் குலத்தார் பெரும்பாலோர்

பெருமூச்செறிந்தும் பார்த்துள்ளோம் - அந்தச்

சேதியனைத்தும் அடியோடு தவறானவை என்பதற்குச்

சிலப்பதிகாரமே தக்க சான்றாக நம் முன் நிற்கிறது!

கண்ணகி ; தனது மணாளன் கோவலனிடம்

கட்டிலறையில் கூடிக் களிக்கவில்லையா ?

காம நோய்க்கு மருந்து தேடும் காரியத்தில் - அந்த

இளம்புறாக்கள் ஈடுபடவே இல்லையா ?

எட்டாண்டுகள் இல்வாழ்க்கை நடத்திய பிறகே

வீட்டுப் பிரிந்தான் கோவலன் கண்ணகியை யென்று

கட்டுக்கதையல்ல ; முனைவர் சு.வே. சுப்பிரமணியனார்

சுட்டிக் காட்டியுள்ளார் ஓர் உரைநூலில்!

காப்பியம் தந்த பெருமகனாம் இளங்கோவடிகள்

கண்ணகி கோவலன் காதல் இன்பத்தை

கரும்பு பிழிந்து சாறெடுத்து, கற்கண்டுப் பொடி தூவி,

கனி மூன்றின் சுவை சேர்த்துக் கசிந்துருகி

சிறப்பிக்கின்றார் சிலப்பதிகாரத்தில்! -

புறப்பாட்டும் அகப்பாட்டும் ஒன்று கலக்கும்

புதுமை போலக் கவின் புதுமை கண்ணகியும் - காதல்

போதையில் கோவலனும் கட்டித் தழுவிக்

களிப்புற்று மெய் மறந்து கிடந்த காட்சியினைக்

காட்டுகின்ற வெண்பா காணீர்!

“தூமப் பணிகள் ஒன்றித் தோய்ந்தால் என ஒருவார்

காமர் மனைவி எனக் கை கலந்து - நாமம்

தொலையாத இன்பம் எல்லாம் துன்னினார் மண் மேல்

நிலையாமை கண்டவர் போல் நின்று”

சினங் கொண்ட பாம்புகள் இறுகச் சேர்ந்து

இணையாகத் தோய்ந்திடுதல் போல -

காமமும் ரதியும் என

கோவலனும் கண்ணகியும் கலந்து ;

இந்த உலகம் நாளைக்கு இருக்குமா என்ற

நிலையாமையை எண்ணிக் கொண்டு,

அனுபவிக்க வேண்டிய இன்பம் அனைத்தையும்

அன்றைக்கே துய்த்து மகிழ்ந்தனர் என்கிறது

இந்த வெண்பா!

இதற்குப் பிறகும் கண்ணகி

இல்லற சுகமே காணாதவள்

என்றுரைத்திடல் இயலுமோ?

“மாசறு பொன்னே! வலம்புரி முத்தே!

காசறு விரையே! கரும்பே! தேனே!

மலையிடைப் பிறவா மணியே!

அலையிடைப் பிறவா அமிழ்தே!”

என்றெல்லாம் கண்ணகியைப் புகழ்ந்த கோவலன் ;

அவளை வாரியணைத்து மடியிலிட்டுக் கொண்டுதானே

மகிழ்ந்து குலாவியிருப்பான்!

வானத்து நிலவை நோக்கி ;

வையத்திலிருந்து ஒரு கவிஞன்,

வாணியது போலவா தொலைவில் நின்று,

வார்த்தைகளைப் பொழிந்திருப்பான் ?

நெஞ்சை நெகிழ வைக்கும் அந்தச்

செழுஞ் சொற்களை, கண்ணகியும்,

கோவலன் தோளில் சாய்ந்து கொண்டுதானே

கேட்டுச் சுவைத்திருப்பாள் -

தூமப்பணிகளாக ஒன்றித் தோய்ந்த பிறகு ;

சொல்வதற்கு வேறு என்ன செயல் தானிருக்கிறது ?

அந்த இணைப்பினைப் பிரிந்து விடுகிறான் கோவலன்

தனக்கு வாய்த்த வேறு துணையினால்!

வாடிக் கிடக்கிறாள் வடிவழகி கண்ணகி - ஆம் ;

மாசறு பொன் ; மண் மீது!

முதல் பதிப்பு: ஜூன் 2006 — தமிழ்க்கனி பதிப்பகம் / பூம்புகார் பதிப்பகம், சென்னை